குட்டி குட்டி தீவுகளாக இயற்கை எழில் கொஞ்சும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் யூனியன் பிரதேசமாகும். இந்திய நிலப்பகுதியிலிருந்து 1200 கி.மீ. தூரத்தில் வங்காள விரிகுடாவில் இரண்டு தீவுக் கூட்டங்களாக அமைந்து உள்ளது. சிறியதும் பெரியதுமான 572 தீவுகளைக் கொண்டது. இவற்றில் 38 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள். இதன் மொத்தப் பரப்பளவு 8,249 சதுர கி.மீ. ஆகும். மக்கள்தொகை 2011-ஆம் ஆண்டு 3,79,944.

இத்தீவுகள் வடக்கு தெற்காக மியான்மருக்கும், சுமத்திரா தீவுகளுக்கும் இடையில் 1000 கி.மீ. நீளத்திற்கு சற்று வளைந்தாற்போல் அமைந்துள்ளது. இந்தத் தீவுகளுக்கு மேற்கே வங்களா விரிகுடாவும், கிழக்கே அந்தமான் கடலும் உள்ளது. அந்தமான் தீவுகள் மியான்மருக்கும், நிக்கோபார் தீவுகள் சுமத்திரா தீவிற்கும் அருகில் உள்ளது.
இத்தீவுகள் கடல்நீர் மட்டத்திற்கு மேலே தெரியும் ""கடலடி மலைத்தொடரின்'' உச்சிப் பகுதிகளே ஆகும். இம்மலைத்தொடர் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த எரிமலை சீற்றத்தினால் உருவானவை. இப்பொழும் நர்கொண்டம் மற்றும் பாராடங் தீவுகளில் உள்ள குன்றுகளில் எரிமலை குழம்பு எப்பொழுதாவது வெளிவருவதுண்டு. சில தீவுகள் முழுமையாகவே சிறு குன்றுகள்போல் உள்ளது. இங்குள்ள மலைச்சிகரங்களில் சேடல் சிகரமும் - 737 மீ. (நஹக்க்ப்ங் டங்ஹந்), துலியர் சிகரம் - 642 மீ (பட்ன்ப்ண்ஹழ் டங்ஹந்) மிகவும் உயரமானவை.

அந்தமான் தீவுக் கூட்டத்தையும், நிக்கோபார் தீவுக் கூட்டத்தையும் 145 கி.மீ. அகலம் கொண்ட பத்து டிகிரி கால்வாய் பிரிக்கிறது. இத்தீவுகள் இந்தியாவிற்கும், கிழக்கு ஆசியாவிற்கும் இடையிலான கடல்வழிப் பாதையில் அமைந்து இருப்பதால் நீண்டகாலமாகவே உலகின் பல பகுதி மக்களும் அறிந்துள்ளனர். ஆனாலும், இப்பகுதி பழங்குடி மக்களின் எதிர்ப்பினால் 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை அதிக அளவிலான அந்நியர்களின் குடியேற்றம் தடுக்கப்பட்டது. கி.பி.1050-இல் சோழ மன்னன் இரண்டாம் ராஜேந்திரன் கடாரத்தை வென்றபோது நிக்கோபார் தீவுகளைக் கைப்பற்றினான் என்று வரலாறு தெரிவிக்கிறது. அப்போது இதன் பெயர் ""நக்கவரம்'' என்பதாகும்.
நிக்கோபார் தீவுகள் (1756) டச்சுக்காரர்களாலும், அந்தமான் தீவுகள் (1789) கிழக்கிந்திய கம்பெனியாலும் கைப்பற்றப்பட்டது. பின்னர் 1872-இல் இரண்டு தீவுக்கூட்டங்களும் பிரிட்டிஷ் அரசரின் நேரடி நிர்வாகத்திலும், இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜப்பானின் கட்டுப்பாட்டிலும், பின்னர் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இந்தியாவுடன் இணைந்தது.
இந்த யூனியன் பிரதேசத்தின் தலைநகரம் தெற்கு அந்தமான் தீவு பகுதியில் உள்ள ""போர்ட்ப்ளேர்'' நகரமாகும். இந்தத் தீவுகளில் உள்ள ஒரே நகரம் போர்ட்ப்ளேர்தான். இந்தப் பகுதியில் மட்டுமே மொத்த மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வாழ்கிறார்கள். இங்கிருந்து பிற தீவுகளுக்குச் செல்வதற்கான உள்நாட்டு படகுப் போக்குவரத்து உள்ளது.

