தமிழகத்தின் மைய மாவட்டம் கரூர். 1995-இல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டபோது கரூர் மாவட்டம் உருவானது. 2896 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தினை சுற்றிலும் நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், ஈரோடுமாவட்டங்கள் சூழ்ந்துள்ளன.
இம்மாவட்டம் நிர்வாகத்திற்காக கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் மற்றும் மண்மங்கலம் என ஆறு வட்டங்களாக (தாலுக்கா) பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் 4 சட்ட மன்றத் தொகுதிகள் உள்ளன.
கரூர் நகரமே இதன் தலைநகரமாகவும், பெரிய நகரமாகவும் உள்ளது. இது நகர நிர்வாகத்திற்கான உள்ளாட்சி அமைப்பில் சிறப்பு நிலை நகராட்சி. தமிழகத்தின் முக்கியமான வணிக மையமாக விளங்கும் நகரங்களில் கரூர் நகரமும் ஒன்று. அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்டதும் கூட.
கரூர் நகரத்தின் வரலாற்றுச் சிறப்பு!
பண்டைய கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதி. 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்டது. இந்து மத நம்பிக்கைகளின் படி இறைவன் பிரம்மா தன் படைப்புத் தொழிலை இங்குதான் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அதனால் கருவூர் என்று பெயர் பெற்றது. பின் மருவி கரூர் என்று ஆனதாகக் கூறப்படுகிறது.
இந்நகரம் சங்க இலக்கிய நூல்களிலும், பண்டைய கல்வெட்டுகளிலும் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர கர்ப்ப புரம், ஆதிபுரம், பாஸ்கரபுரம், வீரசோழபுரம், வஞ்சி மூதூர் என்று பல பெயர்கள் இதற்கு இருந்துள்ளது!
சங்க காலத்தில் சேரர்களின் தலைநகரமாக கரூர் இருந்துள்ளது. இதற்கு ஆதாரமாக கரூர் அருகே உள்ள ஆறு நாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுகள் உள்ளன. சேரன் செங்குட்டுவன் வஞ்சிமாநகரை தலை நகரமாகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது!
சேர மன்னர்களிடமிருந்து இந்த நகரைக் கைப்பற்ற சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் பலமுறை போர் தொடுத்துள்ளனர்! ஒரு கட்டத்தில் பாண்டியர்கள் வென்றுள்ளனர். இவர்களுக்குப் பின் பல்லவர்களும், அதன்பின் சோழர்களும் ஆட்சி செய்துள்ளனர்.
அதன் பின் கரூர் நாயக்கர்கள் மற்றும் திப்பு சுல்தான் ஆட்சிக்கு உட்பட்டதானது. 1793-இல் ஆங்கிலேயர்கள் கருவூர்க் கோட்டையை அழித்து இப்பகுதியைக் கைப்பற்றினர். ஆங்கிலேயர்களுடனான போரில் இறந்தவர்கள் நினைவாக கட்டப்பட்ட நினைவிடம் ராயனூர் என்னுமிடத்தில் உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியில் ஆரம்பத்தில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர் வட்டமாகவும் பின்னர் திருச்சி மாவட்டத்துடன் இணைந்தும் இருந்தது.
சங்க காலத்திய வணிக மையம்!
பண்டைய காலத்தில் ரோமாபுரியோடு நெருங்கிய வணிகத் தொடர்பும் கருவூருக்கு இருந்துள்ளது! இங்கு செய்யப்பட்ட தங்க நகைகளை ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். மேலும் பண்டைய கிரேக்க புலவர்கள் 150 பேர் தங்கள் படைப்புகளில் இவ்வூரின் பெயரினை "கோருவூரா' என்றும் சிறந்த வணிக மையம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்!
இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் பழமையான மண்பாண்டங்கள், செங்கல்கள்,மண்பொம்மைகள், ரோமானிய, சேர, சோழ, நாணயங்கள், உள்ளிட்ட பல பொருட்கள் கிடைத்துள்ளன!
மதுக்கரை சுவர்!
கிருஷ்ணராயபுரம் தாலுக்காவில் இந்த சுவர் இருக்கிறது. சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டியர்களுக்கு இடையே பலமுறை போர்கள் நடந்தபோது எல்லையைக் குறித்த பிரச்னைகளும் ஏற்பட்டது. அப்பொழுது எல்லையைக் குறிப்பிடும் வகையில் கட்டப்பட்டதுதான் இந்த சுவர்! இது குறித்த செவி வழித் தகவல் ஒன்றும் உள்ளது!
2000 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று மன்னர்களும் எல்லை பிரச்னையைத் தீர்த்து வைக்கும்படி இறைவியிடம் வேண்டினர். அதற்கு இணங்கி "செல்லாண்டி அம்மன்' ஒரே இரவில் இந்தச் சுவற்றினை நிர்மாணித்ததாக கூறப்படுகிறது. கல் மற்றும் மண்ணால் ஆன இச்சுவற்றில் எல்லை தெய்வங்களின் உருவங்களும் சிலைகளும் நிறைய உள்ளன.
