ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கருவூலம்: குளுகுளு குற்றாலம்

தமிழகத்தில் பல அருவிகள் இருந்தாலும், அருவி என்று சொன்னவுடன் அனைவருக்கும் முதலில் சட்டென்று நினைவிற்கு வருவது குற்றாலம் அருவிதான்.

News image
Updated On :20 ஜூன் 2016, 2:32 am

தமிழகத்தில் பல அருவிகள் இருந்தாலும், அருவி என்று சொன்னவுடன் அனைவருக்கும் முதலில் சட்டென்று நினைவிற்கு வருவது குற்றாலம் அருவிதான். குற்றாலத்தின் சிறப்பே ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நிலவும் சீசன்தான்.

இம்மாதங்களில் இங்குள்ள அருவிகளில் பொங்கும் நுரையுடனும், ""ஓ'' என்ற பேரிரைச்சலுடனும் கொட்டும் அருவித் தண்ணீரும், அதிலிருந்து தெறித்துச் சிதறும் நீர்த்துளிகளும், அவ்வப்போது ஊர் முழுவதும் மெல்லிய பூவானமாய் பெய்யும் சாரல் மழையும், பரபரவென வீசும் ஆடிக்காற்றும் ஒன்றிணைந்த இயற்கையின் ஆனந்தக் கூத்துதான் "சீசன்' என்று செல்லமாகச் சொல்லப்படுகிறது.

கேரளத்தின் தென்மேற்குப் பருவமழை காலத்தில்தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுகிறது. பரந்த மலைவெளிகளின்  வழியாக, 2000-க்கும் மேற்பட்ட பலவகை மூலிகைச் செடி, கொடிகளுடன் கலந்து உறவாடி வரும் மழைநீரே, இதமான ஒரு குளிர்ச்சியுடன் அருவிகளில் வெள்ளியினை உருக்கிவிட்டதுபோல் தடதடத்து கொட்டுகிறது. இந்நீரில் மூலிகை மணமும், மருத்துவக் குணமும் நிறைந்து இருப்பதால் களைப்பை நீக்கி புத்துணர்ச்சி தருகிறது. மேலும் இவ்வருவி நீரில் தாமிரச்சத்தும் அதிகமுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆரியங்காவு கணவாய் வழியாகப் பாய்ந்து வரும் குளிர்ந்த காற்றை திருக்குற்றாலமலை தடுத்துப் பிடித்து சாரல் மழையாக இப்பகுதி முழுவதும் பொழிகிறது. சாரல் மழையின்போது இதமான வெயிலும், மிக மெல்லிய தூறலும் விட்டு விட்டும் அல்லது இரண்டும் கலந்தும் காணப்படும்.

சீசன் காலத்தில் அருவிகளில் ஆனந்தக் குளியல் நடத்துவதும், சாரல் மழையில் நனைவதும், இதமான வெயிலில் காய்வதும், வேகமாக வீசும் காற்றில் ஆடைகள் தானாகவே உலர்ந்து படபடக்க, இப்பகுதியில் நடந்து செல்வதே தனி சுகம்தான். இதுவே பிற மாநிலத்தவர், வெளி நாட்டினர் உள்பட அனைவரையும் கவர்ந்திழுக்கும் இயற்கையின் வசீகரமாகும். இதுதான் குற்றாலத்தின் தனிச்சிறப்பும், பெருமையும்கூட.

நடுநிசியோ, நண்பகலோ, அதிகாலையோ, அந்திசாயும் பொழுதோ, எதைப் பற்றியும் கவலைப்படாமல் 24 மணி நேரமும் மக்கள் கூட்டம் கூட்டமாக அருவிகளில் குளித்துக் கொண்டிருப்பதை இங்கு காணலாம். அருவி நீர் மருத்துவக் குணம் கொண்டிருப்பதால் எப்பொழுது குளித்தாலும், எத்தனை முறை குளித்தாலும் எந்தத் தீங்கும் நேர்வதில்லை.

குற்றால அருவிகள்:

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள குற்றாலத்தில் 8 அருவிகள் உள்ளன.

1.  பேரருவி: குற்றாலத்தில் பேருந்து நிலையம் அருகில் உள்ளது. உச்சகட்ட சீசன்போது கொட்டித் தீர்க்கும் தண்ணீரை பார்த்தாலே மனம் பரவசமாகிவிடும். ஆவேசமாக விழும் தண்ணீரில் நுழைந்துவிட்டால் வெளியே வரவே மனம் வராது. 24 மணி நேரமும் இங்கு குளிக்கலாம்.

