பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஒப்பரிய உலக நகரங்கள் மாஸ்கோ

மனித குலத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுத்த நகரம் மாஸ்கோ.

News image
Updated On :7 பிப்ரவரி 2014, 2:34 am

செவல்குளம் ஆச்சா

மனித குலத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுத்த நகரம் மாஸ்கோ. புதுமை நெறியைக் காட்டிய நமது தேசியக்கவி பாரதியும், "ஆகா! வென்றெழுந்தது பார் யுகப் புரட்சி'' என்று சுட்டிக்காட்டிய நகரம் மாஸ்கோ. தலைநிமிர்ந்து நிற்கும் நகரங்களின் வரிசையில் முதலிடம் பெற்றது.
 பல ரகசியங்களை உள்ளடக்கியிருந்த மாஸ்கோ இன்று தன் அழகையும், கலை, இலக்கிய, கலாசார ரகசியங்களையும் வெளியே காட்டத் தொடங்கியுள்ளது. இளவரசர் யூரி கி.பி. 1150-ஆம் ஆண்டில் நகரைச் சுற்றி மரத்தால் சுவர் கட்டியபோதுதான் மாஸ்கோ நகரம் தோன்றியது. அது நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று, இன்று காண்போரை வியக்க வைக்கும் சிறப்பைப் பெற்றுத் திகழ்கிறது.
 மக்கள்தொகையில் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நகரம் மாஸ்கோ. இந்நகரைத் தழுவியபடி மாஸ்கோ நதி ஓடுகிறது. இந்நதியில் மட்டும் ஐம்பது பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மாஸ்கோ நகரில் ஐந்து விமான நிலையங்கள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. உள்நாட்டுப் போக்குவரத்துக்காக ஒன்பது புகைவண்டி நிலையங்களும், ஒரு மத்தியப் பேருந்து நிலையமும் இயங்கி வருகின்றன. இங்கு இயங்கும் பாதாள ரயில்கள் தினமும் 70 லட்சம் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இப்பாதாள ரயில் நிலையங்கள் கட்டடக் கலைக்கும், பராமரிப்புக்கும் உலகப் புகழ் பெற்றவை. ஐம்பது விளையாட்டு அரங்குகள் உள்ளன.
 கிரெம்ளின் மாளிகை: மாஸ்கோ நகரின் மையப் பகுதியில் மாஸ்கோ நதியை எதிர்நோக்கியபடி கிரெம்ளின் மாளிகை காட்சியளிக்கிறது. வரலாற்றுப் புகழ்பெற்ற இந்தக் கோட்டைக்குள் கிரெம்ளின் சுவர், செஞ்சதுக்கம், புனித பேசில் தேவாலயம், அலெக்சாண்டர் பூங்கா, அரண்மனை, கிரெம்ளின் கோபுரம் ஆகியவை உள்ளன.
 இங்குதான் ரஷ்ய அதிபர் மாளிகை உள்ளது. அரசாங்கத்தின் முக்கிய அலுவலகங்கள், தேசியப் பாதுகாப்புப் படையின் தலைமை அலுவலகம், பன்னாட்டுத் தூதரகங்களும் இங்கு அமைந்துள்ளன.
 செஞ்சதுக்கம்: உலகின் பல முக்கிய திருப்பங்களுக்குச் சாட்சியாக விளங்கும் சதுக்கம் இது. ரஷ்யாவின் பல வெற்றிகள் மற்றும் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இச் சதுக்கத்தின் மையத்தில் இருந்து வட்டத்தின் ஆரங்களைப்போல் அழகிய சாலைகள் நகரத்தின் எல்லைவரை செல்கின்றன. இடையில் குறுக்காகச் சாலைகளாக நான்கு மோதிரச் சாலைகள் அமைத்து மாஸ்கோ நகருக்கு அழகிய தோற்றத்தைத் தருவதுடன், போக்குவரத்தும் சீராக்கப்படுகிறது.
 இந்த செஞ்சதுக்கம் இவான் என்ற மன்னரால் நிர்மாணிக்கப்பட்டது. முதலில் வணிகச் சந்தையாக இருந்தது. பின்னர் அரசு விழாக்கள், பொதுக் கூட்டங்கள் நடைபெறும் இடமாகப் பயன்பட்டது. சதுக்கத்தின் பெயரில் உள்ள சிகப்பு, ரஷ்ய நாட்டின் தேசியக் கொள்கையான பொதுவுடைமையைக் குறிக்கிறது. ரஷ்யாவின் புகழ்பெற்ற தலைவரான மாமேதை லெனினின் உடல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள லெனின் நினைவகம் இங்குதான் உள்ளது.
 ஓஸ்டான்கினோ கோபுரம்: உலகின் மிக உயரமான தொலைக்காட்சிக் கோபுரமான ஓஸ்டான்கினோ மாஸ்கோவில் அமைந்துள்ளது. வானொலி, தொலைக்காட்சி ஒளிபரப்புகள் இங்கிருந்து செயல்படுகின்றன. 1700 அடி உயரமுள்ள இந்தக் கோபுரப் பணி 1963-ஆம் ஆண்டில் தொடங்கி 1967-இல் முடிக்கப்பட்டது. ஷுகாவ் என்ற பெயரில் மற்றொரு தொலைக்காட்சிக் கோபுரம் உள்ளது. முற்றிலும் உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோபுரம் ரஷ்ய தொழில்நுட்பச் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
 புஷ்கின் அருங்காட்சியகம்: மாஸ்கோவில் அமைந்துள்ள புஷ்கின் நுண்கலை அருங்காட்சியகம் உலகப் புகழ் பெற்றது. முதலில் முதல் மன்னர் அலெக்சாண்டர் பெயரால் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகம், தற்போது ரஷ்யாவின் புகழ்பெற்ற இலக்கிய மேதையான புஷ்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. பீட்டர்ஸ் பர்க் நகரில் உள்ள பல அரிய கலைப்பொருட்கள் இங்கு மாற்றப்பட்டுள்ளன.