இச்சுவரானது காவிரியின் தென்கரையில் உள்ள செல்லாண்டி அம்மன் கோயிலில் தொடங்கி, இம்மாவட்டத்தின் குளித்தலை, கரூர் தாலுக்காகளை கடந்து திருச்சி, திண்டுக்கல், மாவட்டங்கள் வழியாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் வரை நீண்டு செல்கிறது.
வரலாற்று அறிஞர்கள் இதனை முதல் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்! பிரிட்டிஷ் ஆட்சியில் 1907-ஆம் வருடத்திய அரசு இதழில் இச்சுவர் பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது!
சமணர் குகைகள்!
இம்மாவட்டத்தில் "ஆறு நாட்டார் மலை குன்றில்' சமண முனிவர்கள் தங்கியிருந்த குகைகள் உள்ளன.
கருவூருக்கு அருகில் இருக்கும் புகழிமலை குன்றில் பழமையான முருகன் கோயில் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் இங்குள்ள குகைகளை "பராந்தக நெடுஞ்சடையன்' என்னும் பாண்டிய மன்னனும், அதிபன் என்னும் மன்னனும் போர் காலத்தில் போர் தந்திர வேலைகளுக்குப் பயன்படுத்தியதாக செய்தி உள்ளது.
மேலும் இக்குகைகளின் சமண முனிவர்கள் அடைக்கலம் புகுந்து வாழ்ந்துள்ளனர். சூடாமணிப்பொந்து என்று அழைக்கப்படும் இவற்றில் 35க்கும் மேற்பட்ட ஒரு ஆள் படுக்கும் அளவில் படுக்கை போன்றே செதுக்கப்பட்ட சமணப் படுக்கைகள் ஆங்காங்கே உள்ளன.
நீர்வளம்! -- காவிரி ஆறு!
காவிரி, குடகு முதல் பூம்புகார் வரையிலான தன் 765 கி.மீ. தூரப்பயணத்தில் இங்குதான் அகண்ட காவிரியாக (1.5 கி.மீ. அகலம்) செல்கிறாள்! அதனால் இங்கு காவிரி "காகம் தாண்டா காவிரி' என அழைக்கப்படுகிறது. (இங்கு நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்....,"ஆடு தாண்டும் காவிரி' என்று பொருள் படும் "மேகே தாட்' என்ற இடம் கர்நாடகத்தில் இருக்கிறது. இங்கு 10 மீ அகலத்திற்கான பாறை இடைவெளியில் காவிரி சீறிப் பாய்ந்து வருகிறாள்!)
தந்தை பெரியார் பாலம்!
அகண்ட காவிரியின் குறுக்கே 1450 மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள இந்த பாலம் குளித்தலை, முசிறி நகரங்களை இணைக்கிறது. தமிழகத்தில் உள்ள பாலங்களில் இரண்டாவது நீளமான பாலம் இதுதான்! கடலில் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம்தான் தமிழகத்தின் நீளமான பாலங்களில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் தமிழக ஆற்றுப் பாலங்களில் இதுதான் மிகவும் நீளமான பாலமாக முதல் இடத்தில் உள்ளது. காவிரியில் நீர் பெருகி வரும்பொழுது இப்பாலத்தில் காற்று வாங்கியபடி நடந்து செல்லுவது அலாதியானதுதான்!
மாயனூர் கதவணை!
இந்த அணை கிருஷ்ணராயபுரம் தாலுக்காவில் மாயனூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புனரமைத்து கட்டப்பட்டது. இது 1.04 டி.எம்.சி. தண்ணீரைச் சேமிக்கும் திறன் கொண்டது.
அடிக்கடி செய்திகளில் வரும் காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கான ஆரம்பம் இந்த அணைதான்! வெள்ளப்பெருக்கு காலத்தில் காவிரியில் வரும் சுமார் 5 டி.எம்.சி. நீர் சேமிக்க முடியாமல் வங்கக் கடலில் கலக்கிறது. அந்நீரைச் சேமிக்கும் வகையில்தான் இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி 250 கி.மீ. தூரத்திற்கு வாய்க்கால்கள் மூலம் நீரைக் கொண்டு செல்ல முடியும். இதனால் அக்கினியாறு (பட்டுக்கோட்டை) தெற்கு வெள்ளாறு (புதுக்கோட்டை) மணிமுத்தாறு (காரைக்குடி) மற்றும் குண்டாறு (ராமநாதபுரம்) இணைக்கப்படும்.
இதனால் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மற்றும் இராமநாதபுரம் என ஆறு மாவட்டங்கள் பயன்பெறும்.
இத்திட்டம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இப்போது இந்த கதவணையின் சுற்றுப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் நன்கு உயர்ந்துள்ளது.
மேலும் மாயனூர் கதவணையும், அதன் அருகில் உள்ள பூங்காவும் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக புகழ் பெற்றுள்ளது.
அமராவதி ஆறு!
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஆனை மலை, மற்றும் பழனி மலைக்கு இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகி, திருப்பூர் மாவட்டத்தினை கடந்து கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி வழியாக கருவூருக்கு 10 கி.மீ. தொலைவில் கட்டளை என்ற ஊரில் திருமுக்கூடலில் காவிரியுடன் சங்கமிக்கிறது!
இந்நதியால் இம்மாவட்டத்தின்17000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
தொடரும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!

எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


