மாற்றுத் திறனாளிகள்... மகத்தான சாதனைகள்!
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வாழ்ந்து வரும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராகத் திகழ்பவர் வேத் மேத்தா.


எழுத்தாளர் வேத் மேத்தா
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வாழ்ந்து வரும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராகத் திகழ்பவர் வேத் மேத்தா. நியூயார்க்கிலிருந்து வெளிவரும் "தி நியூயார்க்கர்' என்ற பத்திரிகையில் எழுத்தாளராகவும் நிருபராகவும் பணி
புரிந்தவர்.
இவர் எழுதிய கட்டுரைகள் மிகப் பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. பத்திரிகைப் பணியுடன், இருபத்து நான்கு நூல்களையும் எழுதியுள்ளார். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்.
இவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை கிடையாது. தன்னுடைய சிறு வயதிலேயே பார்வையிழந்த இவரால் எப்படி இந்த உயர்நிலையை அடைய முடிந்தது?
இவர் ஒன்றுபட்ட இந்தியாவில் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் 21-03-1934-இல் பிறந்தார். இவருடைய தந்தை அமலோக் ராம் ஒரு டாக்டர். அவர் அந்தக் காலத்திலேயே மேலை நாடுகளுக்குச் சென்று படித்து டாக்டர் பட்டம் பெற்றவர். தாய் சாந்தி மேத்தா. இவர்களுக்கு ஏழு குழந்தைகள். ஐந்தாவதாகப் பிறந்தவர்தான் வேத் மேத்தா. வசதியான குடும்பம்.
வேத் மேத்தாவின் நான்காவது வயதில் திடீரென்று இவருக்கு (சிறு குழந்தைகளிடம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்) "மெனஞ்ஜடிஸ்' என்ற காய்ச்சல் வந்தது. தீவிர சிகிக்சைகள் மேற்கொள்ளப்பட்டன. பலனில்லை. இவரது கண்பார்வை நிரந்தரமாகப் போய்விடும் என்ற அச்சம் இவரது தந்தைக்கு ஏற்பட்டது.
அதற்கு மருத்துவம் செய்ய இந்தியாவிலுள்ள பல புகழ்பெற்ற மருத்துவமனைகளை நாடினார். ஆனாலும் பலனில்லை. பார்வையற்றவர்கள் கல்வி கற்க அப்போது இந்தியாவில் நல்ல பள்ளிகள் இல்லை. சில பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தும் தந்தைக்கு மனநிறைவு ஏற்படவில்லை.
வேத் மேத்தா வீட்டிலிருந்தபடியே தனது இதர புலன்களான காது, வாய், மூக்கு, தோல் மூலம் தனது அறிவைப் பெருக்கிக் கொண்டார். தனது காதுகளையே கண்களாக நினைத்துக் கொண்டு அதன் மூலம் கேட்பதை தனது மூளையில் பதிவு செய்து கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவ்வாறு பதிவு செய்தது நினைவில் இருக்கிறதா என்பதை இடைவெளி விட்டு, திரும்பவும் நினைத்துப் பார்த்து நிரந்தரமாக நினைவில் இருக்கும்படி செய்துகொண்டார்.
எங்கு சென்றாலும் தன்னுடன் வருபவர்களிடம் அவர்கள் பார்க்கும் பொருள்கள் எந்தப் பகுதியில் இருக்கிறது? அமைப்பு எப்படி? நிறம், அளவு என்ன? வித்தியாசமாகத் தோன்றும் அம்சங்கள் போன்ற மிகவும் நுணுக்கமான விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து, தனது மனதில் பதிய வைத்துக் கொள்வார்.
பேசும் குரல் மூலம் அவர் யார் என்பதைத் தெரிந்து கொள்வார். அவர்கள் அணியும் ஆடைகள், உடல் பருமன் ஆகியவற்றைத் தொட்டுப் பார்த்து அடையாளம் கண்டு கொள்வார். வீடு, தோட்டம், செடிகொடி
கள், மரங்கள் ஆகியவற்றின் அமைப்புகள், பூக்கும் மலர்களின் நிறங்கள், காய்கனிகளின் நிறங்கள், அளவுகள் பற்றியெல்லாம் நுணுக்கமான கேள்விகளைக் கேட்டு விவரங்களைத் தனது மனதில் பதிய வைத்துக் கொள்வார். இவரது நினைவாற்றல் மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தது.
இவருக்கு வயது அதிகமாவதைக் கண்டு, சரியான பள்ளியில் படிக்க வாய்ப்பு இல்லாததால் மேல் நாட்டுப் பள்ளிகளில் சேர்க்க முயற்சி செய்தார் தந்தை.
