சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சிறுகதை: நரியின் தீர்ப்பு

மலையநத்தம் ஓர் அழகிய சிற்றூர். இயற்கை வளம் செறிந்தது. அவ்வூரில் சொக்கநாதர் என்ற புலவர் இருந்தார். அவர் பல நற்குணங்களை உடையவர். அவரது கவித் திறனை பலரும் பாராட்டினர். அவரால் அந்த ஊரே பெருமை பெற்றது. அப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:50 pm

லையநத்தம் ஓர் அழகிய சிற்றூர். இயற்கை வளம் செறிந்தது. அவ்வூரில் சொக்கநாதர் என்ற புலவர் இருந்தார். அவர் பல நற்குணங்களை உடையவர். அவரது கவித் திறனை பலரும் பாராட்டினர். அவரால் அந்த ஊரே பெருமை பெற்றது. அப்புலவர் இரக்க குணமும், தயாள மனமும் படைத்தவர். அவர் எதிரில் யார் துன்பப்பட்டாலும் அதை சகித்துக் கொள்ளமாட்டார். உடனே விரைந்து சென்று அவர்களின் துன்பங்களைக் களைய முற்படுவார். எல்லா மக்களும் அவரது இரக்கக் குணத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.

ஒரு நாள் புலவர் சொக்கநாதர், பக்கத்து ஊரிலுள்ள நண்பரின் மகளுக்குக் கல்வி கற்பிக்க புத்தகத்துடன் சென்றார். ஒரு காட்டு வழியே நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று உறுமல் சத்தம் கேட்டது. அச்சத்துடன் திரும்பிப் பார்த்தார் புலவர். அங்கு மரங்களுக்கிடையில் ஒரு கூண்டில் புலி அடைப்பட்டுக் கிடந்தது. அதைக் கண்டு புலவர் மிகவும் பயந்தார்.

புலவரைப் பார்த்து விட்ட புலி பரிதாபமாகச் சொன்னது: ""ஐயா, தயவு செய்து என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடுங்கள். நீச்சல் தெரியாதவன் கடலில் குதித்து முத்தை எடுக்க விரும்பியது போல, நான் சிறிய மாமிசத் துண்டுக்கு ஆசைப்பட்டு இந்தக் கூண்டில் அகப்பட்டுக் கொண்டேன். என்னைக் காப்பாற்றினால் ஓர் உயிரைக் காப்பாற்றிய புண்ணியம் உமக்குக் கிடைக்கும். தவிரவும், ஓர் உயிரை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது பெரிய தர்மம் அல்லவா?''

""ஓர் உயிரைக் காப்பது பெரிய தர்மம் என்பதை நான் அறிவேன். ஆனால், உன்னைக் காப்பாற்றிய பிறகு நான் உயிருடன் இருப்பேன் என்று என்ன நிச்சயம்?'' என்று புலவர் கேட்டார்.

உடனே புலி, ""செய்நன்றி கொன்றவனுக்கு மன்னிப்பே கிடையாது, என்னை நம்புங்கள். நான் சத்தியமாக உங்களுக்கு எவ்வித தீங்கும் செய்யமாட்டேன். என்னை விடுவித்து விட்டால், நான் காட்டில் ஓடிப் போய் விடுவேன். தயவு செய்து என் மீது இரக்கம் காட்டு'' என்றது.

புலவர் புலியை நம்பினார். அருகில் சென்று முன்னுள்ள கதவைத் தூக்கினார். புலி சீற்றத்துடன் வெளியே வந்தது. கூண்டிற்குள் அடைப்பட்டிருந்த புலிக்கு நல்ல பசி. புலவரை கொல்ல முற்பட்டது. புலவர் தடுத்து புலியின் வாக்கை நினைவூட்டினார். ""நீ சத்தியத்தை மீறுகிறாய்'' என்றார்.

""யாரேனும் நான்கு நடுவரிடம் சென்று சொல்வோம். அவர்களில் பெரும்பாலோர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்போம்'' என்றார்.

