சிறுகதை: முந்திரிப் பழமும், கனி பாட்டியும்!
கோடை விடுமுறை. முதன்முதலாக தன் தங்கைகளுடன் கிராமத்தில் உள்ள தன் பாட்டியின் வீட்டிற்கு வந்திருந்தான் ஸ்டீபன். பெற்றோர்கள் இவர்களை பாட்டியின் வீட்டில் விட்டுவிட்டு நகரத்திற்கு திரும்பினார்கள். கனிபாட்ட


கோடை விடுமுறை. முதன்முதலாக தன் தங்கைகளுடன் கிராமத்தில் உள்ள தன் பாட்டியின் வீட்டிற்கு வந்திருந்தான் ஸ்டீபன். பெற்றோர்கள் இவர்களை பாட்டியின் வீட்டில் விட்டுவிட்டு நகரத்திற்கு திரும்பினார்கள்.
கனிபாட்டியின் வீடு தென்மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்தது. நகரத்திலேயே வாழ்ந்து பழகிப் போன ஸ்டீபன் மற்றும் அவனின் தங்கைகளான ஷீபா, கிருபா மூன்று பேருக்குமே கிராமத்து அனுபவம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
முதன் முதலாக கனி பாட்டியின் வீட்டுக்கு வந்த போது பாட்டி இவர்களை உச்சிமுகர்ந்து வரவேற்றார்கள். பாட்டியின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.
அக்கம்பக்கத்து வீட்டாரிடமெல்லாம் ""என் பேரன், பேத்தி வந்திருக்காங்க'' எனச் சொல்லி சொல்லி மகிழ்ந்தும், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் தன் கடைசி தங்கை கிருபாவை, தங்கள் வீட்டுப் பிள்ளையைப் போல எடுத்துக் காட்டி கொஞ்சி மகிழ்ந்ததையும் கண்ட ஸ்டீபனும், ஷீபாவும் பட்டணத்தில் நம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் பார்த்தும் பார்க்காதது போல நடந்துக் கொண்டதையும் நினைத்துப் பார்த்தார்கள்.
கனி பாட்டியின் வீட்டில் டி.வி. இருந்தது. ஆனால், மூவரும் அதை அதிகமாகப் பார்க்கவில்லை. காரணம், அவர்களுக்கு விளையாடி மகிழ தெருவில் பல சிறார்கள் இருந்தார்கள்.
பட்டணத்திலிருந்து வந்திருக்கும் இவர்களுக்கு கிராமத்து விளையாட்டுகள் பலவற்றை சொல்லிக் கொடுத்து இவர்களையும் விளையாட்டிற்கு சேர்த்துக் கொண்டார்கள். நகரத்தில் இருக்கும் போது எப்போதும் டி.வி. நிகழ்ச்சிகளிலேயே மூழ்கி, எப்படியெல்லாம் பொழுதுகளை வெட்டியாய் கழித்திருக்கிறோம் என்பதை கிராமம் அவர்களுக்கு நன்றாகவே உணர்த்தியது.
கிராமத்தில் இத்தனை விளையாட்டுக்கள் உள்ளதா என வியந்தனர்.
அதிகாலை "கொக்கரக்கோ கோ' என சேவல் கூவி கனி பாட்டியை எழுப்பியதைக் கண்டு மூவரும் வியந்தனர். அப்போது எழுந்துக் கொண்ட கனி பாட்டி முற்றத்தில் சாணம் தெளித்து கோலமிட்டார். அதிகாலையிலேயே எழுந்து சுறுசுறுப்புடன் வேலை செய்யும் பாட்டியின் சுறுசுறுப்பைக் கண்டு வியந்தார்கள்.
காலையில் சூரியன் கீழ்வானத்தில் செக்கச் செவேல் என எழும்பும் இனியக் காட்சி இவர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பாட்டி இவர்களுக்காக பதநீரை தருவித்து பனை ஓலை பட்டை பிடித்து குடிக்கத் தந்தார்கள். பதநீர் தேவாமிர்தமாக தித்தித்தது. பட்டணத்தில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் அதிக விலையுள்ள பானங்களை விட ரொம்ப ரொம்ப ருசியாக இருந்தது.
இறைவன் தந்த இயற்கைபானத்தை கடைசி தங்கை ரொம்பவும் ரசித்து ருசித்து பருகினாள். தன் பிஞ்சு நாக்கால் சப்புக் கொட்டினாள். பாட்டியின் தோட்டத்தில் சில முருங்கை மரங்கள் இருந்தன.
முருங்கை மரப் பூக்களில் தேன் உறிஞ்சும் தேன் சிட்டுக்களை ரசித்தார்கள். அவை கிளைவிட்டு கிளை தாவி தேன் உறிஞ்சின. பாட்டியின் வீட்டிற்குள் சிட்டுக் குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது.
பாட்டி தரும் உணவுகளை கொத்திச் சென்று தன் குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்ததைக் கண்டார்கள். இதுதான் பெண் சிட்டுக்குருவி, இதுதான் ஆண் சிட்டுக்குருவி என பாட்டி அடையாளம் காட்டினார்கள்.
பாட்டியின் கிராமத்தைச் சுற்றி பெரிய பெரிய பனைமரங்கள் இருந்தன. விரிந்து படர்ந்த பெரிய ஆலமரம் ஒன்று அம்மன் கோயிலின் முன் நின்றது. அதன் நிழலில் ஒதுங்கி அதன் குளுமையை ரசித்தார்கள்.
