திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

"சக்கர' வர்த்திகள்

விடுமுறை நாள்களில் பொழுதுபோக்குவதற்காக கிரிக்கெட் மட்டையை எடுத்துக்கொண்டு மைதானத்தை நோக்கி பட்டாம்பூச்சிபோல்

News image
Updated On :7 பிப்ரவரி 2014, 2:50 am

விடுமுறை நாள்களில் பொழுதுபோக்குவதற்காக கிரிக்கெட் மட்டையை எடுத்துக்கொண்டு மைதானத்தை நோக்கி பட்டாம்பூச்சிபோல் செல்லும் சிறுவர்களைப் பார்த்ததுண்டு. அவ்வாறு பொழுதுபோக்குக்காக சறுக்கு விளையாட்டு எனப்படும் ஸ்கேட்டிங் விளையாடத் தொடங்கிய சென்னையைச் சேர்ந்த 2 பள்ளி நண்பர்கள் இன்று அதில் தேசிய சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
 ஸ்கேட்டிங், மற்ற விளையாட்டுகளிலிருந்து சற்று மாறுபட்டதாகும். ஸ்கேட்டிங் ஷூவை அணிந்துகொண்டு சாலையிலும். களத்திலும் பயணிக்கும்போது சிறிது கால் இடறினாலும் காயங்களைச் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும். நிலையான உந்து சக்தியும். கடினமான பயிற்சி ஆகியவற்றுடன் மிகுந்த மன உறுதியும் இருந்தால் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும்.
 இந்தத் தகுதிகளுடன் அதே விளையாட்டில் திறமையும். ஆர்வமும் கொண்ட நல்ல நண்பன் கிடைத்துவிட்டால் சோதனைக் கற்களை உடைத்து சாதனைப் படிக்கட்டுகளாக மாற்ற முடியும். இதனை சென்னையைச் சேர்ந்த ஆசிஷ், தேஜேஸ்வர் என்ற இரண்டு மாணவர்கள் நடைமுறையில் மெய்ப்பித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்துவரும் இருவரும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபெற்ற பல ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர். இவர்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம் வாருங்கள்...
 இரட்டை நட்சத்திரங்கள்: கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 12 முதல் 14-வயதுக்குட்பட்டோர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தன்வசமாக்கிய மாணவர் எஸ். ஆசிஷ், சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. சிபிஎஸ்இ பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்கேட்டிங்கில் 10 மற்றும் 15 கிலோ மீட்டர் பிரிவுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என இதுவரை 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் சாம்பியன் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
 இதே பள்ளியில் மெட்ரிக் பிரிவில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் அ.தேஜேஸ்வர்.
 14 முதல் 16 வயதுக்குட்பட்டோருக்கான ஸ்கேட்டிங் போட்டிகளில் இதுவரை 120-க்கும் மேற்பட்ட பதக்கங்கள், பரிசுக்கோப்பைகளைப் பெற்றுள்ளார். மேலும் கடந்த ஆண்டு உலக அளவில் பெல்ஜியத்தில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி தனது முத்திரையைப் பதித்துள்ளார். ஸ்கேட்டிங் விளையாட்டின் 10 கிலோமீட்டர் தூரத்தை ஆசிஷ் 17 நிமிடங்களிலும், தேஜேஸ்வர் 16.29 நிமிடங்களிலும் கடந்து சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 கடுமையான பயிற்சி: சென்னை கடற்கரை சாலையில் ஆசிஷ், தேஜேஸ்வர் தினமும் 20 கிலோ மீட்டர் தூரம் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியின் போதும், போட்டிகளின்போதும் எதிர்பாராமல் கால் இடறிக் கீழே விழுந்ததில் இருவரது உடலிலும் ஆங்காங்கே விழுப்புண்கள் காணப்படுகின்றன.
 ஸ்கேட்டிங் விளையாட்டில் படைத்த சாதனைகள், இனி அடைய வேண்டிய இலக்கு குறித்து சாதனை மாணவர்கள் ஆசிஷ், தேஜேஸ்வர் ஆகியோர் கூறியது:
 எங்களுக்கு 5 வயதாக இருக்கும்போது, பொழுதுபோக்குக்காக அண்ணாநகர் டவர் பார்க்குக்கு எங்களது பெற்றோர் அழைத்துச் செல்வர். அப்போது அங்கே ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டவர்களைப் பார்க்கும்போது எங்களுக்குப் பிரமிப்பாக. இருந்தது. எனவே இதனை எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பெற்றோர்களிடம் எங்களது ஆசையைத் தெரிவித்து ஒப்புதல் பெற்றோம். அதைத் தொடர்ந்து தினமும் ஸ்கேட்டிங் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டோம். சென்னையைச் சேர்ந்த ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் உன்னிகிருஷ்ணன், சத்தியமூர்த்தி ஆகியோர் எங்களை ஊக்கப்படுத்தினர்.
 மணிக்கு 50 கிலோ மீட்டர்: தினமும் கடற்கரை சாலையில் பயிற்சி செய்யும்போது அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தியதை எங்களால் மறக்கவே முடியாது. தொடக்கத்தில் பக்கவாட்டுப் பகுதிகளில் சக்கரம் பொருத்தப்பட்ட ஷூக்களில்தான் பயிற்சி செய்தோம். அது சற்று எளிதாக இருந்தது. ஆனால் சர்வதேசத் தரத்துக்கு அதுபோதாது என்பதை உணர்ந்தோம். இதனால் ஒரே நேர்க்கோட்டில் பொருத்தப்பட்டுள்ள சக்கரங்கள் கொண்ட ஷூக்களில் பயிற்சி பெற முடிவு செய்தோம். இதற்காக கொரியாவில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்கேட்டிங் ஷூக்களை பிரத்யேகமாக வரவழைத்து, அதன் மூலம் பயிற்சி பெற்றோம்.
 பயிற்சியின் தொடக்கத்தில் எங்களுக்கு மிக மிக சிரமமாக இருந்தது. கால் இடறிக் கீழே விழுந்து பல இடங்களில் ரத்தக் காயங்கள்கூட ஏற்பட்டன. இருப்பினும் விளையாட்டின் மீதிருந்த ஆர்வம் மட்டும் சிறிதுகூடக் குறையவில்லை. தற்போது ஸ்கேட்டிங் களத்தில் எங்களால் ஒரு மணி நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்தை எளிதாகக் கடக்க முடியும்.
 வலிகளைப் பொருட்படுத்தாமல் நம்பிக்கையுடன் பயிற்சி பெற்றதன் காரணமாகவே மாவட்ட அளவிலான போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றதோடு தேசியப் போட்டிகளிலும் எங்களால் சாம்பியன் பட்டங்களைப் பெற முடிந்தது.
 இதனைப் பாராட்டும் விதமாக எங்கள் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கியுள்ளது. மேலும் எங்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுக்குத் தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகையை இருவருக்கும் வழங்கி வருகிறது.
 இனி உலக அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு இந்தியாவுக்குப் பெருமை தேடித் தருவதே எங்களின் தற்போதைய இலக்கு என்று ஆசிஷ், தேஜேஸ்வர் இருவரும் ஒரே குரலில் முழக்கமிட்டனர்.
 படங்கள் மற்றும் செய்தி:
 அ.ஜெயச்சந்திரன்
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.