நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரங்கம்: வழியில் ஒரு பயிற்சி!

ஒரு பயிற்சி முகாம்...அதற்கு வேப்பூரிலிருந்து +2 மாணவர்கள் ஒரு சிற்றுந்தில் செல்கிறார்கள்...குழுவுக்குப் பொறுப்பு மருதவாணன்

News image
Updated On :29 மே 2016, 10:43 am

பூதலூர் முத்து

காட்சி-1

இடம்-பேருந்து

மாந்தர்-மருதவாணன், மாணவர்கள், ஓட்டுநர்.

(நல்லூரில் தலைமைப் பண்புகள் என்ற

தலைப்பில் ஒரு பயிற்சி முகாம்...அதற்கு வேப்பூரிலிருந்து +2 மாணவர்கள் ஒரு சிற்றுந்தில் செல்கிறார்கள்...குழுவுக்குப் பொறுப்பு மருதவாணன்...)

மருதவாணன்: நாம கலந்துக்கற பயிற்சி முகாமை குறிச்ச நேரத்திலே தொடங்கிடுவாங்க...

வேலன்: அதனால...?

மருதவாணன்: யாரும் வழியிலே அடிக்கடி வண்டியை நிறுத்தாதீங்க...

பாலன்: (கிண்டலாக) ஆமா...,தம்பிங்களா..., அதை வாங்கணும்..,இதை வாங்கணும்...காத்து வாங்கணும்..., தண்ணி வாங்கணும்னு நிறுத்தாதீங்க...

மருதவாணன்: குடிக்கத் தண்ணி வண்டியிலேயே இருக்கு...

(ஒரு மாணவன் இயற்கை அழைப்புக்கு வண்டியை நிறுத்துகிறான்....வரிசையாகப் பிறரும் இறங்குகிறார்கள்.)

குமரன்: ஒருத்தனுக்குக் கொட்டாவி வந்தா எல்லாருக்கும் வரும்...,இதுவும் அப்படித்தான்.

(மறுபடி ஏறுகிறார்கள்)

வேலன்: டிரைவர்...,நேரம் ஆகுது... வேகமாப் போங்க...!

மருதவாணன்: நீங்க நிதானமாவே போங்க....,வேகத்தைவிட விவேகம் முக்கியம்...பாதுகாப்பு முக்கியம். (வேலன் அவனை முறைத்துப் பார்க்கிறான்)

காட்சி-2

இடம்: நெடுஞ்சாலை

மாந்தர்: மருதவாணன், மாணவர்கள், ஓட்டுநர், விபத்தில் சிக்கிய ஒருவர்.

(சிற்றுந்து நிற்கிறது....சாலையோரம் ஒருவர் கிடக்கிறார். அவர் உடம்பிலிருந்து இரத்தம் வழிகிறது.... முகம், கழுத்து, மார்பு, கைகளில் காயம்.... அருகில் எவரும் இல்லை.....பார்த்ததும் மருதவாணனின் இதயம் படபடக்கிறது...., இறங்குகிறான்..... ஒரு குவளையில் நீரை வாங்கி முகத்தில் தெளிக்கிறான். குடிப்பதற்கு வாயில் ஊற்றுகிறான்....ஓட்டுநரையும் சில மாணவர்களையும் உதவிக்கு அழைக்கிறான்.... அவரை மெதுவாகத் தூக்கி வந்து உந்தின் பின் பகுதி இருக்கையில் படுக்க வைக்கிறார்கள்)

மருதவாணன்: குமரா, நீயும் வேலனும் இவர் பக்கத்திலே இருங்க...மத்தவங்க சாலையிலே ரெண்டு பக்கமும் கவனிங்க...மருத்துவமனைப் பெயர்ப்பலகை தெரிஞ்சா சொல்லுங்க....

....(பத்து நிமிடத்தில் மருத்துவமனை 2கி.மீ. என அம்புக்குறியுடன் ஒரு பலகையைப் பார்க்கிறார்கள்..... மருத்துவமனை. அவசர சிகிச்சைப் பிரிவு.... மருதவாணன் விவரம் கூறுகிறான்.....தொடர்பு முகவரி...,தொலைபேசி எண் தருகிறான். மருத்துவர் மருதவாணன் முதுகைத் தட்டிக் கொடுக்கிறார்.)

வேலன்: (வெளியே வந்து கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறு) பாராட்டு நல்லாத்தான் இருக்கு...,போற இடத்துலே என்ன "டோஸ்' கிடைக்கப்போவுதோ....

மருதவாணன்: உன்னுடைய கவலை நியாயமானதுதான்... அதை நான் பார்த்துக்கறேன்.

பாலன்: இதுக்கு நாங்க எந்த விதத்திலேயும் பொறுப்பில்லே. நீதான் பார்த்துக்கணும். (தனக்குள்) நான் இந்தக் குழுவுக்குத் தலைவனாக நினைச்சேன். நல்லவேளை! தப்பிச்சேன். பிரச்னைன்னாலே "அலர்ஜி' வந்துடும்.

காட்சி-3

இடம்-பயிற்சி முகாம்

மாந்தர்- ஜெயசீலன், ஆசிரியர்கள், மருதவாணன், பல ஊர் மாணவர்கள்.

