திருந்திய குரங்கு- சிறுகதை
அம்மன்புரம் என்ற கிராமத்தில் அழகான அம்மன் கோயில். அந்தக் கோயிலின் பக்கத்தில் விரிந்து படர்ந்த ஆலமரம். பறவைகள் எல்லாம் இந்த அம்மன் கோயில் ஆலமரத்தில் கூடுகட்டி வசித்து வந்தன. மனிதர்கள் ஆலமர நிழலில் தங்க


அம்மன்புரம் என்ற கிராமத்தில் அழகான அம்மன் கோயில். அந்தக் கோயிலின் பக்கத்தில் விரிந்து படர்ந்த ஆலமரம். பறவைகள் எல்லாம் இந்த அம்மன் கோயில் ஆலமரத்தில் கூடுகட்டி வசித்து வந்தன. மனிதர்கள் ஆலமர நிழலில் தங்கி இளைப்பாறி சென்றார்கள். பறவைகளுக்கெல்லாம் தாய் வீடாக விளங்கிய இந்த ஆலமரத்தில் வகை வகையான பறவைகள் கூடுகட்டி வசித்து வந்தன. காலை நேரத்தில் இரைத் தேட புறப்பட்டுச் செல்லும் பறவைகள் மாலை நேரத்தில் மீண்டும் ஆலமரத்திற்கே திரும்பி வந்து தங்கும். அவ்வேளைகளில் தனித்தனியே இரைதேடச் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களை கதை கதையாக பேசி மகிழும்.
அம்மன்புரம் மக்கள் ஆலமரத்து பறவைகளை யாரும் வேட்டையாடாதவாறு பார்த்துக் கொண்டார்கள். பண்டிகை தினங்களில் வெடிகளை வெடிக்காதவாறும் பார்த்துக் கொண்டார்கள். வெடி வெடித்தால் பறவைகள் அனைத்தும் இடம் பெயர்ந்து விடும் என்று பயந்தார்கள். பறவைகள் அனைத்தும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நேரத்தில் ஒரு சோதனை வந்து சேர்ந்தது.
எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று ஆலமரக் கிளையில் அமர்ந்தது. கிளைவிட்டு கிளை தாவியது. ஆலம் பழங்களை சாப்பிட்டு விட்டு குரங்கு வந்த வழியே சென்று விடும் என பறவைகள் எதிர்பார்த்தன. ஆனால், குரங்கு தொடர்ந்து அங்கேயே தங்கியதால் பறவைகள் அனைத்தும் ஒன்றுகூடி பேசி குரங்கிடம் சென்று, ""இந்த ஆலமரம் எங்களுக்கு மட்டுமே சொந்தம். அதனால் நீ வசித்த இடத்திற்கு சென்று விடு'' என்று கூறின. கோபம் வந்து விட்டது குரங்கிற்கு.
""ஆலமரம் அனைவருக்கும் பொது. என்னைப் போகச் சொல்ல உங்களுக்கு உரிமை கிடையாது. வேண்டுமானால் நீங்கள் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள். நான் போக மாட்டேன். இந்த ஆலமரம்தான் எனது வசிப்பிடம்'' என கறாராய் சொல்லிற்று. பறவைகளும் செய்வதறியாது திகைத்தன.
÷குரங்கு தன் சேஷ்டையை தொடங்கியது. பறவைகள் இட்ட முட்டைகளை எடுத்து குடிக்கத் தொடங்கியது. பறவைகளுக்கு பயமும், கூடவே கோபமும் ஏற்பட மீண்டும் அவைகள் குரங்கிடம் சென்று, ""ஆலமரத்தில் தங்குவது நீ நியாயம் என்றாலும், நாங்கள் கஷ்டப்பட்டு கூடுகட்டி இஷ்டப்பட்டு இடும் முட்டைகளை நீ குடித்து சேதப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?'' என கேட்டன.
""வயிற்றுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே. எதற்காக கூட்டில் இடுகின்றீர்கள்? நான் அப்படி தான் குடிப்பேன். என்னை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது'' என இறுமாப்புடன் பேசியது குரங்கு.
மற்றொரு நாள் இறகுகள் சரியாக முளைத்திடாத புறாக் குஞ்சு ஒன்றிடம், ""ஏன் கூட்டுக்குள்ளேயே அடைந்து கிடைக்கிறாய். போ... நீயும் உன் பெற்றோர்களைப் போல
பறந்து சென்று இரைத் தேடு என சொல்லிய படியே பறக்கவிட, இறகுகள் சரியாக முளைக்காத புறாக் குஞ்சு நிலத்தில் மோதி செத்து மடிந்தது.
பறவைகள் ரொம்பவும் துக்கமடைந்தன. மீண்டும் அவைகள் ஒன்றாகக் கூடி குரங்கை விரட்டிட முடிவு செய்தன. தொந்தரவு தந்து விரட்டிட முடிவு செய்தன. அதுதான் சரியான முடிவு என்றும் எண்ணின.
