ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கருவூலம் கிரேக்கம்!

உலகளவில் மனித வாழ்க்கையே வளப்படுத்தியதிலும், உயர்ந்த சிந்தனைகளை ஏற்படுத்தியதிலும், மேன்மை தரும் வாழ்க்கை நெறிமுறைகளை

News image
Updated On :23 மே 2015, 10:11 am

உலகளவில் மனித வாழ்க்கையே வளப்படுத்தியதிலும், உயர்ந்த சிந்தனைகளை ஏற்படுத்தியதிலும், மேன்மை தரும் வாழ்க்கை நெறிமுறைகளை உருவாக்கியதிலும் கிரேக்கர்களின் கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களின் பங்களிப்பு அளவிடமுடியாதது.

ஏசு கிறிஸ்து தோன்றுவதற்கு முன்பே கிரேக்கம் மிகவும் முன்னேறிய நாடாக விளங்கியது. அந்தக் காலகட்டத்திலேயே கிரேக்கத்தில் பல்வேறு போர்களும் புரட்சிகளும், பல்வேறு அரசுகளின் எழுச்சியும், வீழ்ச்சியும் மாறி மாறி இருந்திருக்கின்றது.

Story image

இத்தகைய சூழ்நிலையிலும் கிரேக்கம் நன்கு முன்னேற்றமடைந்து விளங்கியது. அரசாட்சி, மக்களாட்சி, சமுதாய வளர்ச்சி, விவசாயம் வாணிபம் தொழில் கலாச்சாரம், அறிவியல், மருத்துவம், தத்துவம், இலக்கியம், விளையாட்டு என பல்வேறு துறைகளிலும் நன்கு வளர்ச்சியடைந்து உலகிற்கு ஒரு வழிகாட்டியாக விளங்கியது. இன்றைக்கும் அந்த நாகரிகத்தின் தாக்கமானது உலகளவில் உள்ளது என்பது வியப்பூட்டும் உண்மை!

கி.மு.எட்டாம் நூற்றாண்டு

Story image

கி.மு. 8ஆம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்னர் கிரேக்கத்தில் பரவி தழைத்திருந்த நாகரிகம் வீழ்ச்சியடைந்து ஒரு இருண்ட நிலை நிலவியது. இந்த நிலையில் மீண்டும் ஓர் எழுச்சி ஏற்பட்டு கி.மு.எட்டாம் நூற்றாண்டில் புத்தொளியுடன் சிறப்பு பெற்று விளங்கியது.

Story image

இந்த காலகட்டத்தில் மக்களிடையே எழுத்தறிவு குறைந்திருந்தது. அதனால் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த பீனீசிய எழுத்து முறையை மாற்றி கிரேக்க எழுத்துக்களை வடிவமைத்து மொழிக்கு புத்துயிர் ஏற்படுத்தினர். இந்த காலத்திலேயே எழுத்து மூலமாகப் பதிவு செய்யப்பட்ட குறிப்புகள் தோன்ற தொடங்கின.

Story image

இந்த நூற்றாண்டின் இறுதியில் நாணயங்கள் வெளியிடப்பட்டன. மேலும் வியாபாரத்தின் மூலம் பொருள் ஈட்ட முடியும் என்ற சிந்தனையும், வணிகம் செய்பவர்களின் குலமும், பெரும் பொருளீட்டும் ஆர்வமும் தோன்றியது.

கி.மு.ஏழாம் நூற்றாண்டு

Story image

இக்கால கட்டத்தில் சமுதாயத்தில் பொருளாதார ரீதியிலான ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டது. மேலும் அரசியல் செல்வாக்கு பெற்றவர்களுக்கும் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கும் இடையில் போட்டி, பொறாமை, பிரச்னைகள் ஏற்படத் துவங்கின. இவை வர்க்கப் பூசல்களுக்கு வித்திட்டன. மேலும் ஓர் அமைப்பிற்கும் மற்றோர் அமைப்பிற்கும் இடையில் போர்களும் ஏற்பட்டன.

Story image

இந்த நிலையில் ஏதென்ஸ்,ஸ்பார்டா, கோரிந்த்,தேப்ஸ் போன்ற பல நகரங்கள் உருவாகத் தொடங்கின. காலப்போக்கில் இந்த நகரங்கள் சுற்றியுள்ள ஊர்களையும், நிலப்பகுதிகளையும் இணைத்துக் கொண்டும், பொருளாதார, ராணுவ பலங்களைப் பெருக்கிக்கொண்டும், சுதந்திரமான, வலுவான, அதிகாரமிக்க நகரங்களாகவும் வளர்ந்தது. மேலும் ஒன்றுடன் ஒன்று பலப் பரீட்சையிலும், மோதலிலும் ஈடுபடத் தொடங்கியது.

கி.மு.ஆறாம் நூற்றாண்டு

Story image

பல்வேறு காரணங்களால் பலவீனப்பட்டுப்போன கிரேக்கப் பகுதிகளை கி.மு. 4ஆம் நூற்றாண்டில் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். இரண்டாம் பிலிப் என்ற மாசிடோனிய அரசன், ஏதென்ஸ் நகரத்தையும் அதனைச் சுற்றியிருந்த நிலப்பகுதிகளையும் இணைத்து பெரும் படையையும் ஏற்படுத்தி வலிமையான கிரேக்கத்தை ஏற்படுத்தினான். கிரேக்கம் மீண்டும் எழுச்சி பெற்றது.

