நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பூதலூர் முத்து

காட்சி - 1

இடம் - அமுதாவின் வீடு

மாந்தர் - அமுதாவின் தந்தை வடிவேலன், அமுதா, வேலையாட்கள் இருவர்.

(பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்புகிறாள் அமுதா. தந்தை வேலையாட்களிடம் பேசுவது அவள் காதில் விழுகிறது.)

வடிவேலன்: (ஆட்களைப் பார்த்து) நாளைக்குக் காலையில் நீங்கள் இருவரும் வந்து இந்த வேப்பமரத்தை வெட்ட வேண்டும். வேரையும் தோண்டி எடுக்க வேண்டும். மரம் பெரிதாகிவிட்டது. இப்படியே விட்டால் வீட்டுச் சுற்றுச் சுவருக்கு ஆபத்து என்று என் நண்பர் சொன்னார்.

(இதைக் கேட்ட அமுதாவின் உள்ளம் பதைக்கிறது)

அமுதா: (தனக்குள்) அம்மாவிடம் சொல்லி இதை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்த வேண்டும்......கடவுளே இந்த மரத்தைக் காப்பாற்று!

(அவள் வடிவேலனிடம் எதுவும் பேசாது கண்களைக் கசக்கியவாறு உள்ளே ஓடுகிறாள்)

காட்சி-2

மாந்தர் - அமுதா, அமுதாவின் தாய் லட்சுமி.

(வடிவேலன் வெளியே புறப்படுகிறார். அவர் புறப்பட்டதும் அமுதா இலட்சுமியிடம் வருகிறாள்)

லட்சுமி: அமுதா, உனக்கு என்ன ஆயிற்று....? கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கிறதே...? பள்ளிக்கூடத்தில் ஏதாவது பிரச்னையா?

அமுதா: அதெல்லாம் இல்லேம்மா...,பிரச்னை இங்கேதான்...,வாசல் பக்கம் இருக்கிற...,நாம் உயிருக்கு உயிரா நினைக்கிற வேப்பமரத்தை அப்பா நாளைக்கு வெட்டப் போகிறார்!

இலட்சுமி: (துயரம் மேலிட) அந்த எத்தனை ஆண்டுகளாக வளர்ந்து இவ்வளவு பெரிய மரமாக ஆகியிருக்கிறது....,நம்மைப் பார்த்து பலபேர் வீட்டு முன்பாக மரம் நடும்போது இவர் வெட்டவேண்டும் என்கிறார்.

அமுதா: அதுவும் ஓர் உயிர்தானே அம்மா...,அதை நம்பி எத்தனை உயிர்கள் உள்ளன! குருவிகள்.., கிளிகள், அணில்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக அந்த மரத்துக்கு வந்து போகின்றன!....,ஒரே நாளில் அந்த வேப்பமரத்தின் உயிரையும் போக்கி இத்தனை உறவுகளையும் துண்டிக்க வேண்டுமா? நம்முடைய மகிழ்ச்சியையும் பறிக்க வேண்டுமா?

(சொல்லும்போதே அவள் கண்களில் கண்ணீர். அதை இலட்சுமி துடைத்து விடுகிறாள்)

இலட்சுமி: அமுதா, நீ அழாதே...,நான் அப்பாவிடம் இதமாக எடுத்துச் சொல்கிறேன்.

அமுதா: உயிரில்லாத செங்கல் சுவர் விரிசல் விழும் என்று அப்பா கவலைப்படுகிறார். உயிருள்ள மரத்தை வெட்டலாமா? மீண்டும் ஒரு மரத்தை வளர்க்க எவ்வளவு நாளாகும்...? எவ்வளவு முயற்சி வேண்டும்?

(இலட்சுமி அந்த மரத்தை எப்படிக் காக்கலாம் என்ற சிந்தனையில் இருக்கிறாள்)

காட்சி - 3

இடம் - அமுதா வீட்டு மாடி.

காலம் - நள்ளிரவு

மாந்தர் - அமுதா, சில்டா, மெல்டா.

(அமுதா...,அமுதா என்ற மெல்லிய குரல் மாடியில் கேட்கிறது. அமுதா கண்ணைக் கசக்கிக் கொண்டு மெதுவாகப் படிகளில் ஏறி வருகிறாள். மொட்டை மாடியில் அவள் கண்ட காட்சி அவளை வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்துகிறது. வேற்றுக் கிரகத்திலிருந்து ஒரு சிறிய விண்கலம் அங்கே இறங்கியிருக்கிறது. விண்கலத்தில் வண்ண வண்ண விளக்குகள் எரிகின்றன. அதிலிருந்து சில்டா, மெல்டா என்ற சிறுமிகள் கீழே இறங்குகிறார்கள். அமுதாவின் கைகளைப் பற்றிக் குலுக்குகின்றனர்.)

