அரங்கம்: ஓசை!
மாணவர்களே...! தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது.. அதே சமயம் தேர்தலும் வர இருக்கிறது.


காட்சி-1
கதை மாந்தர் - மாணவர்கள் அனுஷா,
ராம் - ப்ரியா மற்றும் பலர்
ஆசிரியர் - ஞானப்பிரகாசம்
இடம் பள்ளி வகுப்பறை
ஆசிரியர் ஞானப் பிரகாசம்: மாணவர்களே...! தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது.. அதே சமயம் தேர்தலும் வர இருக்கிறது. தொடர்ந்து பல திருவிழாக்கள் நடை பெற உள்ளன. மாசி மகம், பங்குனி உத்திரம். மற்றும் சுப தினங்களில் திருமண வைபவங்கள் நடக்கும். இச்சமயங்களில் எல்லாம் பல பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள் கச்சேரிகள் இசை நிகழ்ச்சிகள் நடக்கும். அப்போதெல்லாம் ஒலி பெருக்கிகள் மற்றும் மாபெரும் ஸ்பீக்கர் பெட்டிகள் மூலம் பலத்த ஓசையில் நிகழ்ச்சிகள் நடக்கும் அல்லவா...?
ப்ரியா: ஆமாம் சார்! எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. அதில் பக்தி திருவிழாக்கள், கூட்டம், இசை நிகழ்ச்சிகள், பட்டி மன்றம், போன்ற எந்த வைபவம் நடந்தாலும் ஒலியானது அக்கம் பக்கம் பல வீடுகள், மருத்துவ மனைகளில் சத்தமாகக் கேட்கும். இதனால் நாங்கள் படிக்க முடியாமல் சிரமப் படுவோம். ஜன்னல், தெருக் கதவுகளைச் சாத்தி வைத்தாலும் ஓசை எங்கள் கவனத்தைத் திருப்பும். "இதை எப்படி சமாளிப்பது?' என்பது பலருக்கும் ஒரு கேள்விக் குறி.
அனுஷா: சார்! எங்கள் வீட்டுக்கு எதிரில் ஒரு மாவறைக்கும் மெஷின் உள்ளது. அந்த ஓசையும் அதிர்வும் எங்கள் தூக்கம், படிப்பு இவற்றை பாதிக்கிறது.. நாங்கள் அந்த ஓசையுடன் வாழ பழகி விட்டோம்
ராம்: சார்...! எங்கள் வீட்டு மாடியில் ஒரு வயலின் வகுப்பு நடக்கிறது. காலை மாலையில் மாணவர்கள் பயிலும் ஓசை எங்கள் வீட்டில் கேட்கும். என்ன தான் இனிமையாக இருந்தாலும் ஓசை எங்கள் படிப்புக்கு இடைஞ்சலாகத் தான் இருக்கு...!
ஆசிரியர்: மாணவர்களே! நாம் இன்று ஒலி யைப் பற்றி படிக்குமுன் அதன் வேகம் அழுத்தம் அதன் வீச்சு இவற்றைபற்றி முதலில் அறியலாம். கிராமங்களில் வயல் வெளிகளில் நடக்கும் போது எங்கோ நாற்று நடும் பெண்களின் பாட்டு பல கிலோமீட்டர் தூரம் வரை கடந்து நம் காதுகளில் விழும். அதிகாலை சேவல் கொக்கரக்கோ என்பது பல வீடுகளுக்க்குக் கேட்கும். பூப் பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை, எனப் பாடுவார் கவிஞர் வைரமுத்து.
ராம்: பூப்பூக்கும் ஓசை எல்லாம் கேட்குமா என்ன?
ஆசிரியர்: நிச்சயமாக! ஆனால் நம்மால் அல்ல. பட்டாம்பூச்சிகளும், தேனீக்களும் அந்த சப்தத்தைக் கேட்க முடியும்!
அனுஷா: சில சமயம் பின்னால ஹார்ன் சத்தம் கூட கேக்க மாட்டேங்குதே சார்!
ஆசிரியர்: நம் காதிற்கு குறைந்த பட்சம் சுமார் 5டெசிபல் முதல் 10டெசிபல் சப்தம் வரை (இது மிக மெல்லிய ஓசையாகும்)கேட்கும் திறன் இருக்கிறது. 5டெசிபலுக்கும் கீழான சப்தத்தை மனிதர்கள் உணர முடியாது! இவ்வளவு துல்லியமான மனிதக் காதுகளுக்கு பெரும் ஓசைகள் கூட கேட்காமல் போவது ஓலி மாசு என்னும் விளைவால்தான்!
