மாற்றுத் திறனாளிகள்...மகத்தான சாதனைகள்!
சிறந்த பரதநாட்டியக் கலைஞர். திரைப்பட நடிகை, தொலைக்காட்சிகளிலும் தோன்றும் நடிகை. மற்றும் பல்வேறு துறைகளிலும் புகழ் பெற்று சாதனை படைத்து வருபவர் சுதா சந்திரன். இவருடைய தனிச்சிறப்பு என்ன தெரியுமா?


சுதா சந்திரன்
சிறந்த பரதநாட்டியக் கலைஞர். திரைப்பட நடிகை, தொலைக்காட்சிகளிலும் தோன்றும் நடிகை. மற்றும் பல்வேறு துறைகளிலும் புகழ் பெற்று சாதனை படைத்து வருபவர் சுதா சந்திரன். இவருடைய தனிச்சிறப்பு என்ன தெரியுமா?
1984-ஆம் ஆண்டு தனது வலது காலில் முழங்கால் வரை செயற்கைக் காலைப் பொருத்திக் கொண்டு மும்பையில் நிகழ்த்திய நடன நிகழ்ச்சிதான் அவருக்கு மிகப் பெரிய புகழை ஈட்டித் தந்தது.
காலில் ஒரு பகுதியை இழந்தவர்கள் செயற்கை உறுப்புகளைப் பொருத்திக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு நடப்பதை நாம் பார்க்கிறோம்.
அப்படி இருக்கும்போது செயற்கை உறுப்பைப் பொருத்திக் கொண்டு நடனம் ஆட முடியுமா?
நடனம் என்பது தாளக்கட்டுப்பாடு அதிகமாகக் கொண்ட ஒரு கலை. அதில் தாளம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. சில சமயங்களில் துரித வேகம் அவசியம். பல இடங்களில் ஜதிகள் போட வேண்டும். மேடையில் அங்குமிங்கும் சுழன்று சுழன்று ஆட வேண்டும். வளைந்து குழைந்து ஆடவேண்டும். அரைமண்டி போட்டு ஆட வேண்டும். சில சமயங்களில் ஒரு காலில் நின்றுகொண்டு இன்னொரு காலைத் தூக்கி சில கரணங்கள் செய்ய வேண்டும். இரண்டு மூன்று மணி நேரங்கள் தொடர்ந்து ஆட வேண்டும். மிகுந்த ஆரோக்கியம் உடையவர்களே தளர்ந்து போவார்கள்.
அவ்வாறு இருக்கும்போது செயற்கைக் காலைப் பொருத்திக் கொண்டு சுதா சந்திரனால் ஆட முடியுமா? இந்த சந்தேகத்துடன் பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் அவருடைய நடன நிகழ்ச்சியைக் காண பெருமளவில் கூடியிருந்தனர்.
தனது உடலின் குறைபாட்டுடன் எவ்வளவு சிரமப்பட்டு ஆடினாலும் எங்கேயாவது தாளம் தவறி ஆடிவிட்டால் அந்தக் குறையையும் பார்வையாளர்களும் பத்திரிகைக்காரர்களும் விமரிசனம் செய்வார்கள் அல்லவா?
இத்தகைய சந்தர்ப்பத்தில் செயற்கைக் காலுடன் நடன நிகழ்ச்சியைத் திறம்பட நடத்திய சுதா சந்திரனின் துணிவும் தன்னம்பிக்கையும் முயற்சியும் வியப்புக்குரியதாக அமைந்தது.
இதற்குக் காரணமான அவருடைய பெற்றோர்கள் தந்த ஊக்கமும் அவருக்கு செயற்கைக் கால் பொருத்திய டக்டர் சேத்தியின் திறமையும் அந்தக் காலை தொழில்நுட்பத்துடன் மிகச் சிறப்பாக வடிவமைத்துத் தந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் ஆற்றலும் வெளி உலகுக்குத் தெரிய வந்தன. இந்தச் சாதனையை அனைவரும் வியந்து பாராட்டினர்.
மும்பையில் வசிந்து வந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர் சுதா சந்திரன். தனது மூன்று வயது முதலே நடனமாடத் தொடங்கினார். 1981-ஆம் ஆண்டு தமிழ் நாட்டிலுள்ள ஒரு முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வரும்போது சுதாவின் குடும்பத்தினர் வந்து கொண்டிருந்த வாகனத்தின் மீது ஒரு பேருந்து மோதியதின் விளைவாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுதா தனது வலது காலில் முழங்கால் வரை இழக்க நேரிட்டது. அப்போது அவருடைய வயது பதினெட்டு.
எதிர்காலத்தில் ஒரு புதுநம்பிக்கையுடன் வாழும் உறுதியைக் கொண்டார். இந்த மன உறுதிக்குக் காரணம் அவர் படித்த ஹெலன் கெல்லரின் வாழ்க்கை வரலாறுதான். முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை என்ற உறுதியை சுதா சந்திரனுக்கு ஏற்படுத்தியது.
ஹெலன் கெல்லர் போலவே தானும் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் உறுதியாக ஏற்றிக் கொண்டார். அதனைச் செயல்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். அவருடைய பெற்றோரின் ஆதரவும் உற்சாகமும் முழுமையாகக் கிடைத்தன.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த டாக்டர் சேத்தி பற்றிக் கேள்விப்பட்டு அவருடைய உதவியை நாடியது சுதாவின் குடும்பம். சேத்தியும் சுதா சந்திரனின் கலை ஆர்வத்தையும் மீண்டும் நடனமாட வேண்டும் என்ற தாகத்தையும் புரிந்துகொண்டு செயற்கைக் காலை அவரது தேவைக்கேற்ப வடிவமைத்துப் பொருத்தினார். சுதா சந்திரன் செயற்கைக் காலுடன் தினமும் பல மணி நேரங்கள் கடும் பயிற்சிகளை மேற்கொண்டார். தொடர்ந்து கல்லூரிக்கும் சென்று வந்தார்.
ஒரு முழுநேர நடன நிகழ்ச்சியை, எந்தவிதக் குறையும் இல்லாமல் மீண்டும் நடத்த வேண்டும் என்ற மன உறுதியுடன் கடுமையாகப் நடனப் பயிற்சி செய்தார். அவரது லட்சியம் வென்றது.
1984-ஆம் ஆண்டு செயற்கைக் காலுடன் அவர் நிகழ்த்திய நடன நிகழ்ச்சியைப் பத்திரிகைகளும் பிற ஊடகங்களும் வியந்து பாராட்டின. நிகழ்ச்சியைக் கண்ட மக்களின் ஆச்சரியத்துக்கு எல்லையே இல்லை.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் இவரது புகழ் பரவியது. தொடர்ந்து இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் இவரது நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதன் பின்னர் அவருடைய சாதனையை மையமாக வைத்து "மயூரி' என்ற திரைப்படம் தெலுங்கில் தயாராகி வந்து பெரும் பாராட்டுகளைப் பெற்றது. அவரே அந்தத் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். பின்னர் அந்தப் படம் மலையாளத்திலும் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு மகத்தான வெற்றியைப் பெற்றது. இந்தியிலும் "தாச்சே மயூரி' என்ற பெயரில் திரைப்படமாக வந்து மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் சுதா சந்திரன் நடித்தார்.
நடிப்பில் கவனம் செலுத்தினாலும் நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
மாற்றுத் திறன் கொண்டவர் மன உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் உடல் குறைபாட்டால் சோர்ந்து போகாமல் சாதனை படைக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்குகிறார் சுதா சந்திரன்.
-முற்றும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...