புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரங்கம்: கழுவாத கைகள்!

டேய் சங்கர் சாப்பிட்டு முடிச்சதும் வாடா.. வெளியில் போய் பிஸ்கட் சமோசா மாங்காய் வாங்கி சாப்பிடலாம்.

News image
Updated On :17 அக்டோபர் 2015, 9:57 am

என்.எஸ்.வி.குருமூர்த்தி

காட்சி 1

இடம்: பள்ளி வராண்டா

காலம் -மதியம் உணவு இடைவேளை

மாந்தர்: பாலா, சங்கர், கீர்த்தி, புஷ்பா, பானு.

-மாணவர்கள் உணவு அருந்துகிறார்கள்-

பாலா: டேய் சங்கர் சாப்பிட்டு முடிச்சதும் வாடா.. வெளியில் போய் பிஸ்கட் சமோசா மாங்காய் வாங்கி சாப்பிடலாம்.

சங்கர்: எங்க அப்பா பாக்கெட் மணி தினமும் பத்து ரூபா தருவார்.. ஆனா என்ன வாங்கினேன்னு சொல்லிடணும்.. அவர் கண்டிப்பா பள்ளி உள்ளே இருக்கிற ஸ்டோரில் தான் தின்பண்டங்கள் வாங்கி சாப்பிடணும்னு சொல்றார்..வெளியில் வாங்கக் கூடாதாம்.

பாலா: பள்ளியில் விக்கிற பிஸ்கட் பத்து ரூபா.. இதோபார் வெளியில் அதே பாக்கெட் ஏழு ரூபா..சாக்லெட் எல்லாம் பாதி விலை தான்.

கீர்த்தி: -அதை வாங்கிப் பார்த்து விட்டு- இதில் வருஷம் என்ன போட்டிருக்கு பார்த்தியா. 2012.. காலாவதி ஆனது.. சாப்பிட்டால் கெடுதல்... இதை எல்லாம் விக்கவே கூடாது.. காலவதி ஆன பண்டங்களை எப்படியோ வெளியில் இருக்கிறவங்க மிக மலிவாக வாங்கி நமக்கு பாதி விலைக்குத் தர்ற மாதிரி ஏமாத்தறாங்க!

பாலா: நான் மூணு வருஷமா சாப்பிடறேன் தெரியுமா..

புஷ்பா: உனக்கு அடிக்கடி வயித்தை வலிக்குதுன்னு சொல்லுவியே காரணம் இது தான் புரிஞ்சுதா?

பானு: மாங்காய் துண்டுகளில் காரம் மிளகாய் உப்பு தடவி விக்கிறாங்களே.. அது கெடுதலாம்.. தெருவோரம் எத்தனை வாகனங்கள் போகுது.. எத்தனை தூசி அதில் படியுது கவனிச்சியா பாலா..

புஷ்பா: சமோசாவிலும் விற்காதவற்றை அப்படியே மறுநாள் கொண்டு வந்திடாறாங்க..எரிச்ச எண்ணெய் உடலுக்கு மிகவும் கெடுதல். சொன்னா கேளு பாலா! பரீட்சை சமயத்தில் உடம்பு முடியாம போயிட்டீனா யாருக்கு நஷ்டம்..?

பாலா: ஏய், நீங்க எல்லாம் பயந்தாங்கொள்ளிகள்.. என் உடம்பு ஆர்னால்டு மாதிரி எனக்கு ஒண்ணும் ஆகாது.. நான் போய் வாங்கித் திங்கப் போறேன்.. உங்களூக்கு வேணுமா வேணாமா..

பானு, புஷ்பா, சங்கர்:-கோரஸாக-  நீ சும்மா கொடுத்தால் கூட சாப்பிடமாட்டோம்..

(பாலா போனதும்)

சங்கர்: கிளாஸ் மிஸ் கிட்டே இதைச் சொல்லி பாலாவைக் கண்டிக்கச் சொல்லணும்.

காட்சி 2

நேரம்:மாலை

இடம்:பாலா வின் வீடு

மாந்தர்:ஆசிரியை மீனா, பாலாவின் தாய் செளம்யா.

-பாலாவின் வகுப்பு ஆசிரியை மீனா பாலாவின் தாய் செளம்யாவை சந்திக்கிறார்.-

செளம்யா:  வாங்க மேடம்! செளக்கியமா இருக்கீங்களா..? உட்காருங்க.., காபி கொண்டு வர்றேன்..

மீனா: எங்கே பாலா இல்லியா..?

செளம்யா: கிரிக்கெட் விளையாடப் போயிருக்கான்.

மீனா: வீட்டை சுத்தமா பராமரிக்கறீங்க.. தூசு இல்லாம பளிச்சுனு இருக்கு..கொஞ்சம் தண்ணி தாங்க.

செளம்யா: - தண்ணீர் பில்டரில் இருந்து ஒரு டம்ளர் தருகிறார்.-

மீனா: என்ன தண்ணி யூஸ் பண்றீங்க..?

செளம்யா: கார்ப்பொரேஷன் வாட்டர் தான்.. கேன் வாட்டர் நாங்க வாங்கறதில்லே.. மிகத் தரமான கேன் கள் விலை அதிகம்.. மலிவான தண்ணீரின் சுத்தத்தை நம்ப முடியாது.. கார்ப்பொரேஷன் தண்ணீரை காய்ச்சி ஆறவைத்து பில்டரில் ஊற்றி விடுவேன்.. இப்படி எவ்வளவு சுத்தமா இருந்தாலும் என் பையன் பாலாவுக்கு அடிக்கடி வயத்தில் வலி வருது.. டாக்டர் அவன் வயிற்றில் பூச்சிகள் இருக்குன்னு மருந்து தர்றார்.

