ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கருவூலம்: தஞ்சாவூர் தலை யாட்டி பொம்மை!

எதைச் சொன்னாலும் சிந்திக்காமல் 'ஆமாம்' என்பது போல் தலையாட்டுபவர்களை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி தலையாட்டாதேன்னு சொல்லுவதை பல சமயங்களில் கேட்டிருக்கிறோம்.

News image
Updated On :8 ஏப்ரல் 2016, 10:52 am

எதைச் சொன்னாலும் சிந்திக்காமல் "ஆமாம்' என்பது போல் தலையாட்டுபவர்களை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி தலையாட்டாதேன்னு சொல்லுவதை பல சமயங்களில் கேட்டிருக்கிறோம். இப்படி சாமானியர்களும் சகஜமாக உதாரணம் சொல்லுமளவுக்கு புகழ் பெற்றவை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்!

ஆனால் இன்னொரு கோணத்தில் பார்த்தால் இப்பொம்மைகள் "வாழ்க்கையில் எத்தனை சோதனைகளும், வேதனைகளும் வந்து ஆட்டிப்படைத்தாலும், அலைக்கழித்தாலும் வீழ்ந்துவிடாமல் சமாளித்து நிமிர்ந்து நில்' என்று நமக்குத் தன்னம்பிக்கைப் பாடம் சொல்லித் தருகிறது என்றும் கருதலாம்.

தஞ்சையின் அடையாளமாக விளங்கும் இந்தப் பொம்மைகளின் சிறப்பே எந்தப் பக்கம் சாய்த்தாலும் கீழே விழாது, ஆடிக்கொண்டே இருந்து பின் நிமிர்ந்து நின்றுவிடும்! இவ்வாறு கீழே விழுந்து விடாது ஆடும் வகையில் அதன் அடிப்பாகம் அமைக்கப்பட்டிருக்கும்! இதன் மேல் பகுதி சிறியதாகவும், எடை குறைவாகவும், கீழ்ப் பகுதி பெரியதாகவும், எடை மிகுந்தும் இருக்கும்.

மன்னர் சரபோஜி (1797-1832) ஆட்சிக்காலத்தில் இவை மிகவும் புகழ் பெற்றது. மன்னர் இப்பொம்மைக் கலைஞர்களை போற்றிப் பாதுகாத்தார். இவை கடல் கடந்தும் புகழ் பெற்றன.

ஆரம்பகாலத்தில் ராஜா, ராணி உருவப் பொம்மைகளே தயாரிக்கப்பட்டன. இப்பொழுது தாத்தா, பாட்டி, கிறிஸ்துமஸ் தாத்தா போன்ற பல்வேறு உருவங்களில் இவை தயாரிக்கப்படுகின்றன.

பொம்மை தயாரிக்கும் விதம்

அக்காலத்தில் களிமண் கொண்டே தயாரிக்கப்பட்டது. தற்போது களிமண்ணுடன் காகிதக்கூழ், மரத்தூள், மற்றும் "பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்' மாவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பொம்மைகள் முழுமையாகவே கைகளால்தான் செய்யப்படுகிறது.

முதலில் அடிப்பாகமே செய்யப்படுகிறது. களிமண் கொண்டு வளைவான கிண்ணம் போன்ற அமைப்பில் தயார் செய்து இரண்டு நாட்கள் நிழலிலும், இரண்டு நாட்கள் வெயிலிலும் காய வைக்கிறார்கள்.

காகிதக்கூழ் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மாவுகளைப் பிசைந்து அச்சில் வைத்து பொம்மையின் முன்பகுதி, பின்பகுதிகளை வடிவமைக்கிறார்கள். இதனையும் வெயிலில் காய வைப்பார்கள். இது பொம்மையின் மேல் பகுதியாகும்.

பின் களிமண்ணால் ஆன அடிப்பாகத்தையும், அச்சில் உருவான மேல் பகுதியையும் பசை கொண்டு ஒட்டி, காகிதக்கூழ் கொண்டு செப்பனிட்டு வெயிலில் காய வைக்கிறார்கள்.

பிறகு உப்புத்தாள் கொண்டு தேய்த்து, தேவையான வர்ணத்தை பூசுகிறார்கள். குறிப்பாக கண்ணைக்கவரும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீலம் போன்ற வர்ணங்கள் பயன்படுத்தப்படுகிறது. இறுதியாக கண்களை வரைந்து முடித்தவுடன் பொம்மை விற்பனைக்குத் தயாராகிறது.

நடனமாது பொம்மை!

நடனமாடும் பெண்ணின் பொம்மை, மேல்பகுதி, கீழ்ப்பகுதி, தலைப்பகுதி என தனித்தனியாக தயாரிக்கப்பட்டு, ஒன்றின் மேல் ஒன்று சீராகப் பொருத்தப்பட்டிருக்கும். லேசாக ஆட்டிவிட்டால் நடன பாவனையில் இருக்கும் பொம்மை இடுப்பையும் தலையையும் ஆட்டும்.

மேலும் உடல் பாகங்கள் தனித்தனியே உருவாக்கப்பட்டு அவை ஒரு கம்பியில் பொருத்தி அசைந்து ஆடுவதுபோல் உருவாக்கப்படுகிறது.

