வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

"பிரதமர்' கீர்த்தி; "உள்துறை அமைச்சர்' சித்ரா!

அரசுப் பள்ளிக்கு அருகிலிருக்கும் ஓர் அரச மரத்தடி. ""எல்லா உறுப்பினர்களும் வந்தாச்சா... கூட்டத்தை ஆரம்பிக்கலாமா? ஊரில் என்ன பிரச்னை? எல்லாப் பிள்ளைகளும் பள்ளிக்குப் போறாங்கதானே...'' என்கிறார் மாற்றுத்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:12 am

ரவிக்குமார்

அரசுப் பள்ளிக்கு அருகிலிருக்கும் ஓர் அரச மரத்தடி. ""எல்லா உறுப்பினர்களும் வந்தாச்சா... கூட்டத்தை ஆரம்பிக்கலாமா? ஊரில் என்ன பிரச்னை? எல்லாப் பிள்ளைகளும் பள்ளிக்குப் போறாங்கதானே...'' என்கிறார் மாற்றுத் திறனாளிகளுக்கான அமைச்சர்.

""ஆரம்பிக்கலாம்...'' என்கின்றனர் உறுப்பினர்கள்.

""மூணாவது தெருவில இருக்கிற முனுசாமியை அவங்க வீட்டுல பள்ளிக்கூடத்துக்குப் போனது போதும்னு சொல்லிட்டாங்களாம்...'' என்றார் ஓர் உறுப்பினர்.

""அப்படின்னா உள்துறை அமைச்சரிடம் சொல்வோம்...''

உள்துறை அமைச்சரிடம் முனுசாமி பள்ளிக்கு வராத விஷயம் சொல்லப்படுகிறது. உள்துறை அமைச்சர், பிரதமரிடம் முறையிடுகிறார். பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அந்த ஊர்த் தலைவரிடம், முனுசாமியைப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்கவைக்கவேண்டும். இடையில் நிறுத்தக் கூடாது என்று கோரிக்கை வைக்கின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ஊர்த் தலைவர் முனுசாமியை மீண்டும் படிக்கவைப்பதற்கு வேண்டி, முனுசாமியின் குடும்பத்தினரிடம் பேசுகிறார். மீண்டும் முனுசாமி பள்ளிக்குச் செல்கிறான்.

மேலே நீங்கள் படித்த பிரதமர், உள்துறை அமைச்சர், மாற்றுத் திறனாளி அமைச்சர் எல்லாருமே குழந்தைகள்!

""இவர்கள் அனைவருமே ஒருங்கிணைந்த அக்கம்பக்கத்து குழந்தைகள் பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள். ஒருங்கிணைந்த அக்கம்பக்கத்து குழந்தைகள் பாராளுமன்றமும் சி.பி.எம். தன்னார்வத் தொண்டு நிறுவனமும் இணைந்து கோடைக்கால கொண்டாட்டத்தைத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடத்தினர். வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமைகளை குழந்தைகளுக்கு அவர்களைக் கொண்ட குழுக்களை அமைப்பதன் மூலம் உறுதி செய்வதே எங்களின் நோக்கம்.

மாற்றுத் திறனாளி குழந்தைகளையும் சமூகத்தில் ஓர் அங்கமாக்க வேண்டும். அதற்கு முதற்கட்டமாக, அவர்களின் வயதில் இருக்கும் சக குழந்தைகளோடு மாற்றுத் திறனாளி குழந்தைகளும் சேர்ந்து படிக்கவேண்டும் விளையாட வேண்டும். சமூகத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறது என்பதை எல்லாக் குழந்தைகளும் புரிந்துகொள்ளவேண்டும்.

உடல் திறன், மூளைத் திறன் குறைந்த குழந்தைகள் இருக்கும் கிராமங்களில் அவர்களின் வீட்டிற்கு அருகிலிருக்கும் குழந்தைகளைக் கொண்டே இதுபோன்ற குழுக்களைத் தொடங்குகின்றோம்'' என்றார் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாராளுமன்றத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான ஆல்கா.

மதுரை, கொடைக்கானல், எண்ணூர் தாழங்குப்பம் முகத்துவாரம், திருவாளங்காடு ஒன்றியம், நெடும்பரம், ஆர்க்காடு குப்பம், ரகுநாதபுரம், பாளையம், அருண்நகர், கீழ்க்காலனி, பனப்பாக்கம், ஆவடி மோரை, அண்ணாநகர் கிராமம்... போன்ற பல இடங்களில் இந்தக் கோடைக் கொண்டாட்டம் களை கட்டியதை பார்க்கமுடிந்தது. குழந்தைகளுக்கான குறும்படத் திரையிடல், மாறுவேடப் போட்டி, வினாடி}வினா, புதிர்விளையாட்டுகள் எனப் பல நிகழ்ச்சிகள் நடந்தன.

கொடைக்கானலில் நடந்த கோடை விழாவில் குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமர் கீர்த்தி படுசுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். காஞ்சிபுரம் கீழ்ஒட்டிவாக்கம் பகுதியில் நடந்த கோடை விழாவில் குழந்தைகள் பாராளுமன்றத்தின் உள்துறை அமைச்சர் சித்ராவின் பங்களிப்பு அபரிமிதமாக இருந்தது. பார்வைத் திறன் குறைந்த ஒரு பெண்தான், முகாமில் ஏற்படுத்திய தீர்மானங்களை பிரெய்லி முறையில் ஆவணப்படுத்திக் கொண்டிருந்தார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.