அரங்கம்: அன்புக்கு ஒருவர்!
(வள்ளி பத்தாம் வகுப்பு. ஏழைச்சிறுமி. ஊர் மதுராந்தகம். வேளச்சேரியிலுள்ள பெரியம்மாள் நிர்மலா வீட்டிற்கு இரண்டு நாள் விடுமுறைக்கு வருகிறாள்......நிர்மலா நடுத்தரக் குடும்பம். உறவினர் மீது அன்பாக இருப்பவள்.)


காட்சி-1
இடம்-வீடு
மாந்தர்-நிர்மலா, வள்ளி.
(வள்ளி பத்தாம் வகுப்பு. ஏழைச்சிறுமி. ஊர் மதுராந்தகம். வேளச்சேரியிலுள்ள பெரியம்மாள் நிர்மலா வீட்டிற்கு இரண்டு நாள் விடுமுறைக்கு வருகிறாள்......நிர்மலா நடுத்தரக் குடும்பம். உறவினர் மீது அன்பாக இருப்பவள்.)
வள்ளி: பெரியம்மா...! ரெண்டு நாள் போனதே தெரியலே...,நான் ஊருக்குப் புறப்படறேன்.
நிர்மலா: இன்னும் இரண்டு நாள் இரும்மா...
வள்ளி: இங்கே எனக்கு ஒரு குறையும் இல்லே... நீங்க என் மேல அவ்வளவு அன்பா இருக்கீங்க... பக்கத்து வீட்டு டீச்சர் சிவகாமியும் நல்லா பழகறாங்க...பாடத்திலே சில சந்தேகங்களைக் கேட்டு புரிஞ்சுக்கிட்டேன்.....ஆனா, இங்கே இருந்தா ரெண்டு நாள் பாடம் போயிடுமே....
நிர்மலா: திருவிழா...,பண்டிகை...உறவுக்காரங்க வீடு... இதிலேயே மூழ்கிடாம படிப்பில கவனமா இருக்கிறது நல்லதுதான்.....ஏழைங்களை மேல கொண்டு வர்ற ஏணி அதுதான்....உன்னோட இந்தப் பொறுப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..., அடுத்த தடவை...காலாண்டு..., அரையாண்டு..., விடுமுறை... சமயத்திலே மறக்காம வா...
வள்ளி: (தயங்கியவாறு) இன்னும் ரெண்டு நாள்ல என்னோட அஞ்சு வயசுத் தம்பி வேலுவுக்குப் பிறந்த நாள்.... ஒரு சட்டை எடுக்கணும்.
நிர்மலா: (அவளை ஆதரவாக அணைத்து) எங்கிட்டே கேட்க எதுக்குத் தயக்கம்?...(நூறு ரூபாயும், வழிச்செலவுக்கும் தருகிறாள். ஒரு பையில் தின்பண்டங்களும் தருகிறாள்)....நானும் உன்னோட துணைக்கு வரட்டுமா?
வள்ளி: வேண்டாம்மா...,எனக்குப் பழக்கமாயிடுச்சு.....தியாகராய நகர் போய் சட்டை வாங்கிட்டு ஊருக்குப் போயிடுவேன்....
நிர்மலா: பத்திரமாப் போம்மா...
காட்சி-2
இடம்-பேருந்து
மாந்தர்- வள்ளி, செந்தாழை (ஒரு பெண்மணி)
(வள்ளி பேருந்தில் ஏறுகிறாள். கூட்ட நெரிசல். நிற்க இடம் கிடைக்கிறது....அருகில் நின்றவரிடம் காசைக் கொடுத்து நடத்துநரிடம் அனுப்புகிறாள். சீட்டு வருகிறது.)
செந்தாழை: (வெற்றிலையை மென்றபடி....ஆணவத்தோடு) ...ஏ...! பொண்ணு...தியாகராயநகருக்கு எனக்கு ஒரு சீட்டு வாங்கு...
(வள்ளிக்கு அந்தக் குரல் நெருப்பாகத் தகிக்கிறது....அவள் கொடுத்த நோட்டை தனக்குப் பின்னால் கொடுக்கிறாள். பல கைகள் மாறி...நடத்துநரிடம் போகிறது....சீட்டையும் சில்லறையையும் அவளிடம் கொடுக்கிறாள்.....மீதிக் காசைப் பார்த்த அவள் "காளி' யாக மாறுகிறாள்.)
செந்தாழை: என்னாடி இது...?....., நான் பத்து ரூபாயா கொடுத்தேன்...? நூறு ரூபாய்!....மீதி எங்கே?
(வள்ளி அதிர்ச்சி அடைகிறாள்)
வள்ளி: (நிதானத்துடன்) அம்மா...,எவ்வளவுன்னு நான் பார்க்கலே....,கொடுத்ததை அப்படியே அனுப்பினேன்...
(நகரப் பேருந்தில் இது வழக்கம். அதனால் பயணிகளுக்கு அது வியப்பாக இல்லை.)
செந்தாழை: (கறாரான குரலில்) அதெல்லாம் எனக்குத் தெரியாது...,நூறு ரூபாயில சீட்டு போக....,மீதியை நீதான் தரணும்..
(சிறுமியின் எளிமையான தோற்றம்...செந்தாழையைத் திமிராகப் பேச வைக்கிறது....பலர் அமைதியாக இருக்கிறார்கள்)
ஒரு பெரியவர்: பாவம்...,அந்தச் சின்னப்பிள்ளை....சீட்டு வாங்கிக் கொடுத்தது ஒரு தப்பா? இப்படி ஒரு தொல்லையா?