இவர்கள் சென்ற போது அங்குள்ள வாய்க்காலில் நிறைய தண்ணீர் பாய்ந்து ஓடியது. கிராமத்து மக்கள் அந்தத் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தார்கள்.
அவர்களின் உதவியோடு ஸ்டீபன், ஷீபா, கிருபா ஆகிய மூவரும் குளித்து நீச்சலடித்து மகிழ்ந்தார்கள். பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேல் என மரங்கள், தோட்டத்துப் பாசன வயல்வெளி வரப்புகள்.
குயில் கூவும் என்பதை பாடங்களில் மட்டுமே படித்த இவர்களுக்கு உண்மையிலேயே கூவும் குயிலையும் அதன் குரலையும் ரசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பாட்டியின் வீட்டு முன்பு இருந்த வேப்பமரத்திலிருந்து ஒரு அழகான கருங்குயில் கூவிக் கொண்டிருந்தது.
பெரிய கோபுரத்தோடு இருந்த கோயிலுக்குச் சென்ற போது, நிறைய புறாக்களைக் கண்டு ரசித்தார்கள். அவைகள் தங்களுக்குள் சண்டையிடாமல் ஒன்றாக கூடி வாழ்வதைக் கண்டு மகிழ்ந்தார்கள்.
கனி பாட்டி தினந்தோறும் கிராமத்து பண்டங்ந்ளை இவர்களுக்கு செய்து கொடுத்தார். தெருவில் விற்கும் ஐஸ் மற்றும் பஞ்சுமிட்டாய்களை வாங்கி கொடுத்தார்கள். பாட்டி ஒரு கூடைய நிறைய முந்திரிப் பழம் கொண்டு வந்து காட்டிய போது, அந்தப் பழத்தைக் கண்ட போது இவர்களுக்கு ரொம்ப, ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
பழத்தின் கொட்டை பழத்திற்குள் இராமல் வெளியே இருந்தது. ""என்னப் பாட்டி இது, இந்தப் பழத்திற்கு மட்டும் கொட்டை (விதை) வெளியே இருக்கு'' என கடைக் குட்டி கிருபா கேட்ட போது, ""எல்லா உயிர்களையும் படைத்த பரமசிவன், சற்று நேரம் தூங்கிக் கொண்டிருந்த போது, பார்வதி தேவிக்கும் தானும் ஒரு பழத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஒரு பழத்தை உருவாக்கினார். அதற்குள் சிவபெருமான் விழித்துக் கொள்ள பார்வதி தேவி அவசர அவசரமாக அந்தப் பழத்தை முழுமையாக்கும் அவசரத்தில் கொட்டையை அதன் உள்ளே வைக்க மறந்து வெளியே அதாவது, பழத்தின் வெளிப் பகுதியில் ஒட்ட வைத்து விட்டார். அதனால்தான் முந்திரிப் பழத்திற்கு மட்டும் கொட்டை வெளியே இருக்கிறது'' என பாட்டிக் கூறிய புராணக் கதையைக் கேட்டு, ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
ஒரு நாள் பாட்டியின் கிராமத்தில் திடீரென கோடை மழை பெய்தது. தெருவில் ஓடி மழைத் தண்ணீரில் சிறுவர்கள் காகிதக் கப்பல்களை செய்து மிதக்க விட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்களும் காகிதத்தில் கப்பல் செய்து விட்டார்கள். அது இரட்டிப்பு மகிழ்ச்சியை அவர்களுக்குத் தந்தது.
கிராமத்திலேயே தங்கிவிடுவோமா என்று கூட மூவரும் நினைத்தார்கள். இத்தனை வருடங்களாக கிராமத்திற்கே வராமல் பட்டணத்திலேயே இருந்து விட்டோமே என நினைத்து வருத்தப்பட்டார்கள். கிராமத்தை அவர்களால் மறக்கவே முடியவில்லை.
நகரத்திற்குப் போனாலும் நிச்சயம் இந்தக் கிராமத்து நினைவுகள் நம்மை விட்டு அகலாது என நினைத்தார்கள். இனிமேல் விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் கண்டிப்பாக கிராமத்திற்கு வர வேண்டும் என முடிவு எடுத்தார்கள்.
கிராமத்தை விட்டு விரைவில் பிரிந்து நகரத்திற்குப் போகப் போகிறோமே என மனக்கவலையும் அவர்களுக்குள் வந்துச் சென்றது. தன் பாட்டியிடம் நிறைய கற்றுக் கொண்டதாக மூவரும் பேசிக் கொண்டார்கள்.
பாட்டி குனிந்து நடந்து சென்ற காட்சி பணிவுடன் வாழ வேண்டும் என்பதையும், பாட்டியின் இடுப்பில் தொங்கிய சுருக்குப்பை சேமித்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களுக்கு உணர்த்தியதாக உணர்ந்து கொண்டார்கள்.
எந்திரத்தனமான நகரத்திற்குச் சென்று விட்டாலும், முந்திரிப் பழத்தையும் அதைப் பற்றி பாட்டி சொன்ன கதையும் பிஞ்சு மனங்களில் நிச்சயம் நினைவில் நிற்கத்தான் செய்யும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...