சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கருவூலம்: ஆம்புலன்ஸின் வரலாறு!

சைரன் ஒலியுடன் ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாகச் செல்வதைப் பார்த்தாலே நமக்கு சற்று பிதி ஏற்படும்.

News image
Updated On :25 டிசம்பர் 2015, 12:23 pm

சைரன் ஒலியுடன் ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாகச் செல்வதைப் பார்த்தாலே நமக்கு சற்று பிதி ஏற்படும். யாரோ ஒருவர் உயிருக்காகப் போராடுகிறார். விபத்தோ அல்லது உடல் நலக் குறைவோ இருக்கக் கூடும். அதனால்தான் இந்த அவசர வாகனம் விரைகிறது என்று யூகித்துக் கொள்வோம்.ஆபத்தான நேரத்தில் பாதிக்கப்பட்டோரைக் காப்பாற்ற உயிர் காப்பவனாக அரவணைத்து அவசர கதியில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வாகனம்தான் ஆம்புலனஸ். "ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தாலும் பேஷண்டைக் காப்பாற்றியிருக்க முடியாது..., சரியான நேரத்துக்குள்ளே அட்மிட் பண்ணிட்டீங்க' என்று மருத்துவர்கள் கூறுவதை பல இடங்களில் கேட்டிருப்பீர்கள். நோயாளிகளை சரியான சமயத்தில் மருத்துவமனைகளில் சேர்ப்பதில் ஆம்புலன்ஸின் பங்கு மகத்தானது. இந்த அவசர வாகனம் எந்த நேரத்தில எங்கு உருவானது என்று தெரிந்து கொள்வோம். 11ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் சிலுவைப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் ஆன்டிகுவா, மற்றும் பார்புடா நாட்டின் தலைநகரான செயின்ட் ஜானின் பணியாளர்களுக்கு அரேபிய மற்றும் கிரேக்க மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளிப்பது பற்றி அறிவுறுத்தினர்.

செயின்ட் ஜான் ஊழியர்கள், முதல் அவசரகாலப் பணியாளர்களாக செயல்பட்டனர். போர்க்களத்தில் காயம் பட்ட இருதரப்பு வீரர்களுக்கும் பாரபட்சமின்றி சிகிச்சை அளித்தனர். அடுத்த கட்ட சிகிச்சைக்காக பாதிக்கப்பட்டோரை அருகே அமைக்கப் பட்டிருந்த மருத்துவ முகாம்களுக்கு விரைந்து கொண்டு சேர்த்தனர். இப்படியாக பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக விரைந்து கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம்தான் ஆம்புலன்ஸாக உருவானது. இந்த சேவை செயின்ட் ஜான் ஊழியர்களிடமிருந்து தொடங்கியது. அதே நேரம் போர்க்களப் படைவீரர்களும் அந்த சேவையில் பங்கெடுத்துக் கொண்டனர். போரில் காயம் பட்ட மற்ற வீரர்களின் உடலை மருத்துவ சிகிச்சைக்காக சுமந்து செல்லும் படைவீரர்களை ஊக்குவிக்கும் விதத்தில் வெகுமதிகள் வழங்கப்பட்டன.

பிரெஞ்சு நாட்டின் பெரும் ராணுவத்தின் தலைமை மருத்துவர் "பாரோன் டொமினிக் லாரே' என்பவர்தான் 1792ஆம் ஆண்டின் முதல் அதிகாரபூர்வ ராணுவ மருத்துவப் படையை உருவாக்கினார். அதன்படி பயிற்சி பெற்ற சேவகர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியே சென்று, போர்க்களத்தில பாதிக்கப்பட்டு இருப்போருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அத்துடன் அவர்களை அடுத்தகட்ட சிகிச்சைக்காக ஸ்ட்ரெட்சரில் வைத்து குதிரைவண்டி போன்ற வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைகளுக்குக் கொண்டு சேர்த்தனர்.

இவைதான் அன்றைய ஆம்புலன்ஸ் பணியாகும்.

மோட்டார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 1950ஆம் ஆண்டு கொரியப்போர் நடந்து கொண்டிருந்தபோது, அமெரிக்கா ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது.

குளிர் சாதனக் கருவியைக் கண்டுபிடித்தவர்!

"வில்ஸ் ஹாவிலேன்ட் கேரியர்' என்ற அமெரிக்கர்தான் குளிர்சாதனக் கருவியைக் கண்டுபிடித்தவர்!

1901ஆம் ஆண்டில் கேரியர், நியூயார்க் நகரிலுள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டே அவர் முதல் ஏ.சி. இயந்திரத்தைக் உருவாக்கி சாதனை புரிந்தார்.

