ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கருவூலம்: கலங்கரை விளக்(கு)கம்!

"கலம்' என்னும் சொல் நீரில் மிதக்கும் கப்பல் எனப்பொருள் படும். கலம் கரையை அல்லது துறைமுகத்தை அடைய உதவும் விளக்கு என்பதால் கலங்கரை விளக்கு எனப் பெயர் பெற்றது!

News image
Updated On :11 ஜூலை 2015, 3:02 pm

"கலம்' என்னும் சொல் நீரில் மிதக்கும் கப்பல் எனப்பொருள் படும். கலம் கரையை அல்லது துறைமுகத்தை அடைய உதவும் விளக்கு என்பதால் கலங்கரை விளக்கு எனப் பெயர் பெற்றது!

வெகுகாலத்திற்கு முன்பே மக்கள் கலங்கரை விளக்கினைப் பயன்படுத்தியுள்ளார்கள்!

ஆரம்ப காலத்தில் இரவுப் பொழுதில் கப்பல்களுக்கு நிலப்பகுதியை அடையாளம் காட்டுவதற்கே பயன்பட்டுள்ளது.

தற்காலத்தில் கலங்கரை விளக்குகள் நவீன மயமாக்கப்பட்டு இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் கரையை மற்றும் துறைமுகத்தை அடையாளம் காட்டும் விதமாகவும், கடல் பகுதியில் உள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டவும், ஆபத்துக் காலத்தில் தேவைப்படும் பாதுகாப்பு சாதனங்களுடன் செயல்படுகிறது!

கலங்கரை விளக்கின் ஆரம்பநிலையும் வளர்ச்சியும்!

கி.மு. 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கிரேக்க காவியங்களாகிய "இலியாத்' (ஐகஐஅஈ) மற்றும் ஒடிசி (ஞஈவநநஉவ) நூல்களில் உள்ள சில தகவல்கள் கலங்கரை விளக்கின் பழமையை எடுத்துக் காட்டுகிறது!

முன்காலத்தில் கடற்கரைப் பகுதியில் உள்ள பெரிய பாறைகள் அல்லது மலைகள் மீது விறகுகளை தீயிட்டு எரித்து இரவு நேரத்தில் கடலில் செல்லும் கப்பல் மற்றும் படகுகளுக்கு கடற்கரையினை அடையாளம் காட்டியுள்ளார்கள்.

பின்னர் கடற்கரையிலோ, அல்லது பாறைகள் மீதோ, அல்லது தீவுகளிலோ, செங்கல் அல்லது கற்களைக் கொண்டு பருத்த உயரமான தூண் போன்ற கோபுரங்களை கட்டி அதன் மீது விறகுகளை எரித்து ஒளியை கப்பல்களுக்குக் காட்டினர்!

பிறகு கோபுரத்தின் உட்பகுதியில் மேலே செல்ல படிகள் அமைத்து கட்டிடங்களாக மாற்றினர். இதன் அடிப்பகுதி அதிக பருமனாகவும் மேலே போகப் போக சிறிது குறுகியும் இருந்தது. இதன் மேல் ஒரு பெரிய உலோக சட்டியினை வைத்து அதனுள் விறகுகளை எரித்தும், தீப்பந்தங்களை எரித்தும் கடற்பயணம் செய்யும் கப்பல்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்! கி.பி. 1800வரையிலும் உலகின் பல பகுதிகளிலும் இந்த முறை பழக்கத்தில் இருந்தது.

எகிப்து நாட்டில் கி.மு.280இல் அலெக்சாண்ட்ரியா நகருக்கு அருகில் "ஃபரோஸ்' தீவில் அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கே மிகவும் பழமையானது. 110மீட்டர் உயரம் கொண்ட இது உலக அதிசயங்களில் ஒன்றாகும்! கி.பி.14ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் இடிந்து விட்டது!

கி.பி.1100இல் உலகின் பல பகுதிகளிலும் கடல் பயணங்கள் அதிகரித்ததால் அதிகமான கலங்கரை விளக்குகள் கட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய 1500க்கும் மேற்பட்டவை அந்த காலகட்டத்தில் உலகில் இருந்ததாக அக்காலத்திய பயணக்குறிப்புகள் தெரிவிக்கின்றன!

கி.பி. 1550க்குப்பின் எரிபொருளாக நிலக்கரியைப் பயன்படுத்தினர். கி.பி. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலோக சட்டியில் எண்ணெய் ஊற்றி எரிய வைக்கும் முறை வந்தது!

இதில் முதலில் மீன் எண்ணெயும் பின் தாவர எண்ணெய்களும் எரிபொருளாயின. சுமார் 100ஆண்டு காலத்திற்கு எண்ணெய் எரிபொருளாக உலகின் பல பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது! இந்தக் காலத்தில் விளக்கின் மேற்புறம் மேற்கூரை அமைக்கப்பட்டது! கி.பி. 1700க்குப்பின் கலங்கரைவிளக்கின் தொழில் நுட்பத்தில் பல மாற்றங்கள் வந்தது. விளக்கைச் சுற்றி கண்ணாடிக் கூண்டு அமைத்து கட்டப்பட்டது! சில இடங்களில் மிகப் பெரிய மெழுகுவர்த்திகள் பலவற்றை ஏற்றி வெளிச்சத்தை உருவாக்கியுள்ளார்கள். பெரிய கலங்கரை விளக்குகள் 1820ஆம் ஆண்டில் உலகில் 250 இடங்களில் இருந்தன!

