ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கருவூலம்: ஆதிச்சநல்லூர் நாகரிகம்!

சிந்து சமவெளி நாகரிகம் போன்றே மிகச்சிறந்த மேம்பட்ட வாழ்க்கை முறையினை கொண்ட மக்கள் தென்னிந்தியாவிலும்...,குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையிலும்

Updated On :27 பிப்ரவரி 2016, 12:12 pm
Story image

சிந்து சமவெளி நாகரிகம் போன்றே மிகச்சிறந்த மேம்பட்ட வாழ்க்கை முறையினை கொண்ட மக்கள் தென்னிந்தியாவிலும்...,குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையிலும் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளார்கள் என்பதை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 வரலாற்று அறிஞர்கள் கூறும் தொல்லியல் காலம், பழங்கற்காலம், இடைகற்காலம், புதுகற்காலம், உலோகக் காலம் என மனித நாகரிகத்தின் அனைத்து கால பரிமாணங்களிலும் தென்னிந்தியாவில் மக்கள் சிறப்புடன் வாழ்ந்துள்ளதை ஆதிச்சநல்லூர், கொற்கை, தண்டிகுடி, மதுரை, உள்ளிட்ட பல இடங்களில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது.

ஆதிச்சநல்லூர் நாகரிகம்!

Story image

தூத்துக்குடி மாவட்டத்தில், திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில், தாமிரபரணி சமவெளிப் பகுதியில் உள்ள ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் பல பொருட்கள் கிடைத்தன. இதன் மூலம் இப்பகுதியின் கி.மு 1000 ஆண்டுக்கு முன்பே சிறந்த கட்டமைப்புடன் கூடிய அடுக்குநிலை சமுதாய அமைப்புடனும், பொருளாதார வசதியுடனும், அறிவுத் திறனுடனும், பற்பல திறமையுடனும் கூடிய நாகரிகமான மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

 இப்பகுதியில் ஜெர்மன் நாட்டினை சேர்ந்த டாக்டர் ஜோகர் என்ற தொல்லியல் ஆய்வாளர் 1876 இல் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பண்டைய இடுகாடு கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 50 வகையான பலவித வடிவங்கள் மற்றும் அளவுகளில் முதுமக்கள் தாழிகள் எனப்படும் இறந்தவர்களை வைத்து புதைக்கும் சுடுமண் பானைகள் கிடைத்தன.

 அப்பானைகளுக்குள் இறந்தவர்களின் எலும்புக்கூடுகளுடன் இரும்பினால் செய்யப்பட்ட கருவிகள், ஆயுதங்கள், சிறிய வெட்டுக்கத்திகள், கோடரிகள் உள்ளிட்ட பல பொருட்கள் கிடைத்தன. இவற்றை டாக்டர் ஜோகர் அவர்கள் ஜெர்மன் நாட்டிற்கு எடுத்துச் சென்று பெர்லின் நகர அருங்காட்சியகத்தில் ""ஆதிச்சநல்லூர் பொக்கிஷம்'' என்ற பெயரில் காட்சிக்கு வைத்தார்.

மற்றும் ஓர் அகழ்வாய்வு!

Story image


அதன்பின் 1889லும், 1905ஆம் ஆண்டிலும் இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் லியா என்பவர் மேற்பார்வையில் அகழாய்வு நடந்தது. இந்த ஆய்வில் முதலில் 1872 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.  பின்னர் 4000க்கும் அதிகமான பொருட்களையும் கண்டெடுத்தனர்.  அலெக்ஸாண்டர் லியா இங்கு கிடைத்த அனைத்துப் பொருட்களையும் ஆவணப்படுத்தி சென்னை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். அப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியத் தொல்லியல் துறை நிகழ்த்திய மற்றமோர் அகழ்வாய்வு!

Story image


2004ஆம் ஆண்டு சுமார் 114 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை தோண்டி பெரிய அளவில் இந்தியத் தொல்லியல் துறையில் ஓர் ஆய்வு நடத்தினர். இதில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்தன!! இந்த ஆய்வுகளில் இடுகாட்டை ஒட்டிய மக்கள் வசிப்பிடப் பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டது!

 இங்கு கிடைத்த பொருட்கள் சென்னை அருங்காட்சியகத்திற்கும், ஆய்வுக்காக மைசூர் அருங்காட்சியத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டன. பல கட்டங்களாக பலரும் செய்த ஆய்வுகளில் பல உண்மைகள் ஆய்ந்து அறிந்து சொல்லப்பட்டன.

ஆய்வில் அறிந்த உண்மைகள்!

Story image
Story image


 வசிப்பிடப் பகுதி மக்கள்தொகை மிகுந்த தொழில் வளம் கொண்ட நகர்ப்பகுதியாக இருந்துள்ளது. மேலும் அரண் போன்ற (சுற்றுச் சுவர்---கொத்தளம்) அமைப்பைக் கொண்ட  பாதுகாப்பான நகர் பகுதியாக இருந்துள்ளது. மண்பானை செய்பவர்களுக்கான தனி வசிப்பிடப்பகுதி இருந்ததற்கான சான்றுகளும், தொழில் சார்ந்த செயல்களுக்கு (INDUSTRIAL ACTIVITY) தனியாக இடம் இருந்த ஆதாரங்களும் கிடைத்துள்ளது!

