இத்தாலி தெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு. இதன் நிலப் பகுதி கால் பாதம்போன்ற அமைப்புக் கொண்டது. இந்த நாடு முப்புறமும் அட்லாண்டிக் கடலால் (மத்தியதரைக் கடல்) சூழப்பட்ட தீபகற்ப நாடாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சில்வேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. இத்தாலி நாட்டில் கி.மு. 8000 ஆண்டு காலத்திலேயே காமுனி எனும் நாகரிகம் இருந்துள்ளது.
இத்தாலியின் தலைநகரம் ரோம். ஆட்சி மொழி இத்தாலிய மொழி. நாடாளுமன்றக் குடியரசு அரசியல் அமைப்பு இங்கு செயல்படுகிறது. 60,418,711 பேர் இங்கே வாழ்கிறார்கள். இந்த நாடு 301,318 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பைக் கொண்டுள்ளது.
இத்தாலி தன் நிலப்பரப்பிற்குள் "சான் மேரினோ' மற்றும் "வாட்டிகன்' ஆகிய இரு தனி நாடுகளை உள்ளடக்கி உள்ளது. இங்கு யூரோ எனும் நாணயம் பயன்படுத்தப்படுகிறது. "ஜியார்ஜியோ நபாலிடானோ' குடியரசுத் தலைவராகவும், "சில்வியோ பெர்லுஸ்கோனி' பிரதமராகவும் உள்ளனர்.
"கொலோசியம்' என்பது பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான ரோம் நகரில் உள்ள நீள் வட்ட வடிவமான கட்டடம். இதற்கு மேற்கூரை கிடையாது. இங்கு ஒரே நேரத்தில் 50,000 பேர் அமர்ந்து அடிமைகளுக்கும், கொடிய விலங்குகளுக்கும் இடையே நடை பெற்ற பயங்கர சண்டையினைக் கண்டுள்ளனர். இதற்கு "அம்ஃபிதியேட்டர்' என்ற பெயரும் உண்டு. இது கி.பி.72-ஆம் ஆண்டு "வெஸ்பாசின்' என்ற ரோம அரசனால் கட்டத் தொடங்கப்பட்டு அவன் மகன் "டைட்டஸ்' என்பவனால் கி.பி. 80-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.
உலகின் மாபெரும் கலைஞரான "மைக்கல் ஏஞ்சலோ' இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவர் சிற்பியும், கவிஞரும், ஓவியருமாவார். இவரது "பீட்டா' ( PI E TA) எனும் சிற்பமும் (சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட பிறகு மரியாவின் மடியில் படுத்திருக்கும் யேசுவின் சிற்பம்), "டேவிட்' எனும் சிலையும், "சிஸ்டைன் சேப்பல்' (SI S T I NE CH A P EL) எனும் ஓவியமும் உலகப் புகழ் பெற்றவை. இவர் "செயின்ட் பீட்டர் பசிலிக்கா' எனும் தேவாலய மாடத்தை வடிவமைத்துக்கொண்டிருந்தபோது இறந்துபோனார்.
"லியனார்டோ டாவின்ஸி' எனும் ஓவியரும் இத்தாலி நாட்டவரே. இவரது "லாஸ்ட் சப்பர்' எனும் ஓவியமும் (யேசுவும் அவரது சீடர்களும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு உண்பதைச் சித்திரிக்கும் ஓவியம்), "மோனாலிசா' எனும் ஓவியமும் உலகப் புகழ் பெற்றவை.
உலக அதிசயங்களில் ஒன்றான "பைசா நகரின் சாய்ந்த கோபுரம்' இத்தாலியில் உள்ளது. வானொலியைக் (ரேடியோ) கண்டுபிடித்த "குலீல்மோ மார்க்கோனி', மற்றும் நவீன தொலை நோக்கியைக் கண்டுபிடித்த "கலீலியோ கலீலி' ஆகிய விஞ்ஞானிகள் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள்.
"பெட்ரிகோ ஃபெலினி' எனும் மிகச் சிறந்த திரைப்பட இயக்குநரும், "கைக்கோமோ புச்சினி' எனும் புகழ் பெற்ற இசையமைப்பாளரும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள். புகழ் பெற்ற பந்தயக் கார்களில் ஒன்றான "ஃபெராரி' இத்தாலி நாட்டில் தயாரிக்கப்படுகிறது.
தேசிய விளையாட்டு கால் பந்து. கோதுமை, ஆலிவ், பார்லி, சூரியகாந்தி வித்துக்கள் ஆகியவை முக்கிய விளை பொருட்கள்.
கோதுமை மாவு, பாலாடைக் கட்டி, ஆலிவ், தக்காளிச் சாறு, சில கீரைகள் சேர்த்து தயாரிக்கப்படும் ஃபீசா, பாஸ்தா ஆகிய உணவுகளை விரும்பி உண்கின்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவை முக்கியத் திருவிழாக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










