ஓலைச் சுவடி
மருதபுரி எனும் ஊரில் சிங்கராயன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தனது கடைசிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அவருக்கு சந்திரன் என்று ஒரு மகன் உண்டு. அவனோ முழுச் சோம்பேறியாக இருந்


மருதபுரி எனும் ஊரில் சிங்கராயன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தனது கடைசிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்.
அவருக்கு சந்திரன் என்று ஒரு மகன் உண்டு. அவனோ முழுச் சோம்பேறியாக இருந்தான். எதிலும் ஆர்வம் காட்டாமல் தன் போக்கிலேயே வாழ்ந்து கொண்டிருந்தான்.
அவனைப் பற்றி, சிங்கராயனுக்குப் பெரும் கவலையாக இருந்தது. தனக்குப் பின்னால் இவனை யார் கவனிப்பது? ஏராளமான சொத்துக்கள் கைவசம் இருந்தால் கவலையில்லை. அன்றாடம் கூலி வேலை செய்து இவ்வளவு காலமும் வாழ்க்கையை நகர்த்தியாகிவிட்டது.
மரணத்தின் வாயிலில் இருக்கும் தன்னால் இனி எவ்வாறு மகனைக் காப்பாற்ற இயலும் என்ற எண்ணம் மனதில் அடிக்கடி எழுந்தது.
அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை வந்தது. பரண் மீது ஒரு மூட்டை நிறைய ஓலைச் சுவடிகள் இருப்பது நினைவுக்கு வந்தது.
அது, அவரது மூதாதையர்கள் வழிவந்த பொக்கிஷம்! ஒருசமயம் அவரது தந்தை அவரிடம் கொடுத்து வைத்தார். "இவை சாதாரண ஓலைச்சுவடிகள் அல்ல... இது உனக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கக் கூடும். ஆகவே இதைப் படித்துக் கற்றுத் தேர்ந்து கொள்...' என்று தந்தை கூறியதும் நினைவுக்கு வந்தது.
அப்போது, சிங்கராயன் தனது தந்தையின் சொல்லைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. ஒருவேளை அவர் சொன்னதை சிரமேற்றுக் கற்றிருந்தால் தனது வாழ்க்கைப் பாதையே மாறியிருக்கக் கூடுமோ என்று இப்போது நினைத்தார்.
தனக்குப் பயன்படாத அந்த ஓலைச் சுவடிகள் தனது மகனுக்காவது பயன்படட்டும் என்று எண்ணினார்.
சந்திரனை அழைத்து, ஓலைச்சுவடிகளை எடுக்கச் சொன்னார். சந்திரனும் அவற்றை எடுத்து வந்தான்.
"சந்திரா, இது என் தந்தை எனக்குக் கொடுத்தது. நான்தான் அலட்சியமாக இருந்துவிட்டேன். நீயாவது இதைக் கற்றுக் கொள். உனக்காவது இது பயன்படட்டும்... உன் வாழ்க்கை நல்லபடி அமையட்டும்...' என்றார்.
சந்திரனுக்கு தன் தந்தையின் மீதும் ஓலைச் சுவடிகளின் மீதும் எரிச்சல் வந்தது. வேண்டா வெறுப்பாக, "ஆகட்டும் பார்க்கலாம்...' என்றவன் மீண்டும் அவற்றைத் தூக்கிப் பரணில் போட்டான்.
சில நாட்களில் சிங்கராயன் இறந்து போனார். அவரது இறுதிக் காரியங்களுக்காக வீட்டைச் சுத்தம் செய்தபோது சந்திரனில் கண்ணில் பட்டது அந்த ஓலைச் சுவடி மூட்டை.
இதுவேறு இடைஞ்சல்... இது எதுக்குத் தேவையில்லாமல்.... இதைத் தீயிட்டுக் கொளுத்தினால்தான் நிம்மதி.. என்று நினைத்தவன் அந்த மூட்டையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே சென்றான்.
அப்போது வழியில் அவனது நண்பன் ராமன் வந்து கொண்டிருந்தான். சந்திரன் தலையில் சுமையுடன் வருவதைக் கண்டு,
"என்ன சந்திரன், வெளியூர் போகிறாயா?' என்று கேட்டான்.
"அப்படி எதுவுமில்லை... இந்த மூட்டையில் ஓலைச் சுவடிகள் உள்ளன. எல்லாம் அரதப் பழசு... தேவையில்லாதது... அதனால் தீயிட்டுக் கொளுத்தப் போகிறேன்...' என்றான்.
அதைக் கேட்டதும் ராமனுக்கு திக்கென்றது. ஓலைச் சுவடிகளைத் தீயிட்டு எரிப்பதா? அவை விலைமதிப்பற்றவை ஆயிற்றே? இவை யாருக்கும் பயன்படாமல் போவதால் என்ன லாபம்? என்று நினைத்தான் ராமன்.
'சந்திரன், அவற்றைத் தீயிட்டு இரையாக்க வேண்டாம்... உனக்கு வேண்டாமென்றால் என்னிடம் கொடுத்துவிடு...' என்றான்.
