நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தாய் சொல்லைத் தட்டாதே!

குரங்கு வந்து கூப்பிட்டதாம் குட்டி முயலும் ஓடியதாம்! குரங்கு போன இடமெல்லாம் குட்டியும் கூடச் சென்றதுவாம்! இருளத் தொடங்கி விட்டதனால் இரண்டும் திரும்பி நடந்தனவாம்! குரங்கு சென்றதும், வீட்டுக்கு குட்டி ம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:01 am

புலேந்திரன்

குரங்கு வந்து கூப்பிட்டதாம்

குட்டி முயலும் ஓடியதாம்!

குரங்கு போன இடமெல்லாம்

குட்டியும் கூடச் சென்றதுவாம்!

இருளத் தொடங்கி விட்டதனால்

இரண்டும் திரும்பி நடந்தனவாம்!

குரங்கு சென்றதும், வீட்டுக்கு

குட்டி முயலும் வந்ததுவாம்!

இருட்டிடும் வரையில் எங்கிருந்தாய்?

என்றே அம்மா கேட்டதுவாம்!

குரங்குடன் காட்டில் சுற்றியதை

குட்டி முயலும் சொன்னதுவாம்!

நண்பரைத் தேர்வு செய்திடும்முன்

நன்கு சிந்தனை செய்திடணும்!

பண்பில், செயலில் நல்லவராய்ப்

பார்த்தே நட்பு கொண்டிடணும்!

நன்மை விளைவதும் நட்பாலே!

நாடும் தீமையும் நட்பாலே!

அந்தக் குரங்கன் கெட்டவனே

அவனுடன் நட்பை விட்டுவிடு!

என்றே அம்மா சொன்னதுவாம்

ஏற்றிட வில்லை குட்டிமுயல்!

என்றும் போல குரங்குடனே

எங்கும் சுற்றித் திரிந்ததுவாம்!

ஒருநாள் குட்டியை மரத்தடியில்

உட்கார்ந் திருக்கச் சொல்லிவிட்டு

சிறுத்தைப் புலியின் கொல்லைக்குள்

திருட்டுக் குரங்கு நுழைந்ததுவாம்!

திரும்பிய குரங்கின் தலையினிலே

திருடிய வாழைப் பழத்தாராம்!

சிறுத்தைப் புலியும் பிடித்ததுவாம்

செமஅடி விழுந்ததாம் குரங்குக்கு!

கூடச் சென்ற குட்டிக்கும்

குட்டு விழுந்ததாம் தலையினிலே!

தேடிச் சென்ற அம்மாதான்

சிறையி லிருந்து மீட்டதுவாம்!

தீயவர் நட்பால் தீமைதான்

தெரிந்து கொண்ட குட்டிமுயல்

தாயின் சொல்லை இனிமேல்நான்

தட்டிட மாட்டேன் என்றதுவாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.