திருந்திய பொய்யன்!
பொன்னப்பன்: ஐயா! நேற்று தங்க நிறக் கொக்கு ஒன்று பறந்து வந்தது! நம் அரண்மனையில் விளையாடிக் கொண்டிருந்த மான் குட்டியைத்


அரங்கம்
காட்சி-1
இடம்-அரண்மனை
மாந்தர்-பொன்னப்பன், மந்திரி மதிவாணர்.
பொன்னப்பன்: ஐயா! நேற்று தங்க நிறக் கொக்கு ஒன்று பறந்து வந்தது! நம் அரண்மனையில் விளையாடிக் கொண்டிருந்த மான் குட்டியைத் தூக்கிச் சென்றது! அதை என் கண்ணால் பார்த்தேன்!
மந்திரி மதிவாணர்: (மனதிற்குள்--- பொய் சொல்வதற்கு ஒரு அளவே இல்லையா? என்னிடமே கதை விடுகிறானே!) அப்படியா பொன்னா! இதுபோல் ஒரு சம்பவத்தை உன்னைத்தவிர அரண்மனையில் வேறு யாரும் பார்க்கவில்லையே....,உனக்கு மட்டும் எப்படித் தெரிகிறதென்றே எனக்குப் புரியவில்லை.
காட்சி-2
இடம்- அரண்மனை
மாந்தர்-பொன்னன், மந்திரி.
பொன்னன்: (மந்திரியைப் பார்த்து) ஐயா! என்ன அவசரமாகச் சென்றுகொண்டு இருக்கிறீர்கள்? ஏதேனும் முக்கியமான வேலையா?
மந்திரி: (மனதிற்குள்---ஐயோ! இவனிடம் அகப்பட்டு விட்டோமே! இன்று என்ன கதை விடப்போகிறானோ! தெரியலையே) என்ன...,பொன்னா! ஏதாவது விசேஷமா?
பொன்னன்: ஐயா! இன்று அதிகாலையில் நான் உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது தேவலோகத்திலிருந்து தேவ மங்கை ஒருத்தி வந்தாள்! என்னைப் பார்த்து என் அழகில் மயங்கி என்னை மணந்து கொள்ள விரும்பினாள். நானும் "சரி' என்று வாக்குறுதி கொடுத்து விட்டேன்!
மந்திரி: (சலிப்புடன்) அப்படியா மிகவும் நல்லது.
(மனதிற்குள்----இவன் பொய் பேசுவதை நிறுத்த ஏதாவது ஒன்று செய்தே ஆகவேண்டும்)
காட்சி-3
இடம்--அரண்மனை
மாந்தர்- பொன்னன், மந்திரி
மந்திரி: பொன்னா! நம் மன்னர் அவசர வேலையாக என்னை நம் பக்கத்து நாட்டிற்குச் சென்று வரும்படி உத்தரவிட்டுள்ளார். உடனே புறப்பட்டு நீயும் என்னுடன் வா!
பொன்னன்: அப்படியே வருகிறேன் ஐயா!
காட்சி-4
இடம்-காட்டுவழி.
மாந்தர்- பொன்னன், மந்திரி.
(இருவரும் குதிரையில் காட்டுவழியில் செல்கிறார்கள். உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கிறது.)
பொன்னன்: ஐயா! தாகம் நாவை வறட்டுகிறது..., தண்ணீர் குடித்தால் நன்றாக இருக்கும்.
மந்திரி: எனக்கும்தான்! இந்தப் பாதையில் இன்னும் சற்று தூரத்தில் ஒரு பொய்கை உள்ளது. அது வேறோர் சிறப்பும் பெற்றது. அதில் நீர் அருந்தலாம் வா!
(இருவரும் பொய்கையில் உள்ள நீரை ஆசை தீரக் குடிக்கின்றனர். மந்திரி மனத்தில் முன்பே முடிவு செய்திருந்ததை செயல்படுத்துகிறார்!)
மந்திரி: பொய்கையில் குளிக்கலாமா பொன்னா?
பொன்னன்: ஆம்! ஐயா! நானும் இதையேதான் நினைத்தேன்.
(இருவரும் பொய்கையில் ஆசை தீர குளித்து எழுகிறார்கள்)
மந்திரி: (தலையைத் துவட்டியபடியே) பொன்னா! இந்தப் பொய்கைக்கு ஒரு அபூர்வ சக்தி உண்டு! இதில் மூழ்கி எழுபவர்கள் வாழ்நாள் முழுவதும் பொய்யே பேசக்கூடாது. அப்படிப் பேசினால் அவர்கள் தலை சுக்குநூறாகச் சிதறிவிடும்!! இதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்! ஆனால் அவர்கள் உண்மையே பேசி நல்லவர்களாக வாழ்ந்தால், வாழ்வில் மேன்மேலும் உயர்ந்து கொண்டே போவார்கள்! இது கட்டுக் கதையல்ல!..... உண்மை!
பொன்னன்: (மனதிற்குள்---ஐயோ! நானும் இக்குளத்தில் மூழ்கி எழுந்து விட்டேனே!) ஐயா! நான் உயிரோடு இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இனி பொய்யே பேசமாட்டேன். இது உறுதி!
மந்திரி: மிகவும் நல்லது பொன்னா!
(ஐயோ! ஒரு பொய்யனைத் திருத்த நானே பொய் ஒன்று கூறிவிட்டேனே!)
-திரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...