தேவலோகக் குருவிகள்
இயற்கை எழில் கொஞ்சும் அந்த வனம், பசுமையை வாரி இறைத்திருந்தது. வண்ண மயமான பூக்களும், அதை வட்டமிட்டுக் கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிகளும் வசீகரமாய் அமைந்திருந்தது. அந்த வனத்தில் உள்ள ஒரு மரத்தில் க


இயற்கை எழில் கொஞ்சும் அந்த வனம், பசுமையை வாரி இறைத்திருந்தது. வண்ண
மயமான பூக்களும், அதை வட்டமிட்டுக் கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிகளும் வசீகரமாய் அமைந்திருந்தது.
அந்த வனத்தில் உள்ள ஒரு மரத்தில் குருவி ஒன்று கூடு கட்டி வாழ்ந்து வந்தது. ஒருநாள் அந்த மரத்தின் மீது பல வண்ண குருவிகள் வந்து அமர்ந்தன.
அவை வெண்மை, பச்சை, நீலம்,சிவப்பு, மஞ்சள் என காணப்பட்டன. அந்தக் குருவிகளைப் பார்த்துக் கூட்டில் இருந்த குருவி வெளியே வந்து பார்த்தது. அதற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. வியப்போடு அந்த குருவிகளைப் பார்த்துக்
கேட்டது.
""நீங்கள் எல்லாம் யார்... எங்கிருந்து வருகிறீர்கள்? காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறீர்களே?'' என்றது.
அதைக் கேட்டதும் ஒரு குருவி ஏளனமாய்ச் சிரித்தது. ""நாங்கள் எல்லாரும் தேவலோகத்தைச் சேர்ந்த குருவிகள்'' என்றது நீல நிற குருவி.
""அப்படியா... கேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அது சரி. இந்த பூமியில் உங்களுக்கு என்ன வேலை?''
""அப்படிக் கேள். இந்த பூமியின் அழகைக் கண்டு ரசிப்பதற்காகவே தேவலோகத்தில் இருந்து வந்திருக்கிறோம். ஆமாம் நீ ஏன் இவ்வளவு கறுப்பாகவும் அசிங்கமாகவும் இருக்கிறாய்?'' என்று இளக்காரமாக பச்சை நிறக் குருவி கேட்டது.
கூட்டிலிருந்த குருவிக்கு தன் நிறத்தைப் பழித்துக் கூறியதைக் கேட்டதும், மிகுந்த மன வருத்தம் உண்டாயிற்று.
""இது இறைவனால் எனக்கு அளிக்கப்பட்ட நிறம். என்னைப் பொறுத்தவரையில் நான் அழகாக இருப்பதாகவே கருதுகிறேன். குறையென்று உலகில் எதுவுமில்லை. பார்ப்பவர்களின் எண்ணங்கள் தவறாக இருந்தால் குறையாகவே தென்படும்'' எனப் பதில் கூறியது.
வண்ணக் குருவிகள் எல்லாம் மீண்டும் கேலியாகச் சிரித்தன,
""பார்த்தாயா... நான்தான் அப்போதே சொன்னேன் அல்லவா... பூலோகத்தில் உள்ள இனங்கள் எல்லாமே தற்பெருமை கொண்டவை என்று. அதை இந்தக் குருவி உண்மையென நிரூபித்துவிட்டதல்லவா?'' - மஞ்சள் குருவி
சொன்னது.
ஆனாலும் அதைக் கேட்டு கோபப்படவில்லை. மாறாக, ""நண்பர்களே, என்னை நீங்கள் துச்சமாக விமர்சிப்பது இருக்கட்டும். நீண்ட
தூரம் பறந்து வந்தபடியால் மிகவும் களைப்போடும் பசியோடும் இருப்பீர்கள். நீங்கள் உண்பதற்கு ஏதாவது கொண்டு வரட்டுமா?''
""வேண்டாம். வேண்டாம். நீ அழுகின பழங்களையும், இறந்துபோன உயிரினங்களின் இறைச்சியையும் கொண்டு வந்து தருவாய், அதை நாங்கள் விரும்புவதில்லை. எங்களுக்குத் தேவையானவற்றை நாங்களே தேடிக் கொள்கிறோம்''
தேவலோகத்தில் இருந்து வந்த குருவிகளுக்குத் தன்னால் எந்த வகையிலும் உதவ முடியவில்லையே எனக் கவலைப்பட்டது.