செந்தாழை: (ஆவேசத்துடன் அவரைப் பார்க்கிறாள்)...அப்படீன்னா நூறு ரூபா நீ கொடு...
(அவர் அமைதியாகிறார்....வள்ளி பின்னால் பார்க்கிறாள்)
அவர்: நான் என்னம்மா செய்யறது? நானும் பின்னால கொடுத்தேன்.
("ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டுக் "காளி'யிடம் கொடுக்கலாமா?'...ஒருவர் எண்ணம். - நூறு ரூபாயையும் நாமே கொடுக்கலாமா? - இது இன்னொருவர்......-எதுவும் செயலாகவில்லை.)
வள்ளி: (தனக்குள்) அந்தப் பணம் எங்கேதான் போச்சு...! கண்கட்டு வித்தையை நடத்துறது யார்? ..."காளி' பொய் பேசறாளா?...வழியிலே எடுத்தாங்களா?....நடத்துநர் சரியாக் கொடுத்தாரா?....இதில் என்னோட தப்பு என்ன? - (உடல் வியர்த்துப் போகிறது!)
- ..."என்ன உலகம் இது, "... - (மீண்டும் கொடூரமான குரல்)
செந்தாழை: எம் பணத்தைக் கொடுத்த பின்னாலதான் நீ கீழே இறங்கணும்....
(வள்ளியின் உள்ளம் பதறுகிறது.)
ஒரு பெண்: (இரக்கத்தோடு) ஐயோ பாவம்....உனக்குத் துணையா யாரும் வரலையா...?
(அவள் இறங்கி அடுத்த பேருந்தைப் பிடிக்கிறாள்)
வள்ளி: (தனக்குள்) சீட்டு வாங்கிக் கொடுத்ததுக்கு "திருடி' ங்கற பட்டமா?....(வழிகிற கண்ணீரைத் துடைக்கிறாள். தன்னிடமிருந்த பணத்தை அவளிடம் கொடுக்கிறாள்)
செந்தாழை: (வாங்கியதும், பார்த்தீங்களா...? செந்தாழை சொன்னா சரியா இருக்கும்..., இதே நோட்டுதான்...,ஒரு சின்ன வாண்டு...செஞ்ச வேலையைப் பார்த்தீங்களா?
வள்ளி: (தனக்குள் காதைப் பொத்தியவாறு) ...கடவுளே!...சோதனை போதும்...,பேரு செந்தாழை....முள்ளாய்க் குத்துது....சீக்கிரம் இவளை அனுப்பு...
(அவள் இறங்குகிறாள். வள்ளியை முறைக்கிறாள்...பழிக்கிறாள்...பெரிய உடம்பை அசைத்தவாறு நகர்கிறாள்.....ஒரு வழியாக "பேய்க்காற்று' ஓய்கிறது....வள்ளி இறங்கி சாலையோரம் நிற்கிறாள்.)
காட்சி-3
இடம்-சாலையோரம்
மாந்தர்- வள்ளி, ஆசிரியை சிவகாமி
வள்ளி: (தனக்குள்) முதல் முதலா தம்பிக்கு ஒரு சட்டை...என் ஆசை இப்படி ஆயிடுச்சே.....
(இதயம் கனக்கிறது. கண்களில் நீர்...அவளுடைய தோளைப் பின்புறமாக ஒரு கரம் ஆதரவாகத் தொடுகிறது. திரும்புகிறாள்....ஆசிரியை சிவகாமி)
சிவகாமி: வள்ளி...ஏன் அழுவுறே...என்னாச்சு?
(நடந்ததைக் கூறுகிறாள்...அவள் முதுகைத் தட்டிக் கொடுக்கிறாள்)
....கவலைப்படாதே....இதால உன்னோட மனசு சோர்ந்திடக் கூடாது...வலிமை ஏற்படணும்...இன்னும் உனக்குத் தெம்பு வரணும்....அதுக்காகத்தான் அந்தக் "காளி' நூறு ரூபாயில....இந்தப் பயிற்சியைக் கொடுத்திருக்கா....(வள்ளியின் மனப்புழுக்கம் குறைகிறது.) ...வா...முதல்ல ஏதாவது சிற்றுண்டி சாப்பிடலாம்...(மனம் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது)...வள்ளி... அழக்கூடாது...இனிமே இது போல நடக்காது. தட்டிப் பறிச்ச அந்த ரூபாயை வெச்சு அவ என்ன கோட்டையா கட்டப்போறா....எண்ணத்தில் தாழ்ந்தவ கிட்டே இருக்கறதும் போயிடும்....போகட்டும்...இந்தக் கழிசடைகளைச் சமாளிக்கும் பக்குவம் உனக்கு வந்திடும்....
வள்ளி: ரொம்ப நன்றி டீச்சர்! ஆறுதல் சொல்லவே...கடவுள் உங்களை இங்கே அனுப்பியிருக்கார்.
சிவகாமி: குரல் கொடுக்கவோ...,உதவிக்கோ..., யாரும் வரலேங்கறதால...அந்த மனப்பான்மையே எங்கும் இல்லேன்னு ஆகாது.... நல்லவங்க...அன்பு காட்டறவங்க பலபேர் இருக்காங்க...தக்க சமயத்திலே உதவிக்கும் வருவாங்க...வாழ்க்கையின் அடிப்படையே நம்பிக்கைதான்...வா...உன்னோட செல்லத் தம்பிக்கு நான் ஒரு சட்டை எடுத்துத் தர்றேன்... அது என்னோட அன்புப் பரிசு!
(வள்ளியின் முகம் மலர்கிறது)
திரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...