 நோவா டெவிசி கான்வென்ட்: வரலாற்றுச் சிறப்பு கொண்டது இந்தக் கன்னியர் மடம். இங்கு பல அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இறைப் பணியாற்றியுள்ளனர். போர்க்காலங்களில் போர் வீரர்களின் மருத்துவமனையாகவும் செயல்பட்டுள்ளது. இதனுள் பல தேவாலயங்களும், ரஷ்யாவின் புகழ்பெற்ற சான்றோர் பெருமக்களின் கல்லறைகளும், ஒரு எண்கோண மணிக்கூண்டும் அமைந்துள்ளன.
 போர் அருங்காட்சியகம்: வெற்றிப் பூங்காவில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் பல போர்க்கருவிகள், ஆயுதங்கள், கனரக வாகனங்கள், பீரங்கிகள், போர் விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
 வரலாற்று அருங்காட்சியகம்: இதில் புராதன காலத்திலிருந்து இன்றைய நூற்றாண்டு வரை ரஷ்யாவின் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட லட்சக்கணக்கான அரிய பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. அருங்காட்சியகக் கட்டடமும் அதில் வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு ஏற்றவாறு, நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் வோல்கா நதிக் கரையில் தோண்டி எடுக்கப்பட்ட படகு, பண்டைக்கால தங்க ஆபரணங்கள், நாணயங்கள், இலக்கிய கைப்பிரதிகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
 புனித பேசில் தேவாலயம்: மாஸ்கோ நகரின் வரலாற்றுப் புகழ் வாய்ந்த பல தேவாலயங்களில் புனித பேசில் குறிப்பிடத்தக்கது. செஞ்சதுக்கம் அருகில் அது அமைந்துள்ளது. வித்தியாசமான அமைப்பு கொண்ட கூரைகள் பலவற்றுடன் இவான் மன்னரால் கி.பி.1555-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
 இயேசு தேவாலயம்: நெப்போலியனின் ஆக்கிரமிப்பில் இருந்த ரஷ்யாவை மன்னர் முதலாம் அலெக்சாண்டரின் வீரர்கள் நாட்டைக் காக்க இறைவனடி வேண்டி இறுதிப்போரில் தீவிரமாக ஈடுபட்டு கி.பி. 1812-ஆம் ஆண்டு நெப்போலியனைத் தோற்கடித்தனர்.
 நாட்டைக் காத்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் நாட்டுக்காகப் போரில் உயிரையும் துச்சமாக மதித்த ரஷ்ய மக்களை வாழ்த்தும் வகையிலும் ஒரு தேவாலயம் கட்ட மன்னர் முடிவெடுத்தார். ஆனால், அதைக் கட்டி முடிப்பதற்குள் மன்னர் மாண்டார். இருப்பினும் அவருடைய சந்ததியினர் அதனைக் கட்டி முடித்தனர். கிரெம்ளின் மாளிகை அருகே இது அமைந்துள்ளது. அந்த ஆலயத்தின் உள்ளரங்கில் புகழ்பெற்ற ஓவியர்கள் தங்கள் ஓவிய ஆற்றலைக் காட்டி உள்ளனர்.
 ரஷ்யப் புரட்சிக்குப் பின் இந்த தேவாலயம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. 1992-ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டு கி.பி. 2000-ஆம் ஆண்டில் பணிகள் முடிந்து பழைய தோற்றத்தைப் பெற்றது.
 நினைவிடங்கள்: மாஸ்கோவின் நீண்ட வரலாற்றுக்கு எடுத்துக்காட்டாக பல நினைவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இயேசு தேவாலயத்தின் அருகில் மன்னர் இரண்டாம் அலெக்சாண்டருக்கு பதினெட்டு அடி உயரச்சிலை, பதினெட்டு அடி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு நினைவாலயம் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கட்டப்பட்ட விண்வெளி வெற்றி நினைவகமாகும்.
 உழைப்பாளர் சிலை: உழைப்பின் மேன்மையை உணர்த்தும் வகையில் ஆண் பெண் சிலை 78 அடி உயரத்திற்கு இரும்பினால் அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளி கையில் சுத்தியும் பெண்ணின் கையில் அரிவாளும் உள்ளன.
 பூங்காக்கள் நிறைந்த நகரம் மாஸ்கோ. 450 ச.கி.மீட்டர் பரப்பளவில் தாவரவியல் பூங்காக்கள் உள்ளன உலகின் மற்ற நகரங்களைவிட அதிகப் பச்சைநிறம் பரவியுள்ளது.
 ரஷ்யாவின் கலை, இலக்கியக் கலாசாரங்களின் இதயமாக மாஸ்கோ விளங்குகிறது. நடன அரங்குகள், திரை மற்றும் இசையரங்குகள் 200-க்கும் மேற்பட்டவை உயிர்த் துடிப்புடன் செயல்படுகின்றன.
 ரஷ்ய நடனமான பாலே, ஓவியம், நாடகக்கலை மற்றும் சிற்பக்கலைகள் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்படும் மாஸ்கோவில் காண வேண்டிய அரிய காட்சிகள் இன்னும் பல உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.