நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுகதை: கோயில் யானையும், குறும்பு பாலனும்!

பாலன் கிராமத்துச் சிறுவன். குறும்புகள் செய்வதில் அவனை யாரும் மிஞ்ச முடியாது. தெரு நாய்களைக் கண்டால் போதும், அவற்றின் மீது கல் எறிவான். வலி பொறுக்காமல் நாய்கள் குரைத்துக் கொண்டே ஓடும். சில நாய்கள் இவன்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:23 am

எஸ். டேனியல் ஜூலியட்

பாலன் கிராமத்துச் சிறுவன். குறும்புகள் செய்வதில் அவனை யாரும் மிஞ்ச முடியாது. தெரு நாய்களைக் கண்டால் போதும், அவற்றின் மீது கல் எறிவான். வலி பொறுக்காமல் நாய்கள் குரைத்துக் கொண்டே ஓடும். சில நாய்கள் இவன் எரியும் கற்களால் காலில் காயம் பட்டு நொண்டிக் கொண்டே திரியும். கழுதைகளின் வாலில் காய்ந்துப் போன பனை ஓலைகளைக் கட்டி தீ வைத்து விடுவான். தீயின் வெப்பம் தாங்காமல் கழுதைகள் கனைத்துக் கொண்டே ஓடும். அதைப் பார்த்து ரசிப்பான் பாலன். எருமை மாட்டின் மீது ஏறி அமர்ந்து சவாரி செய்வான். எருமை மாடு வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக சாட்டையால் எருமை மாட்டை அடித்து துன்புறுத்துவான்.

வாயில்லா ஜீவன்களை பாலன் துன்புறுத்துவதைக் காணும் பெரியவர்கள், ""ஏன்டா... பாலா, வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தாதேடா. அது மகா பாவம்'' என்பார்கள். ஆனால், பாலனோ பெரியவர்களின் அறிவுரையை காதில் போட்டுக் கொள்ள மாட்டான்.

ஒரு நாள் கோயில் யானை ஒன்று அவனுடைய  ஊருக்கு வந்தது. "டிங் டாங்' என்ற மணியோசைக் கேட்டு சிறுவர்கள், ""ஆஹா... யானை வருது'' என்றபடி வேடிக்கைப் பார்க்க கூடி விட்டார்கள். யானையின் மீது பாகன் அமர்ந்திருந்தான். கடை முன் வந்து நின்ற யானைக்கு கடைக்காரர் ஒரு சீப்பு வாழைப்பழங்கள் கொடுத்தார். யானை தன் துதிக்கையால் அதை வாங்கித் தின்றது. சில மாதங்களுக்கு முன்னரும் இது போன்ற ஒரு யானை பாலனின் ஊருக்கு வந்தது.

அப்போது, ஒரு மளிகைக் கடைக்காரர் முழு தேங்காய் ஒன்றை கொடுத்தார். அதை மகிழ்ச்சியோடு வாங்கிய யானை பக்கத்தில் உள்ள கல்லில் உடைத்தது. இரண்டாக உடைந்த தேங்காயை சந்தோஷமாக சாப்பிட்டது அந்த யானை. இதை வேடிக்கைப் பார்த்த சிறுவர்களுள் பாலனும் ஒருவன்.

அன்று அப்போது பாலனின் மனதில் அந்த எண்ணம் உதயமானது. நாய், பூனை, கழுதை, மாடுகள் போன்ற விலங்குகளை எல்லாம் துன்புறுத்தி விட்டோம். உருவத்தில் பெரிய யானையையும் துன்புறுத்த வேண்டும் என்பதுதான் அந்த எண்ணம். யானையை எப்படி துன்புறுத்த வேண்டும் என்றும் முடிவு செய்தான். உடனே, யானையை அவனால் துன்புறுத்த முடியவில்லை. அடுத்த முறை வரும் போது யானையைத் துன்புறுத்த வேண்டும் என நினைத்திருந்தான். அதற்காக காத்திருந்தான் பாலன்.

யானையின் மணியோசை கேட்டதும் விளையாடிக் கொண்டிருந்த பாலன், யானையைத் துன்புறுத்த தயாராய் வைத்திருந்த பாதி தேங்காயோடு வந்தான். பார்ப்பதற்கு அது தேங்காய் போல தெரியும். ஆனால், அது தேங்காய் அல்ல. தேங்காய் சிரட்டையில் சுண்ணாம்பை பூசி வைத்திருந்தான் பாலன். தேங்காய் என நினைத்து யானை இவன் கொடுப்பதை வாங்கி சாப்பிடும். யானையின் வாய் வெந்துவிடும் என்பது பாலனின் நினைப்பு.

ஏற்கனவே தன் நண்பர்களிடமும் சொல்லி வைத்திருந்தான். சந்தோஷமாக வந்த பாலன் தைரியமாகச் சென்று போலி தேங்காயை நீட்டினான். தன் துதிக்கையில் வாங்கிய புத்திசாலி விலங்கான யானை அது அசல் தேங்காய் அல்ல... சுண்ணாம்பு பூசியது என உணர்ந்து கொண்டது. அதை கீழே போட்டது. ஓட்டம் பிடிக்கத் தயாரான பாலனை, தன் தும்பிக்கையால் வளைத்துப் பிடித்தது.

""ஐயோ... அம்மா... என்னைக் காப்பாத்துங்க'' என்று அலறினான்.

வேடிக்கைப் பார்த்தக் கூட்டம் பயந்து ஓடியது. யானைப் பாகன் சுதாரித்துக் கொண்டு யானைக்குப் புரியும் மொழியில் சிறுவனை ஒன்றும் செய்திட வேண்டாம் என கேட்டுக் கொண்டான். பாகனின் அன்புக்கு கட்டுப்பட்டது யானை. இருப்பினும், பாலனை தன் தும்பிக்கையில் வைத்துக் கொண்டே அப்படி இப்படியுமாக ஆட்டியது. பயத்தில் அலறிக் கொண்டே இருந்தான் பாலன். விஷயம் கேள்விப்பட்டு பாலனின் பெற்றோர்களும், உறவினர்களும் ஓடோடி வந்தார்கள். அழுது புலம்பினார்கள். தன் மகனை காப்பாற்றித் தரும்படி பாகனிடம் வேண்டினார்கள்.

""உங்கள் பையன் யானையை துன்புறுத்த வேண்டும் என்பதற்காக தேங்காய் சிரட்டையில் சுண்ணாம்பு தடவி கொடுத்திருக்கிறான். அவன் செய்தது பெரிய தவறு. தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டால் மட்டுமே யானை சிறுவனை விடுவிக்கும். இல்லையென்றால் உங்கள் பையனை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்'' என்றார் பாகன்.

உடனே பாலன், ""தான் செய்தது தவறு. யானை என்னை மன்னிக்க வேண்டும். இனிமேல் நான் எந்த உயிரினங்களையும் துன்புறுத்த மாட்டேன்'' என்றான்.

யானைப் பாகன் யானையிடம் அதற்குப் புரியும் மொழியில் சொல்ல, யானை பாலனை விடுவித்தது. யானையையும், யானைப் பாகனையும் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொன்னார்கள் பாலனும், அவனது பெற்றோர்களும்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, இப்பொழுதெல்லாம் பாலன் எந்த உயிரினங்களையும் துன்புறுத்துவதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.