கோடைகாலத்திலும் கடல் காற்றினால் வெப்பம் குறைந்து மிதமான வெப்பநிலை உள்ளது. நல்ல மழைப் பொழிவு மற்றும் இதமான பருவநிலையினாலும் இத்தீவுகளின் 92 சதவீதம் பகுதி எழில்மிகு பசுமையான காடுகளாக உள்ளன. இங்குள்ள மலைச்சரிவுகளில் பல அடுக்குகளாக அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியும், கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள மாங்குரோவ் காடுகளும் இயற்கையின் காணத் திகட்டாத அற்புதக் காட்சியாகும்.
விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. அரிசி, தேங்காய், பாக்கு மரம், புளி, ரப்பர், எண்ணெய், பனை, முந்திரி, வாசனை மசாலா பொருள்கள் முதலியன இங்கு பயிர் செய்யப்படுகிறது. உணவுப் பொருள் பதப்படுத்துதல், துணி உற்பத்தி, மரம் அறுத்தல், மரப் பொருள்கள் தயாரித்தல் போன்ற தொழில்களும் உள்ளன.

அந்தமான் தீவுகள்: இத்தீவுக் கூட்டத்தில் 300-க்கும் அதிகமான தீவுகள் உள்ளன. இதில் 25 தீவுகளில் மக்கள் வசிக்கிறார்கள். இதன் நிலப்பகுதி கரடுமுரடானது. மலைகளும் அதனைச் சார்ந்த பள்ளத்தாக்குகளுமாகவே பெரும்பாலும் உள்ளது. சமதளமான நிலப்பகுதி மிகவும் அபூர்வம். இத்தீவுக் கூட்டத்தில் முக்கியமான தீவுகள் வடக்கு, மத்திய, தெற்கு அந்தமான் தீவுகள் ஆகும். இவை அனைத்தும் சேர்த்து கிரேட் அந்தமான் எனப்படுகிறது. இங்கு பழங்குடி மக்கள் குறைவு. ஹிந்தி வங்காள மொழிகள் அதிகம் பேசப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளமும் பேச்சு மொழியாக உள்ளது.
நிக்கோபார் தீவுகள்: இத்தீவுக் கூட்டத்தில் 13 தீவுகளில் மக்கள் வசிக்கிறார்கள். நிகோபாரிஸ் எனப்படும் பழங்குடி மக்கள் அதிகம் உள்ளனர். கார் நிகோபார், கமோர்டா, நான்கௌரி மற்றும் கிரேட் நிகோபார் ஆகியவை முக்கியமான இடங்களாகும்.
2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் பெரும் அழிவை இத்தீவுகள் சந்தித்தன. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். எண்ணற்ற மக்கள் இடம்பெயர்ந்தனர்.
சுற்றுலா

இயற்கையையும், அமைதியையும், மலையேற்றம், படகுப் பயணம் முதலியவற்றையும் விரும்புபவர்களுக்கு அருமையான சுற்றுலாத் தலமாகும். தங்கும் விடுதிகள் பரவலாக உள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பல அடிப்படை வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. போர்ட்ப்ளேயரில் விமான தளம் உள்ளது.
கார்பின் கடற்கரை: போர்ட்ப்ளேயருக்கு 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. சிறிய பகுதி. ஆரவாரமற்ற கடலலைகளில் விசைப் படகுகள் மூலமான தண்ணீர் விளையாட்டுகள் உள்ளது. குளித்து மகிழ ஓய்வெடுக்க மிகவும் வசதியான இடம்.
காந்தி பூங்கா: போர்ட்ப்ளேயரின் ஒரு பகுதி. படகோட்டி மகிழ ""தில்தமன் ஏரி'' உள்ளது. ஏரியைச் சுற்றியுள்ள குன்றுகளில் சிறுவர்களுக்கான பல வகையான விளையாட்டுச் சாதனங்களுடன் கூடிய அழகிய பூங்கா அமைந்துள்ளது.
சாந்தம் தீவு: ஒன்றரை கி.மீ. சுற்றளவுள்ள இச்சிறு தீவு ஒரு துறைமுகமாகும். ஆசியாவிலேயே மிகப்பெரிய மர அறுக்கும் ஆலை உள்ளது. தலைநகருடன் ஒரு பாலம் இத்தீவினை இணைக்கிறது.