சந்திரனுக்கு சுமை இறங்கினால் போதும் போலிருந்தது.
"இதை நீயே வைத்துக் கொள்.. எனக்குப் பாரம் நீங்கியது..' என்றபடி அந்த மூட்டையை ராமனிடம் கொடுத்தான்.
"மிக்க நன்றி, நண்பா... இதை எந்நாளும் மறக்க மாட்டேன்' என்றபடியே மூட்டையை ராமன் தனது தலையில் வைத்துக் கொண்டு கிளம்பிப் போனான்.
ஆண்டுகள் பல சென்றன. சந்திரன் தனது தந்தை சேர்த்து வைத்த பொருளையெல்லாம் இழந்து, தானே உழைத்துப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.
ஒருநாள் விவசாய வேலைக்குச் சென்றான். முன்பின் அனுபவம் இல்லாததால் வரப்பில் தடுக்கி விழுந்து காலை முறித்துக் கொண்டான். இதனால் பல நாட்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். காலில் பட்ட வேதனை, பசி மயக்கம் எனப் படாதபாடுபட்டான்.
அவன் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்துவிட்டதால் அவனைக் கவனிப்பாரில்லாமல் போனது.
அவ்வப்போது பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்து வந்தனர். அப்போதுதான் அந்த ஊருக்கு ஒரு மருத்துவர் வந்தார். அவரைப் பற்றி ஏற்கெனவே பலர் பெருமையாகப் பேசியது உண்டு. அவரிடம் முறையாகச் சிகிச்சை பெற்றால் எப்படிப்பட்ட நோயும் குணமாகிவிடும் என்று ஊரார் அறிந்து வைத்திருந்தனர்.
பக்கத்துவீட்டுக்காரர் சந்திரனிடம் அவரைப் பற்றி எடுத்துச் சொல்லி சிகிச்சைக்குத் தன்னோடு வரும்படி அழைக்கவே அவனும் உயிர் பிழைத்தால் போதுமென்ற எண்ணத்தில் உடன் சென்றான்.
மருத்துவரைத் தேடிச்சென்று சந்தித்தபோது, சந்திரனுக்கு வியப்புத் தாளவில்லை. அவனுடைய பழைய நண்பன் ராமன்தான் வைத்தியராக இருந்தான்.
ராமனுக்கு சந்திரனைப் பார்த்ததில் மகிழ்ச்சியே உண்டானது. அவனது காலுக்கு வைத்தியம் செய்தான்.
"ராமா, நீ இவ்வளவு பெரிய ஆளாக வருவாயென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! ஊரில் எல்லோரும் உன்னுடைய வைத்தியத்தைப் பற்றித்தான் புகழ்கின்றனர். உனக்கு எப்படி இந்தத் தொழில் கைவந்தது?' என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.
"எல்லாம் நீ கொடுத்த கொடைதான். இன்று நான் நல்லபடி வாழ்கின்றேன் என்றால், அதற்கு நீ தந்த ஓலைச்சுவடிகள்தான் காரணம்!' என்றான்.
"என்ன..? நான் கொடுத்த சுவடிகளா?'
"ஆமாம்... அதில் மருத்துவமுறைகள் பற்றிய குறிப்புகள் நிறைய இருந்தன. அதை எல்லாம் சிரத்தையோடு நுணுக்கமாகக் கற்றுக் கொண்டதன் பலன்தான் இது! அன்று இவற்றை நீ தீயிட்டுக் கொளுத்தியிருந்தால் இன்று யாருக்கும் பலனில்லாமல் போயிருக்கும்...'
"தவறுதான் ராமா... எனது அலட்சியத்தாலும் சோம்பேறித்தனத்தாலும் அதன் மகிமையை உணராமல் போனேன். இப்போது அதற்காக வேதனைப்படு
கிறேன்' என்றான் முகவாட்டத்துடன்.
ராமன், சந்திரனின் முதுகில் தட்டிக் கொடுத்தான்.
"கவலைப்படாதே! என்னைப் போல உன்னையும் சிறந்த வைத்தியனாக்குகிறேன்...' என்றான்.
"உண்மையாகவா சொல்கிறாய்? எனக்கும் மருத்துவம் கற்றுக் கொடுப்பாயா? உனக்கு எப்படி நான் நன்றி சொல்வேன்?' சந்திரன் கண்ணீர் விட்டான்.
"நீ செய்த உதவிக்கு நன்றிக்கடன் தீர்க்க வேண்டாமா? உன் கால் முற்றிலும் குணமாகட்டும்... என்னுடன் கூடவே இருந்து தொழில் கற்றுக் கொள். உனக்கு நான் செய்யும் கைம்மாறாக இருக்கட்டும்!' என்றான் ராமன்.
"அப்படியே ஆகட்டும் ராமா... இனி எந்த விஷயத்திலும் அலட்சியமாக இருக்க மாட்டேன்' என்று கூறிய சந்திரனின் மனத்தில் ஒரு தெளிவும் புதுநம்பிக்கையும் பிறந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...