அரங்கம்: நினைத்தது ஒன்று...
ஏங்க! நம்ம கோமதி "விமல் ஓவியப் போட்டி'க்கு அனுப்பினாளே ஒரு படம்,.....அதுக்கு முதற்பரிசு கிடைச்சிருக்கு!


காட்சி-1
இடம்-வீடு
மாந்தர்-வேதநாயகம், பார்வதி.
(ஒரு கடிதம் வருகிறது. அதைப் பிரித்துப் பார்த்த பார்வதிக்கு மகிழ்ச்சி! கணவர் வேதநாயகத்திடம் ஓடி வருகிறாள்)
பார்வதி: ஏங்க! நம்ம கோமதி "விமல் ஓவியப் போட்டி'க்கு அனுப்பினாளே ஒரு படம்,.....அதுக்கு முதற்பரிசு கிடைச்சிருக்கு!
வேதநாயகம்: (மகிழ்ச்சியோடு) நிச்சயம் அதுக்கு முதற்பரிசு கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். படம் அவ்வளவு அற்புதமா இருந்துதே...!
(ஏற்கெனவே நடந்தவற்றை அவர்கள் நினைத்துப் பார்க்கிறார்கள்)
காட்சி-2
இடம்- வீடு,
மாந்தர்- வேதநாயகம், பார்வதி, சதீஷ்குமார், கோமதி, முத்துவேலர்.
(பின்னோக்குக் காட்சி)
வேதநாயகம்: (செய்தித்தாளில் வந்த விளம்பரத்தைப் படிக்கிறார்) விமல் நிறுவனத்தார் நடத்தும் ஓவியப்போட்டி! முதற் பரிசு ஐயாயிரம் ரூபாய்!...பள்ளி மாணவ, மாணவியர் மட்டுமே கலந்து கொள்ளலாம். ஓவியத் திறன் மிகுந்த மாணவ மாணவியர் படத்தை வரைந்து, சான்றாகப் பெற்றோரிடமும் பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் கையொப்பம் பெற்று அஞ்சல் அனுப்பி வைக்கலாம்....
பார்வதி: இதை ஏன் படிச்சுக் காட்டறீங்க...?...படம் வரையும் திறமை உள்ளவங்களுக்குத்தானே இந்தப் போட்டி!...
வேதநாயகம்: நான் படிச்சதில விஷயம் இருக்கு....,நல்லா கவனி. உன்னோட அக்கா பையன் சதீஷ்குமார் சென்னையிலேருந்து லீவுக்கு இங்கே வந்திருக்கிறானே...,அவனுக்கு நல்லா படம் போடத் தெரியும். அவன் நம்ம கோமதிக்குப் படம் வரையச் சொல்லிக் கொடுத்தான்...., அவனை விட்டு ஒரு படத்தை வரையச் சொல்லி....,கோமதியோட பேரைப் போட்டு அனுப்பினா என்ன?....., முதற் பரிசு ஐயாயிரம் ரூபாய்!...., அவன் பிரமாதமா படம் வரையறான்....,நிச்சயம் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கு...
பார்வதி: ஆமாங்க...,கோமதி வரைஞ்சா என்ன? அவன் வரைஞ்சா என்ன...? அவனும் நம்ம உறவுதானே...,அந்நியன் இல்லையே...., வரையச் சொல்வோம். ஐயாயிரம்.....நினைக்கவே மகிழ்ச்சியா இருக்குங்க....(கனவு உலகத்தில் மிதக்கிறாள்)
(சதீஷ் குமார் ஒரு விளையாட்டுப் பிள்ளை. காரண காரியம் பற்றியோ...விளைவுகள் பற்றியோ கவலைப்பட மாட்டான்....அவர்கள் சொன்னதும் விளம்பரத்தின்படி ஓர் இயற்கைக் காட்சியை அழகாக வரைகிறான்)
வேதநாயகம்: (கோமதியை அழைக்கிறார்) இந்தப் படத்தோட பின்பக்கத்திலே உன் கையெழுத்தைப் போடும்மா...
(போட்டி விவரம் பற்றிச் சொன்னால் குழப்பம் அடைவாள்....என்று எதையும் கூறவில்லை...பள்ளிக்குச் செல்கிறார்)
கிளைக்காட்சி
இடம்- பள்ளி
மாந்தர்- தலைமை ஆசிரியர் முத்துவேலர், வேதநாயகம்.