முதலில் இருவரும் ஒரு மரத்திடம் சென்றனர். மரம் புலவரைக் கண்டவுடன் வளைந்து வணங்கியது. பின்னர் அது கூறியது. ""நான் சிறு வயதாக இருக்கும் போது இந்த மனிதர்கள் எனக்குத் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறார்கள். ஆனால், நான் பெரியவனாகி விட்டவுடன் என்னை ஈவிரக்கமின்றி வெட்டுகிறார்கள்.

அதனால், என் கிளைகளில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த பறவையினங்களும், மற்ற உயிரினங்களும் அழிந்து விடுகின்றன. என் அழகைக் காண வரும் மேகக் கூட்டங்கள், நான் இங்கே மூளியாக, மொட்டையாக இருப்பதைக் காண சகிக்காமல், என் மீது அன்பு மழையைப் பொழியாமல் சென்று விடுகின்றன. ஆகவே, புலியாரே இந்த மனிதன் மீது இரக்கம் காட்டாதீர்'' என்றது. அதைக் கேட்ட புலவர் திடுக்கிட்டார்.

பின்னர் இருவரும் ஒரு ஆற்றிடம் சென்று முறையிட்டனர். புலவரைக் கண்டு அந்த ஆறும் வணங்கியது. பின்னர் அது பேசியது. ""இந்த மனிதர்கள் புனிதமானவள் என்று சொல்லி என்னை வணங்குகிறார்கள், போற்றுகிறார்கள். எனினும் என் மீதே குப்பைக் கூளங்களைக் கொட்டுகின்றனர். தொழிற்சாலைகளின் கழிவு நீரையும், சாக்கடை நீரையும் என் மீது பாய விடுகின்றனர். எங்களை கண்ணெனக் காக்கும் மணல் தாயை கதற கதற எடுத்துச் செல்கின்றனர். எனவே புலி அண்ணா, இந்த மனிதன் மீது தயை காட்டாதே'' என்றது அது. இதைக் கேட்ட புலவர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இருவரும் அங்கே பசியால் வாடிக் கொண்டிருந்த ஒரு எருதிடம் சென்று முறையிட்டனர். அந்த எருது அழுதுக் கொண்டே கூறியது. ""நான் இந்த மனிதர்களுக்கு எவ்வளவோ உதவி செய்து இருக்கிறேன். மேடு பள்ளமான நிலங்களை உழுது, என் எஜமான் பயிரிட்டு விளைச்சலைப் பெருக்க உழைத்திருக்கிறேன். ஆனால், இப்போது எனக்கு வயதாகி விட்டது. என்னைத் துரத்தி விட்டான். ஆகவே, புலி அண்ணா இவன் மீது இரக்கம் காட்டாதே'' என்றதும், புலவர் பயந்தார்.

இதையெல்லாம் ஒரு நரி பார்த்துக் கொண்டே வந்திருந்தது. அதன் கொடூரமான தோற்றத்தையும், அவலட்சணமான வாலையும் பார்த்த புலவர் இது நமக்கு உதவுமா என்று எண்ணினார். ஆனால் நரி, புலவரின் நிலையை எண்ணி இரங்கியது. ""உங்கள் வழக்கு எனக்குப் புரியவில்லை. எனக்கு அது புரிய நீங்கள் முதலில் இருந்த இடங்களில் நில்லுங்கள். அதைப் பார்த்துதான் நான் தீர்ப்புச் சொல்ல வேண்டும்'' என்றது நரி. அது, அவரைக் காப்பாற்றுவதோடு, தன்னையும் காத்துக் கொள்ள எண்ணியது.

இருவரையும் அழைத்துக் கொண்டு கூண்டுள்ள இடத்துக்கு வந்தது. புலவரை அவர் நின்றிருந்த இடத்தில் நிறுத்தியது. அவ்வாறே புலியையும் அதன் கூண்டிற்குள் நிறுத்தியது. புலவரை முன்பு போலவே கதவை மூடிக் காட்டுமாறு சொல்ல, அவரும் கூண்டின் கதவை அழுத்தி மூடித் தாளிட்டார். அவ்வளவுதான்,  புலி பாவம், முன்பு போல கூண்டில் அடைபட்டுக் கொண்டது. நரியாரை வாழ்த்தி விட்டு புலவர் விடைப் பெற்றுச் சென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.