நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரங்கம்: விழிப்புணர்ச்சி!

கருப்புசாமி, சுண்டல் விற்கும் கிருஷ்ணாராவ், அவர் மனைவிஅஞ்சலை

News image
Updated On :31 ஜூலை 2015, 4:01 pm

என்.எஸ்.வி.குருமூர்த்தி

காட்சி - 1

இடம் : பூங்கா

காலம்: மாலை நேரம்

மாந்தர்: கருப்புசாமி, சுண்டல் விற்கும் கிருஷ்ணாராவ், அவர் மனைவிஅஞ்சலை

கிருஷ்ணாராவ்: சுண்டல் சுண்டல் கொண்டக் கடலை சுண்டல் சூடான சுண்டல்..

கருப்புசாமி: (பார்க் சிமெண்ட் பெஞ்ச்சில் படுத்தபடி) இந்தாப்பா சுண்டல்.. ஒரு பொட்டலம் தா..

(சுண்டல்காரர் ஒரு பொட்டலம் மடித்துத் தருகிறார் கூம்பாக.. கொஞ்சம் கொசுறும் கரண்டியால் போட்டு எவர்சில்வர் வாளியை மூடுகிறார்..)

கருப்புசாமி:(தனக்குள் புலம்புகிறான்) ஹூம் அதிர்ஷ்டமே இல்லை நமக்கு.. இப்போ பார்த்த கிளி ஜோஸ்யனும் குரு பெயரணும்னு சொல்றான்..(சுண்டலை வாயில் போட்டபடி பார்க் ரேடியோவில் ஒலிபரப்பாகும் பாட்டைக் கேட்கிறான்)

-அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு

அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்...

விழித்துக் கொண்டோரெல்லாம்

பிழைத்துக் கொண்டார்..-

கருப்புசாமி: ம்.. உங்களுக்கு என்ன.. எழுதுனீங்க..அவர் பாடினார்.. இவர் நடிச்சார்.. கேட்க நல்லாதான் இருக்கு.. நிஜத்தில் உதவலியே..

கிருஷ்ணாராவ்: ம்.. தம்பி அப்படிச் சொல்லாதீங்க.. உழைப்பு நிச்சயம் உயர்வைத் தரும்..

கருப்பு: ஓ சுண்டல் காரரா..என்ன வியாபாரம் முடிஞ்சிடுச்சா..

கிருஷ்ணாராவ்: அரை மணி நேரம் தான் ஒரு ரவுண்டு வந்தா நூறு பொட்டலம் வித்துடும்.. ரெகுலர் ஆட்கள் இருக்காங்க..

கருப்பு சாமி: ம் டேஸ்ட்டாதான் இருக்கு.. சூடாவும் இருக்கு..

கிருஷ்ணாராவ்: நீங்க புலம்பியது காதில் விழுந்திச்சு..ஏன் வேலைக்குப் போகலியா..

கருப்புசாமி: எங்கே போறது.. எனக்குத் தெரிஞ்ச வேலைக்கு யார் இப்போ கூப்பிடுவாங்க..

கிருஷ்ணாராவ்: என்னா வேலை செஞ்சீங்க..

கருப்புசாமி: டைப்ரைட்டர் சர்வீஸ் பண்ணுவேன், பெட்ரோமாக்ஸ் விளக்கு, மண்ணெண்ணெய் ஸ்டவ் ரிப்பேர் தெரியும்.. இப்போ எல்லாம்தான் அதுக்கு வேலை இல்லியே..பிழைப்பும் இல்லே..

கிருஷ்ணாராவ்: நான்கூட ஒரு வீடியோ லைப்ரரி வச்சு வீடியோ காùஸட் வாடகைக்கு விட்டவன் தான்.. இப்போதான் முப்பது ரூவா டிவிடியில் மூணுபடங்கள் இருக்கே.. தொழிலை மாத்திக்கிட்டேன்..உங்களுக்கு வேறே என்ன தெரியும்..