ராம்: ஒலி மாசு என்றால் என்ன சார்?
ஆசிரியர்: நகர்ப் புறத்தில் பல விதமான வாகன ஓட்டம், தொழிற்சாலைகள் சத்தத்தால் ஒலியானது கலவையாகி சிறு ஒலிகள் நமக்கு கேட்பதில்லை. இரைச்சலும் அதிக சப்தமும் உடலுக்குக் கேடு விளைவிக்கும். இதைத்தான் ஒலி மாசு என்கிறார்கள். ஒலி மாசினால் இரத்த அழுத்தம் கூடும். தூக்கமின்மை உண்டாகும். காதின் கேட்கும் திறன் பழுதடையும்.
அனுஷா: இது விலங்குகளையும் பாதிக்கும் போலிருக்குதே!
ஆசிரியர்: விலங்குகளுக்கு பெருத்த ஓசையும் இரைச்சலும் அவைகளின் அன்றாட இரை தேடும் பழக்கம், முட்டையிடுதல் இவற்றை பாதிக்கும். விலங்குகள் ஒன்றுக்கொன்று மிக நுட்பமான சங்கேத மொழியில் தகவல்களைப் பரிமாறுவது ஓசையால் பாதிக்கும். விமான நிலையங்களில் ஜெட் விமானங்களின் பெருத்த ஓசையால் அருகில் உள்ள விலங்குகள் துயரம் அடையும். கடலில் கப்பல்களின் பெருத்த ஓசை அங்கு வாழும் நண்டு இனத்தை அழியச் செய்கிறது.
ராம்: சென்ற மாதம் திமிங்கிலங்கள் கூட்டமாகக் கரையேறி இறந்ததுக்கும் ஒலி மாசுதான் காரணமா? பார்க்கவே பரிதாபமாக இருந்ததே சார்!
ஆசிரியர்: ரொம்ப சரி! அந்தத் திமிங்கிலங்கள் வழி தவறி விட்டன என்கிறார்கள் விலங்கியல் நிபுணர்கள். விமானங்களின் ஓசை 65 டெசிபல் அளவைத் தாண்டும் போது பலருக்கு மாரடைப்பை உண்டு பண்ணும்! பல விமானங்கள் உயரே எழும் சமயம் 140 முதல் 170 டெசிபல் வரை இரைச்சல் இருக்கும். நாம் மூச்சு விடும் ஓசை 10 டெசிபல். மெதுவாக பேசினால் 20 டெசிபல். டிவி நிலையத்தில் செய்தி வாசிப்பவ்ரின் குரல் ஓசை 30 டெசிபல்கள் .
அனுஷா: மிகப் பெருத்த ஓசையின் அளவு?
ஆசிரியர்: மிகப் பெருத்த ஓசை 194 டெசிபலுக்கு மேல் கிடையாது என்பது பெளதிக விதி.
ராம்: அந்த ஓசையை நம்மால் கேட்க முடியுமா சார்?
ஆசிரியர்: முடியாது! ஏனென்றால் 180 டெசிபல் ஓசையிலேயே நம் செவிப் பறை சவ்வு கிழிந்து விடும்!
அனுஷா: கேக்கவே பயமா இருக்கு சார்.
ஆசிரியர்: ஆகவே மாணவர்களே.. பொதுவாக படிப்பதற்கு அதிகாலை ஏன் நல்லது என்றால் சுற்றுப்புற ஓசை அடங்கி நிசப்தம் பொதுவாக நிலவும் நேரம் அது... வகுப்பு நாளை தொடரும்.
(மணி அடிக்க பியூன் சுத்தியல் எடுக்கிறார்.)

காட்சி 2
இடம் ராம் வீடு
மாந்தர்: மாணவன் ராம், அப்பா தாசரதி, அம்மா கெளசல்யா.
ராம்: அப்பா இன்னிக்கு வகுப்பில் ஆசிரியர் பெருத்த ஓசை இரைச்சல் இவற்றால் செவிக்கு உண்டாகும் பாதிப்பை பற்றி பாடம் நடத்தினார்.