(முகாம் தொடங்கி இரண்டு மணி நேரம் ஆகிறது. இடைவேளை நேரம். பொறுப்பாளர் ஜெயசீலன் வெளியே வருகிறார்....மருதவாணன் அவரைச் சந்திக்கிறான்...., நடந்தவற்றைக் கூறுகிறான்.)

ஜெயசீலன்: நீங்க பயிற்சிக் கூடத்துக்குப் போங்க...,என்னோட பதிலை அங்கே சொல்றேன்.

(மருதவாணன் அமைதியாக இருக்கிறான்)

வேலன்: (தனக்குள்) அவரோட முகத்தை வெச்சு எதையும் கண்டுபிடிக்க முடியலியே....,கோபப்படறாரா...? மன்னிக்கிறாரா...? புரியலையே?

மருதவாணன்: என்ன?...,அமைதியா இருக்கீங்க...? நல்லதே நடக்கும்...வாங்க அவர் சொன்னபடியே செய்வோம்.

காட்சி-4

இடம்-பயிற்சிக்கூடம்

மாந்தர்- ஜெயசீலன், மருதவாணன்,

பயிற்சி தருவோர்...பெறுவோர்.

(பகல் உணவுக்குப் பின் சற்று ஓய்வு. பின் பிற்பகல் பயிற்சி தொடங்குகிறது.)

ஜெயசீலன்: (மருதவாணனை அழைக்கிறார். மேடையில் ஒரு நாற்காலியில் அமர வைக்கிறார்.)

பாலன்: (தனக்குள்) ஒரு குழுவையே தாமதமா அழைச்சு வந்தவரைப் பாருங்கன்னு "வஞ்சப் புகழ்ச்சி' க்காக மேடை ஏத்தியிருக்காரா...?

ஜெயசீலன்: எவ்வளவு திட்டமிட்டு....,பாடுபட்டு...,முயற்சி செய்து....துறை சார்ந்த பலரை அழைத்து...மிகுந்த பொருட்செலவில் இதை நடத்துகிறோம்.....,மருதவாணன் என்ற இந்த மாணவர் பயிற்சிக்கு உரிய நேரத்தில் வரவில்லை.....

(எல்லோரும் பரபரப்பு அடைகிறார்கள்)

...தன்னிடம் என்ன வசதிகள் இருக்கிறது என்று யோசித்துக் கொண்டும், கையைப் பிசைந்து கொண்டும் இல்லாமல்...,கண்ணெதிரே ஆபத்தில் சிக்கிக் கொண்டு உதவிக்காகத் துடிப்பவர்க்கு ஓடிச்சென்று உதவுவது தலைமைப் பண்பின் அடித்தளம்! அவருடைய இரத்தத்தில் இந்தப் பண்பு இயல்பாக இருக்க வேண்டும்!

...தலைமைப் பண்பின் முதல் பயிற்சி..."எந்தப் பணிக்கு முதன்மை தருவது?'...,"முதலில் செய்ய வேண்டியது எது?' என்று முடிவெடுப்பது!....உயிர்ப் பிரச்னைகளை ஒதுக்கிவிட்டு மற்றவற்றிற்கு ஒரு தலைவன் முதலிடம் தரக்கூடாது!....

(அனைவரும் மேலும் கூர்ந்து கவனிக்கிறார்கள்)

...எடுத்துக் காட்டாக, "உணவின் உற்பத்தி,தேவை,மற்றும் பயன்பாடு' எனும் பயிற்சிக்குப் போகிறோம். வழியில், பசியால் வயிற்றைப் பிசைந்துகொண்டு ஒருவன் அழுகிறான்..., அவன் பசியைப் போக்கிவிட்டல்லவா பயிற்சிக்குப் போகவேண்டும்? முதலிடம் பயிற்சிக்கா? பசிக்கா?...

..."விபத்தில் சிக்கியவரைக் காப்பது எப்படி? என்ற முதலுதவிப் பயிற்சிக்குப் போகிறோம். வழியில் ஒருவர் அடிபட்டுக் கிடக்கிறார். ஓடிப்போய் அவரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

...இதுதான் பணியை, கடமையை முதன்மைப் படுத்துவது...

...நாங்கள் சொல்வது "தியரி'...,அது செய்தி...விளக்கம்...திரையில் காட்டுவதும் அந்த விளக்கத்தின் மற்றொரு பரிமாணம்!

...ஆனால் மருதவாணனும், அவரது குழுவும் செய்தது தலைமைப் பண்புக்கான "பிராக்டிகல்'...! களத்தில் இறங்கி அதை நிரூபித்து விட்டார்கள்!

(மருதவாணனும் அவனது குழுவும் நிம்மதி அடைகிறார்கள்)

ஜெயசீலன்: ....படிப்பதைவிட...,பார்ப்பதைவிட...,கேட்பதைவிட...,ஒரு செயலில் ஈடுபடும்போதுதான் அது ஆழமாக மனதில் பதிந்து அந்தப் பண்பு நெடுங்காலம் நீடிக்கிறது.

பயிற்சிக்கு முன்பே தலைமைப் பண்பில் சிறந்து விளங்கும் மருதவாணனுக்கும் அவருடைய குழுவுக்கும் எங்கள் பயிற்சிக் குழுவின் பாராட்டுகள்!

(கையைக் குலுக்கிறார். அவனை அனைவரும் பெருமையாகப் பார்க்கின்றனர்.)

திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.