கருப்புசாமி: சைக்கிள் ரிப்பேர் தெரியும் டூவீலர் பங்சர் பார்ப்பேன்..டூல்ஸ் வாங்க பணமில்லே

கிருஷ்ணாராவ்: அது போதுமே... என்னிடம் பழைய காற்றடிக்கும் பம்ப் இருக்க்கு.. தர்றேன் ஒரு நூறு ரூபாக்கு சில்லறை சாமான்கள் சொல்யூஷன், ஒரு பிளாஸ்டிக் வாளி தண்ணீர் போதும்.. இதோ எதிரில் மரத்தடி காலியாதான் இருக்கு உட்காருங்க.. ரெகுலரா உட்காருங்க..தினம் இருனூறு நிச்சயம் தேறும்..

கருப்புசாமி: அதுக்கு எல்லாம் அதிர்ஷ்டம் வேணுமுங்க.

கிருஷ்ணாராவ்: தெய்வத்தால் ஆகாவிட்டாலும் மெய் வருத்தம் கூலியாவது தரும்..இது வள்ளுவர் வாக்கு.. பொய்க்காது.

கருப்புசாமி:அந்த பறவைகளைப் பாருங்க! எவ்வளவு சந்தோஷமா இருக்கு..ஆகாயத்துப் பட்சிகள் நூற்பதுமில்லை விதைப்பதும் இல்லே... மனுஷன் தான் அவஸ்தைப் படறான்..

கிருஷ்ணாராவ்: ஓ! பைபிள் வாசகமா.. அதோ அந்த சர்ச் சுவர் வாசகத்தைப் படிங்க..சோம்பல் கந்தையை உடுத்துவிக்கும் என்றும் எழுதி இருக்கே..

கருப்புசாமி: சரிங்க ஐயா..நாளை முதல் மரத்தடியில் உட்கார்றேன்

(அப்போது கிருஷ்ணாராவ் மனைவிஅஞ்சலை அங்கு வருகிறாள்)

கிருஷ்ணாராவ்: என்ன பூ எல்லாம் வித்திடுச்சா..

அஞ்சலை: ம்..நீங்க வரும் போது பட்டாணி அஞ்சுகிலோ இஞ்சி பூண்டு தக்காளி மாங்கா வாங்கியாங்க.. நாளைக்கு பட்டாணி சுண்டலுக்கு ஊற வைக்கணும் (போகிறாள்)

கிருஷ்ணாராவ்: என் மனைவிதான் அது...பூ கட்டி விக்கிறா.. அவளுக்கு தினம் நூறு சாயங்காலம் கிடைக்கும்.. மதியம் சுண்டல் செய்வாள். நான் உதவி செய்வேன்... பூ கட்டுவேன் நானும் நல்லா..

காட்சி 2

இடம்:பார்க் எதிரில் மரத்தடி

மாந்தர் : கருப்புசாமி, கிருஷ்ணாராவ்

-புதிய சைக்கிள் பங்சர் கடை உதயம்-

கிருஷ்ணாராவ்: தம்பி கருப்புசாமி உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.. உழைங்க.... முன்னேறுங்க.. நான் சுண்டல் விக்கப் போறேன் வரட்டா..

(ஒரு சிறுவன் "அங்கிள் பங்சர் ஆயிடுச்சி'என்று சைக்கிளை தள்ளியபடி வருகிறான்)

கருப்பு : பங்சர் ஒட்டி காற்றடித்துத் தர பத்து ரூபாய் முதல் கூலி கிடைக்கிறது..-

(ஒரு வாரத்தில் பல சைக்கிள்கள் சர்வீஸýக்கு வந்து விடுகின்றன. நல்ல முறையில் பழுது பார்த்துத் தர நேரம் தான் போதவில்லை கருப்புசாமிக்கு. ஒரு நாள்மாலை வேளை கிருஷ்ணாராவிடம் நூறு ரூபாய் பணம் தருகிறான் கருப்பு)

கிருஷ்ணாராவ்: எதுக்குப்பா..

கருப்பு: நீங்க தந்த சாமான்களுக்கு விலை..

