சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சிறுகதை: சொர்க்கபுரியான மதனபுரி!

தனபுரியை மதனராஜன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மனைவி பெயர் மதனசுந்தரி. அவர்களுக்கு இரு மகன்கள். ஒருவன் பெயர் மதனகிரி. மற்றொருவன் பெயர் மதனசூரி. மதனராஜன்ஆட்சியில் மதனபுரி சொர்க்கபுரியாகத் திகழ்ந்தத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:49 am

தனபுரியை மதனராஜன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மனைவி பெயர் மதனசுந்தரி. அவர்களுக்கு இரு மகன்கள். ஒருவன் பெயர் மதனகிரி. மற்றொருவன் பெயர் மதனசூரி. மதனராஜன்ஆட்சியில் மதனபுரி சொர்க்கபுரியாகத் திகழ்ந்தது. எங்குப் பார்த்தாலும் பச்சைப் பசேலென வயலும், நீர் நிரம்பிய வரப்பும் கைகோர்த்து இருக்கும். நில வளத்திற்கும், நீர் வளத்திற்கும் குறைவில்லை. விவசாயம் செழித்தோங்கியது. விவசாயம் இல்லாத சமயங்களில் மக்கள் கைத்தொழில் செய்து வருமானம் ஈட்டினர். அதனால் அங்கு மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர்.

ஆனால், மன்னருக்கு மட்டும் ஒரே ஒரு குறை இருந்தது. தனக்குப் பிறகு இந்நாட்டை யார் ஆள்வது. தனக்கோ வயதாகி விட்டது. தன் தனயன்கள் மதனகிரி வீரத்திலும், கலையிலும் சிறந்து விளங்குகிறான். ஆனால், அவன் ஒரு முன்கோபி. மதனசூரியோ கல்வியையும், ஒழுக்கத்தையும் இரு கண்களாகப் பாவித்து வருகிறான். எனவே, இவர்களில் யாரை மன்னராக முடிசூட்டுவது என்று குழம்பினான்.

எனவே, தனது குழப்பத்தை அரசியாரிடமே தெரிவித்தால், அது தெளியும் என எண்ணினான். உடனே அரசியாரை தன் அறைக்கு வருமாறு அழைத்தான். ""அரசியாரே! எனக்கோ வயதாகி விட்டது. மக்களுக்கு முடிந்த வரையில் நான் நல்லாட்சியை அளித்து விட்டேன். எனக்குப் பிறகு அரசாளும் எனது மகன்களில் ஒருவர் இதே மாதிரி நல்லாட்சியை தொடர வேண்டும் என்பதே எனது பேரவா. எனவே, எனக்குப் பிறகு நம் மகன்களில் யாரை மன்னராக முடி சூட்டலாம் என்பதை நீயே உன் திருவாயால் மலர்ந்தருளுவாயாக'' என்றார்.

இதைக் கேட்ட அரசியார் மதனசுந்தரி, ""மன்னா, நம் பிள்ளைகளில் யாரை முடிசூட்டுவது என்று தாங்கள் கேட்பது, என் இரு கண்களில் எந்தக் கண்ணை உனக்குப் பிடிக்கும் என்று கேட்பது போல் உள்ளது. இருவரும் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். இருவரில் ஒருவருக்கு பதவியளித்தால், பதவி கிடைக்காதவனுக்கு நம் மீது காழ்ப்புணர்ச்சி மிகும். "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்பதைத் தாங்கள் அறியாதது அல்ல. தங்களுக்குப் பிறகு யார் இந்த நாட்டை ஆள வேண்டும் என்ற முடிவினை நாம் நம் நாட்டு மக்களிடமே விட்டு விடலாம். அவர்கள் விரும்பும் வண்ணம் நம் இரு மகன்களில் யார் அதிகமாக மக்கள் பணியாற்றுகிறார்களோ அவர்களையே நாம் மன்னராக முடிசூட்டலாம்'' என்றார்.

அதைக் கேட்ட மன்னன் மிகவும் மகிழ்ந்தார். ""அரசியாரே, என் மனதிலிருந்த குழப்பத்தை நீக்கி விட்டாய், மிக்க மகிழ்ச்சி!'' என்றார். உடனே தன் தனயன்களான மதனகிரியையும், மதனசூரியையும் தன் அறைக்கு வருமாறு அழைத்தார். தந்தையைக் கண்ட தனயன்கள் இருவரும் மன்னனைக் கண்டு வணங்கினர். உடனே மன்னர், ""எனதருமை புதல்வர்களே, எனக்கோ வயதாகி விட்டது. எனக்குப் பிறகு உங்களில் ஒருவரை மன்னராக்க விரும்புகிறேன். மக்கள் எப்போதும் நல்லாட்சியையே விரும்புவார்கள். தாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. எனவே, மக்கள் விரும்பும் வண்ணம் பணியாற்றி யார் நம் மக்களிடம் நல்லப் பெயர் எடுக்கிறீர்களோ, அவரையே நான் மன்னராக்க விரும்புகிறேன். எனவே, இருவரும் மக்கள் பணியாற்றி வாருங்கள். அவர்களுடன் பழகுங்கள். அவர்களோடு ஒன்றாகக் கலந்து அவர்களின் குறைகளை அறிந்து அவற்றை களைய முற்படுங்கள். அவர்களிடம் நல்லப் பெயர் எடுங்கள்'' என்று உத்தரவிட்டார். மன்னரின் உத்தரவை இருவரும் சிரமமேற்று மன்னரிடம் விடைப் பெற்றுச் சென்றனர்.