""இனி உங்கள் விருப்பம். ஆனால் ஒன்று சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். நீங்களோ இந்த பூமிக்குப் புதியவர்கள். இங்குள்ள நிலவரம் என்ன எப்படி என்பதை அறிந்திருக்கமாட்டீர்கள். இந்தக் காட்டில் மனிதர்களின் நடமாட்டம் உண்டு. அதிலும் குறிப்பாக வேடர்கள் இங்கேயேதான் சுற்றி வருவார்கள். அவர்களின் கண்களில் பட்டுவிட்டால் நம் கதி அதோ கதிதான். மிகவும் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும்''
""சாதாரண அற்பப் பிறவி நீ. எங்களுக்கே அறிவு சொல்கிறாயா? உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ. எங்களுக்குத் தெரியும்'' என்றது ஒரு குருவி.
அதே சமயம் சற்று தூரத்தில் மனிதர்களின் பேச்சுக் குரல் கேட்கவே குருவி அச்சம் கொண்டது. நான் நினைத்தது போலவே வந்து விட்டார்களே... சீக்கிரம் இங்கிருந்து பறந்து சென்று நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். குருவி மீண்டும் அந்தக் குருவிகளை எச்சரிக்கை
செய்தது.
""நண்பர்களே... மனிதர்கள் நம்மை நெருங்கிவிட்டனர். சீக்கிரம் பறந்து செல்லுங்கள். அவர்கள் கண்ணில் பட்டுவிடாதீர்கள். மீறி பட்டுவிட்டால் மரணம் நிச்சயம்'' என்றது.
அதற்கு மேல் அதனிடம் பேசிப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்ட குருவி தன்னைப் பாதுகாத்துக் கொண்டு விர்ரென பறந்து
சென்றது.
••••••••••••
சிலநாட்கள் கழித்து...
குருவி ஏதாவது இரை கிடைக்குமா என ஒரு வீட்டின் மரத்தின் மீது அமர்ந்தது. அப்போது ஒரு கூண்டுக்குள் இருந்து கீச்கீச்சென குருவிகள் கத்துவது கேட்டு, பறந்து வந்து பார்த்தது.
கூண்டுக்குள் வண்ணக் குருவிகள் அடைபட்டுக் கிடந்தன. அவற்றின் நிலையைச் சட்டெனப் புரிந்து கொண்டது.
""நண்பர்களே, நீங்கள் இங்கே வந்து எப்படி மாட்டிக் கொண்டீர்கள்?''
மஞ்சள் குருவி வாய்விட்டுக் கதறியது.
""நண்பா... அன்று உன் பேச்சைக் கேட்காமல் போனதால்தான் இன்று வேதனையை அனுபவிக்கிறோம்''
""ஆமாம் நண்பா... வேடன் ஒருவன் எங்களைக் கண்ணி வைத்துப் பிடித்து இவர்களிடம் விற்றுவிட்டான். அன்றிலிருந்து இந்தச் சிறையில்தான் அடைபட்டுக் கிடக்கிறோம்''
""அன்று உன்னிடம் எங்களைத் தேவலோகக் குருவிகள் என்று பொய் சொல்லி வீண் பெருமை கொண்டோம். அதற்கான தண்டனைதான் இது. எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று''
""ஆமாம் நண்பா... உன்னைக் கூட வெகு அலட்சியமாக எண்ணித் தகாத வார்த்தைகளால் பேசி உன் மனதை நோகச் செய்துவிட்டேன். அவற்றையெல்லாம் மன்னித்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்'' கெஞ்சியது நீல வண்ணக் குருவி.
""கவலைப்படாதீர்கள். உங்களைக் காப்பாற்றுகிறேன்'' என்ற குருவி சுற்றும்முற்றும் பார்த்தது. வீட்டுக்காரர்கள் வெளியே போயிருந்தனர். கதவு பூட்டப்பட்டிருந்தது.
குருவி தன் பலம் கொண்ட மட்டும் தன் அலகால் கூண்டின் தாழ்ப்பாளை இழுத்தது. கதவு திறந்து கொண்டது.
வண்ணக் குருவிகள் வெளியே வந்தன. ""இந்த உதவியை ஒருபோதும் நாங்கள் மறக்க
மாட்டோம்''
""இனிமேல் யாரையும் இழிவாகப் பேசமாட்டேன் நண்பா... '' என்றது மற்றொன்று.
""உங்களுடைய மனமாற்றம் எனக்கு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. சரி... சரி... இனி உங்கள் விருப்பம் போல் பறந்து செல்லுங்கள்'' என்றது.
வண்ணக் குருவிகள் நன்றியோடு விடைபெற்றுக் கொண்டு பறந்து செல்ல குருவியும் மன
நிறைவோடு இரையைத் தேடி பறந்து சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...