புவிசார் குறியீடு

தஞ்சாவூரில் மட்டுமே செய்யப்படும் இப்பொம்மைகள் 1999ஆம் ஆண்டு "புவிசார் குறீயீடு' (GEOGRAPHIC CODE) பெற்றது. உலகம் முழுவதும் பலவகையான பொம்மைகள் தயாரிக்கப்பட்டாலும், ஒரு சில பொம்மைகள்தான் பெரும்புகழ் பெற்றுள்ளது. அவ்வகையில் தஞ்சாவூரின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் இப்பொம்மைகள் நூற்றாண்டுகள் கடந்து இன்றும் உலக அளவில் புகழ் பெற்று விளங்குகின்றன.

தஞ்சாவூர் வீணை!
 

வீணை நளினமும் கம்பீரமும் கொண்ட, தந்திகளை மீட்டி வாசிக்கப்படும் இசைக்கருவியாகும். இந்திய இசையின் சிறப்பு வாய்ந்த பல நுட்பமான சங்கதிகளை வீணையில் அழகாக வாசிக்கலாம். பண்டை காலம் தொட்டே வீணை வாசிக்கப்படுகிறது. இதனைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதம், பாகவதம் மற்றும் புராணங்களில் உள்ளது!

பழங்காலத்தில் இதன் தோற்றமும், அமைப்பும் பலவகைகளில் இருந்துள்ளது. அந்நாட்களில் மீன், படகு, போன்ற வடிவங்களில் கூட வீணை செய்யப்பட்டுள்ளது. தஞ்சையை ஆண்ட மன்னர் ரகுநாத நாயக்கர் (1600-1645) காலத்தில்தான் தற்போது நாம் காணும் வடிவத்தை அடைந்தது.

பல மாநிலங்களில் வீணை உருவாக்கப்பட்டாலும் தஞ்சாவூரில் செய்யப்படும் வீணை தனித்தன்மை உள்ளதாக மதிக்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு இதற்கு புவிசார் குறியீடு அளித்துள்ளது.

தஞ்சாவூர் வீணை செய்வதற்கு 40 வயதான பலாமரத்தின் அடிமரமே பயன்படுத்தப்படுகிறது. வீணை 4 1/2 அடி அகலமும் கொண்டிருக்கும். எடை ஏழு கிலோ முதல் 9 கிலோ வரை இருக்கும்.

வீணையின் அமைப்பு

வீணையின் நடுவில் உள்ள தண்டு போன்ற பகுதி தண்டி எனப்படும். இதன் ஒரு பக்கம் குடமும், மற்றொரு முனையில் யாழி முகமும் அமைந்திருக்கும். யாழி முகத்திற்கு அருகில் உருண்டை வடிவில் அமைந்திருப்பது சுரைக்காய் எனப்படுகிறது.

வீணையின் குடம் செய்ய பலாமரத்தினைக்

குடைந்து ஒரு பானையின் தடிமன் அளவிற்கு செய்வார்கள். இது உள்ளே வெற்றிடமாக இருக்கும். இதன் மேல் பலகையில் பல ஒலித்துளைகள் போடப்பட்டிருக்கும்.

குடத்தை சுரைக்காய் என்றும் அழைப்பர்! சுரைக்காய் வீணைக்கு ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும், பயன்படுகிறது. முன்பு சுரைக்காய் குடுவையில் செய்யப் பட்டதால் சுரைக்காய் எனப் பெயர் பெற்றது.

மேலும் வீணையின் மேற்பலகையில் மாடச்சட்டம், பிரடைகள், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், மெட்டுகள், குதிரைகள், லங்கர், நாகபாசம், தந்திகள் என பல நுட்பமான பாகங்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ஏகாந்த வீணை!

ஒரே மரத்துண்டில் குடம், தண்டி, யாழிமுகம், ஆகிய பாகங்கள் செய்யப்பட்ட வீணை ஏகாந்த வீணை எனப்படும்.

ஒட்டு வீணை!

ஒரே மரத்துண்டில் பாகங்கள் தனித்தனியாகச் செய்து ஒன்றாகப் பொருத்துவது ஒட்டு வீணை எனப்படுகிறது. இதில் மரத்தை அறுப்பதற்கு மட்டுமே இயந்திரம் பயன் படுத்தப்படுகிறது. பிற நுட்பமான கலைநயம் மிக்க வேலைகள் அனைத்தும் கைகளினால்தான் செய்யப்படுகிறது. தஞ்சாவூர் வீணைகள் பலாமரத்தினால் செய்யப்படுவதால் தனிச்சிறப்புடன் உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது.

புவிசார் குறியீடு!

விவசாயப் பொருட்கள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், இயற்கைப் பொருட்கள் போன்றவற்றிற்கு புவிசார் குறியீடு பெற முடியும்! இதனைப் பெற அந்தப் பொருளுக்குத் தனி முக்கியத்துவமும், சிறப்புத் தன்மையும் வேறு எங்கும் காண முடியாத வகையில் இருக்க வேண்டும்.

மேலும், அப்பொருள் குறிப்பிட்ட இடத்தில் விளைவிக்க அல்லது தயாரிக்கப்பட வேண்டும். புவிசார் குறியீடு மூலம் அக்குறியிட்ட இடத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும்.

மும்பையில் உள்ள இந்திய அரசின் "அறிவுசார் சொத்துரிமை அமைப்பு - புவிசார் குறியீடு பதிவகம்' இதற்கான சான்றிதழை வழங்குகிறது. இக்குறியீடு பெற்ற பொருட்களை தயாரிக்கும்போது தரக்கட்டுப்பாடு மிக முக்கியம்!

தமிழகத்தில் பத்தமடைப் பாய், நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, மதுரை மல்லி, செட்டிநாடு கூடைகள், உள்ளிட்ட சுமார் 25 பொருட்கள் இச்சான்றிதழைப் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.