கதைப் பாடல்: அரசன் கேட்ட கேள்வி!
அழகாபுரியின் அரசன்அவன்அழகாய்க் குதிரையின் மீதேறிசிற்றூர் ஒன்றைப் பார்ப்பதற்கு


அழகாபுரியின் அரசன்அவன்
அழகாய்க் குதிரையின் மீதேறி
சிற்றூர் ஒன்றைப் பார்ப்பதற்கு
சிந்தையில் விரும்பிப் புறப்பட்டான்!
தலைநகர் தாண்டித் தூரத்தில்
தவழும் ஓடை செடி கொடிகள்!
தலைவன் அவனது உள்ளத்தில்
தடையே இல்லா ஆனந்தம்!
என்றே நினைத்தான் பேரரசன்
எதிரே தெரிந்தது ஒரு தோட்டம்! - மரக்
கன்றை ஊன்றும் பணியினிலே
கண்ணாய் இருந்தார் ஒரு கிழவர்!
மன்னனைக் கண்டதும் கை குவித்தார்...
மன்னனும் கீழே இறங்கி வந்தான்!
மாமரக் கன்று நடுகின்றீர்!
மாம்பழம் தின்பது என்றைக்கு?...
அரசன் கேட்ட கேள்விக்கு
அவரும் உடனே பதில் சொன்னார்
""அரசே! சற்றுத் தூரத்தில்
தெரியும் மரங்கள் பாருங்கள்!...
...அவற்றை யெல்லாம் என் பாட்டன்
அன்றைய நாளில் வைத்ததனால்
நானும் எனது பிள்ளைகளும்
நன்றாய் இன்று பழம் பெற்றோம்!....
....இன்று நான் நடும் கன்றெல்லாம்
எதிர் காலத்தில் பயன் கொடுக்கும்! - நான்
அன்றைக்கு இருப்பது உறுதியில்லை
ஆனால் பிள்ளைகள் பயன் அடைவர்!....
....நேற்றுச் செய்த நற்செயல்கள்
இன்றைக்கு இங்கே இனிதாக
பழங்கள் வடிவில் மகிழ்ச்சி தரும்!
பார்ப்பவர்க் கெல்லாம் செய்தி தரும்!....''
"....தன் நலம் மட்டும் பார்ப்பதனால்
தரணியில் என்றும் உயர்வில்லை
எல்லோர் நலமும் நாடுவதே
என்றும் இங்கே நன்மை தரும்!'
என்றே உணர்ந்தான் மாமன்னன்!
எளியவர் கையை அன்புடனே
பற்றிக் கொண்டான் நெகிழ்ச்சியுடன்! - அவர்
பணிவாய் வணங்கி விடை தந்தார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...