ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஓவியத் தாரகை!

இன்றைய மாணவ சமுதாயம் கல்வி, விளையாட்டு, கண்டுபிடிப்புகள் என அனைத்துத் துறைகளிலும் அடுக்கடுக்கான சாதனைகளைப் படைத்து

News image
Updated On :20 செப்டம்பர் 2014, 6:06 am

இன்றைய மாணவ சமுதாயம் கல்வி, விளையாட்டு, கண்டுபிடிப்புகள் என அனைத்துத் துறைகளிலும் அடுக்கடுக்கான சாதனைகளைப் படைத்து வருகிறது. ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பதற்கு மாணவர்கள் சிறந்த உதாரணம். 

இதற்குப் பொருத்தமாக விளங்குகிறார் சென்னை அரும்பாக்கம் எஸ்.எம்.ஜே.வி. பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி எம்.எஸ்.ஸ்வேதா.

இவரது தந்தை மகாதேவன் தொழிலதிபர். தாய் சுதா மகாதேவன் கர்நாடக இசைப் பாடகி.

தனது 3-ஆவது வயதில் ஓவியம் வரையத் தொடங்கிய ஸ்வேதா, பள்ளிகள் அளவில் நடைபெறும் போட்டிகள் முதல் மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான போட்டிகளில் இதுவரை 120-க்கும் மேற்பட்ட பரிசுகளை அள்ளிக் குவித்துள்ளார்.

இந்த ஓவியத் தாரகை கடந்த 6 ஆண்டுகளாக, தான் வரைந்த ஓவியங்களைத் தொகுத்து, லலிதா அகாதெமி போன்ற சென்னையின் பிரசித்தி பெற்ற அரங்குகளில் ஓவியக் கண்காட்சி கண்காட்சி நடத்தி வருகிறார். இந்தக் கண்காட்சியில் ஸ்வேதாவின் ஓவியங்களுடன், அவரிடம் ஓவியம் கற்று வரும் மாணவர்களின் ஓவியங்களும் இடம்பெறுகின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு ஃபவுண்டேஷன் கேலரியில் இவரது 7-ஆவது ஆண்டு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில் அவர் வரைந்த இயற்கை, விலங்குகள், பறவைகள், கடவுள்களின் உருவம் என விதவிதமான ஓவியங்கள், அரங்கத்தை அழகுக்கூடமாக மாற்றியிருந்தன.

மாணவி ஸ்வேதாவிடம் கேள்விகள் கேட்டால் பதில்கள் பளீரென்று வந்து விழுகின்றன.

ஓவியம் வரையும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

சின்ன வயதில் வெள்ளைத்தாளில் ஏதாவது கிறுக்கிக் கொண்டிருப்பேன். அதைப் பார்த்த என் தந்தை கைதட்டி என்னை உற்சாகப்படுத்துவார். தொடக்கத்தில் எல்லாக் குழந்தைகளையும் போல் பூக்கள், விலங்குகள், வீடு என எளிதான ஓவியங்களையே வரைந்தேன். பின்னர் லாவண்யா என்ற ஆசிரியர் எனக்கு ஓவியத்தில் உள்ள நுணுக்கங்கள் குறித்து கற்றுக் கொடுத்தார்.

உங்கள் திறமைக்கு இதுவரை கிடைத்த அங்கீகாரம்..?

2007-இல் ஐ.டி.சி. நிறுவனம் சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் விண்வெளி குறித்த ஓவியம் வரைந்தேன். அதில் சிறந்த ஓவியருக்கான விருது பெற்றேன். மேலும் என்னுடைய ஓவியத்துக்கு லண்டன் பத்திரிகை ஒன்று 20 பவுண்டுகள் பரிசாக வழங்கியது. தமிழ்நாடு வனத்துறை நடத்திய மாநில, மாவட்ட அளவிலான போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளேன். மதுரை பாரத் யுவகேந்திரா அறக்கட்டளை சார்பில் யுவஸ்ரீகலாபாரதி விருது பெற்றுள்ளேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எஸ்.வி.சேகர் இயக்கத்தில் அவரது மகன் அஸ்வின் சேகர் நடித்த "நினைவில் நின்றவள்' படம் வெளியானது. படத்தின் தொடக்கத்தில் வரும் பாடல் காட்சியில் நான் வரைந்த 50-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

இளம் வயதிலேயே ஓவியக் கண்காட்சி நடத்துவது குறித்து...

ஆர்வம் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதே என் தாழ்மையான கருத்து.

நமது ஓவியங்களைப் பார்ப்பவர்கள் மனதில், நாமும் இதுபோல் ஓவியத்தை வரைய வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே கண்காட்சி நடத்தி வருகிறேன்.

எனது முதல் கண்காட்சி 2008-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதனை நடிகரும், சிறந்த ஓவியருமாகிய நடிகர் சிவகுமார் தொடங்கி வைத்தார். அதையடுத்து அடுத்தடுத்த ஆண்டுகளில் கிரேஸி மோகன், ஓவியர் ஜெயராஜ், நடிகர் பொன்வண்ணன் என பிரபலங்கள் எனது கண்காட்சிகளைத் தொடங்கி வைத்தனர். இதற்கு மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

எந்த வகையான ஓவியம் வரைவது மிகவும் கடினம்?

வண்ண பென்சில்கள், கிரையான், ஸ்கெட்ச், நீரோவியம் (வாட்டர் கலர்), போஸ்டர் கலர். ஆயில் பெயிண்ட், அக்ரிலிக் என அனைத்து வகையான ஓவியங்களும் வரைந்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரை நீரோவியம் வரையும்போது வழக்கத்தைக் காட்டிலும் தூரிகையை சற்று கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டும். ஏனெனில் ஓவியத்தில் ஏதாவது ஓர் இடத்தில் தவறு செய்து விட்டால் திருத்துவது கடினம்.

நீங்கள் நடத்தி வரும் ஓவியப் பயிற்சி வகுப்புகள் பற்றி...

வார விடுமுறைகளை 4 பிரிவுகளாகப் பிரித்து ஓவியப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன். தற்போது என்னிடம் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியம் கற்று வருகிறார்கள். அவர்களின் திறமையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வரைந்த ஓவியங்களையும் கண்காட்சியில் இடம்பெறச் செய்கிறேன்.

ஓவியப் பயிற்சி வகுப்புகள் எடுத்தபோதும் படிப்பதற்கு நேரம் கிடைக்கிறது. அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வருகிறேன். சதுரங்கம், பூப்பந்து போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளேன்.

எதிர்காலத்தில் எந்தத் துறையில் சாதிக்க விருப்பம்?

ஓவியக்கலையில் சாதிக்கவே விரும்புகிறேன். வருங்காலத்தில் பெரிய அளவில் ஓவியப் பயிற்சி வகுப்புகள் நடத்தி என்னால் முடிந்த வரை மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்திலும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவும் ஓவியம் கற்றுத் தருவேன்.

பல்வேறு போட்டிகளில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சமூக விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளேன். நான் வரையப் பயன்படுத்தும் தூரிகைக்கு சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி இருக்கிறது என நம்புகிறேன். சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக எனது ஓவியம் நிச்சயம் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.