மன்னரிடம் வாக்களித்தவாறு இருவரும் காரியத்தில் இறங்கினர். மதனசூரி கலையில் வல்லவனானதால், வானளாவ வளர்ந்து மேகக் கூட்டங்களுடன் விளையாடத் துடிக்கும் மரங்களை எல்லாம் வெட்டினான். அங்கெல்லாம் கலைக் கூடங்களைக் கட்டினான். அங்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டான். இதனால் மக்கள் தங்கள் விவசாயத் தொழிலையும், கைத் தொழிலையும் மறந்தனர். தங்களின் பெரும்பாலான நேரத்தை ஆடல் பாடல் நிகழ்ச்சிகளிலேயே கழித்தனர். விவசாயம் குன்றியது. மக்களின் வீடுகளில் வறுமை தாண்டவமாடியது.

மேலும், மதனகிரி வீரமிக்கவனாக இருந்ததால், நாட்டின் எல்லையை விரிவுப்படுத்த எண்ணினான். அண்டை நாடுகளுடன் போரிட திட்டமிட்டிருந்தான். இளைஞர்களைப் போர் படையில் கண்டிப்பாக சேருமாறு உத்தரவிட்டான். அவன் முன்கோபியாக இருப்பதால், நியாயம் எதுவென உணராமல் தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்தான். இதனால், நாட்டில் வன்முறை வெறியாட்டம் நடந்தது. மக்கள் மதனகிரியை வெறுத்தனர்.

ஆனால், மதனசூரியோ பொறுமையையும், நிதானத்தையும் இழக்காமல் மக்களை நல்வழிப்படுத்த எண்ணினான். நாட்டின் நீர்வளம் குறைந்திருப்பதை அறிந்த மதனசூரி, நீர்நிலை மிகுந்த இடங்களில் குளங்களை வெட்டச் செய்தான். அணைகளைக் கட்டினான். தனக்கு ஆதரவாக இளைஞர்கள் பட்டாளத்தை உருவாக்கி அவர்களுக்கு கைத்தொழிலை கற்றுக் கொடுத்தான். மற்ற நேரங்களில் ஏரி, குளங்களை தூர் வாரச் செய்தான். இதனால், மக்கள் தங்கள் நேரத்தை வீணாக்காமல் நல்ல வழியில் செலவிட்டனர்.  

விவசாயிகளுக்கு அவர்கள் வாங்கும் சக்திக்கேற்ப விதைகளையும், உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் கிடைக்கச் செய்தான். செடிகளையும், மரக்கன்றுகளையும் வழங்கி ஊரெங்கும் நடுமாறு உத்தரவிட்டான். சுற்றுச்சூழல் கெடாமல் இருக்க யார் அதிகமாக மரம் நடுகிறார்களோ, அவர்களுக்கு பரிசு என அறிவித்தான். அதனால், மக்கள் போட்டிப் போட்டு மரங்களை நட்டனர். நாட்டில் விவசாயம் செழித்தோங்கி விளைச்சல் பெருகியது.

மக்கள் நலமுடன் வாழ்ந்தனர். மக்கள் மதனசூரியையே விரும்பினர். இதைக் கேள்வியுற்ற மன்னர் மகிழ்ந்தார். அரசர் மக்களின்  பிரதிநிதிகளை அரசவைக்கு வருமாறு உத்தரவிட்டார். அவர்களிடம் அரசர், ""எனக்குப் பிறகு இந்நாட்டை ஆள தகுதிப் படைத்தவர் யார் என்று நீங்கள் எல்லோரும் கருதுகிறீர்கள்?'' எனக் கேட்டார்.

÷அனைவரும், ""மதனசூரியே'' என ஒருமித்தக் குரலில் உரக்கத் தெரிவித்தனர். மக்கள் விரும்பிய வண்ணம் மதனசூரி மன்னனாக முடிசூட்டப்பட்டான். இதைக் கண்ணுற்ற மன்னனும், அரசியாரும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனது அண்ணனை அழைத்துத் தேற்றினான் மதனசூரி.

""மதனகிரி வீரம் மட்டும் இருந்து விவேகம் இல்லையென்றால் பயனில்லை. அதுபோல, விவேகம் மட்டும் இருந்து வீரம் இல்லையென்றாலும் பயனில்லை. வீரம் என்பது நெருப்பைப் போன்றது. நெருப்பு ஒன்றை ஆக்கவும் வல்லது, அழிக்கவும் வல்லது. அதுபோல, நாம் வீரத்தை ஆக்கத்திற்கே பயன்படுத்த வேண்டும். அதுபோல, பொறுமையும், நிதானமும் நமது இரு கண்கள். அவசரம் நம் கண்களை மறைக்கும். எனினும், உன் வீரத்தினை கருத்தில் கொண்டு இன்று முதல் உன்னை நம் படைத் தளபதிகளில் தலைமை தளபதியாக நியமிக்கிறேன்'' என்றான் மன்னன் மதனசூரி. அதைக் கேட்ட மதனகிரி மிகவும் மகிழ்ந்தான். மதனசூரியும், மதனகிரியும் இணைந்து மதனபுரியை மக்கள் விரும்பும் வண்ணம் ஆட்சிப் புரிந்து மக்களிடம் நல்ல பெயர் பெற்றனர். மக்கள் எல்லா நலமும், வளமும் பெற்று சிறப்புடன் அமைதியாக வாழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.