தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

touch ஸ்க்ரீன்

இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்று அறியப்படும் மொழிகளில் நம் நாட்டின் சம்ஸ்கிருதம், ஹிந்தி, பஞ்சாபி, உருது, ஐரோப்பிய மொழிகளான கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளன.

News image
Updated On :24 மே 2013, 8:34 am

டி.எஸ்.​ஆர். வெங்​கட்​ர​ம​ணா​​

இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்று அறியப்படும் மொழிகளில் நம் நாட்டின் சம்ஸ்கிருதம், ஹிந்தி, பஞ்சாபி, உருது, ஐரோப்பிய மொழிகளான கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளன.
 2009-ஆம் ஆண்டு எடுத்த மொழிக் கணக்கெடுப்பின்படி 439 மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்ற பழமையான மரத்தின் கிளைகளாகப் பிரிந்து வளர்ந்திருக்கின்றன. இந்த மொழிகளை இன்று உலகின் அனைத்துக் கண்டங்களிலும் சுமார் முன்னூறு கோடி மக்கள் பேசுகிறார்கள்.
 இந்தோ-ஐரோப்பிய மொழி குடும்பத்தை ஆராய்ச்சி செய்ததுபோல உலகின் வேறு எந்த மொழியும் மிக விரிவாக ஆராயப்பட்டதில்லை. இருநூறு ஆண்டுகளாக இந்த மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது. இன்னும் முடிந்தபாடில்லை.
 இதில் விசேஷம் என்னவென்றால் இவற்றைக் குறித்து ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு ஆயிரக்கணக்கான வருஷங்கள் பழமை வாய்ந்த புத்தகங்கள் இந்த மொழிகளில் இருக்கின்றன.
 எவ்வளவோ காலமாக எத்தனையோ பேர் ஆராய்ச்சி செய்திருந்தாலும் இந்த மொழிகளின் காலம், பிறப்பு, பயணம் பற்றி பலவிதமான கருத்துகள் உள்ளன.
 இவற்றின் மூல மொழி அல்லது மொழிகள் சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், கருங்கடல், காஸ்பியன் கடல் பகுதியில் அமைந்திருக்கும் பான்டிக் ஸ்டெப்பீஸ் என்கிற பிரதேசத்தில் பேசப்பட்டன. அந்த மூல மொழி அல்லது மொழிகள் பின்னர் எல்லா திசைகளுக்கும் பரவின என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து.
 இந்த மொழிக் குடும்பத்தின் பிறப்பிடம் இன்றைய துருக்கி என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
 இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் சில பழைய கால துருக்கியில் பேசப்பட்டன என்று ஏற்கெனவே அறியப்பட்டாலும், மிகத் தீர்மானமாக இவற்றின் பிறப்பிடம் துருக்கி என புதிய ஆராய்ச்சி கூறியிருக்கிறது.
 நியூசிலாந்தின் ஆக்லந்து பல்கலைக்கழக விஞ்ஞானியான குவென்டின் அட்கின்ஸன் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சியிலிருந்து புதிய தகவல்கள் கிடைக்கின்றன.
 அட்கின்ஸனின் குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட 103 மொழிகளில் உள்ள சொற்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் இந்த மொழிக் குடும்பம் பிறந்த இடம் அனடோலியா என்ற பிரதேசம் என்று இவர்கள் அடித்துக் கூறுகிறார்கள். அனடோலியா என்பது இன்றைய துருக்கியின் பண்டைய கால பெயர்.
 ஆனால், அட்கின்ஸன் குழுவினரின் ஆராய்ச்சி இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பிறந்த காலத்தை இன்னும் பின்னோக்கித் தள்ளியிருக்கிறது.
 8 ஆயிரம் அல்லது 9 ஆயிரத்து 500 வருஷங்களுக்கு முன்னால் அனடோலியாவில் (அதாவது இன்றைய துருக்கியில்) இவை தோன்றியிருக்கலாம் என்கிறார் அட்கின்ஸன். மக்களும் அவர்களுடன் விவசாய முறைகளும் பிற இடங்களுக்குப் பரவியபோது மொழிகளும் வேறு இடங்களுக்குப் பரவின என்கிறது அவருடைய புதிய கோட்பாடு.
 