சிறுமிகள்: அமுதா, நான் சில்டா! ......நான் மெல்டா! நாங்கள் "சோனாபாசி' கிரகத்திலிருந்து வருகிறோம்.

அமுதா: என்னை உங்களுக்கு எப்படி தெரியும்?

சிறுமிகள்:  நீ மரக்கன்றுகள் வளர்ப்பதும்...,மரங்களைக் காப்பதும் பற்றி தொலைக்காட்சியில் பார்த்தோம்! எங்கள் கிரகத்து ஆட்கள் மூலம் நீ இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்டு வந்தோம். -(அமுதா மகிழ்ச்சி அடைகிறாள்)- ....எங்களுக்கும் ஒரு பிரச்னை உள்ளது.

அமுதா: என்ன அது?

சிறுமிகள்: எங்கள் கிரகத்தில் உள்ளவர்கள் மூச்சுவிடப் போதிய உயிர்வளி (ஆக்ஸிஜன்) இல்லை.....,உங்கள் பூமிக்கு வந்தால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று வந்தோம்.

அமுதா: உங்கள் "சோனாபாசி' கிரகத்தில் மரங்கள் உள்ளனவா?

சிறுமிகள்: எங்கள் கிரகத்தில் இல்லை! மரங்கள் பற்றி அதிகமாகத் தெரியாது.

அமுதா: மரங்கள்தான் மனிதர்கள் மூச்சுவிட உயிர்வளியைத் தருகின்றன. உண்ண உணவுகளைத் தருகின்றன.

சிறுமிகள்: எங்களுக்கு உணவு வேறு ஒரு கிரகத்திலிருந்து பொட்டலமாகவே வருகிறது.

பாலிதீன் என்று சொல்கிறோமே அந்தப் பைகளில்!

அமுதா: (வருத்தத்துடன்) அங்கே மரம் இல்லை. ஆனால் பாலிதீன் வந்துவிட்டது.

சிறுமிகள்: ஆமாம்! எங்கள் கிரக வாசிகள் பொறுப்பில்லாமல் அவற்றைக் கண்ட இடங்களில் போடுகிறார்கள்.

அமுதா: மரங்களையும், தாவரங்களையும், பிற உயிரினங்களையும் உருவாக்கி வளர்க்க வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்! இந்தப் பாலிதீன் மீது எச்சரிக்கையாக இருங்கள்!

....உணவு அனுப்பும் கிரகத்திற்கே அந்தப் பைகளை அனுப்பிவிடுங்கள்.

சிறுமிகள்: கவனமாக இருக்கிறோம். சரி, நீ எங்களுக்கு மரங்கள் கொடு. விண்கலத்தில் கொண்டு போகிறோம்.

அமுதா: நீங்கள் மரங்களைக் கொண்டு போக முடியாது. அதற்கு பதிலாக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன்....., இங்கேயே இருங்கள். சற்று நேரத்தில் வருகிறேன்.

Story image

காட்சி - 4

மாந்தர் - அமுதா, சிறுமிகள்.

(அமுதா சிறு கன்றுகளையும் விதைகளையும் அவர்களிடம் ஒரு துணிப் பையில் தருகிறாள். கன்றை நடவது, விதையை ஊன்றுவது, பராமரிப்பது பற்றிச் சொல்கிறாள்.)

சிறுமிகள்: "சோனாபாசி' யில் மழை என்பதே அரிதான ஒரு காட்சி! அதுவும் எப்போதாவது தூறல்தான் விழும்! அங்கு வெகுதொலைவில் ஒரு பனி மலை உள்ளது. அது சிறிது சிறிதாக உருகி நீர் ஓர் ஓடையாக வருகிறது. அந்த நீரைத்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம். ஆனால் எங்கள் தேவைக்கு இது போதாது!

அமுதா: மரங்கள் வளர்ந்துவிட்டால் காடு உருவாகும். பின்னர் அங்கு மழைக்குப் பஞ்சமிருக்காது. மரங்களைக் காப்பாற்றுங்கள். (சொல்லும்போதே அவள் குரலில் துயரம் வெளிப்படுகிறது.)