இவரது பதினைந்தாம் வயதில் அமெரிக்காவிலுள்ள "அர்கன் சா ஸ்டேட் ஸ்கூல்' என்னும் பார்வையற்றோர் பள்ளியில் படிக்க இடம் கிடைத்தது. 1949-ஆம் ஆண்டு இவரை மட்டும் இவரது தந்தை அங்கு அனுப்பி வைத்தார். பிறந்த நாடு, பெற்றோர் ஆகியோரைப் பிரிந்து, புதிய ஊரில் எப்படி வாழப் போகிறோமோ என்ற அச்சம் வேத் மேத்தாவுக்கு முதலில் இருந்தது.
இருந்தாலும் தனது குறைபாடு வாழ்வைப் பாழ்படுத்திவிடக்கூடாது என்று எண்ணினார். மேலும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சிய உணர்வும் இவருக்கு மன தைரியத்தைக் கொடுத்தது. பல ஆண்டுகளாகப் பள்ளிக்குச் செல்லாததால் அவ்வளவு ஆண்டுக்காலம் படிக்க வேண்டிய படிப்புகளையும் சேர்த்துப் படித்தார். மிகக் குறைந்த ஆண்டுகளிலேயே அவற்றைப் படித்து முடித்தார்.
அந்தப் பள்ளியில் படிக்கும்போது வார்த்தைகள் சரளமாக இவரிடமிருந்து வெளிவருவதையும் அவை உணர்த்தும் நுட்பமான வேறுபாடுகளையும் புரிந்துகொண்ட ஆசிரியர்கள் இவரது மொழி அறிவைப் பாராட்டினர். இவருக்குக் கேட்பதன் மூலம் விஷயங்களைக் கிரகித்து, மனதில் பதிய வைத்துக்கொள்ள பயிற்சிகள் தரப்பட்டன. மேலும் தொடு உணர்வுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
அந்தப் பள்ளியிலிருந்து டிப்ளமோவுடன் வெற்றிகரமாக வெளிவந்த மேத்தா, கலிபோர்னியாவிலுள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து பட்டதாரி ஆனார். பின்னர் இங்கிலாந்து சென்று அங்குள்ள ஒரு கல்லூரியில் மேற்படிப்பு பயின்று பட்டம் பெற்றார்.
மீண்டும் அமெரிக்கா சென்று, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து 1961-ஆண்டு எம்.ஏ. பட்டம் பெற்றார்.
கல்லூரியில் பயிலும் காலத்திலேயே எழுதுவதில் ஆர்வம் காட்டினார். இவருடைய இருபதாவது வயதில் இவரின் முதல் புத்தகம் வெளியானது. அதன் பெயர் "ஃபேஸ் டு ஃபேஸ்'. அப்போதே அமெரிக்க, இங்கிலாந்து பத்திரிகைகளிலும் எழுதி வந்தார்.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி நியூயார்க்கர்' என்ற பத்திரிகைக்கும் எழுத ஆரம்பித்தார். அப்போது அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த வில்லியம் ஷான் என்பவர் இவருடைய எழுத்தாற்றலைப் பாராட்டி, ஆசிரியர் குழுவில் இவரை சேர்த்துக் கொண்டார். தொடர்ந்து அந்தப் பத்திரிகையில் எழுத்தாளராகவும் நிருபராகவும் பணியாற்ற ஆரம்பித்தார்.
இவர் தனது படைப்புகளை டைப் செய்து தந்து விடுவார் அல்லது ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்து கொடுத்து விடுவார். தினமும் பத்து மணி நேரங்களுக்குக் குறையாமல் வாரத்தின் ஏழு நாட்களும் பணியாற்றுபவர் இவர்.
தனது வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் தான் ஒரு பார்வைக் குறைபாடு உள்ளவன் என்று யாரும் அனுதாபம் காட்டுவதை இவர் விரும்புவதில்லை. நம்மால் முடியாது என்று மற்றவர்கள் நினைக்கும் காரியங்களை அவர்களே வியக்கும் வண்ணம் சாதித்துக் காட்டியவர். இவரது சிறப்பைப் போற்றி இவருக்கு கெüரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பார்வையற்றவர்கள் ஒளிமயமான வரலாற்றைப் படைக்க முடியும் எனபதற்கு வாழும் உதாரணம் வேத் மேத்தா.
-அடுத்த இதழில்: வயலின் மேதை சந்திரசேகரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...