அரங்கம்: சுமைதாங்கி!
என்னங்க.. குழந்தை புத்தகப் பை கனமா இருக்கே.. சித்தே மாடிப்படியில் தூக்கிக்கிட்டுப் போய்


காட்சி-1
இடம்-வீடு
நேரம்-காலை மணி எட்டு
கதை மாந்தர் - அம்மா பார்வதி,
அப்பா கைலாஷ், மகன் கார்த்திக்
பார்வதி - கார்த்தி ஸ்கூலுக்குக்கிளம்பு.. ஆட்டோ வர்ற நேரம்.. டிபன் பாக்ஸ் எடுத்து வை.. தண்ணீர் பாட்டில் மறந்திடாதே.. அப்புறம் ஹோம் ஒர்க் பண்ணினியே அந்த நோட்டை வச்சுக்க...இன்னிக்கு என்னென்ன வகுப்பு பாடத்திட்டப்படி எல்லா புத்தகங்களும் எடுத்துக்கோ
கார்த்தி - எடுத்து வச்சிட்டேம்மா...
அப்பா கைலாஷ் - ஏதோ ப்ராஜக்ட் பண்ணினியே...,அதை இன்னிக்குத்தானே சமர்ப்பிக்கணும்?...
கார்த்தி - நல்ல வேளை...,ஞாபகப் படுத்தினீங்க டாடி.. மறந்தே போயிட்டேன். (எடுத்து வைக்கிறான்)
பார்வதி - என்னங்க.. குழந்தை புத்தகப் பை கனமா இருக்கே.. சித்தே மாடிப்படியில் தூக்கிக்கிட்டுப் போய் ஆட்டோவில் வைச்சுட்டு வாங்களேன்.
கார்த்தி - இது ஒண்ணும் கஷ்டம் இல்லேம்மா....,படியில் இறங்கிடுவேன்.. பள்ளியில் மூணாவது மாடிக்கு தூக்கிக்கிட்டு ஏறத்தான் கஷ்டப் படறேன்..
(ஆட்டோவில் ஏற்றி விடுகிறார் கைலாஷ்... ஆட்டோவில் பாதி இடம் புத்தக மூட்டைகள்.. சாப்பாட்டு கூடை, தண்ணீர் பாட்டில்கள் தான்)
கைலாஷ் - (வீட்டுக்குள் வந்து) பார்வதி.. இப்போ எல்லாம் குழந்தைகள் தன் எடைக்குச் சமமாக புத்தக மூட்டை தூக்கறாங்க. மனதில் பாடச் சுமை.. முதுகில் புத்தகச் சுமை.
பார்வதி - அதிலும் கார்த்தி இருக்கானே...தேவை இருக்கோ இல்லியோ... எல்லா புத்தகங்களையும், நோட்டுகளையும் தூக்கிப் போறான்.
கைலாஷ் - நாங்க படிக்கிற காலத்தில் இத்தனை புத்தகம் நோட்டு கிடையாதுப்பா.. ஒண்ணு ரெண்டு இருக்கும்.. சிலேட்டு பென்சில் எடுத்துப் போவோம்.. பேனாவே ஐந்தாம் வகுப்பில் தான்.. அதுவும் இங்க் பேனா. பணக்கார வீட்டுப் பிள்ளைகள் பால் பாயிண்ட் பேனா எடுத்து வருவார்கள்.
பார்வதி - இன்னும் பத்து வருஷம் ஆனா ஆளுக்கு ஒரு லேப் டாப் வேறே! சின்ன குழந்தைகள் எடுத்துப் போகும் போல...
கைலாஷ் - இந்தக் கணினி யுகத்தில் பாடப் புத்தகங்களை கணினியில் பதிவு செய்து எல் ஈ டி புரொஜெக்டர் மூலமாக திரையில் காட்டி படிக்கவைக்கலாம்..
பார்வதி - நம்ம நாட்டில் கிராமப் பள்ளிகளின் நிலையைக் கருத்தில் வச்சுக்கிட்டு யோசிங்க...புத்தகம் வாங்கவே மாணவர்கள் சிரமப் படறாங்க...
கைலாஷ் - இன்னும் நம்ம தேசம் பல கால கட்டங்களைத் தாண்ட வேண்டி இருக்கு, கல்வி முன்னேற்றத்தில்.. அதுவரை....
பார்வதி - குழந்தைகள் சுமை தாங்கிகள்தான்!

காட்சி-2
இடம் - வகுப்பறை; காலம் - 3 வது பீரியட்
மாந்தர் - ஆசிரியர் நல்லசிவம், மாணவ மாணவியர்
ஆசிரியர் நல்ல சிவம் - மாணவர்களே.. இந்த மூணாவது பீரியட் ஆசிரியர் வரவில்லை. அந்த வகுப்பை நான் எடுத்துக் கொண்டு தமிழ் இலக்கணம் எடுக்கலாம் என இருக்கிறேன்.. எல்லோரும் தயார் தானே..