2.  செண்பகாதேவி அருவி: பேரருவிக்கு மேலே 4 கி.மீ. தூரம் சற்று கடினமான பாதையில் நடந்து செல்ல வேண்டும். இந்த இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். தேனருவி நீரே 2 1/2 கி.மீ. தூரம் ஆறாக ஓடி 30 அடி உயரத்தில் இருந்து செண்பகாதேவி அருவியாக வீழ்கிறது. இங்கு செண்பகாதேவி அம்மன் கோயில் உள்ளது.

3.  தேனருவி: செண்பகா தேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. மேலே ஏறுவது கடினமான ஒருவித சாகச பயணம்தான். அருவி அருகே நிறைய தேன்கூடுகள் உள்ளதால் தேனருவி எனப்படுகிறது.

 இந்த அருவி நீரே செண்பகாதேவி அருவியாக வீழ்ந்து, பின் "பொங்குமாக்கடல்' எனப்படும் மிக ஆழமான பாறை இடுக்கு பள்ளத்தில் பாய்ந்து பின் பொங்கி வெளி வருகிறது. இங்கிருந்து வெளிவரும் நீர்தான் பேரருவியாக வீழ்கிறது.

4.  சிற்றருவி: ஐந்தருவிக்கு செல்லும் பாதையில் பக்கவாட்டில் உள்ள பாதையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றால் இந்த அருவியில் குளிக்கலாம். இரவில் குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. வீட்டுக் குளியலறையில் குளிப்பது போன்ற அனுபவத்தைக் கொடுக்கும் இந்த அருவி எல்லா வயதினர்க்கும் ஏற்றது.

5.  ஐந்தருவி: பேரருவியில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 40 அடி உயரத்திலிருந்து ஐந்து கிளைகளாகப் பிரிந்து விழும் அருவி நீரில் 24 மணி நேரமும் குளிக்கலாம்.

6.  பழைய குற்றாலம்: குற்றாலத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு எல்லா நேரமும் குளித்து மகிழலாம்.

7.  புலியருவி: பேரருவிக்கு 2 கி.மீ. தொலைவில் உள்ளது. குழந்தைகள் குளித்து ஆனந்தக் கும்மாளமிட பாதுகாப்பானது.

8.  பழத்தோட்ட அருவி: ஐந்தருவிக்கு 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. முக்கியஸ்தர்கள் குளிப்பதற்கானது. தற்போது தோட்டக்கலைக் துறையினரால் இயற்கை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.

சிற்றாறு: இவ்வாறு குற்றால அருவிகளில் இருந்து விழும் நீர் ஓடைகளில் வழிந்தோடி குற்றாலத்தை அடுத்த காசிமேஜர்புரத்தில் சிற்றாறாக உருவாகிறது. மேலும் சிறு ஆறுகளை இணைத்துக்கொண்டு 80 கி.மீ. தூரம் பாய்ந்தோடி நெல்லைக்கு அடுத்த

சீவலப்பேரி கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் இணைகிறது.

சிற்றாற்றில் 17 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு நீரானது சுற்றுப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் 47,026 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதி முழுவதும் பசுமையாகவும், வளமாகவும் இருப்பதற்கு இந்த நீரே ஆதாரமாக உள்ளது.

இக்காரணத்துடன், குற்றாலத்தின் தூய்மைக்காகவும் சோப்பு, ஷாம்பு முதலியவை அருவியில் தடை செய்யப்பட்டுள்ளது.

குற்றாலக் குறவஞ்சி: புகழ்பெற்ற இந்த குற்றால அருவியை புலவர்களும் கவிதை மழையால் புகழ்ந்துள்ளார்கள். இதில் குறிப்பிடத்தக்கது திரிகூட ராயப்ப கவிராயர் எழுதிய குற்றாலக் குறவஞ்சி ஆகும். படிப்பவர்கள் குற்றாலத்தின் அழகையும், வளத்தையும் கற்பனை செய்து பார்த்து ஆனந்தம் கொள்ளும் வண்ணம் மலை அழகையும், வனவளத்தையும் மனம் மயங்கும் வகையில் திகட்டாத தேன்தமிழில் பாடிச் சிறப்பித்துள்ளார்.

அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்:

குற்றாலநாதர் கோயில்: பேரருவிக்கு மிக அருகில் பழமையான குற்றாலநாதர் ஆலயம் உள்ளது. சங்கு வடிவில் அமைந்த இந்தக் கோயில் சிறப்பு வாய்ந்த பிரசித்த பெற்ற சிவாலயமாகும். இக்கோயிலுக்கு வடபகுதியில் தனிக்கோயிலாக நடராஜரின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை உள்ளது. 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான இந்த சபையில் பல அழகிய வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்து புராணங்களின் நிகழ்வுகள், தல வரலாறு, இயற்கை காட்சிகள் என அற்புதமாக தீட்டப்பட்ட பழமையான ஓவியங்களைப் பார்த்து மகிழலாம்.