அர்த்தமற்ற, தொடர்பில்லாத ஒலிகளை பச்சிளம் குழந்தைகள் எழுப்பினால் அதை மழலை என்கிறோம். இதே போல பெரியவர்கள் எழுப்பினால் அதனை பிதற்றல், உளறல் என்கிறோம்.
 அந்தக் காலத்து கிரேக்கர்கள் தங்களுடைய கிரேக்க மொழியைத் தவிர மற்ற எல்லா மொழிகளையும் ஒருவிதமான தொடர்பில்லாத பிதற்றலாகத்தான் கருதி வந்தனர்.
 மோட்டார்பைக் சர்ர்ரென்று சென்றது. காகம் விர்ர்ரென்று பறந்தது... விமானம் ஜிவ்வென்று விண்ணில் உயர்ந்தது... கடகடவென்று பேசு என்றெல்லாம் கூறுகிறோம். இவை அப்படியே எழுத்திலும் இருப்பதை பத்திரிகைகளில், கதைகளில் படித்திருக்கிறோம்.
 இதுபோன்ற வார்த்தைகளை உண்மையில் வார்த்தைகள் என்றே சொல்ல முடியாது. ஒரு செயலைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுவதைத் தவிர இவற்றுக்கு மொழியில் வேறு பொருள் கிடையாது.
 இதேபோலத்தான் ஒருவருடைய மொழியைப் புரிந்துகொள்ளாத இன்னொருவர் அடையாளம் காண்கிறார். ஒரு செயலை குறிப்பிட அவர் ஏதோ ஒரு ஒலியை எழுப்புகிறார் என்று மட்டும் தெரிகிறது. அதாவது ஒருவர் தனது மொழியில் எதையாவது தெரிவிக்க விரும்பினால், அந்த மொழி தெரியாத மற்றொருவருக்கு சர்ர், விர்ர், கிர்ர்ரென்ற சொற்களைப் போலத்தான் அது தோன்றும்.
 எல்லா மொழிகளின் பேச்சு ஒலிகளையும் குழந்தைகள் தங்கள் மழலையில் எழுப்புகின்றன என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். குழந்தை வளர, வளர, அதன் சூழலிலிருந்து - மொழியை, தேவையின் காரணமாக அது தேர்ந்தெடுத்துக் கொள்கிறது என்றும் கூறுகிறார்கள்.
 ஒரு புதிய மொழியைப் புரிந்து கொள்வதற்கு முன் அந்த மொழியில் நம்மிடம் யாராவது பேசினால், வார்த்தைகளுக்குள் இடைவெளி தெரியாத, தொடர்ச்சியான ஒலிகளாக அது நமக்கு கேட்கிறது. அவன் பாஷையில் ஏதோ உளறுகிறான். ஒன்றும் புரியவில்லை என்கிறோம்.
 நமக்குப் பரிச்சயமான ஒரு மொழியை நாம் கேட்கும்போதும் அது இடைவெளி இல்லாத, தொடர்ச்சியான ஒலிதான், ஆனால் அதில் உள்ள சொற்கட்டுகளை நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம். வார்த்தைகள் பல்வேறு குழுக்களாக அடையாளம் தெரிகிறது. எனவே அந்த சொற்கள் மூலம் என்ன தகவலை ஒருவர் தெரிவிக்க முயல்கிறாரோ, அது நமக்குப் புரிகிறது என்கிறோம்.
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் யேசுகிறிஸ்து பேசியதாகக் கருதப்படும் அராமிய மொழியை இன்றும் பேசி வருகின்றனர். அவர் பேசியது இந்த மொழியில்தானா என்பதில் விவாதம் இருந்தாலும் பெரும்பாலான மொழி வல்லுநர்கள் இதுவாக இருக்கக்கூடும் என ஒப்புக்கொள்கின்றனர்.
 இம்மொழி 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. மேற்கு ஆசிய நாடுகள் பகுதியில் இது பரவலாகப் பேசப்பட்டது. வணிகம், ஆட்சி, வழிபாடு இவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டது. இன்றைய இஸ்ரேல் பகுதியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் வழக்கிலிருந்த முக்கிய மொழி இது.
 இந்த மொழியைப் பாதுகாக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மொழியியலாளரான பேராசிரியர் ஜெஃப்ரி கான் முயற்சித்து வருகிறார். கேம்பிரிட்ஜின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் மொழிகள், கலாசாரங்களுக்காக கேம்பிரிட்ஜில் ஒரு துறை உள்ளது. அதைச் சேர்ந்தவர் இவர். கடந்த 15 ஆண்டுகளாக அராமிய மொழியின் பல்வேறு கிளை
 மொழிகளையும் வட்டார வழக்குமொழிகளையும் ஆராய்ந்து வருகிறார். வடக்கு, வடமேற்கு இராக், தென்கிழக்கு துருக்கி பகுதிகளில் வழக்கிலிருக்கும் அராமியம் முற்றிலும் மறைந்துவிடாமல் இருக்கக் கடும் முயற்சி எடுத்துவருகிறார்.
 அனைத்து கிளை மொழிகளையும் பதிவு செய்து முறையாகத் தொகுத்து ஆராய்வதன் மூலம் இம்மொழி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய முடியும் என நம்புகிறார்.
 இன்றைய சிரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் சிலர் தங்களது தாய்மொழியாக அராமிய மொழியைப் பேசிவருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ள இப்பகுதியைச் சேர்ந்த சிலரும் இதைப் பேசுகின்றனர். எல்லாமாகச் சேர்ந்து, கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் இன்று இதனைப் பேசுகின்றனர் என்று கூறப்படுகிறது.
 கிழக்கத்திய தேவாலயங்கள் சிலவற்றில் அராமிய கிளை மொழி பயன்படுத்தப்படுகிறது. நவீன வகை அராமியம் இன்றைய கிறிஸ்தவ, யூதர்கள் சிலரால் பேசப்பட்டுவருகிறது. இதிலும் பல கிளை மொழிகள் உள்ளன.
 ஆரம்பக் கல்வி அளவில் இந்த மொழியை எழுத, படிக்க கற்றுத் தரும் முயற்சி பெற்றோர்களாலும் மொழி ஆர்வலர்களாலும் தொடங்கப்பட்டிருக்கிறது.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.