3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஒப்பரிய உலக நகரங்கள் டோக்கியோ

சூரியன் உதிக்கும் நாடு என்று சிறப்பிக்கப்படுவது ஜப்பான். சிறிய நாடு என்றாலும் பல சிறப்புகளால் பெருமை பெற்றது. உழைப்பால் உயர்ந்த நாட்டுக்கு

News image
Updated On :31 ஜனவரி 2014, 2:45 am

செவல்குளம் ஆச்சா

சூரியன் உதிக்கும் நாடு என்று சிறப்பிக்கப்படுவது ஜப்பான். சிறிய நாடு என்றாலும் பல சிறப்புகளால் பெருமை பெற்றது. உழைப்பால் உயர்ந்த நாட்டுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது. குறுகிய காலத்தில் மின்னணுத் துறையில் உலகையே வியப்பில் ஆழ்த்திய நாடு ஜப்பான்.
 ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ. இந்நகருக்கு உலக அரங்கில் குறிப்பிடும்படியான பல பெருமைகள் உண்டு. உலகில் வேறு எந்த நகரத்திலும் இல்லாத அளவுக்கு சுமார் நான்கு கோடி மக்கள் வாழும் நகரம் டோக்கியோ. அதுமட்டுமல்ல. உலகிலேயே மக்களின் சராசரி வருமானம் அதிகம் உள்ள நகரம். மிக உயர்ந்த வாழ்க்கைத் தரம் உடைய நகரம்.
 கானோன் ஆலயம்: கி.பி. 650-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம்தான் டோக்கியோவின் பழமையான ஆலயம். இதுபற்றி ஓர் அதிசயமான செய்தி உண்டு. மீனவர்கள் சிலர் சுமிதா நதியில் மீன் பிடித்தபோது, அவர்கள் வலையில் இந்த தேவி அகப்பட்டுள்ளாள். எத்தனை முறை அதை நதியில் விட்டாலும் மீண்டும் மீண்டும் சிலை வெளியே வரவே அவர்கள் தேவிக்கு அங்கேயே ஆலயம் அமைத்து வழிபடத் துவங்கினர்.
 ஆலயம் செல்லும் வழியில் உள்ள அங்காடியில் ஜப்பானிய கலைப் பொருள்களை வாங்கலாம். ஜப்பானிய பாரம்பரிய உணவு வகைகளை உண்டு மகிழலாம். அங்காடியைக் கடந்து சென்றால் ஆலயத்தின் மையக் கட்டடத்தையும், ஐந்து அடுக்கிலான பகோடா கட்டடத்தையும் காணலாம். இங்கு ஏராளமான புறாக்கள் வாழ்கின்றன. அவை கடவுளின் தூதர்களாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடம் இது.
 மெய்ஜி ஆலயம்: 1868-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மெய்ஜி மன்னர் காலத்தில் ஜப்பான் தொழில் துறையிலும் நவீனமயமாக்குதலிலும் பெரும் வளர்ச்சி கண்டது. மெய்ஜி மன்னர் 1912-ஆம் ஆண்டில் காலமானார். ஜப்பானிய வழக்கப்படி அவரையும் அவரது துணைவியாரையும் தெய்வமாக்கி மெய்ஜி ஆலயத்தில் வழிபடுகிறார்கள். 1920-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டாம் உலகப் போரில் முற்றிலும் சேதமடைந்து மீண்டும் கட்டப்பட்டது.
 யாசுகுனி ஆலயம்: ஜப்பானிய நாட்டின் அமைதிக்காக பல போர்களில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை ஈந்த லட்சக்கணக்கான வீரர்களுக்கான நினைவு ஆலயம். யாசுகினி என்றால் "அமைதியான நாடு' என்று பொருள். 1869-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் சுமார் இரண்டரை லட்சம் வீரர்கள் தெய்வங்களாக வழிபடப்படுகிறார்கள். அவர்களின் பெயர்கள், பிறந்த இடம், ஈடுபட்ட போர், மறைந்த இடம் ஆகியவையும் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