ராஸ் தீவு: ஆங்கிலேயர்கள் அந்தமான் தீவுகளை நிர்வாகம் செய்வதற்குத் தேவையான வசதிகளை ராஸ் தீவில் செய்திருந்தார்கள். இச்சிறிய தீவில் அரசு மாளிகை, மருத்துவமனை, தேவாலயம், அச்சுக்கூடம், நீச்சல் குளம் போன்ற அனைத்து வகையான வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தது. 1943-இல் நேதாஜியும் இங்குள்ள மாளிகையொன்றில் தங்கியிருந்துள்ளார். 2004-ஆம் ஆண்டு சுனாமியில் அனைத்தும் இடிந்து பாழடைந்துவிட்டன.
சுண்ணாம்புப் பாறை குகைகள்: இத்தீவுகளில் உள்ள மலைகள் பெரும்பாலும் மணற்பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள், களிமண்ணால் ஆனவை. அவ்வகையில் வடக்கு அந்தமானில் உள்ள பாராடங் தீவில் சுண்ணாம்புப் பாறைகளால் ஆன குன்றுகளும் இருள் சூழ்ந்த குகைகளும் உள்ளன. இக்குகைகளுக்குள் நுழைந்து விளக்கு வெளிச்சத்தில் பார்க்க வேண்டும்.
அங்கு சுண்ணாம்புப் பாறை மேலே சிறு சிறு துவாரங்கள் உள்ளன. அதன் வழியே தண்ணீர் கசிந்து சொட்டு சொட்டாக விழுகிறது. அது தரையில் விழாமல் வடிந்து பல்வேறு வடிவங்களாகத் திரண்டு நிற்கிறது. தொங்கும் சரவிளக்குகள் போன்று விலங்குகள் போன்றும் தோன்றுவது வியப்பூட்டும் காட்சியாகும்.

ராதா நகர் கடற்கரையும், விஜயநகர் கடற்கரையும்: கேவ்லாக் தீவில் இந்தக் கடற்கரைகள் உள்ளன. உலகின் அழகான கடற்கரைகளில் முக்கியமானவை. இங்கு கடல் நீர் மூன்று வண்ணங்களில் தோன்றும். கரையைத் தொடும் அலைகள் வெண்மையாகவும், அடுத்து கொஞ்ச தூரம் பச்சை நிறமாகவும், அதன்பின் நடுக்கடல் கருமையாகவும் தோன்றுகின்றன. இங்கு கடல் அமைதியாக ஆர்ப்பரிப்பு இன்றி இருப்பதால் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் குளித்து மகிழ முடியும்.
மெரினா பூங்கா: கடற்கரையில் உள்ள சிறந்த பூங்கா. இதனருகே ராஜீவ் காந்தி நீர் விளையாட்டு மையம் உள்ளது.
செல்லுலார் சிறை: அந்தமான் செல்லும் இந்தியர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம். ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியவர்கள் அடைத்து வைக்கப்பட்ட சிறைச்சாலை. 693 தனித்தனி அறைகள் கொண்ட 7 கட்டடங்கள் உள்ளன. மையக் கோபுரம் அமைத்து 7 கட்டடங்களும் அதனுடன் இணையும்படி அமைத்துள்ளார்கள். மையக் கோபுரத்தில் இருந்து பார்த்தால் சிறைக்கூடங்கள் தெளிவாகத் தெரியும். கைதிகளைக் கொண்டே இச்சிறைச்சாலை கட்டி முடிக்கப்பட்டது. இச்சிறையில் சுதந்திரப் போராளிகள் பல வகையிலும் சித்திரவதை செய்யப்பட்டனர். இச்சிறையில் தற்போது கைதிகள் இல்லை. தேசிய நினைவுச் சின்னமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!

எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