அப்பா: இன்னிக்கு பலர் காதில் ஒலி பெருக்கி மாட்டியபடி சாலையில் பாடல்கள் கேட்டபடியும் பேசியபடி செல்வதையும் பார்க்கிறோம். அது காதுக்கு கேடு விளைவிக்கும்..யாரும் சொன்னால் காதில் வாங்குவதில்லை.
கெளசல்யா: ஏங்க..., மைக் வரும் முன் எப்படி இருந்திருக்கும் அந்தக் காலத்தில்..?
அப்பா தாசரதி: என் தாத்தா சொல்வார். மேடை நாடகங்களில் கத்தி பலத்த குரலில் பாடுவார்களாம். எஸ் ஜி கிட்டப்பா, கே பி சுந்தராம்பாள், டி ஆர் மகாலிங்கம் இவர்கள் உரத்த குரலில் கடைசி வரிசை ரசிகனுக்கும் கேட்கும் படி பாடும் வல்லமை மிக்கவர்கள். அறிவிப்பாளர்கள் ஒரு புனல் போன்ற அமைப்பை கையில் வைத்து அதன் வாயில் உரக்க பேசி அறிவிப்பு செய்வார்களாம் அக்காலத்தில்.
ராம்: அப்பா... உலகின் மிகப் பலத்த ஓசை எது. எப்போது எங்கே கேட்டது
தாசரதி: சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். 1883 ஆம் ஆண்டு இந்தோனேஷியா தீவு ஒன்றில் கிராக்டோவா எரிமலை வெடித்த சப்தம் தான் உலகிலேயே பலத்த ஓசை என கருதுகின்றனர்.
ராம்: அது எப்படிப்பா இருந்தது?
தாசரதி: அந்த ஓசை 40 மைல் வரை இருந்தவர்களின் செவிப் பறையைச் சேதப் படுத்தியது. 3000 மைல் வரை அந்த ஓசை உணரப்பட்டது.2891 மைல் தூரத்தில் மொரிசியஸ் நாட்டில் அந்த சத்தம் கேட்டது. உலகின் அனைத்து புவி ஆய்வுமைய பார கிராஃப் கருவிகளில் ஓசை பதிவானது.அந்த ஓசையின் வலிமை புவியை நான்கு முறை வலம் வந்தது. அப்போது ஏற்பட்ட சுனாமியால் 36000 பேர் உயிரிழந்தனர். அந்த வெடிப்பின் வலு வானது 13000 மடங்கு அமெரிக்கா ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டுக்கு நிகரானது.
அம்மா கெளசல்யா: ஏங்க...., மிகப் பலத்த ஓசையுடைய வாத்யம் எது?
தாசரதி: முரசு..., ஆலய மணிகள்...., கட்ட பொம்மன் மகாராஜா பாஞ்சாலங்க் குறிச்சி கோட்டையில் இருந்த படி திருச்செந்தூரில் தீபாராதனை நடை பெறும் நேரம் அறிய ஒவ்வொரு காத தூரத்திலும் மணிகளை ஒலிக்கச் செய்தாராம். மொத்த தூரம் 61 கிலோமீட்டர் தூரத்தை வரிசையாக 10 மண்டபங்கள் அந்த நேரத்தை முரசு மூலம் மாற்றி மாற்றி அடித்து அறிவித்தன. ஒரு காதம் என்பது ஆறே முக்கால் கிலோமீட்டர் ஆகும்.
கெளசல்யா: ஏங்க உலகத்திலேயே பெரிய கோவில் மணி எங்கே இருக்குங்க?
தாசரதி: ரஷ்யாவில் கிரெம்ளினில் உள்ள மணி தான். உயரம் 20அடி விட்டம் 22 அடி எடை 2 லட்சம் கிலோ. ஆயிரம் ஆணடுகள் பழமை வாய்ந்தது.
ராம்: அப்பா மணிகள் எப்போ உபயோகத்துக்கு வந்தன..
அப்பா தாசரதி: கி.மு 1000 த்திலேயே வந்து விட்டன. அனேகமாக எல்லா சமய வழி பாடுகளிலும் மணி உள்ளது.