Story image

 பலவித வடிவம் மற்றும் அளவுகளில் கிடைத்த அழகான சிறிய மண்பாண்டங்கள், கல்லினால் உருவாக்கப்பட்ட அரைப்பதற்கு உதவும் பொருட்கள், உரைகற்கள், தொங்கு விளக்குகள், விளக்குகள், விளக்கு நிறுத்தங்கள் (LAMP STANDS), குறுகிய வாய் கொண்ட ஜாடிகள், சட்டிகள், கழுத்தணிகள், மெல்லிய கம்பியாலான வளையல்கள், கல் மணிகள், வெண்கலத்தில் (BRONZE) செய்யப்பட்ட அணிகலன்கள், மற்றும் பாத்திரங்கள், சில தங்க நகைகள், போன்ற பல அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் பொருட்கள் கிடைத்தன. இவை இவர்கள் நல்ல முன்னேற்றமான வாழ்வை வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு சாட்சியாக உள்ளது!

 மேலும் யானை, மான், எருது, வெள்ளாடு, செம்மறியாடு, சேவல், புலி, பெண்தெய்வம் என பல உருவங்கள் கொண்ட வெண்கல பொருட்கள் கிடைத்துள்ளது.

 முது மக்கள் தாழிக்குள் மைகா துண்டுகள் பொருத்தப்பட்ட சிறு பானைகள், ஈட்டிகள், இரும்பு ஆயுதங்கள், கருவிகள், அம்புகள் என பல பொருட்கள் இருந்தன. மேலும் சிறு பானைகளுக்குள் நெல் மற்றும் தினை போன்ற தானியங்களின் உமி இருந்தது. இதனைக் கொண்டு இம்மக்கள் விவசாயம் பற்றி அறிந்திருந்ததும், தானியங்களை விளைவித்து பயன்படுத்தியுள்ளதும் தெரியவருகிறது.

Story image

 ஆடைகள் அணியும் பழக்கம் இருந்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டன. இங்கு கிடைத்த பல முதுமக்கள் தாழிகள் 3800ஆண்டுகளுக்கு முன்னால் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அம் முதுமக்கள் தாழிகளில் பண்டைய தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்பட்டன. இந்த எழுத்துகள் கி.மு. 500-300 க்கு உட்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த தமிழ் எழுத்துகளே தெற்காசிய மொழிகள் பலவற்றிற்கு அடிப்படையாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள். இப்பகுதியின் பல தங்கக் கிரீடங்களும் கிடைத்தன. அவற்றில் தலையில் கட்டுவதற்கு வசதியாக இரு துளைகள் இருந்துள்ளது. இந்த பகுதியில் பூமியில் தங்கம் கிடையாது என்பதால் இவர்களுக்கு பிற பகுதி மக்களுடன் தொடர்பு இருந்துள்ளது என்பது தெரியவருகிறது.

Story image

 இங்கு கிடைத்த தங்கம் மற்றும் இரும்பு பொருட்களை பார்க்கும்பொழுது இவர்களுக்கு உலோகங்களை உருக்கி பொருட்கள் செய்யும் திறமை இருந்ததை அறிய முடிகிறது.

 மேலும் தகரம், தாமிரம், பிற உலோகங்களை உருக்கி கலந்து செய்யும் வெண்கலத்தை உருவாக்கி, அதனைக் கொண்டு பல வகை பாத்திரங்களையும், உருவங்களையும் செய்துள்ளதும் நினைத்துப் பார்க்க முடியாத வியப்பூட்டும் உண்மையாகும்.

 அனைத்து முதுமக்கள் தாழிகளில் இருந்த எலும்புக்கூடுகளும், பிற பொருட்களும் ஒரு குறிப்பிட்ட அமைப்பிலேயே இருந்துள்ளது. இதிலிருந்து அக்காலத்திலேயே நம் முன்னோர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு ஒருவித திட்டமிட்ட முறைகளையும், சடங்குகளையும் பின்பற்றியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

Story image

 உலகின் பல பகுதிகளில் மக்கள், இலைதழைகளையும், மரப்பட்டைகளையும், உடுத்திக் கொண்டு,பச்சை மாமிசங்களை உண்டு, காடுகளில் திரிந்து கொண்டு இருந்த பண்டைய காலத்திலேயே நம் தமிழ்நாட்டில் முன்னோர்கள் விவசாயம் செய்தும், அழகிய ஆடைகள், அணிகலன்கள் அணிந்தும், வீடுகள் கட்டியும், பலவகை தொழில்கள் செய்தும் சீரும் சிறப்புமாக வாழ்ந்துள்ளதை நினைத்து நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.