மீனா: அது விஷயமா தான் பேச வந்தேன்.. அவன் மதியம் உணவு இடைவேளையில் வெளியில் விற்கும் சுகாதாரமற்ற தின் பண்டங்களை வாங்கித் திங்கறான்னு சக மாணவர்கள் சொன்னாங்க.. அதை உங்களிடம் சொல்லிப் போகத்தான் வந்தேன்.. நீங்க இவ்வளவு சுத்தமாக இருந்தும் அவன் வயிற்று வலிக்கு இது தான் காரணம்.. நான் சொன்னதாக இருக்க வேண்டாம்.. எப்படியாவது நீங்க இதைத் தடுக்கணும்.. பாலா நல்லா படிக்கிற பையன்.. நான் வரேன்.

காட்சி 3

இடம்: பாலாவின் வீடு

மாந்தர்: பாலா,செளம்யா, பாலாவின் அப்பா மாதவன்.

பாலா:-- விளையடிவிட்டு கிரிக்கெட் மட்டை தொப்பி சகிதம் உள்ளே நுழைகிறான்.-

செளம்யா:  என்ன பாலா ஏதாச்சும் குடிக்கறியா? வீட்டுப்பாடம் எழுத உட்கார்ந்துடுவியே..

பாலா: கிரவுண்டு வாசலில் சர்பத் குடிச்சேம்மா..பசிக்கலே.. வயத்தை காலையில் இருந்து வலிக்கிற மாதிரி இருக்கம்மா..

செளம்யா: பாலா உனக்கு ஒரு விஷயத்தைக் காட்டணும்  வா மொட்டை மாடிக்கு.

-மொட்டை மாடியில் இருவரும் நிற்கிறார்கள்.-

செளம்யா: அதோ பார் நீ விளையாடும் கிரவுண்டு.. அந்த தள்ளு வண்டியில் தானே சர்பத் சாப்பிட்டே..

பாலா: ஆமாம் அம்மா..

செளம்யா: இப்போ அந்த சர்பத் கடைக்காரர் பிளாஸ்டிக் குடத்தோட எங்கே போறார் பார்..

பாலா: அருகில் இருக்கும் பொது சுகாதார கழிவறைக்குள் ஏன் குடத்தோட போறார்..?

செளம்யா: கொஞ்சம் பொறு.. இப்போ வருவார் திரும்ப.

பாலா: அதோ வர்றார். அம்மா குடம் நிறைய தண்ணீர் பிடிச்சுக்கிட்டு.. கொண்டு வந்து ஒரு டிரம் நிறைய ஊத்தறாரே.. அதில் இருந்து தானே சர்பத் கலந்து விக்கிறார்..அதையா நான் குடிச்சேன்.. எனக்கு குமட்டுதே?

செளம்யா: தண்ணீர் மூலமா தான் பல வியாதிக் கிருமிகள் நம்மைத் தாக்குது.  விளையாடிட்டு வந்ததும் முதலில் உன் கை கால்களை சோப் போட்டுக் கழுவினியா.. அப்பா எத்தனை தரம் சொல்லி இருக்கார்.. டாய்லெட் போய் வந்ததும் எப்பவும் கையை சோப் போட்டுக் கழுவ தனியா சோப் இருக்கு வாஷ் பேசினில்.. அதை நீ பயன் படுத்த மறந்திடறே..உன் வயத்தில்வர்ற வலிக்கு கிருமிகளை நீயே தான் தேடிக்கிறே! தெரியுதா?

பாலா:  ஸாரி அம்மா! இனி நான்.. சுத்தமா கை கழுவறேன்.. இனி சர்பத் அங்கே சாப்பிடவே மாட்டேன்.

செளம்யா:  இதே ஆள் தான் உங்க பள்ளி வாசலில் சமோசா,வடை எல்லாம் செஞ்சு விக்கறார்.. அதற்கான தண்ணீரும் எங்கே இருந்து வருதுன்னு உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லே.

பாலா:  இனி நான் வெளியில் எதுவும் வாங்கிச் சாப்பிடமாட்டேன் அம்மா  இது உறுதி..

செளம்யா:  வா.. சேமியா பாயசம் சூடா இருக்கு சாப்பிடு..அப்பா வந்திட்டார் போல இருக்கே.. சத்தமே கேட்கலே.

பாலாவின் அப்பா மாதவன்:  ம் ... காதில் வாங்கினேன் எல்லாத்தையும்.  பாலா வயித்து வலிக்கு காரணத்தை அவன் புரிஞ்சுக்கிட்டிருப்பான்னு நினைக்கிறேன்.. நாம் உண்ணும் உணவே எண்ணங்களுக்கு வித்து என சான்றோர்கள் சொல்வதால் அது தூயதாக, உடலுக்கு கேடு விளைவிக்காததாக,எளிதில் செரிப்பதாக இருப்பது அவசியம்.

வாயைக் கட்டினால் உலகம் நம் வசம்  ஒன்று வாய் வழியே நாம் அனுப்பும் உணவு.. இரண்டாவது அதன் வழியே நாம் பேசும் பேச்சு.. இவற்றில் கவனம் மிக முக்கியம்..

பாலா:  அப்பா இனி வயித்தில் வலியே எனக்கு வராதுப்பா.. நான் கவனமா இருப்பேன்!

-திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.