கேரியர் எம்.இ. பட்டம் பெற்றதும் "ப்ரூக்ளின் ப்ரிண்டிங் ப்ளான்ட்' என்ற இடத்தில் வேலைக்குச் சென்றார்.

அச்சகத்துக்குள் இயந்திரம் ஓடும்போது வெப்பம் கூடுவதால் காகிதத்தில் மிகச் சரியாக அச்சாவதிலும் வண்ணங்கள் சரியாக அமைவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாகத்தான் கேரியர் ஏ.சி.யை உருவாக்கினார். புதிய குளிர் சாதனம் அறைக்குள் தட்பவெப்ப நிலையை மாறாமல் வைத்திருக்க உதவியது. மேலும் வண்ணங்களும் காகிதத்தில் மிகச் சரியாக பதிவானது!

குளிர் சாதனத்தை உருவாக்கி வடிவமைத்ததற்காக 1906ஆம் ஆண்டில் முதல் காப்புரிமை கேரியருக்கு வழங்கப்பட்டது. இதுவே முதல் காப்புரிமை! "ஏ.சி. யின் தந்தை' என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார் கேரியர். ஏ.சி. என்ற சொல்லை முதல் முதலில் உருவாக்கியவர் ஸ்டூவர்ட் எச்.கிரேமர் என்ற ஒரு டெக்ஸ்டைல் என்ஜினியர்தான்! ஆலையில் காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்கச் செய்யும் கருவி ஒன்றைக் கண்டறிந்து அதற்காகக் காப்புரிமை கேட்டு அளித்த விண்ணப்பத்தில் கிரேமர் இந்த "ஏர் கண்டிஷனிங்' என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

1911ஆம் ஆண்டில் கேரியர் தனது ஏ.சி. யின் அடிப்படை சூத்திரத்தை அமெரிக்க மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் சங்கத்தினருக்கு வெளிப்படுத்தினார். அந்த சூத்திரம்தான் எல்லா ஏ.சி. தொழில் துறையிலும் அடிப்படை சூத்திரமாக இருந்து வருகிறது.

கேரியரின் இந்த ஏ.சி. கண்டுபிடிப்பின் உதவியுடன் படச்சுருள், புகையிலை, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மருந்துகள், டெக்ஸ்டைல் போன்றவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செழித்து வளர்ந்தன.

கேரியர் தன்னுடன் என்ஜினியர்கள் ஆறுபேரை இணைத்து 1915ஆம் ஆண்டில் "கேரியர் இன்ஜினயரிங் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்தை நிறுவினார். 35ஆயிரம் டாலர் முதலுடன் தொடங்கப்பட்ட அந்தக் கம்பெனியின் 1995ஆம் ஆண்டு விற்பனை மட்டும் 50கோடி டாலர் என்று ஏற்றம் பெற்றது.

1921ஆம் ஆண்டில் கேரியர், "சென்ட்ரிஃப்யூகல் ரெப்ரிஜிரேஷன் மெஷினை' உருவாக்கியதற்கான காப்புரிமையை பதிவு செய்தார்.

தொழிற்சாலை தேவையைத் தொடர்ந்து மனிதன் தன் அறைக்குள் வெப்பம் தெரியாமல் "குளுகுளு'வென இருக்க வகை செய்யும் ஏ.சி. இயந்திரம் 1924முதல் நடைமுறைக்கு வந்தது.

அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் டெட்ராய்ட் பகுதியில் உள்ள ஜெ.எல்.ஹட்சன் பல்பொருள் அங்காடியில்தான் முதன் முதலில் கேரியர் சென்ட்ரிஃப்யூகல் குளிர் சாதனங்கள் பொருத்தப்பட்டன. குளுகுளு வசதிக்காகவே அந்த அங்காடியில் வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர்! அங்காடியைத் தொடர்ந்து சினிமா தியேட்டர்கள், நிகழ்ச்சி அரங்குகள், அலுவலக அறைகள், வீடுகள் என ஒவ்வொரு இடங்களும் குளுகுளு வசதி செய்வது படிப்படியாக வளர்ந்தது!

1928ஆம் ஆண்டில் வில்ஸ் ஹாவிலேன்ட் கேரியர் முதல் வீட்டு வசதி குளிர்சாதனமான "வெதர் மேக்கர்' ஐ உருவாக்கினார்.

அறையின் உட்பகுதியைக் குளுமையாக்க உதவும் இயந்திர அமைப்பைக் கண்டறிய முதன் முதலில் வித்திட்டவர் கேரியர்!

அவருடைய கண்டுபிடிப்புதான் முதல் வெற்றிகரமான மற்றும் பாதுகாப்பான இயந்திரமாக விளங்கியது! அதன் அடிப்படையில்தான் நவீன ஏ.சி. தொழில் நுட்பம் வளரத் தொடங்கியது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.