டெர்ரி ஃபாக்ஸ்
கனடா நாட்டில் பிறந்த விளையாட்டு வீரர் டெர்ரி ஃபாக்ஸ். புற்று நோயால் பாதிக்கப்பட்டுத் தனது வலது காலில் ஒரு பகுதியை இழந்தவர். செயற்கைக் காலைப் பொருத்திக் கொண்டு கனடாவில் தினமும் 26 மைல்கள் வீதம் 143 நாட்கள் மாரத்தான் ஓட்டம் ஓடியவர்.
அதுமட்டுமல்லாது தன்னைப் போன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட, தான் ஓடிய வழியெங்கும் நிதி திரட்டியவர். கனடா மக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு டாலரை நன்கொடையாகப் பெற்றிட உறுதி கொண்டார். இருநூறு லட்சம் டாலர்களுக்கு மேல் திரட்டிக் கொடுத்தார்.
கால் இழந்தவர்கள் இடிந்து போய், சோர்வுற்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் நம்பிக்கையுடன் வாழ்வில் வெற்றி காணலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்
டெர்ரி ஃபாக்ஸ்.
கனடா நாட்டில் உள்ள வின்னிபெக் என்ற ஊரில் 1958-ஆம் ஆண்டு பிறந்தார் டெர்ரி ஃபாக்ஸ். சிறுவயதில் இவருக்கு கூடைப் பந்து விளையாடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், அதற்குத் தடையாக அவரது உயரம் இருந்தது. ஆனால் முயற்சியில் தளராமல் தொடர்ந்து பயிற்சி செய்து, தனது உயரக்குறைவு, சாதனைக்குத் தடையல்ல என்பதை நிரூபித்து, பள்ளியின் கூடைப்பந்துக் குழுவில் இடம் பெற்றார்.
பின்னர் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் சமயத்தில் அவருடைய உயரக்குறைவைக் காரணம் காட்டி குழுவில் சேர்த்துக் கொள்ள மறுத்தனர். மனம் தளராமல் விடாமுயற்சி செய்து கல்லூரிக் குழுவிலும் இடம் பிடித்தார்.
அந்த காலகட்டத்தில் வலது காலில் தொடர்ந்து வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் பரிசோதித்தபோது, எலும்பு சம்பந்தப்பட்ட புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. வலது காலை, முழங்கால் வரை எடுத்துவிட வேண்டும் என்று கூறப்பட்டது.
அறுவைச் சிகிச்சை நடந்தது. சில மாதங்கள் கழித்து செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. அதனைக் கொண்டு நடைப் பயிற்சி செய்தார். பின்னர் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டார். தினமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தூரத்தை அதிகபடுத்தி ஓடிப் பார்த்தார்.
மன உறுதியும் உடலில் வலுவும் ஏற்படவே, மாரத்தான் ஓட்டமாக, கனடாவில் ஐந்தாயிரம் மைல்கள் தூரம் ஓடவேண்டும் என்ற உறுதி கொண்டார். தான் ஓடுவதன் மூலம் தன்னுடைய உடலின் சக்தியையும் மன உறுதியையும் காட்டுவதோடு, ஓடும் வழியில் நிதி திரட்டி, புற்றுநோயால் துன்புறுவோருக்கு உதவுவதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆரம்பத்தில் இவரது நோக்கத்துக்கு அவ்வளவாக ஆதரவு இல்லையென்றாலும் தொடர்ந்து தீவிர முயற்சியில் இறங்கவே, பல நிறுவனங்களும் இந்த உயர்ந்த நோக்கத்துக்கு ஆதரவுக் கரங்கள் நீட்டின.
தன்னுடைய ஓட்டத்துக்கு "மாரத்தான் ஆஃப் ஹோப்' என்று பெயரிட்டார். "நம்பிக்கையை ஏற்படுத்தும் தொலைதூர ஓட்டம்' என்று இதற்குப் பொருள்.
செயற்கைக் காலுடன் நீண்ட தூரம் ஓடும் ஒருவரைப் பார்த்தால், பார்ப்பவர்கள் இடையே நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்படும் அல்லவா?
12.04.1980 அன்று கனடாவின் செயிண்ட் ஜான் என்ற இடத்தில் தொடங்கி, நாலரை மாதங்கள் தொடர்ந்து ஓடினார்.
வழியில் இவருக்கு உடல் வலி ஏற்பட்டது. மருத்து வர்கள் இதற்கு மேல் ஓட வேண்டாம் என எச்சரித்தனர். ஆனால்
தனது முயற்சியை பாதியிலேயே நிறுத்த விரும்பவில்லை. கனடா
நாடு இவரது உன்னத செயலைப் பாராட்டி, அஞ்சல் தலை வெளியிட்டது.
1981-இல் காலமானார்.
2005-ஆம் ஆண்டு "மாரத்தான் ஆஃப் ஹோப்' தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைச் சிறப்பித்து கனடா அரசு டெர்ரி ஃபாக்ஸ் உருவம் பொறித்த ஒரு டாலர் நாணயம் வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது. கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 13-ஆம் தேதி இவருடைய மாரத்தான் ஓட்டத்தின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் கனடா நாட்டைச் சேர்ந்த பலரும் பத்து கிலோமீட்டர் தூரம் ஓடி, புற்றுநோயாளிகளுக்காக நிதி திரட்டி வருகிறார்கள். டெர்ரி ஃபாக்ஸ் என்றும் அவர்களது நினைவில் வாழ்கிறார்.
ஊனமுற்றவர்களும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறவும் அவர்களுக்காகப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று பலரும் செயலில் இறங்கவும் உந்துசக்தியாக இருந்தவர் டெர்ரி.
பார்வையாளர்கள், ஊடகங்கள், பத்திரிகைகள் போன்றவற்றின் கவனத்தை ஈர்த்து, இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு அதிக விளம்பரத்தைப் பெற்றுத் தந்தவர் டெர்ரி.
காலை இழந்த அவரது சாதனை அனைவரையும் வியக்க வைக்கிறது!
-அடுத்த இதழில்: கவிஞர் மில்டன்