கதைப்பாடல்: மழையில் ஒரு நண்பன்!
கடலூர் வெள்ளக் கொடுமையினைகாட்சிப் பெட்டியில் பார்த்ததுமே - புதுவை


கடலூர் வெள்ளக் கொடுமையினை
காட்சிப் பெட்டியில் பார்த்ததுமே - புதுவை
கண்ணன் தனது நண்பனையே
எண்ணிக் கவலை அடைந்தானே!
குமரன் என்பது அவன் பெயராம் - பனையடிக்
குப்பம் பகுதியில் அவன் வாழ்ந்தான்!
அமரவும் நிற்கவும் இடமின்றி
அவனது வீட்டில் முழுதும் நீர்!
உணவுப் பொருட்கள் உடையெல்லாம்
ஒன்றும் வீட்டில் மீதமில்லை!
தினமும் படித்த நூலெல்லாம்
நனைந்தே மிதந்தன கண்ணெதிரே!
கண்ணன் செல்லிடப் பேசியிலே
நண்பன் வீட்டு நிலை அறிந்தான்!
எண்ணம் எல்லாம் அங்கேயே
இயன்றதைச் செய்ய முடிவெடுத்தான்!
தந்தை தாயிடம் நிலை உரைத்தான்!
தனயன் சொன்னதைக் கேட்டவுடன்
சிந்தை இரங்கிப் புறப்பட்டார்
சிந்தனை எல்லாம் அவர் நலனே!
காப்பிடம் ஒன்றில் இருந்தவரை
கண்டே உணவு உடை அளித்தார்!
"கூப்பிடும் குரலுக்கு வந்திடுவோம்
குறைகள் தீரத் துணையிருப்போம்!'
என்றே அன்பைப் பொழிந்தார்கள் - தம்
இல்லம் அழைத்து வந்தார்கள்!
"இயல்பாய் நிலைமை மாறும்வரை
இங்கே தங்குக' என்றார்கள்!
கண்ணன் புத்தகக் கடை சென்றான்
கலங்கிய குமரனை மகிழ வைத்தான்!
பாட நூல்கள் குறிப்பேடு - அவன்
பார்த்ததும் பசியும் மறந்துவிட்டான்!
மனிதத் தன்மையின் மாண்புதனை - அந்த
மழையில் கண்டனர், துன்புற்றோர்!
அன்பின் மழையில் நனைந்ததனால்
அவர்கள் பெற்றனர் நம்பிக்கை!
உடுக்கை இழந்தவன் கைபோல
இடுக்கண் களைந்த நண்பன் நீ
இதனை என்றும் மறவேன் நான்!
என்றான் குமரன்; கண்ணில் நீர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...