கிருஷ்ணாராவ்: உனக்குத்தான் டூ வீலர் ரிப்பேரும் தெரியுமே அதுக்கான டூல்ஸ் வாங்க இதை வச்சுக்க..

(விரைவில் அங்கு டூ வீலர்களும் நிறைய நிற்கின்றன.. உதவிக்கு ஒரு சிறுவனும் வந்து விட்டான்)

காட்சி 3

இடம் : மேடை

மாந்தர் : தொழிலதிபர், கருப்புசாமி, அஞ்சலை

காலம் உருள்கிறது

-பல வருட காலண்டர்கள் மாறி மாட்டப் படுகின்றன. கருப்புசாமி டூ வீலர் ஷோ ரூம் பார்க் அருகில் திறக்கப்படுவதாக பெரிய டிஜிட்டல் பேனர் வால் போஸ்ட்டர்..ஊரெங்கும்.

திறப்பவர் அந்த ஊரின் பெரிய தொழில் அதிபர்... சுவரெங்கும் வாழ்த்துச் சுவரொட்டிகள்..

திறப்பு விழாவில் பேசுகிறார் தொழில் அதிபர் -

""இன்னிக்கு கருப்புசாமி இரண்டு டூவீலர் மற்றும் கார் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளுக்குச் சொந்தக்காரர்.. டூவீலர் ஷோ ரூம் இன்னிக்கு புதுசா திறக்கறார்.. இவர் முன்னேற்றத்துக்கு என்ன காரணம்.. உழைப்பு, நாணயம்.. நல்ல தரமான ஸ்பேர் பார்ட்களை மிகக் குறைவா தர்றாதால் வெளியூரில் இருந்து வந்து மெக்கானிக்குகள் வாங்கிப் போறாங்க.. இங்கே இவரிடம் தரம் இருப்பதால் பெயர் வாங்கிட்டார்.. எந்த வண்டிக்கும் கருப்புசாமி கடையில் உதிரி பாகம் கிடைக்கும்ங்கிறது நூறுமைல் வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரியும்.. என் பழைய பஜாஜ் ஸ்கூட்டருக்கு ஒரு உதிரி பாகத்தை ஹரியானாவில் இருந்து வரவழைச்சுத் தந்தார்..விலை மிகச் சரியா இருக்கும்.. வாங்கிப் போற சாமானில் பழுது இருந்தால் உடனே மாத்தித் தருவார்.. அந்த நாணயம் நம்பிக்கை இவரை இந்த அளவு வளர்த்திடுச்சி.. இதுக்கெல்லாம் காரணம் கடவுள் அருளும் அதிர்ஷ்டமும் தான்.. அவர் மேன் மேலும் வளர வாழ்த்திக் கடையைத் திறந்து வைக்கிறேன்

(பெரும் ஆரவாரம்.. பட்டாசுகள் வெடி முழக்கம். பாண்ட் வாத்திய முழக்கம்).

கருப்புசாமி நன்றியுரை: என் முன்னேற்றத்துக்குக் காரணம் காலம் சென்ற சுண்டல் வியாபாரி கிருஷ்ணாராவ்தாங்க..அவர் சொல்லிதான் ஒரு சைக்கிள் பங்சர் கடை வச்சேன் மரத்தடியில். அவர் தந்த சைக்கிள் பம்ப்பை பூஜை அறையில் வச்சிருக்கேன்.,அவர் படத்தை சுவாமி படத்தோட வச்சு வணங்கறேன்.. அவர் அடிக்கடி சொல்வார்.. கஷ்டப்பட்டா அதிர்ஷ்டம் இல்லாவிட்டாலும் மெய்வருத்தக் கூலி கட்டாயம் கிடைக்கும்ன்னு.. அந்த வார்த்தையால் முன்னேறியவன் நான்

(இந்த வார்த்தைகளை பார்க் வாசலில் பூ விற்கும் அஞ்சலை, மறைந்துவிட்ட சுண்டல் கிருஷ்ணாராவின் மனைவி, கேட்டுத் தன் கண்களை புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்கிறாள்)

திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.