மாணவன் பரணி - சார்.. இன்னிக்கு நான் இலக்கண புத்தகம் எடுத்து வரவில்லையே.. என்ன என்ன பீரியடோ அதற்குத் தானே எடுத்து வந்திருக்கிறேன்.
(பல மாணவர்களும் எழுந்து): சார் நாங்களும் எடுத்து வரவில்லை.
நல்லசிவம் - சரி யார் யார் எடுத்து வந்திருகிறீர்கள்?...
கார்த்திக் - சார் நான் எல்லா புத்தகம் நோட்டுகளுடன் எப்போதும் வந்து விடுவேன்.
நல்ல சிவம் - சிரித்தபடி...,என்ன செய்வது...,சுமை வர வர மாணவர்களுக்குக் கூடிக் கொண்டே செல்கிறது. சரி!...பரவாயில்லை இந்த வகுப்பில் நாம் பொது அறிவை வளர்ப்போம்... அக்காலத்தில் அரச பரம்பரையில் இளவரசர்களும், அரசிளங்குமரிகளும் முனிவர் ஆசிரமத்தில் படிப்பார்கள்.. கட்டு கட்டாக சுற்றப்பட்ட ஓலைச் சுவடிகள் தான் அப்போது. அவற்றைச் சுமந்து செல்ல ஒரு பணியாள் வைத்திருப்பர். அவருக்கு என்ன பெயர் தெரியுமா?.....
(பதில் தெரியாமல் மாணவர்கள் விழிக்க)
நல்ல சிவம் - அவருக்கு "தூக்குத் தூக்கி' என்று பெயர்.
கார்த்திக் - சார்...,அந்தப் பெயரில் ஒரு சினிமா படமும் வந்ததாக தாத்தா சொல்வார்!
நல்ல சிவம் - ஆமாம்.. மாணவர்களே... எகிப்து நாட்டில் சூயஸ் கால்வாய் வெட்டப் படும்போது 15 லட்சம் தொழிலாளர்கள் மண்ணை வெட்டி தோளில் பாரத்தைச் சுமந்து தான் அப்புறப் படுத்தினார்கள். இப்போது போல 1868 ஆண்டு வாக்கில் பொக்லைன் எந்திரங்கள் வரவில்லை.
ஒருமாணவன் - சார்! சூயஸ் கால்வாய் வெட்டலாம் என்ற யோசனை எப்படி வந்தது.
நல்லசிவம் - 1798 ஆம் ஆண்டு பிரெஞ்சு மாவீரர் நெப்போலியன் சக்கரவர்த்தி எகிப்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது அவரிடம் ஒரு புராதன நீர்வழிப் பாதை எகிப்து நாட்டில் இருந்ததை தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அவர் அதை மீண்டும் தோண்டி பயன் பாட்டுக்குக் கொண்டுவர உத்தரவிட்டார். ஆனால் நில அளவீட்டாளர்கள் அவரிடம் செங்கடலின் நீர் மட்டம் மத்தியதரைக் கடலை விட 33 அடி உயரம் ஆகையால் அங்கங்கே தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என தவறான ஒரு தகவலைச் சொன்னதால் அது நின்று போனது.
கார்த்திக் - அப்புறம் என்ன ஆனது சார்?
நல்லசிவம் - 1830இல் எஃப்.ஆர் செஸ்னி என்பவர் சரியாக சர்வே நடத்தி உண்மையில் அப்படி இல்லை. சூயஸ் கால்வாய் வெட்டலாம் என பிரிட்டிஷ் அரசிடம் தன் ஆய்வை தெரிவித்தார். பின் 1869 நவம்பர் 17இல் கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டு பயன் பாட்டுக்கு வந்தது. தற்போது 2014இல் மேலும் கிளை கால்வாய்கள் அமைக்கப்பட்டு 2015ல் பயன்பாட்டுக்கு வந்தபோது ஒரு நாளைக்கு 97 கப்பல்கள் செல்ல வழி பிறந்தது. முன்பு 49 கப்பல்கள் பயணித்தன. இப்போது இரட்டிப்பானது. இந்த 193 கிலோமீட்டர் கால்வாயால் ஆப்பிரிக்காவைச் சுற்றி வரும் 7300 கி.மீ தூர பயணம் மிச்சமானது. நேரம், எரிபொருள், பராமரிப்பு என பலவகையிலும் சிக்கனம் கிடைத்தது.
ஒரு மாணவன் - சார்..., ஒரு ஆள் அதிகபட்சம் எவ்வளவு எடை தூக்க முடியும்?..