கழுகு ஒன்று ஒரு பெரிய பழத்தை தன் அலகால் கொத்தி வந்து உச்சிக் கிளையில் அமர்ந்துக் கொண்டு குரங்கின் தலைமீது போட்டது. ஆனால் குரங்கோ சாகவில்லை. லேசாக தலையை தடவிக் கொண்டு, ""என்னைக் கொன்றுவிட முயற்சி செய்கின்றீர்களா? உங்களை சும்மா விடமாட்டேன்'' என கூறிக் கொண்டே, பறவைகளின் புத்தம் புது கூடுகள் பலவற்றை பிய்த்து எரிந்தது குரங்கு.
மற்றொரு நாள் பருந்து ஒன்று விஷக்கனி ஒன்றை கொண்டு வந்து கொடுத்து விட்டு, ""குரங்கே... குரங்கே... உனக்காக இந்த அதிசயக் கனியை பொதிகை மலையிலிருந்து கொண்டு வந்திருக்கிறேன். நன்றாக ருசித்து சாப்பிடு. உன் உடல் புஷ்டியாகி விடும்'' எனச் சொல்லிக் கொடுத்தது.
""சோழியன் குடுமி சும்மா ஆடுமா?'' என்ற பழமொழியை சொல்லிய படியே கனியை வாங்கிய குரங்கு, அதைப் பிட்டு மணம் நுகர்ந்தது. அது விஷக்கனி என்பதை அறிந்து கடுங்கோபம் கொண்டு மரக்கிளையிலிருந்து ஒரு குச்சியை ஒடித்து பருந்தை ஒரு அடி கொடுக்க, பருந்தின் இறக்கையில் பலமான காயம் ஏற்பட்டது. குரங்கின் சேஷ்டைகள் தொடர்ந்தன.
ஒரு பௌர்ணமி இரவு பறவைகள் எல்லாம் ஒன்று கூடின. ""குரங்கின் சேஷ்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதை விரட்டிட நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அதனால் நாம் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விடுவோம். அதுதான் நமக்கு நிம்மதி'' என்றது காகம்.
உடனே பச்சைக் கிளி ஒன்று, ""நாம் அவ்வாறு செல்ல வேண்டாம். மார்கழி மாதம் பிறக்கப் போகிறது. குளிர் வாட்டும். அப்போது நாம் வள்ளுவர் காட்டிய வழி நிற்போம்'' என ரகசியமாக ஏதோ ஒரு தகவலை பிற பறவைகளுக்கு சொல்லிட, மைனா ""அது சாத்தியமா?'' என கேட்டது. ""முயற்சிப்போம். முயற்சிதானே வெற்றிக்கு மூலதனம்'' என்றது கிளி.
நாட்கள் நகர்ந்தன. குரங்கின் சேஷ்டைகளும் குறைந்தபாடில்லை. மார்கழியும் பிறந்தது. கடுமையான குளிரில் நடுங்கியது குரங்கு. ஏற்கனவே தாங்கள் பேசிக் கொண்டது போல் குரங்கிடம் சென்று அந்தப் பார்சலை நீட்டின. குரங்கு வாங்க மறுத்தது. ""உன் நன்மைக்காகத்தான் இந்தப் பார்சல். உனக்கு விருப்பமானால் பிரித்து பார்'' என சொல்லியபடி, பார்சலை மரக்கிளையில் வைத்துச் சென்றன பறவைகள்.
""இரவு ஏன் வருகிறது? இரவு வரக்கூடாது. இரவு வந்தால் தானே குளிர் வருகிறது. நம்மை வாட்டுகிறது'' என கவலையோடு புலம்பிக் கொண்டிருந்த குரங்கு பறவைகள் தந்த பார்சலை பிரித்துப் பார்க்க ஆசைப்பட்டு ஆவலாக அதைப் பிரித்தது. என்ன ஆச்சரியம்? குளிர் தாங்கும் கம்பளி, மப்ளர், தொப்பி. அவைகளை அணிந்துக் கொண்டது குரங்கு. குளிர் போன இடமே தெரியவில்லை.
வெட்கித் தலைகுனிந்தது குரங்கு. தீமையே செய்த நமக்கு தீமை செய்யாமல், நன்மையை செய்துள்ளனவே பறவைகள். நல்ல இதயம் படைத்த பறவைகளுக்கு நாம் எத்தனை இடையூறுகளை செய்து விட்டோம். இனிமேல் பறவைகளை தொந்தரவு செய்யக் கூடாது என முடிவு எடுத்து பறவைகளிடம் மன்னிப்புக் கேட்டது குரங்கு.
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்' என்ற குறளை சொல்லி அதன் வழி நடக்கச் செய்த கிளியை பல பறவைகளும் பாராட்டின. ஏன் குரங்கும் கூடத்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...