கி.பி. 1900க்குப்பிறகு மண்ணெண்ணெய் வாயுவினால் (யஅடஞமதஐழஉஈ ஓஉதஞநஐசஉ) கலங்கரை விளக்குகள் எரிந்தன! இது தாவர எண்ணெய்யைவிட ஆறு மடங்கு பிரகாசமாக இருந்தது! 1910இல் எரிவாயுவை உலோக உருளைகளில் அடைத்து எரிபொருளாகப் பயன்படுத்தினர்! பின் மின்சார விளக்குகள்,பயன்பாட்டுக்கு வந்தன! தற்போது கான்கிரீட்டினால் கோபுரங்கள் உள்ளன!

விறகு, கரி, எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தியபோது ஒரு கண்காணிப்பாளர் பணியில் இருப்பார். தற்போது பணியாளர்கள் அற்ற கலங்கரை விளக்குகள் தொலைதூர இடங்களில் அமைக்கப்படுகின்றன!

இப்பொழுது பெரும்பாலும் மின்சார விளக்குகளே பயன்படுகிறது! விளக்கின் பிரகாசத்தை அதிகரிப்பதற்கு விசேஷ கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன! சுமார் 2.5மீட்டர் உயரமும் 1.8மீட்டர் விட்டமும் கொண்ட பீப்பாய் வடிவக் கண்ணாடியில் ஒரு பக்கம் கறுப்பு நிறம் பூசப்பட்டு சுழலும் வகையில் இருக்கும். அதனால் விளக்கின் ஒளி விட்டுவிட்டு பிரகாசிக்கும். மேலும் பிரதிபலிக்கும் தகடுகள் (தஉஊகஉஇபஞதந)விளக்குக் கூண்டில் இருக்கும்! விளக்கின் வெளிச்சம் பரவலாக சிதறி விடாமல் ஓர் அடர்ந்த ஒளிக்கற்றை போல் வெளிப்படும்!

சாதாரணமாக இந்த வெளிச்சத்தை 32கி.மீ. தூரத்தில் இருந்து பார்க்க முடியும். இந்த ஒளி வெளிப்பாடானது சூழ்நிலைக்கேற்ப மாறுபடும்! மாலுமிகள் இந்த ஒளி வெளிப்படும் தன்மையைக் கொண்டு சில செய்திகளை குறிப்பால் உணர்ந்து கொள்வார்கள்!

வளர்ந்த நாடுகளில் சமீப காலமாக நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு கடல் பரப்பிலேயே கலங்கரை விளக்கினை அமைக்கிறார்கள்! மிகப் பெரிய அகலமான ஸ்டீல் குழாய்கள் பலவற்றை கடலடி நிலத்தில் செலுத்தி அதன்மீது காற்றினாலும் அலைகளினாலும் பாதிக்கப்படாத உறுதியான கட்டிடத்தை கட்டுகிறார்கள்! இவற்றில் விளக்குக் கூண்டின் மேல்பகுதி மிகப்பெரியதாக சிறியவகை ஹெலிகாப்டர் இறங்கும் வகையில் உள்ளது!

இரவில் விளக்கின் மூலம் அடையாளம் காண்பதுபோல் பகலில் மாலுமிகள் கோபுரத்தின் நிறத்தையும் அமைப்பையும் கொண்டு அடையாளம் காண்கிறார்கள்! தற்போது ரேடியோ அலை மற்றும் ரேடார் மூலம் செய்தி அனுப்பும் வசதிகள் சில கலங்கரை விளக்கில் உள்ளது. இதற்கு கப்பலிலும் தேவையான கருவிகள் இருக்கவேண்டும்.

உள்நாட்டு கலங்கரை விளக்கு

(INLAND LIGHTHOUSES)

பொதுவாக கலங்கரை விளக்குகள் வணிக ரீதியிலான கப்பல் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் அமைக்கப்படுகிறது! அதேபோல் வணிக ரீதியிலான படகு மற்றும் கப்பல் போக்குவரத்து அதிகமுள்ள ஏரி மற்றும் ஆறுகளிலும் இரவில் குறிப்பிட்ட இடத்தை சரியாக அடைவதற்கும் ஆபத்துகளை அறிவுறுத்தவும் கலங்கரை விளக்குகள் அமைக்கப்படுகின்றன!

வட அமெரிக்காவில் "கிரேட் லேக்ஸ்' எனப்படும் ஐந்து பெரிய ஏரிக் கரைகளிலும் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றங்கரையோரமும் கலங்கரை விளக்கு உள்ளது! மேலும் மைனே மாகாணத்தில் 60க்கும் மேற்பட்ட உள்நாட்டு கலங்கரை விளக்குகள் உள்ளது!

