ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கருவூலம்: களக்காடு, முண்டன்துறை பு-கள் காப்பகம்!

உலகிலேயே வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக சட்டம் இயற்றிய முதல் நாடு இந்தியாதான்!!

News image
Updated On :28 ஆகஸ்ட் 2015, 2:24 pm

உலகிலேயே வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக சட்டம் இயற்றிய முதல் நாடு இந்தியாதான்!!

1887இல் இந்தியாவில் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் உருவாயிற்று! இதனால் தற்போது இந்தியாவின் வனப்பகுதிகளில் சுமார் 60 சதவீதம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாறியுள்ளது. இந்தப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி மனிதர்கள் நடமாடுவது மற்றும் மரம் வெட்டுவது சட்டப்படி குற்றமாகும்.

ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரம் வன உயிரினப் பாதுகாப்பு வாரமாகக் கொண்டாடப்படுகிறது!

இயற்கை சமநிலை மாறுபடாதிருக்க வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டியது மிக அவசியமாகும்! மேலும் மரங்கள் மற்றும் தாவரங்களின் பெருக்கத்திற்கும், தட்பவெப்ப நிலை சமன்பாட்டிற்கும் காடுகள் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே வனங்களும், வனவிலங்குகளும் தொழிற்புரட்சி, விஞ்ஞான முன்னேற்றம், மற்றும் மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்ட பல காரணங்களினால் வேகமாக அழியத் தொடங்கியது!

இதனால் 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் வனப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டது! பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது!

அப்படி வேகமாக அழிவடைந்த மிருகங்களில் இந்திய தேசிய விலங்காகிய புலி இனமும் அடங்கும்! 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் புலிகள் இருந்தன! ஆனால் நூற்றாண்டின் முடிவில் உலகிலேயே 5000 முதல் 7500 க்குள் தான் புலிகளின் எண்ணிக்கை இருந்தது! புலிகளின் எண்ணிக்கை குறைந்தால் தாவரம் உண்ணும் விலங்குகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி வனங்கள் அழிந்துவிடும்!

தட்பவெப்பநிலையும் இயற்கை சமன்பாடும் பாதிப்படையும்!

ஆகையால் புலிகளின் பாதுகாப்பிற்காக 1973இல் "ப்ராஜக்ட் டைகர்' (PROJECT TIGER) என்ற திட்டம் ஏற்படுத்தப்பட்டு, இந்தியா முழுவதும் புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பு செயல்திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டது!

தமிழகத்தில் நான்கு இடங்களில் புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவை,

  • நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம்

  • கோயம்புத்தூரில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம்

  • ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சதி புலிகள் காப்பகம்

  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம்.

இவை அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவுகளில் அமைந்துள்ளது

களக்காடு, முண்டன்துறை புலிகள் காப்பகம் இந்தியாவின் 17ஆவது காப்பகமாகும். இங்கு புலி, சிறுத்தை, மிளா, யானை, சிங்கவால் குரங்கு, காட்டுப் பூனை, காட்டெருமை, காட்டுப் பன்றி, கடம்பை மான், புள்ளிமான், நரிகள், பலவகையான குரங்குகள் உள்ளிட்ட மிருகங்கள் உள்ளன. இங்குள்ள சிங்கவால் குரங்கு மிகவும் அபூர்வமானது!

உலகில் வேறெங்கும் இல்லாத எண்ணற்ற தாவர இனங்கள் இங்கு உள்ளது. மேலும் தேக்கு சந்தனம், சால் போன்ற வணிகரீதியிலான மதிப்பு வாய்ந்த மரங்களும் உள்ளது. பலவகையான ஊர்வன வகைகளும், பறவை இனங்களும், பூச்சி இனங்களும் இங்கு காணப்படுகிறது!

ஆரம்பத்தில் களக்காடு புலிகள் சரணாலயம் 251 ச.கி.மீ பரப்பளவுடனும், முண்டன்துறை புலிகள் சரணாலயம் 567 ச.கி.மீ பரப்பளவுடனும் ஏற்படுத்தப்பட்டது. 1988ஆம் ஆண்டில் இந்த இரு சரணாலயங்களும் ஒன்றிணைக்கப்பட்டு இக்காப்பகம் உண்டாக்கப்பட்டது! பின்னர் இக்காப்பகத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தினை ஒட்டியுள்ள வீரப்புலி, கீழமலை ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்களிலுள்ள 77 ச.கி.மீ இடம் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது 895 ச.கி.மீ பரப்பளவில் உள்ளது!

இவ்வனப்பகுதியின் வழியாகத்தான் தாமிரபரணி நதியும், அதன் கினை ஆறுகளும் வருகின்றன. இக்காப்பக பகுதிக்குள்தான் திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான ஆதாரமாக விளங்கும் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, ராமநதி அணைகள் உள்ளன,

இக்காப்பகப் பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்த மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அருவி, செங்கல்தேரி, ஆகியவை உள்ளன. இவ்வருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருக்கும்.

ஒவ்வொரு ஆடி அமாவாசையின் போதும் சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் கூடும் புகழ் பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், மற்றும் பல புண்ணியத்தலங்கள் இஙுகு உள்ளன.

மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட பெரிய தேயிலைத் தோட்டங்கள் இங்கு அமைந்துள்ளன!

இந்த வனப்பகுதிக்குள் "குதிரை மூக்கு' என்ற இடம் உள்ளது. இங்கிருந்து வனப்பகுதியின் இயற்கை அழகினை நன்கு காணமுடியும்!

பல்வகை உயிரினங்கள் உள்ள இடங்களாக உலகளவில் 18 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் இக்காப்பகமும் ஒன்று!

1995இல் உலகவங்கியின் உதவியோடு, "சூழல் மேம்பாட்டுத் திட்டம்' தொடங்கப்பட்டு வனமும், உயிரினங்களும் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன! கிராம வனக் குழுக்கள் அமைக்கப்பட்டு கட்டுப்பாடான வன மேலாண்மை செயல்படுத்தப்படுகிறது!

மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில் (BEST COEXISTENCE AND BUFFER ZONE MANAGEMENT) சிறப்பாகப் பணி ஆற்றியதற்காக இக்காப்பகத்திற்கு "தேசிய புலிகள் ஆணையத்தின் (NATIONAL CONSERVATION AUTHORITY - NTCA -) சிறந்த விருது கிடைத்துள்ளது!

2006ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1411 புலிகள் இருந்தன. இவற்றில் தமிழகத்தின் பங்கு 76 புலிகள் ஆகும். 2014ஆம் கணக்கெடுப்பின்படி புலிகளின் எண்ணிக்கை இந்திய அளவில் 2226! இதில் தமிழகத்தின் பங்களிப்பு 229 ஆகும்.

கால்தடம் மற்றும் கழிவுகள் மூலம் இந்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது! வனத்தின் பல பகுதிகளில் கண்காணிப்புக் காமிராவும பொருத்தப்படுகிறது. இத்தடயங்கள் பெங்களூருவில் உள்ள வன விலங்கு ஆராய்ச்சி நிலையத்தில் ஆராயப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 29ஆம் தேதி உலக புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இக்காப்பக பகுதி திருநெல்வேலி மாநகரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது. வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று உள்ளே செல்லலாம். காட்டுக்குள் தங்குவதற்கு வனத்துறை விருந்தினர் மாளிகை உள்ளது. மேலும் அருகில் உள்ள அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் உள்ளது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.