ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நேர்மை!

ஓர் ஊரில் யோகி ஒருவரிடத்தில் அனைவரும் ஆசீர்வாதம் பெற்று அருளுரைகளையும் கேட்டு வந்தனர்.

News image
Updated On :4 ஏப்ரல் 2016, 2:27 am

உ. இராஜமாணிக்கம்

ஓர் ஊரில் யோகி ஒருவரிடத்தில் அனைவரும் ஆசீர்வாதம் பெற்று அருளுரைகளையும் கேட்டு வந்தனர்.

திடீரென்று ஒரு திருடன் அவரிடம் வந்தான். அவன் யோகியிடம், ""ஐயா! நான் இதுவரை திருட்டு, பொய் என்று வாழ்ந்து விட்டேன். தற்போது மனம் திருந்தி நேர்மையாக, கெüரவமாக வாழ விரும்புகிறேன்.'' என்றான்.

அதற்கு யோகி, ""எப்போது நீ திருந்த வேண்டும் என்று முயற்சித்தாயோ அப்போதே நீ நல்லவனாகி விட்டாய்...மேலும் உன் குற்றங்களை வேறு ஒளிவு மறைவின்றி என்னிடம் தெரிவித்தாய்...இதே போன்று எப்பொழுதும் உண்மையைக் கடைப்பிடிப்பாய்...மற்றும் திருட்டையும் விட்டுவிடு'' என புத்திமதி கூறினார்.

ஒரு நாள் இரவு வேளை. திருடனுக்குத் தூக்கம் வரவில்லை. அவன் தெருவில் நடமாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்நாட்டு மன்னர் கள்வனைப் போன்று வேடமிட்டு நகர்வலம் வந்தார். அப்போது அவர் திருடனைச் சந்தித்தார். அவனிடம், ""டேய்!...,நானும் திருடன்தான்..., நமது அரண்மனையில் விலை மதிப்பற்ற வைரங்கள் ஆறு உள்ளது. அவற்றைத் திருடி எடுத்து வா! நான் துணைக்கு வருகிறேன். இருவரும் சமமாகப் பங்கு போட்டுக் கொள்வோம்'' எனக் கூறினார்.

முதலில் மறுத்த திருடன், கள்வன் வேடமிட்ட, மற்றும் திடகாத்திரமான உடலைக் கொண்ட மன்னனுக்குப் பயந்தான். மன்னனின் மிரட்டல் வேறு மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது. எனவே திருடச் சம்மதித்து விட்டான்! இருவரும் அரண்மனையில் திருடச் சென்றனர். கஜானா அறையில் மன்னர் சொன்னது போலவே ஆறு வைரக் கற்கள் இருந்தன. அனைத்தையும் திருட மனமின்றி நான்கு வைரக்கற்களை மட்டும் எடுத்துக் கொண்டான்.

திருடன், கள்வன் வேடத்திலிருந்த மன்னனிடம், ""நீ சொன்னது போலவே ஆறு வைரக்கற்கள் கஜானா அறையிலிருந்த பெட்டியில் இருந்தன. எல்லாவற்றையும் திருட எனக்கு மனம் வரவில்லை. எனவே இரண்டை வைத்து விட்டு நான்கை மட்டும் எடுத்து வந்தேன். எனக்கு இது வேண்டாம் எல்லாவற்றையும் நீயே வைத்துக்கொள்! இனி திருடுவதோ, திருட்டுப் பொருளோ எனக்கு வேண்டாம்'' என மாறுவேடத்திலிருந்த மன்னனிடம் கொடுத்தான்.

மாறுவேடத்தைக் கலைத்தான் மன்னன்!

திருடன் பயந்து போய், ""மன்னரா! ஐயோ மன்னா தங்கள் அரண்மனையிலா....?''

""ம்ம்...,பேசாமல் என்னுடன் வா!''

திருந்திய திருடனை அரச சபைக்கு அழைத்துச் சென்றார். விசாரணை செய்ய அமைச்சரையும் அழைத்தார்.

""அமைச்சரே! இதோ திருடன்! நமது முக்கியமான ஆறு வைரங்களைத் திருடிவிட்டு நான்குதான் என்கிறான்! கஜானா பெட்டியில் இருக்கும் வைரங்கள் எத்தனை என்று எண்ணி வாருங்கள்'' என்றார்.

அமைச்சரோ பெட்டியில் இருந்த இரண்டு வைரக்கற்களை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டார்!

""மன்னா! எல்லா வைரக்கற்களையும் இவனே திருடியுள்ளான். அங்கு பெட்டியில் எதுவும் இல்லை!'' என்றார் அமைச்சர்!

மன்னரோ, ""அமைச்சரே! உம்மீது பல புகார்கள் இருக்கின்றன. எனவேதான் இந்த நாடகத்தை நான் நடத்தினேன். அவன் திருடிய நான்கு வைரத்தை என்னிடம் ஒப்படைத்து விட்டான்! நீர் திருடிய வைரங்கள் உமது மடியில் உள்ளது! திருடனாக இருந்து திருந்திய இவனை நமது தலைமை ஒற்றனாக நியமிக்கிறேன்..., திருடத் துணிந்து விட்ட உம்மைப் பதவியிலிருந்து நீக்குகிறேன்'' என்றார்!

நேர்மை அவனுக்கு நல்ல பதவியைத் தந்தது. யோகியாரைச் சந்தித்து வணங்கி அவரது ஆசியையும் பெற்றுக் கொண்டு பதவியேற்றான் அந்தப் புதிய தலைமை ஒற்றன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.