(வேதநாயகம் முத்துவேலரை அவருடைய அறையில் சந்திக்கிறார்)
வேதநாயகம்: (ஓவியத்தைக் காட்டி) சார்...,இது இங்கே ஒன்பதாம் வகுப்பு படிக்கிற என்னோட பெண் கோமதி வரைஞ்ச படம்....,ஒரு போட்டிக்கு அனுப்பறோம்....உங்க கையெழுத்து வேணும்.
முத்துவேலர்: ஓ!.....தாராளமா...,கோமதியை எனக்கு நல்லாத் தெரியுமே. அவ இவ்வளவு நல்லா ஓவியம் போடறது எனக்குத் தெரியாதே...! என்னோட வாழ்த்து அவளுக்கு.
(கோமதி வரைந்த படம் என்று எழுதி கையொப்பமும் இடுகிறார்)
காட்சி-3
இடம்- வீடு
மாந்தர்- வேதநாயகம், பார்வதி, கோமதி
(கோமதி பள்ளியிலிருந்து வருகிறாள்)
வேதநாயகம்: (மகிழ்ச்சியோடு) அம்மா கோமதி, உனக்கு "விமல் ஓவியப் போட்டி'யில முதற்பரிசு!
(அவள் திகைக்கிறாள்)
கோமதி: நான் எங்கே ஓவியப் போட்டியிலே கலந்துகிட்டேன்? நீங்க சொல்றது ரொம்ப வேடிக்கையா இருக்கே...?
வேதநாயகம்: அனுப்பி ஆறுமாசம் ஆச்சு..., அதனால உனக்கு மறந்து போயிருக்கும்.
கோமதி: சரி, மறந்து போயிருக்கும். உங்களோட வாதத்துக்கே வருவோம்...போட்டிக்கு வரையற அளவுக்கு எனக்குப் படம் வரையத் தெரியாதே...அப்புறம் எப்படி நான் கலந்திருக்க முடியும்?
வேதநாயகம்: அம்மா....! உங்கிட்டே பேசி நான் ஜெயிக்க முடியாது. படத்தை சதீஷ்குமார் வரைஞ்சான். உன் பெயரைப் போட்டு அனுப்பினோம். அதுக்குத்தான் பரிசு!
கோமதி (திகைப்புடன் தனக்குள்): மத்தவங்க கதையோ...,பாட்டோ..., படமோ...., துணுக்கோ..., "காப்பி' அடிக்கக்கூடாது....அடுத்தவங்க படைப்பை எழுதி அதில உங்க பெயரைப் போட்டுக்கறது தப்புன்னு "சிட்டுக்குருவி' பத்திரிகை ஆசிரியர் எழுதியிருந்தாரே...., அதை இவங்க பார்க்கலையா?...
(அமைதியாக இருக்கிறாள்)
பார்வதி: பரிசு ஐயாயிரம் ரூபாய்! உனக்கு பொங்கலுக்குப் பட்டுப் பாவாடை சட்டை எடுக்கலாம்.....அக்காவுக்கு ஒரு புடவை....அப்புறம் நீ விரும்பறதை வாங்கலாம்.
(அவளுடைய முகத்தில் எந்த மாற்றமும் இல்லை)
வேதநாயகம்: ஏம்மா..., உன் படத்துக்குப் பரிசுன்னு சொல்றோம்....முகத்தில கொஞ்சம் கூட மகிழ்ச்சியைக் காணோமே...
கோமதி: சதீஷோட படம்னு சொல்லுங்க.....நான் எங்கே வரைஞ்சேன்?
வேதநாயகம்: (பார்வதியிடம்) சரி...,நீ எதுவும் பேசாதே...,அவ படம் பார்க்கட்டும்.
(தொலைக்காட்சியில் படம் ஓடுகிறது. அவளுடைய கவனம் அங்கே செல்ல மறுக்கிறது)
கோமதி: (தனக்குள்) அம்மாவும் அப்பாவும் பெரியவங்க....பெத்தவங்க...அவங்களுக்கு நல்லது கெட்டது தெரியாதா....?...ஏழை செஞ்சாத்தான் தப்பா?...அரசன் செஞ்சாலும் தப்புத்தானே....(கடவுளிடம்) கடவுளே....,இது எனக்கு உரிமையில்லாத பரிசு....அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நல்ல புத்தியைக் கொடு. இவ்வளவு வயசு ஆகியும் அவங்க செய்யறது இன்னதுன்னு தெரியாமலே செய்யறாங்களே...
காட்சி-4
இடம்: பள்ளி, தலைமை ஆசிரியர் அறை.
