காக்கைச் சிறகினிலே...

அலைந்து திரிந்த ஒரு குயில் முட்டையிடுவதற்காக இடம் பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு கூடு கட்டத் தெரியாது. முட்டையிடும் காலம் வரும்போது எந்த மரத்தில் கூடு இருக்கிறதோ அங்கு சென்று அந்தக் கூட்டில் முட்டையிட்டுவிட்டுச் சென்றுவிடுவது வழக்கம்.

அலைந்து திரிந்த ஒரு குயில் முட்டையிடுவதற்காக இடம் பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு கூடு கட்டத் தெரியாது. முட்டையிடும் காலம் வரும்போது எந்த மரத்தில் கூடு இருக்கிறதோ அங்கு சென்று அந்தக் கூட்டில் முட்டையிட்டுவிட்டுச் சென்றுவிடுவது வழக்கம்.

கூடு எங்கேயாவது தென்படுகிறதா என்று அங்குமிங்கும் கண்களைச் சுழலவிட்டுப் பார்த்தது. சற்று மேலே கிளையொன்றில் ஒரு கூடு கண்ணில்பட்டது! அது காகம் கட்டிய கூடு.

மெல்ல அங்கே சென்றது. கூட்டில் பறவையில்லை. சில முட்டைகள் மட்டும் இருந்தன. இதுதான் நல்ல சமயம்! இதை நழுவவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காதென்று எண்ணிய அந்தக் குயில், அக்கூட்டில் மெல்ல அமர்ந்து இரண்டு முட்டைகளை இட்டுவிட்டு பறந்து சென்றது!

அடுத்து சிறிது நேரம் கழித்து காகம் வந்தது. அம்முட்டைகளின் மீதமர்ந்து வழக்கம்போல் அடைகாத்தது.

அவ்வப்போது அந்தக் குயில் வந்து, முட்டை இருக்கிறதா, காகம் அடைகாக்கிறதா, குஞ்சு வெளிவந்துவிட்டதா என அடிக்கடி கவனித்துக்கொண்டு செல்லும்.

நாட்கள் சென்றன! முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்து தன் செந்நிற வாய்திறந்து கீச்... கீச்.... என கத்தின!

அப்போதுதான் பிறந்தது காகத்திற்கு என்பதால் தன் குஞ்சுக்கும் குயில் குஞ்சுக்கும் வேறுபாடு தெரியவில்லை! வெளியில் சென்று இரை எடுத்து வந்து நான்கு குஞ்சுகளுக்கும் உணவூட்டியது காகம்.

ஒருநாள் பலத்த காற்றடித்தது. மழையும் ஆரம்பித்தது. மரக்கிளைகள் முறிந்து விடுமோ என குஞ்சுகள் அச்சப்பட்டன. குஞ்சுகள் எப்படியிருக்கின்றனவோ தெரியவில்லையே என பயந்தபடி குயில் வந்து கூட்டைப் பார்த்தது.

நான்கும் மழையில் நனைந்தவண்ணம் குளிர் தாங்க முடியாமல் நடுங்கியபடியும் பசியினால் கத்தியபடியும் இருந்தன. வெளியில் சென்ற காகம் இன்னமும் வரவில்லை என்பதையறிந்த குயில், எங்கோ பறந்து சென்று புழு, பூச்சிகளைப் பிடித்து வந்து அவைகளுக்குக் கொடுத்து அதன் பசியைப் போக்கியது. மேலும் மழை அவைகளின் மீது படாமல் தன் சிறகுகளை விரித்து பாதுகாப்பாய் இருந்தது. நான்கு குஞ்சுகளும் துன்பம் நீங்கி மகிழ்ச்சியடைந்தன.

நேரம் ஆக ஆக காற்றும் மழையும் நின்றன. காகம் வந்தது. தூரத்தில் காகம் வரும்போதே பார்த்துவிட்ட குயில், உடனே கூட்டைவிட்டு பறந்து வேறிடத்தில் அமர்ந்துகொண்டது.

கூட்டிற்கு வந்த காகம், "நான் மழையில் மாட்டிக் கொண்டேன். பாவம் நீங்கள் பசியோடு இருந்திருப்பீர்கள். மேலும் காற்றும் மழையும் கண்டு பயந்து போயிருப்பீர்கள்' என்றது.

"இல்லை அம்மா, எங்களுக்குப் பசியுமில்லை நாங்கள் பயப்படவுமில்லை. நாங்கள் இரையுண்டு பசியாறிவிட்டோம்' என்றது காகத்தின் குஞ்சு ஒன்று.

உடனே மகிழ்ச்சி தாளாமல், "ஆமாம். எங்கள் அம்மாதான் கொண்டுவந்து கொடுத்தார்கள்...' என்றது குயில் குஞ்சு.

குரலைக் கேட்டதும் காகம் அந்த இரண்டு குஞ்சுகளையும் பார்த்தது. இன்று இந்தக் குஞ்சுகளின் தோற்றமும் குரலும் வித்தியாசமாக இருப்பதாகப்பட்டது காகத்திற்கு! உற்றுப் பார்த்தது! சந்தேகப்பட்டது! இவைகள் இரண்டும் தன் குஞ்சுகள் இல்லை என்பதை நன்றாக உணர்ந்த காகத்திற்குக் கோபமேற்பட்டது.

"யார் நீங்கள்? இங்கே எப்படி வந்தீர்கள்? இனி இவ்விடத்தில் ஒரு நிமிடமும் இருக்கக் கூடாது..' என்று கத்தியபடி அந்த இரண்டு குயில் குஞ்சுகளையும் கொத்தி கீழே தள்ள பார்த்தது, காகம்.

அப்போது -

"அம்மா... அம்மா... அவைகளை ஒன்றும் செய்யாதீர்கள். நீங்கள் வருவதற்கு முன் நாங்கள் பசியோடும் பயந்தபடியும் குளிரில் நடுங்கிக்கொண்டும் இருந்தோம். அந்தச் சமயம் இதனுடைய அம்மா குயில் வந்தது. எங்கள் நான்கு பேருக்கும் உணவு ஊட்டிவிட்டது. மழை எங்கள் மீது படாமல் சிறகுகளை விரித்து எங்களைக் காத்தது. எங்களைப்போல் அவைகளும் சிறு குஞ்சுகள்தானே. அதை விரட்டினால் எங்கே போகும்? தயவுசெய்து எங்களைப்போல் அவைகளையும் பாருங்கள். சிறகு முளைத்ததும் எங்களைப் போலவே பறந்து போய்விடப் போகிறது! அதுவரை நாங்கள் நால்வரும் ஒரே கூட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறோம் அம்மா...!' என்று காகத்தின் குஞ்சுகள் இரண்டும் கேட்டுக் கொண்டன.

காகம் தங்களை கொத்தி விரட்டி விடுமோ என பயந்தபடி இருந்தன குயில் குஞ்சுகள் இரண்டும்.

"பயப்படாதீர்கள். நீங்களும் என் பிள்ளைகள் போன்றுதான். சிறகு முளைத்து பறக்கும்வரை இங்கேயே இருங்கள்' என்றது காகம்.

இதைக் கேட்டதும் நான்கும் சந்தோஷத்தில் கத்தின. மேல் கிளையில் அமர்ந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த அம்மா குயிலும் மகிழ்ச்சியடைந்தது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com