அம்மா: என்னங்க, நம்ம பூஜை மணி நாக்கு கழட்டிக் கிடுச்சி.. கொஞ்சம் மாட்டிவைங்க
அப்பா: கேட்டியா ராம்.. நாக்கு இல்லா விட்டால் மணி கூட நிசப்தம் தான்..சத்தம் போடாது
காட்சி 3
இடம்: மெக்கானிக் பாலு டூவீலர் பழுது பார்க்கும் கடை
மாந்தர்: பாலு, கருணாஸ்.
(பாலுவிடம் கருணாஸ் வண்டியை ஓட்டி நிறுத்துகிறார்.)
பாலு: என்ன சார் கோளாறு...?
கருணாஸ்: அதை ஏன் கேட்கறீங்க...? வண்டி ஓடினால் ஹாரன் தேவையில்லை போலிருக்கு. சத்தம் பட பட வென வெடி தான், ஊரே என் வண்டியை வேடிக்கை பார்க்குது.
மெக்கானிக் பாலு: அது ஒண்ணுமில்லே..., சைலன்ஸரில் ஓட்டை விழுந்திடுச்சி.. சரி பண்ணிடலாம்.
கருணாஸ்: பாலு, சைலன்ஸரில் என்ன தாம்ப்பா இருக்கு.. எப்படி சத்தத்தை வடிகட்டுது?
பாலு: மோட்டார் சைக்கிள் எஞ்சினில் உள்ளே பெட்ரோல் காற்றுடன் எரிந்து வெடிக்குது. அந்த வாயு புகையா வெளியேறுவது தான் சத்தம். சைலன்சரில் அந்த சூடான வாயு பல அடுக்குகளில் குளிர வைத்த பின் வெளியேறும் போது சத்தம் இருக்காது.. சைலன்சரில் ஓட்டை என்றால் அப்படியே சூடான வாயு வெளியேறும் சத்தம் தான் பட் பட்! ஊரை வேடிக்கை பார்க்க வைக்கிறது. சைலன்சர்களில் கரிப் படிமத்தை நீக்கினால் அதிக மைலேஜ் கிடைக்கும்.. வண்டி வேகமாக பிக் அப் இருக்கும். இதை பலர் கவனிக்காது வண்டி மைலேஜ் தர மாட்டேங்குது என்பார்கள்.
கருணாஸ்: துப்பாக்கியிலேகூட இப்படித்தானா?
பாலு: ஆமாம். ஜேம்ஸ்பாண்ட் 007 துப்பாக்கி முனையில் பொருத்தி எதிரிகளைச் சுடுவாரே சத்தமில்லாமல்.. அது கூட சைலன்சர் பொருத்திய துப்பாக்கிதான்..
கருணாஸ்: ஏம்ப்பா! பாலு இந்த சைலன்ஸரை வீட்டுக்குள்ளே வச்சிக்கிற மாதிரி மாடல் எதுவும் இருக்கா..?
பாலு: ஏன் கேட்கிறேங்க...?
கருணாஸ்: ஒரு பழைய பிரிட்ஜ் வீட்டிலிருக்கு... ராத்திரி பூரா அது ஓடற ங்கொய் சத்தம் தூக்கத்தையே கெடுக்குது!
பாலு: சத்தமில்லாம குறைந்த மின்சார செலவில் குளிர்விக்கும் 5 ஸ்டார் குறியுள்ள, மொத்தம் ஒரு வருடத்துக்கு 180 முதல் 220 யூனிட் வரை செலவாகும் குளிர் சாதனபெட்டிகள் வந்துடுச்சி...,மாத்த முயற்சி பண்ணுங்க... யோசிக்காதீங்க...கரண்ட் சிக்கனத்தில் செலவு பண்ற காசு வந்திடும்.
(அப்போது ஒரு பாடல் கேட்கிறது, பாடு நிலாவே..)
பாலு: (சிரித்தபடி) இனிமையான பாட்டுக்கு சைலனசர் தேவையில்லே. அப்புறம் பாட்டை எப்படிக் கேக்கிறது? அளவுக்கு அதிகமான சத்தத்தோட அதே பாட்டைக் கேட்டா அதுக்குப் பேரு பாட்டு இல்லே இரைச்சல்!
கருணாஸ்: உண்மைதான்! இதமான ஓசை..., அல்லது மெளனம்தான் வாழ்க்கையை இனிமையாக்குது!
பாலு: ரொம்பச் சரியாச் சொன்னீங்க!
(திரை)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...