விளக்குகள் கடுமையான பனியில் கண்களுக்குப் புலன்படாது! இதுபோன்ற கால நிலையில் ஒளி பாதிக்கப்படுவதுபோல் ஒலி பாதிக்கப்படுவதில்லை! எனவே இதற்காக முன்னர் பெரிய மணி அடிப்பது..., வெடி வெடிப்பது போன்ற முறைகளை பயன்படுத்தினர். தற்போது மிகவும் அழுத்தத்துடன் வேகமாக காற்றை வெளிப்படுத்தி (FOG HORN) பெரும் ஓசை எழுப்புகிறார்கள்! இந்த சத்தம் 12கி.மீ. தூரம் வரை கேட்கும்!

கப்பல் விளக்கு!

கலங்கரை விளக்குகள் அமைப்பது சாத்தியமற்றதாக உள்ள இடங்களில் கப்பலில் விளக்கை பொருத்தி கடற்பரப்பில் தேவையான இடத்தில் நங்கூரம் போட்டு நிறுத்தி கலங்கரை விளக்காக பயன்படுத்தப்படுகிறது! இவை கடல் பரப்பில் மறைந்திருக்கும் ஆபத்துகளை மாலுமிகளுக்கு அறிவுறுத்த வசதியானது! எடுத்துக்காட்டாக கடலுக்கடியில் அலைகளினால் உருவாக்கப்படும் பெரும் மணல் திட்டுகள் அடிக்கடி அலைகளின் போக்கினால் இடம் மாறும்! இதை மாலுமிகளுக்கு சுட்டிக்காட்ட விளக்குக் கப்பல் பயன்படுகிறது. 35மீட்டர் நீளம் கொண்ட சகல வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய நவீன விளக்குக் கப்பல்களும் உள்ளன!

மிதவை விளக்கு! (BUOYS)

நதியின் முகத்துவாரம் ஆற்றின் வாய்க்கால் நீருக்கடியில் உள்ள பெரிய பாறை முதலியவற்றை சுட்டிக்காட்ட மிதவை விளக்கு பயன்படுகிறது!

இதனை இயக்க பணியாளர்கள் தேவையில்லை. மிதவைகள் பல்வேறு அளவிலும், நிறத்திலும்

வடிவத்திலும் ஸ்டீலினால் தயாரிக்கப்படுகிறது! 1டன் முதல் 10டன் வரை எடையிருக்கும். இவை கடற்பரப்பில் நகராமல் இருப்பதற்காக மிகப் பெரிய கான்கிரீட் தளங்கள் கடலடியில் பொருத்தப்பட்டு அதில் நங்கூரம் இட்டு நன்கு கட்டப்பட்டிருக்கும்!

மாலுமிகள் பகலில் மிதவையின் நிறம், அளவு, வடிவம், அதன் மேல் குறிக்கப்பட்டிருக்கும் குறியீடுகள் முதலியவற்றைக் கொண்டு தகவலைப் புரிந்து கொள்வார்கள்! இரவில் தானியங்கி விளக்கு மூலம் சமிக்ஞைகள் கொடுக்கப்படும்! இதற்காக இதனுள் சூரிய ஒளி, அல்லது காற்று அல்லது அலைகளின் மூலம் மின் உற்பத்தி செய்யும் கருவியும், மின் சேமிப்புக் கலமும் இருக்கும்!

இந்தியாவில் கலங்கரை விளக்கு நிர்வாகம்

இந்தியாவில் மொத்தமா 182 கலங்கரை விளக்குகள் உள்ளன. இவை அனைத்தும் மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இவற்றை நிர்வாகம் செய்ய இந்திய அளவில் ஓர் இயக்குநரகம் புதுதில்லி அருகே நொய்டாவில் செயல்படுகிறது. இதன் கீழ் ஒன்பது பிராந்திய அலுவலகங்கள் உள்ளன.

தமிழகத்தில் கன்னியாகுமரி, சென்னை, கீழக்கரை, மகாபலிபுரம், முட்டம் உள்ளிட்ட பதினாறு இடங்களில் கலங்கரை விளக்குகள் உள்ளன. இவையனைத்தும் சென்னையில் உள்ள பிராந்திய அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.

சர்வதேச கலங்கரை விளக்கு கட்டுப்பாட்டு அமைப்பு

(International Hydrographic Organisation)

இந்த அமைப்பு பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள கலங்கரை விளக்கு நிர்வாக அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு அந்த நாடுகளில் உள்ள கலங்கரை விளக்குகள் பற்றிய சகல விவரங்களையும் பெற்று ஒருங்கிணைத்து தொகுத்து வெளியிடுகிறது. மேலும் கலங்கரை விளக்கின் கோபுரம், தோற்றம், நிறம் போன்றவற்றை குறித்த சில நெறிமுறைகளையும், செயல்படும் விதம் குறித்த சில வழிமுறைகளையும் உருவாக்கி உள்ளது! இதனை அனைத்து நாடுகளும் பின்பற்றுவதால் மாலுமிகளால் குழப்பமில்லாமல் கடலில் பயணிக்க முடிகிறது!

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் நாள் கலங்கரை விளக்கு தினமாகக் கொண்டாடப்படுகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.