மாந்தர்: முத்துவேலர், கோமதி.
முத்துவேலர்: கோமதி...,ஓவியப் போட்டியில முதல் பரிசு வாங்கினதுக்கு என்னோட வாழ்த்தும் பாராட்டும்! ....விழா வர்ற புதன்கிழமை....எனக்கு அழைப்பு வந்திருக்கு...நான் அவசியம் வர்றேன்...உன்னால இந்தப் பள்ளிக்குப் பெருமை...நீ இன்னும் பல பரிசு வாங்கணும்....
(அவள் மகிழ்ச்சி அடையவில்லை. குழப்பம் மேலும் அதிகரிக்கிறது...அடுத்த வாரம் ஒரு தேர்வு. அதில் கவனம் போகாதபடி துயரம் வாட்டுகிறது)
கோமதி: (தனக்குள்) கடவுளே இது என்ன சோதனை!
காட்சி-5
இடம்: விழா அரங்கம்
மாந்தர்: கோமதி, பெற்றோர், பரிசு பெற்றோர், சிறப்பு விருந்தினர், பார்வையாளர்
(பரிசளிப்பு முடிகிறது)
சிறப்பு விருந்தினர்: ஒரு மாறுதலுக்காக..."விமல் நிறுவனம்' நடத்திய மெல்லிசைப் போட்டியில் பரிசு பெற்றவங்களை இங்கே பாடவைச்சோம்...ரொம்ப நல்லா இருந்தது. அதே போல (கோமதியின் உள்ளம் பரபரப்புக்கு உள்ளாகிறது.) படம் வரைஞ்சு பரிசு வாங்கினவங்க...அவங்களோட கை வண்ணத்தை இங்கே இருக்கிற ஓவியப் பலகையிலே காட்டலாம்.
(மூன்றாம் பரிசு....இரண்டாம் பரிசு என முடிந்து, "முதல் பரிசு மாணவி' என அறிவித்தார்கள்....கோமதி நெருப்பில் விழுந்த எறும்பாகத் தவிக்கிறாள். ஆழம் தெரியாமல் காலை விட்டதைப் பெற்றோர்கள் உணர்கிறார்கள்.....கோமதி உள்ளம் துடிக்க எழுகிறாள். தலை சுற்றுகிறது. கீழே விழுகிறாள்....! பெற்றோர் அவளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறார்கள்)
காட்சி- 6
இடம் - வீடு
மாந்தர் - கோமதி, வேதநாயகம்,
பார்வதி, முத்துவேலர்.
(கோமதிக்குக் காய்ச்சல் அடிக்கிறது....ஒரு நியாயமற்ற ஆசை எவ்வளவு கொடுமையை ஏற்படுத்தும் என்பதை நினைத்து, பெற்றோர் கலங்குகிறார்கள்., முத்துவேலர் அங்கு வருகிறார்)
முத்துவேலர்: கோமதி நல்லா ஓய்வு எடுக்கட்டும்..., அப்புறமா பள்ளியிலே அவளுக்கு ஒரு பாராட்டு....!
பெற்றோர்: ஐயா...! வேண்டாம்யா...அவளை இதுக்கு மேல துன்புறுத்த நாங்க விரும்பலே...
(நடந்ததைக் கூறி அவரிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள்)
முத்துவேலர்: குழந்தைங்க கிட்ட இயல்பா உள்ள திறமையைக் கண்டுபிடிச்சு அதை முறையா வளர்க்கிறது நல்லது....பரிசு முக்கியம்தான்...அதைவிட மனிதத் தன்மையும், தன்மானமும் முக்கியம்.....இந்தப் பரிசு முறையா இன்னொருத்தருக்குப் போக வேண்டியது. அதைத் தடுத்திட்டீங்க!....உங்க குழந்தையோட பெருமைக்கும் ஊறு விளைவிச்சிட்டீங்க...அவளோட மனசையும் கஷ்டப்படுத்திட்டீங்க....நான் இதை யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்...அவகிட்டயும் ஞாபகப்படுத்த மாட்டேன்....காலம் அவளோட துன்பத்தை மாற்றும்....
பெற்றோர்: இந்தப் பரிசை அந்த நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பறோம்....இரண்டாவது பரிசு வாங்கினவருக்குச் சேர வேண்டியது இது...., நீங்க இந்தக் கடிதத்திலே ஒரு கையெழுத்து போடுங்க.....
(முத்துவேலர் கையொப்பம் போடுகிறார். அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்)
-திரை-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...