சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

முத்துக் கதை: சிறப்பான வாழ்க்கை!

அஷ்டமி என்றொரு நாடு. அங்கு இருந்த நீர் நிலை ஒன்றில் நிறையத் தவளைகள் வசித்து வந்தன.

News image
Updated On :28 அக்டோபர் 2016, 10:47 am

அ. ராஜா ரகுமான்

அஷ்டமி என்றொரு நாடு. அங்கு இருந்த நீர் நிலை ஒன்றில் நிறையத் தவளைகள் வசித்து வந்தன. ஒரு நாள் தவளைகள் ஓடியும், குதித்தும் விளையாடிக் கொண்டிருந்தன.
அந்த சமயத்தில் தவளைகளுக்கு அருகே ஒரு பெரிய ஆமை நீந்தியவாறு அப்பால் சென்றது! அதைக் கண்ட ஒரு தவளை, ""இந்த ஆமையைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது. நமது இனத்தைப் பற்றியே எனக்கு கேவலமாக இருக்கிறது. இவ்வாறு சிறிய உயிரினமாக இருப்பதால்தான் நமக்கு எந்த விதமான மதிப்பும் மரியாதையும் இல்லை. எப்படியாவது நாமெல்லாம் முயற்சித்துக் குறைந்த பட்சம் ஆமை அளவிற்காவது பெரிதாக ஆக வேண்டும்!'' என்று கூறியது.
அந்தத் தவளையின் கூற்றில் நியாயம் இருப்பதாக ஓரிரு தவளைகள் அதன் கருத்தை ஆமோதித்தன. ஆனால் வயது முதிர்ந்த தவளை ஒன்று அந்தத் தவளையை நோக்கி, ""நாம் எதற்காகப் பேராசை கொள்ள வேண்டும்? கடவுள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ற விதத்தில் உடல் அமைப்பினை ஏற்படுத்தியிருக்கிறார். இதற்கு மாறுபட்டு நமது உடல் அமைப்பினை மாற்றிக்கொள்ள முயற்சிப்பது கடவுளுக்கு விரோதமான செயல் ஆகும்'' என்று கூறிற்று.
முன்பு பேசிய தவளை கிழத் தவளையைக் கேலி செய்தது. மேலும் அது, ""தாத்தா உங்களால் ஒரு காரியம் முடியாது என்றால் மற்றவர்களாலும் முடியாது என்று எண்ணி விடுவதா?இந்த நிமிஷமே என் உருவத்தை மாற்றிக் காண்பிப்பேன்'' என்று தற்பெருமை பேசியது.
""ஒரு பெரிய ஆமையைப் போல் உன்னால் ஆக முடியுமா? வீணாக ஏன் கதை அளக்கிறாய்?'' என்றும் சில தவளைகள் கேலி பேசின.
தவளைக்குக் கோபம் வந்து விட்டது! ""என்னைப் பற்றி அவ்வளவு கேவலமாகவா நினைக்கிறீர்கள்? இதோ பாருங்கள்....மூச்சை அடக்கி என் உருவத்தைப் பெரிதாக ஆக்கிக் காண்பிக்கிறேன்.'' என்று கூறியவாறு மூச்சை உள்ளுக்கு இழுத்து தன் உடலை உப்பச் செய்தது. ஓரளவுக்கு உப்பச் செய்த பிறகு அதே நிலையில் மற்ற தவளைகளை அது நோக்கியது.
ஆமையின் அளவுக்கு உடல் இன்னும் பெரிதாகவில்லை என்று மற்றத் தவளைகள் கூறின.
தவளை மேலும் மூச்சை உள்ளுக்கு இழுத்து உடலை மேலும் வீங்கச் செய்தது. அப்போது அதிகக் காற்று உள்ளிழுக்கப்பட்டு அதன் தோல் கிழிந்து படுகாயமுற்றது. இதைக் கண்ட மற்ற தவளைகள் மிகவும் கவலைப்பட்டன.
ஓடியும், குதித்தும் விளையாடிக்கொண்டு கொண்டாட்டமாய் இருந்த தவளைக்கூட்டம் சோகத்தில் ஆழ்ந்தன. அப்போது வயது முதிர்ந்த தவளை, எதற்கெடுத்தாலும் மற்றவர்களைப் போல் இருக்க ஆசைப்படுவது தவறு! ஆண்டவன் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பைக் கொடுத்திருக்கிறான். எனவே அவரவர்க்குக் கொடுக்கப்பட்டதைக் கொண்டு சந்தோஷமாக வாழ்வதுதான் சிறப்பானது என்று கூறியது. எல்லாத் தவளைகளும் அதை ஆமோதித்தன.
காயமுற்ற தவளையும்தான்! அதற்குச் சிறிது சிறிதாக காயம் ஆறியது. இப்போதெல்லாம் அது மகிழ்ச்சியாக குதித்தும், துள்ளியும் தாமரை மலர்களிலும், தாமரை இலைகளிலும் மற்ற தவளைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.