நல்லசிவம் - 457.5 கிலோ தூக்கி சாதனை படைத்தார் ஆண்டிபோல்டன் என்ற அமெரிக்க பளு தூக்கும் வீரர் 2010 ஆம் ஆண்டு.

ஆசிரியர் - மாணவர்களே அக்காலத்தில் சிறு வியாபாரிகள் தலையில் சுமை சுமந்து தான் பொருட்களை விற்று வந்தனர். ஊர் ஊராக நடந்து செல்லும் அவர்கள் தங்கள் சுமையை இறக்கி ஏற்ற ஆள் இல்லாத வழிப் பாதைகளில், அரசர்கள் பலகை போலக் கற்களை நட்டிருந்தனர். அதில் சுமையை தானே இறக்கிவிட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டு திரும்ப பயணம் செய்வார்கள். அந்தக் கற்களுக்கு சுமை தாங்கி என்று பெயர். ஏரிக்கரை, குளக் கரை, ஆற்றங்கரைகளில் கிராமத்தில் நாம் இன்றும் அவற்றைக் காணலாம்.
ஒரு மாணவி - விலங்குகளில் அதிக எடை தூக்கும் பலம் உடையது எது?
ஆசிரியர் - யானை தான்!.. பெரும் மரக் கட்டைகளை தூக்கவும் புரட்டவும் அடுக்கவும் கேரளாவில் அவற்றைப் பழக்கிப் பயன் படுத்துகிறார்கள். பறவைகளில், கழுகு, தன் உடல் எடையை விட நான்கு மடங்கு எடையைத் தூக்கியபடி பறக்க இயலும்!.... எறும்புகளின் வலிமை அசாதாரணமானது!.... 500 மில்லிகிராம் எடையுள்ள எறும்பு தன் எடையை விட 50 மடங்கு எடையை வாயில் கவ்வி இழுத்துச் செல்லும்! சில தொழிலாளி எறும்புகள் தன் தலையால் தன் எடையை விட 5000 மடங்கு எடையை முட்டும் வலிமை பெற்றவை என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது!
கார்த்தி - சார்!... எங்க அம்மா என்னை கழுதை பொதி சுமக்கிற மாதிரி சுமந்துகிட்டு போறான்னு சொல்வாங்க சார்....
நல்லசிவம் - இந்த நேரத்தில் சரியாக ஞாபகப்படுத்தினாய். 5000 ஆண்டுகளாக கழுதைகளை பாரம் சுமக்க மக்கள் பயன் படுத்தி வருகிறார்கள். சலவையாளர்களின் துணி மூட்டைகளை அவை சுமப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இன்னும் மலைக் கிராமங்களில் மளிகை சாமான்கள் பொருட்களைச் சுமக்கக் கழுதைகள் பெரிதும் பயன்படுகின்றன! அதுமட்டுமா! முதல் உலகப் போரில் காயமடைந்த வீரர்களைச் சுமந்து செல்ல கழுதைகளே பயன் பட்டன. இத்தாலியில் கழுதைப் படை என ஒன்றும் இருந்தது!
ஒரு மாணவி - சார் எருதுகளின் வலிமை என்ன?..
ஆசிரியர் - எருதுகள் 900 கிலோ சுமையை தூக்கும்!...அதைவிட 4 மடங்கு வண்டியில் இழுக்கும். கொரில்லாக்கள் தன் எடையைப் போல 10 மடங்கு தூக்கிச் செல்லும்...6350 கிலோ எடையுள்ள ஒரு ஆப்பிரிக்க யானை 9000 கிலோ தூக்க முடியும்.. இது 130 மனிதர்கள் திறனுக்குச் சமம். 275 எடையுள்ள புலி இருமடங்கு எடையைத் தூக்கியபடி பத்தடி வரை மரத்தில் ஏறும். ரீனோசெரஸ் என்ற குளவி தன் எடையைப் போல 850 மடங்கு தூக்கிச் செல்லும். இதை ஒப்பிட , மனிதனுக்கு அந்த வலிமை இருந்தால் அவனால் 65000 கிலோ அதாவது 65 டன்னைத் தூக்கமுடியும்.
கார்த்திக் - வியப்பாக உள்ளது!
ஆசிரியர் - இதைவிட வேடிக்கை நம் ஊர் கிராமங்களில் சாணி வண்டு என கரு நிற வண்டு உருண்டையாக பின்னங் கால்களால் உருட்டிச் செல்வதைக் கண்டிருக்கலாம்.
இது தன் எடை போல 1141 மடங்கு எடையை உருட்டும்!
மாணவ மாணவிகள்: ரொம்ப ஆச்சரியமா இருக்கு சார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...