 மன்னர் அரண்மனை: அரச குடும்பத்தினரை வணங்குவதை ஒரு கடமையாக மதிப்பது ஜப்பானியரின் பண்பு. மன்னரின் அரண்மனையைக் கடந்து செல்லும்போது இன்றும் ஜப்பானியர் வணக்கம் செலுத்திவிட்டே செல்கின்றனர். அகழிகளால் சூழப்பட்டு, பூங்காக்களால் அழகு மிளிரும் அரண்மனை அரச குடும்பத்தினரின் இல்லமாகப் பயன்படுகிறது. அதன் உள்ளே செல்ல புகழ்பெற்ற நிஜு பாஷி என்று அழைக்கப்படும் இரட்டைப் பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். அரண்மனைக்குள் மருத்துவமனை, டென்னிஸ் மைதானம், தோட்டங்கள், பூங்காக்கள் , விளைநிலங்கள், குதிரை லாயங்கள், கல்லறை ஆகியவை உள்ளன. அரண்மனையின் சில பகுதிகள் மக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
 டோக்கியோ டவர்: 333 மீட்டர் உயரத்துடன் நான்காயிரம் டன் எடையில் டோக்கியோ நகரின் மையப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இக்கோபுரம் உலகின் உயரமான கோபுரமாகக் கருதப்படுகிறது. இரவு 11 மணி வரை 176 பிரகாச விளக்குகள் பிரகாசிக்க வைக்கின்றன. தொலைக்காட்சி மற்றும் வானொலி தொடர்பு சாதனமாகப் பயன்படும் இந்தக் கோபுரம் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் இடமாகும்.
 ஹஷிகோ சிலை: டோக்கியோவிலுள்ள ஷிபுயா புகைவண்டி நிலையத்தின் முன் அமைந்துள்ளது இந்தச் சிலை! இது ஒரு நாயின் சிலை. இந்த நாய் தினமும் தனது உரிமையாளருக்காகக் காத்திருக்குமாம். அவரது மரணத்திற்குப் பின் பல வருடங்கள் இங்கு காத்திருந்து அங்கேயே மடிந்த அந்த நன்றியுள்ள நாயைப் போற்றும் வகையில் அந்த நாயான ஹசிகோவின் சிலை இங்கு வடிவமைக்கப்பட்டுக் காட்சியளிக்கிறது.
 யூனோ பூங்கா: 1873-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தப் பூங்காவினுள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல இடங்கள் உள்ளன. ஜப்பானின் முதல் உயிரியல் பூங்கா இங்குதான் உள்ளது.
 மீன் சந்தை: உலகின் மிகப்பெரிய மீன் சந்தை சுகிஜி மீன் சந்தையாகும். இதில் நாள்தோறும் இரண்டாயிரம் டன் மீன்கள் ஏலத்தில் விடப்படுகின்றன. டோக்கியோவிற்கு வரும் பயணிகள் இந்தச் சந்தையையும் ஏலத்தையும் கண்டு வியக்கின்றனர்.
 சோனி நிறுவனம்: உலகின் முன்னணி மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சோனி. இதனுடைய தலைமை நிறுவனம் பொது மக்கள் பார்வைக்காக நாள்தோறும் திறந்து வைக்கப்படுகிறது. இந்நிறுவனம் பற்றி அறிந்து கொள்ளலாம். அத்துடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள மிகப்பிரம்மாண்டமான திரைகளில் திரைப்படங்களையோ, விளையாட்டுப் போட்டிகளையோ கண்டு களிக்கலாம். அதனால் தினமும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
 1920-ஆம் ஆண்டு டோக்கியோ மிகப்பெரிய பூகம்பத்தாலும், 1945-இல் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் மிகப்பெரிய பேரழிவையும் சந்தித்தது. டோக்கியோ நகரமே தரைமட்டமானதுடன் லட்சக்கணக்கான மக்களும் உயிரிழந்தனர். அதன் பின் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளாகவே மீண்டும் சர்வதேச தரத்தில் முழுமையாக இது உருவாவதற்குக் காரணம் ஜப்பான் மக்களின் கடுமையான உழைப்பே!

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.