மேற்பார்வை
இன்று நடைபெறும் தேர்வு வித்தியாசமாக நடைபெறும். தலைமை ஆசிரியரும் இந்தப் புதிய முயற்சிக்கு அனுமதி தந்து விட்டார்.


அரங்கம்
காட்சி-1
இடம்-வகுப்பறை
மாந்தர்-அறிவியல் ஆசிரியர் அருள்மணி,
ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், மாணவிகள்.
(அருள்மணி முன்பே அறிவித்தபடி அந்த மாத அறிவியல் தேர்வை நடத்த வினாக்களோடு வருகிறார்)
அருள்: இன்று நடைபெறும் தேர்வு வித்தியாசமாக நடைபெறும். தலைமை ஆசிரியரும் இந்தப் புதிய முயற்சிக்கு அனுமதி தந்து விட்டார்.
ஒரு மாணவன்: (மெதுவாக) வழக்கம்போல நடத்தினாலே பெரும்பாடு....இதிலே புதிய முயற்சியா...
அடுத்த மாணவன்: பொதுத்தேர்வா இது?....மாதத் தேர்வுதானே....என்னா சொல்றாருன்னு முதல்லே கவனிப்போம்.
அருள்: தேர்வு என்பது கண்ணாமூச்சி விளையாட்டு அல்ல....உங்கள் திறனை நீங்கள் அறிய இது ஒரு வாய்ப்பு....அவ்வளவுதானே.... இன்று ஒரு சோதனை முயற்சி!
ஒரு மாணவன்: (மெதுவாக) எங்களுக்கு சோதனையா ஆகாம இருக்கணும்.
ஒரு மாணவி: பாடப் பகுதியில் இருப்பதுதானே தேர்வு....நாங்கள் வழக்கம்போல மகிழ்ச்சியாக எழுதுவோம்.
அருள்: இந்த மாணவியின் குரல் எனக்கு நம்பிக்கை தருகிறது......இந்த முயற்சி வெற்றி பெற்றால் தேர்வில் மேற்பார்வை என்ற பெயரில் உங்களைக் கண்காணிக்கத் தேவையில்லை.....உங்களுக்குப் பாராட்டும் பள்ளிக்குப் புகழும் வரும்.
மாணவன்: சார்....என்னதான் நடக்கப்போவுது சீக்கிரமா சொல்லுங்க....
அடுத்தவன்: சஸ்பென்ஸ் நீண்டா எனக்குப் படிச்சது மறந்திடும்.
அருள்: (வினாத்தாள்களைத் தருகிறார்) இங்கே மேற்பார்வைக்கு யாரும் இருக்கமாட்டார்கள்....நீங்கள் தேர்வை எழுதிடலாம்....நான் ஆசிரியர் அறைக்குப் போகிறேன்....
(சிலர் வியப்பும் திகைப்பும் சேர எழுதுகிறார்கள். பலர் இயல்பான் கட்டுப்பாடு உள்ளவர்கள்...புரிந்து படித்ததை நன்றாக எழுதுகிறார்கள்....ஒருவன் தவிக்கிறான்....அவன் கோலப்பன் .....வழக்கம் போல விழிக்கிறான்...)
கோலப்பன்: (அங்குமிங்கும் பார்க்கிறான்) நல்லவேளை...வகுப்புத் தலைவன் கண்ணனோ, மற்றவர்களோ பார்க்கலே....(வழிகாட்டியைப் பார்த்து எழுதுகிறான்.....படங்களைப் போடுகிறான்).....
(தனக்குள்)...இந்தத் தேர்வில் எனக்குத்தான் முதல் மதிப்பெண்....
காட்சி-2
இடம்-வகுப்பறை
மாந்தர்- அருள்மணி, கோலப்பன்,
கண்ணன், திருவரசன்
(கோலப்பன் கண்ணனிடம் விடைத்தாளைத் தந்தபின் வெளியே வருகிறான். திருவரசன் கண்ணனிடம் ரகசியமாக ஏதோ கூறுகிறான்....கவனித்த கோலப்பன் அதை யூகிக்கிறான்.)
கண்ணன்: (அருள்மணியிடம்) சார்....எல்லாத் தாளையும் முறையா அடுக்கியிருக்கிறேன்.