படகு சவாரி: சீசன் காலத்தில் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணை மடை குளத்தில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய வசதியாக படகு குழாம் செயல்படுத்தப்படுகிறது. (கட்டணம் செலுத்தி) இப்படகுகளை நாமே செலுத்தி குளத்தில் வலம் வரலாம்.

ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்கா: ஐந்தருவியில் உள்ள தோட்டக்கலைப் பண்ணையில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல், நிலவடிவமைப்பை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இப்பூங்காவின் நோக்கம் ஆகும்.

 திரும்பிய பக்கமெல்லாம் மரங்கள், செடிகள், பசுமையான புல்வெளிகள், சலசலவென ஓடும் பழத்தோட்ட அருவி, தென்றல் காற்று, மனதைக் கொள்ளை கொள்ளும் அமைதி அனைத்தும் ஒருங்கே இப்பூங்காவில் நாம் காணலாம்.

 இப்பூங்காவில் நுழைவாயில், சுற்றுச்சூழல் குளம், மூங்கில் தோட்டம், வண்ணத்துப் பூச்சி பூங்கா, மலர்வனம், சிறுவர்கள் விளையாடுமிடம், பிரதான வாயில், நீரோட்ட நடைபாதை, தாழ்தளத் தோட்டம், சாகச விளையாட்டுத் திடல், பாறைத்தோட்டம், காகிதப்பூ தோட்டம், ஆலமரத் தோட்டம், சிற்ப விலங்கு தோட்டம், பழத்தோட்டம், கற்பாறை பூங்கா, இயற்கை பூங்கா, பசுமைக்குடில், உணவுக்கூடம், கழிப்பறை வசதி என சிறப்புடன் உள்ளது. மேலும் இங்கு குழந்தைகளுக்கு ஸ்கைவாக் என்ற விளையாட்டு சாதனம் உள்ளது. இதில் ஆகாயத்தில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படும். அதேபோல் ராக்பில்லர் என்ற விளையாட்டு சாதனத்தில் குழந்தைகள் ஏறி இறங்கும்போது பெரியவர்கள் பாறை மீது ஏறி சாகசம் செய்வது போன்ற அனுபவத்தை பெறுவார்கள். குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் மனதைவிட்டு நீங்கா நினைவுகளை இந்த அழகிய பூங்கா நிச்சயம் தரும்.

சாரல் விழா: குற்றாலத்தில் சீசன் களைகட்டி இருக்கும்போது மாவட்ட நிர்வாகத்தால் "சாரல் திருவிழா' ஆண்டுதோறும் இங்கு நடத்தப்படுகிறது. எட்டு நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் பல வகையான கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம்.

 இவ்விழா நடக்கும் நாட்களில் இங்கு வந்து தங்கியிருந்தால் தினம் குற்றாலத்தில் குளித்துவிட்டு, மாலைப்பொழுதில் ஒயிலாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட பல கிராமியக் கலைகளையும், பரதநாட்டியம், குச்சிபுடி நடனம், மெல்லிசை நிகழ்ச்சி போன்ற பல கலைநிகழ்ச்சிகளையும் பார்த்து ரசிக்கலாம். மேலும் இவ்விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படும் கோலப் போட்டி, நீச்சல் போட்டி, ஓவியப் போட்டி, படகுப் போட்டி போன்ற போட்டிகளிலும் பங்கு பெறலாம். மேலும் இவ்விழாவின் போது நடத்தப்படும் தோட்டக்கலை கண்காட்சியையும் கண்டு ரசிக்கலாம்.

 உலகில் எத்தனையோ புகழ்பெற்ற அருவிகள் இருக்கிறது. ஆனாலும் 24 மணி நேரமும் குளிக்கும் வசதியுடன் கூடிய, எத்தனை முறை குளித்தாலும், எல்லா அருவிகளுக்கும் ஓடி ஓடி குளித்தாலும் சளைக்காதது குற்றாலம்தான். அருவி அருகில் விற்கும் சூடான பஜ்ஜி, வடைகளைத் தின்று, சூடான காபி, டீ என குடித்து மீண்டும் மீண்டும் குளிக்கும் மக்களை காண்பதே பேரானந்தம்தான்.

 தென்னகத்தின் ஸ்பா (ஆரோக்கிய நீருற்று), ஏழைகளின் ஊட்டி என்றும் அழைக்கப்படும் குற்றாலம், திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசி நகருக்கு மிக அருகில் உள்ளது. நல்ல போக்குவரத்து மற்றும் தங்கும் வசதிகளும் சிறப்பாகக் கிடைக்கும். என்ன கிளம்பிவிட்டீர்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.