சிறுமிகள்: அமுதா! ஏன் உன் கண்கள் கலங்குகின்றன?

அமுதா: (தந்தையைக் குறிப்பிடாமல்) எங்கள் வீட்டிற்கு முன் உள்ள வேப்பமரத்துக்கு ஓர் ஆபத்து! உங்களால் அதைக் காப்பாற்ற முடியுமா?

சிறுமிகள்: எங்களால் முடிந்த அளவு முயல்கிறோம். மரத்தை வெட்ட நினைப்பவரின் மனதில் இரக்கத்தை ஏற்படுத்துவோம்...,நீ கவலைப்படாதே!

அமுதா: (தனக்குள்) கடவுளே இவர்களின் துணையோடு அந்த மரத்தின் மீது இரக்கம் ஏற்பட வழி செய்! (அவர்களிடம்) ..சில்டா! மெல்டா! உங்களை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது!....மரக்கன்றுகள், செடிகள் ஓரளவு வளர்ந்தபின் மறுபடி வாருங்கள். மரங்கள் மேலும் மேலும் பெருக உங்கள் முயற்சி மட்டும் போதாது. பறவைகள், விலங்குகள் இவற்றின் துணை தேவை!...., நீங்கள் அடுத்தமுறை வரும்போது கிளிகள், சிட்டுக்குருவிகள், அணில்கள் என்ற உயிரினங்களைத் தருகிறேன். இப்போது அவை தூக்கத்திலும் ஓய்விலும் உள்ளன.

சிறுமிகள்: எங்கள் மீது உனக்குள்ள அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றி!

அமுதா: மரங்கள் பெருகிவிட்டால் உங்களுக்கு உயிர்வளி தேவையான அளவு கிடைக்கும்.....,காய்கள், கனிகள் கிடைக்கும். கரியமில வாயு கட்டுக்குள் இருக்கும்!...மரங்கள் உதிர்க்கும் சருகுகளையும் வீணாக்காதீர்கள்! மரத்திற்கு அருகிலேயே அவற்றை மண்ணில் புதையுங்கள்! மண் வளம் பெறும். மண்புழு போன்ற உயிர்கள் வந்து வளம் பெருக உதவும்!

சிறுமிகள்: ஒரே இரவில் உன்னிடம் நிறைச செய்திகள் தெரிந்து கொண்டோம்! "சோனாபாசி'யில் உன் பெயரால் ஒரு பூங்கா அமைப்போம்! நாங்கள் வருகிறோம்!

(அமுதா மகிழ்ச்சி அடைகிறாள். விண்கலம் அந்தச் சிறுமிகளுடன் புறப்படுகிறது.)

காட்சி - 5

இடம் - அமுதாவின் வீடு

மாந்தர் - இலட்சுமி, அமுதா.

(பொழுது விடிகிறது. அமுதா உறக்கத்தில் ஏதோ பேசிகிறாள்)

இலட்சுமி: (கண் விழித்த அமுதாவிடம்) அது என்ன சில்டா...,மெல்டா? தூக்கத்தில் ஏதாவது கனவு கண்டாயா? (அமுதா விழிக்கிறாள்) அமுதா! உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! நம் வேப்பமரத்துக்கு வந்த ஆபத்து நீங்கிவிட்டது!

அமுதா: எப்படி?

இலட்சுமி: நம் ஊரில் உள்ள "இயற்கைக் கழகம்' பூமியைக் காக்க விழிப்புணர்வு தினம் நடத்துகிறது. நம் ஊரில் உள்ள பெரிய மரங்களில் இந்த வேப்பமரமும் ஒன்றாம்! அதை வளர்த்த உன் அப்பாவுக்கு விருது கொடுத்துப் பாராட்டப் போகிறார்களாம்! செய்தி வந்ததும் அவர் மனம் மாறி விட்டார்!...., வனத்துறையில் இருக்கும் என் தம்பியும், சுற்றுச் சுவருக்கு ஆபத்தில்லாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று தொலைபேசியில் சொல்லிவிட்டான்...., எப்படியோ வேப்பமரம் பிழைத்து விட்டது!

அமுதா: ஆமாம் அம்மா அதற்கு என் நண்பர்கள் சில்டாவுக்கும் மெல்டாவுக்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்!

(அதைக் கேட்டு இலட்சுமி விழிக்கிறாள்)

திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.