அருள்: (ஆர்வத்தோடு) நம் பிள்ளைகள் எல்லோரும் தேர்வை ஒழுங்கா எழுதியிருப்பார்களே....வகுப்புத் தேர்விலாவது மேற்பார்வைக்கு விடை கொடுப்போம்.
கண்ணன்: (தனக்குள்) கோலப்பன் விஷயத்தை இப்போது சொல்லக்கூடாது....அவருடைய நம்பிக்கை வீணாகும்....வருந்துவார்.....பிறகு பார்க்கலாம்...
காட்சி-3
இடம்-வகுப்பறை
மாந்தர்-அருள்மணி, மாணவர்கள், மாணவிகள்.
அருள்: நடந்த இந்தத் தேர்வில் இன்னொரு புதிய முயற்சி.... (மாணவ, மாணவிகள் அவரை ஆவலோடு பார்க்கிறார்கள்) அவரவர் விடைத்தாள்களை அவரவரே திருத்தலாம்.... மதிப்பீடு செய்யலாம்.... பாட நூல் விடைகளை ஒப்பிட்டுப் பார்த்து இதைச் செய்யுங்கள்....
கோலப்பன்: (தனக்குள்...மகிழ்ச்சியோடு) கண்ணை மூடிக்கொண்டு மதிப்பெண் போடலாம்....,பார்த்துத்தானே எழுதினேன்......(சிவப்பு மைப் பேனாவை எடுக்கிறான்)....
அருள்: மற்றோர் அறிவிப்பு.....முதல் இரண்டாம் மதிப்பெண் பெறுவோருக்குச் சில பொறுப்புகள் தரப் போகிறேன்...
(கோலப்பன் குழம்புகிறான்.....) அவர்கள் தேர்வைச் சரியாக எழுதாத மாணவர்களுக்குப் புரியும்படியாக விடைகளை விளக்கிச் சொல்ல வேண்டும்.....கரும்பலகையில் தேவையான படம் வரைய வேண்டும்.... மாணவனே பாடம் நடத்தும்போது கவனிக்கும் ஆர்வம் வரும்....ஒன்றைப் புரிந்து கொண்ட மாணவன் பிறருக்கு அதை எடுத்துச் சொல்வதே ஓர் இனிய அனுபவம்.
(அவனுக்கு வியர்த்துக் கொட்டுகிறது)
கோலப்பன்: மற்றவர்கள் திருத்துவதை கவனிக்கிறான்....((தனக்குள்) ...எண்பது தொண்ணூறு போட்டுக்கொள்ள நினைச்ச கனவு கலைஞ்சு போச்சே.....விடைகளை விளக்குவதா....அவமானம்தான் மிஞ்சும்.....(தாளைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறான்......வந்த மதிப்பெண் இருபது....மற்ற விடைகளைக் குறுக்கில் கோடு போட்டு அழிக்கிறான்...
கண்ணன்: கோலப்பா!....எழுதினதை ஏன் அடிக்கிறே?
கோலப்பன்: பொறு... வேறொரு விடையை எழுதப்போகிறேன்....
கண்ணன்: இப்போதா?
கோலப்பன்: ஆமாம்,...(எழுதுகிறான்)
ஆசிரியருக்கு...சரியான விடைகளை நான் அடித்தேன்.....காரணம்...இவை முறையாக எழுதப்பட்டவை அல்ல....கட்டுப்பாடு வளர நீங்கள் தந்த வாய்ப்பை வீணாக்கி விட்டேன்....வரும் தேர்வை ஒழுங்காக எழுதுவேன்....என்னை மன்னியுங்கள்....
கண்ணன்: (கடிதத்தைப் படித்தபின்).... கோலப்பா....மதிப்பெண் மட்டும் நம்மை உயர்த்தாது.....எந்த வழியில் அதைப் பெற்றோம் என்பதும் முக்கியம்.....இதுதானே அருள்மணி சார் நமக்குச் சொன்ன வேதவாக்கு....கவலைப்படாதே....நல்ல வழியில் போனா நமக்கு முன்னேற்றம் நிச்சயம்....
(அவனுடைய கைகளை அன்போடு பற்றுகிறான்)
திரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...