Story image

இவருடைய மகன்தான் மாவீரன் அலெக்சாண்டர்! அலெக்சாண்டர் இளம் வயதிலேயே அறிவும், திறமையும் பெற்று இருந்தார். இவர் தன் அரிய போர்த்திறனால் பெரும் கிரேக்கப்படையை வழி நடத்தி நாடுகள் பலவற்றையும் வென்றார். இவர் தன் வெற்றிப் பாதையில் இந்தியாவுக்கும் வந்து போர் புரிந்தார்.

வியத்தகு சாதனை புரிந்த அலெக்சாண்டர், கி.மு. 323இல் விஷக் காய்ச்சலால் மரணமடைந்தார். இந்த காலகட்டத்தில் கிரேக்கம் பெரிய அளவில் பரந்து விரிந்து செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்தது. மக்கள் வாழ்க்கை முறையும் சிறப்புடன் திகழ்ந்தது.

Story image

அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின் கிரேக்க சாம்ராஜ்யம் பல பிரிவுகளாகப் பிளவு பட்டு படைத் தலைவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

இவ்வாறு பலவீனப்பட்ட கிரேக்கம் கி.மு.2ஆம் நூற்றாண்டில் ரோமானிய பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது.

கிரேக்க நாகரிகத்தின் சிறப்புகள்

Story image

கல்வி: இளம் வயதிலேயே சிறுவர்களுக்கு மட்டுமல்லாது சிறுமிகளுக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது! அரசாங்கத்தால் கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன. தனிப்பட்ட முறையிலும் கல்வி பயிலும் வசதியிருந்தது. கல்வியானது வேலைவாய்ப்பிற்காக அல்லாமல் நல்ல குடிமக்களை உருவாக்கும் நோக்குடனும், அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதாகவும் இருந்தது! பாடங்களுடன் இலக்கியம், இசை, உடற்பயிற்சி முதலியவற்றுற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது!

இந்த உயர்ந்த நோக்கத்துடன் கூடிய கல்வியானது கிரேக்கர்களின் அறிவையும் திறமையையும் வளர்த்தது! அதனால் இலக்கியம், தத்துவம், மருத்துவம், கணிதம், அறிவியல் என பல துறைகளிலும் மேதைகள் உருவாயினர்.

கிரேக்க மஹாகவி ஹோமர் இயற்றிய காவியங்களான இலியாத் மற்றும் ஒடிஸ்ஸி உலக இலக்கிய வரலாற்றில் பெருமையுடன் போற்றப்படும் படைப்புகளாகும்.

உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு நாடகம் என்ற வகை இலக்கியத்தை முதல் முதலில் உருவாக்கியது கிரேக்க நாடே ஆகும்.

சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற பல தத்துவ ஞானிகள் கிரேக்க நாட்டில் தோன்றி வாழ்க்கையின் குறிக்கோளையும், வாழும் முறைகளையும், தங்கள் போதனைகள் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூறி வழிகாட்டினர்.

பிதாகரஸ், யூகலிட், ஆர்கிமெடிஸ் போன்ற அறிஞர்களின் கணிதம் மற்றும் அறிவியல்துறை சார்ந்த கண்டுபிடிப்புகள் இன்றளவும் மக்களுக்கு பயன்படுகிறது.

அறிஞர் ஹிப்போக்ரேட்ஸ் அவர்களின் மருத்துவத் துறை கண்டுபிடிப்புக்களுக்காகவும், தொண்டுக்காகவும் "மருத்துவத்தின் தந்தை' எனப் போற்றப்படுகிறார்.

Story image

கிரேக்கர்கள் தம் வாழ்வில் இடம் பெறும் எல்லா நல்ல மற்றும் தீய நிகழ்வுகளுக்கும் தனிப்பட்ட கடவுள்களைத் தலைவர்களாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் "ஜியுஸ்' என்னும் கடவுளை முன்னிலைப்படுத்தி விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். இதற்காக மிகப்பெரிய விளையாடும்

திறந்தவெளி அரங்களை அமைத்தனர். பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் அமரும் இடங்களையும் உருவாக்கினார்கள்! கி.மு. 776இல் ஒலிம்பியா என்னும் இடத்தில் துவங்கப்பட்ட பெரிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்தான் இன்று "ஒலிம்பிக்' என்ற பெயரில் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான போட்டியாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

கலைகளின் கடவுளாகக் கருதப்பட்ட "ம்யூஸஸ்' என்ற கடவுளின் பெயரால்தான் இசைக்கலையை குறிக்கும் "ம்யூஸிக்' என்ற ஆங்கிலச் சொல் வந்தது.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்கத்தை ஆட்சி செய்த ரோமானிய பேரரசால் கிரேக்கக் கலாச்சாரம் மேற்கு நாடுகளுக்கும் பரவியது. இன்றுவரை பல துறைகளிலும் மேற்கத்திய கலாச்சாரத்தில் கிரேக்கர்களின் நாகரிகம் அடிப்படையாகத் திகழ்கிறது.

கிரேக்க நாகரிகம் பண்பட்ட மனித வாழ்வுக்கு வழிவகுத்தது..., வளப்படுத்தியது என்பதில் சற்றும் ஐயமில்லை. உலக வரலாற்றில் கிரேக்கர்களின் பங்களிப்பு பெருமைப்படத்தக்கதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.