தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாற்றுத் திறனாளிகள்... மகத்தான சாதனைகள்!

வயது வேறுபாடு இல்லாமல் உலகிலுள்ள அனைவரையும் கவர்ந்த கதாபாத்திரம் "சூப்பர்மேன்'. இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதாபாத்திரம்.

News image
Updated On :26 ஜூலை 2013, 3:49 am

செவல்குளம் ஆச்சா

சூப்பர்மேன் கிறிஸ்டோபர் ரீவ்

வயது வேறுபாடு இல்லாமல் உலகிலுள்ள அனைவரையும் கவர்ந்த கதாபாத்திரம் "சூப்பர்மேன்'.
 இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதாபாத்திரம். அந்த சூப்பர்மேனாக நடித்தவர்தான் கிறிஸ்டோபர் ரீவ். அவரால் உண்மையிலேயே பறக்க முடியும், மிக உயரமான கட்டடங்களிலிருந்து குதிக்க முடியும் என்று நம்பிய சிறுவர் சிறுமியரும் உண்டு.
 1978-ஆம் ஆண்டு வெளிவந்த "சூப்பர்மேன்' திரைப்படம் உலகம் அளவில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் சூப்பர்மேனாக நடித்தவர்தான் கிறிஸ்டோபர் ரீவ். இவருக்கு 27-5-1995-இல் போதாத காலம் வந்தது.
 குதிரையின் மீது ஏறி, தடைகளைத் தாண்டிக் குதித்து இலக்கைச் சென்றடையும் போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் சில தடைகளைத் தாண்டிக் குதித்த அவரது குதிரை, அதன்பின் தாண்டாமல் தயக்கம் காட்டி திடீரென்று நிற்கவே, சவாரி செய்து வந்த வேகத்தில் கிறிஸ்டோபர் குதிரையிலிருந்து தூக்கி எறியப்பட்டு, தலைகுப்புற தரையில் விழுந்தார். அதன் விளைவாக அவருடைய முதுகுத்தண்டின் சில பாகங்கள் பாதிக்கப்பட்டன. கழுத்துக்குக் கீழே ஏறக்குறைய உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்துவிட்டன. ஆனால் மூளை மட்டும் பாதிக்கப்படவில்லை.
 உடனே மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்கள் செய்த தீவிர சிகிச்சையால் கிறிஸ்டோபர் ரீவ் உயிர் பிழைத்தார். இருப்பினும் அவருடைய வாழ்க்கை படுக்கையிலும் சக்கர நாற்காலியிலுமாகக் கழிந்தது. பல சமயம் மூச்சுவிட உதவும் செயற்கைக் கருவியின் மூலம் மூச்சுவிட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருந்தார்.
 அவருடைய சக்கர நாற்காலியில் செயற்கைக் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன.
 அவருடைய மனைவி டானாவின் தீவிர கவனிப்பும் உற்சாகமூட்டும் பேச்சுக்களும் உலக முழுவதுமுள்ள அவரது ரசிகர்கள் செய்த பிரார்த்தனைகளும் ரீவுக்குத் தான் வாழ வேண்டும் என்ற ஆசையையும் மன உறுதியையும் அளித்தன. அதன் பின்னரும் திரைப்படம், தொலைக்காட்சித் துறைகளில் பணியாற்றியும் எண்ணற்ற சமுக சேவைகளிலும் ஈடுபட்டும் உற்சாகமாகவே வாழ்ந்து வந்தார்.
 இவர் நியூயார்க் நகரில் 25-9-1952-இல் பிறந்தார். இவருடைய சிறு வயதில், தாய், தந்தையை விவாகரத்து செய்துவிட்டார். பள்ளியில் படிக்கும்போதே கிறிஸ்டோபர் நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தார்.
 1978-ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்மேன் திரைப்படம் அவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தி, அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்தது. உலக அளவில் மிகவும் பிரபலமான முகமாகிப் போனார். சூப்பர்மேன் வரிசையில் நான்கு படங்களில் நடித்துள்ளார்.
 1995-இல் ஏற்பட்ட விபத்து திரைப்பட நடிப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது. இருப்பினும் அதுவரை ஒரு நடிகனாக, சூப்பர்மேனாக மட்டுமே அறியப்பட்ட அவர் சிறந்த மனிதநேயம் மிக்க மனிதராக, பொதுத் தொண்டுகளில் அக்கறை கொண்டவராக, தன்னைப் போன்று பாதிப்புக்குள்ளானவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட பாடுபடுபவராக அவரை அந்த விபத்து உலகுக்கு அடையாளம் காட்டியது.
 1996-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சக்கர நாற்காலியில் தோன்றிப் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
 அதே ஆண்டில் அட்லாண்டாவில் நடந்த ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டிகளை முன்னின்று நடத்தி வைத்தார். பிறகு தொலைக்காட்சி படங்களுக்கு இயக்குநராகப் பணிபுரிந்தார். சில படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தார். சில படங்களில் வர்ணனையாளராகப் பணியாற்றினார். திரைப்படங்களும் தயாரித்தார். தனது சுய சரிதை ஒன்றையும் வெளியிட்டார். ஒரு படத்தில் நடிக்கவும் செய்தார்.
 அந்தக் காலகட்டத்தில் இவர் செய்த சமூக சேவைகள் ஏராளம். தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசாங்கத்திடம் அதிகத் தொகை பெற்றுக் கொடுத்தார். எதிர்பாராத விபத்துகளினால் ஏற்படும் செலவைச் சமாளிக்கப் பணம் சேமிக்கும் பழக்கத்தை மக்களிடம் ஊக்குவிக்க ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டார். தானே ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்தி இவரைப் போல பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவினார். உடல் ஊனமுற்றவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் குழுவுக்கு ஆலோசகராக இருந்தார். தனது தொண்டு நிறுவனம் மூலம் ஏறத்தாழ இருபது மில்லியன் டாலர் நிதி திரட்டி ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார்.
 10-10-2004 அன்று நியூயார்க் நகரிலுள்ள மவுண்ட் கிஸ்கோ என்னுமிடத்திலிருந்த மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
 அவர் மறைந்தாலும் அவரது மனைவியும் குடும்பத்தினரும் அவர் ஆரம்பித்த தொண்டு நிறுவனங்களைத் தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகின்றனர். உடல் பாகங்கள் செயல் இழந்து போவது குறித்து நடத்தப்படும் ஆராய்ச்சிகளுக்கும் உடல் உறுப்புகள் செயலிழந்து போனவர்கள் தன்னம்பிக்கையுடன் தனித்து வாழவும் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 உடல் செயலிழந்த போதிலும் கிறிஸ்டோபர் ரீவ் நிகழ்த்திய சாதனைகள் போற்றுதலுக்குரியது. இவரது சேவைகளால் இவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
 -அடுத்த இதழில்: எழுத்தாளர் வேத் மேத்தா
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.