நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பலம்

அந்தக் காட்டில் வாழ்ந்து வந்த சிங்கங்களுள் ஒன்று மிகவும் பலசாலியானது. அது காட்டுக்குள் நடந்து செல்லும்போது வழியில் எதிர்ப்படும் மற்ற சிங்கங்கள்கூட அதைப் பார்த்ததும் பயந்து, விலகி ஓடிவிடும்.

News image
Updated On :8 ஏப்ரல் 2016, 12:57 pm

புலேந்திரன்

அந்தக் காட்டில் வாழ்ந்து வந்த சிங்கங்களுள் ஒன்று மிகவும் பலசாலியானது. அது காட்டுக்குள் நடந்து செல்லும்போது வழியில் எதிர்ப்படும் மற்ற சிங்கங்கள்கூட அதைப் பார்த்ததும் பயந்து, விலகி ஓடிவிடும்.

அன்று -

அந்தச் சிங்கம் குகைக்குள்ளிருந்து வெளியில் வந்து பாறையின் மீது அமர்ந்தது. அப்போது எதிரில் ஒரு யானை போய்க் கொண்டிருந்தது.

அதைப் பார்த்த சிங்கம், ஏளனமாகச் சிரித்தது.

""என்னைப் பார்த்து ஏன் அப்படிச் சிரிக்கிறாய்?'' கேட்டது யானை.

""நீ உயரத்திலும், பருமனிலும் என்னை விடவும் பல மடங்கு பெரியவனாக இருக்கிறாய்...''

""ஆமாம். அதற்கென்ன?''

""ஆனால், நீ என்னை வெல்ல முடியாதே. நான் ஒரே பாய்ச்சலில் உன் முதுகில் ஏறி குந்தி, என் விரல்களால் உன்னைக் கீறி வீழ்த்திவிட முடியும். அத்தகைய பலம், இத்தனைப் பெரியவனான உனக்கு இல்லையே'' என்றது சிங்கம்.

அதைக் கேட்ட யானை, ""படைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பலம் இருக்கிறது. பலத்தினால் ஒருவர் செய்யக்கூடிய வேலையை அடுத்தவர் செய்வது என்பது கடினம்'' என்றது.

""நீ செய்ய முடிந்ததை என்னால் செய்ய முடியாதா? வா, அதையும் பார்த்து விடலாம்'' என்ற சிங்கம், யானையுடன் புறப்பட்டது.

இரண்டும் காட்டுக்குள் நடக்கத் தொடங்கின.

அது ஒற்றையடிப் பாதை. இருபுறமும் அடர்ந்த முட்புதர்கள் நிறைந்த காடு. வழியில் ஓரிடத்தில், பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மரம் வேருடன் சாய்ந்து பாதையை அடைத்துக் கொண்டு கிடந்தது.

அதைப் பார்த்த சிங்கம், ""அச்சச்சோ! பாதையில் மரம் விழுந்து கிடக்கிறதே. எப்படிப் போவது? பக்கத்திலும் வேறு வழியில்லை. வா, திரும்பிப் போய் விடலாம்'' என்றது.

""ஏன்?... நீதான் பெரும் பலசாலியாச்சே. மரத்தைத் தூக்கி ஓரத்தில் போடு. நாம் இதே வழியில் போகலாம்'' என்றது யானை.

""அதுவும் சரிதான்'' என்ற சிங்கம், தன் பலம் கொண்ட மட்டும் மரத்தைப் புரட்டிப் பார்த்தது.

ஊகூம். மரம் அசையக்கூட இல்லை.

கிளையைப் பிடித்து இழுத்தது.

அதுவும் அசையவில்லை.

இழுத்து இழுத்துப் பார்த்து களைத்துப் போன சிங்கத்தால் மரத்தை அசைக்கக்கூட முடியவில்லை. எப்படித் தூக்கி அப்புறப்படுத்திட முடியும்?

""இது முடியாத காரியம். வா, திரும்பிப் போவோம்'' என்றது சிங்கம்.

""அவசரப்படாதே; சற்றுப் பொறு'' என்ற யானை, தன்னுடைய துதிக்கையினால் அந்த மரத்தைத் தூக்கி தூரப் போட்டது.

அதைப் பார்த்து திகைத்துப்போன சிங்கம், ""நண்பா! நீ சொல்லியது சரியே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பலம் உண்டு என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். உனக்குள்ள பலத்தை உணராமல் உன்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்ததற்காக என்னை மன்னித்து விடு. இனிமேல் நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்'' என்றது.

""ஊம்'' என்ற யானை புன்சிரிப்புடன், சிங்கத்தின் முதுகை துதிக்கையினால் தடவிக் கொடுத்தது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.