ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கருவூலம்: தூத்துக்குடி மாவட்டம்!

தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கடலோர மாவட்டம். 1986 இல் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து உருவானது. 

News image
Updated On :4 ஆகஸ்ட் 2018, 4:30 am

தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கடலோர மாவட்டம். 1986 இல் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து உருவானது. 
4621 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தினை கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் மன்னார் வளைகுடாவும், பிற பகுதிகளில் ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களும் சூழ்ந்துள்ளன. 
நிர்வாக வசதிக்காக தூத்துக்குடி மாவட்டம்,   எட்டையபுரம், கோவில்பட்டி, ஒட்டபிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், விளாத்திகுளம் என எட்டு வட்டங்களாக (தாலுக்கா) பிரிக்கப்பட்டுள்ளது.  இதன் எல்லைக்குள் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தூத்துக்குடி மாநகரமே இதன் தலைநகரமாகும். 

தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் களங்கள் ஆதிச்சநல்லூர்!

நீண்ட நெடுங்காலமாக நல்ல நாகரிகமும், சிறந்த சமுதாய அமைப்பும் கொண்ட மக்கள் தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்துள்ளனர்.  ஆதிச்ச நல்லூர் தாமிரபரணியின் கழிமுகப் பகுதியில் திருச்செந்தூருக்கு அருகில் 114 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முன்னால் இவ்விடம் இறந்தவர்களை முதுமக்கள் தாழியில் வைத்துப் புதைக்கும் இடுகாடாக இருந்துள்ளது. ஒரு ஏக்கர் இடத்தில் சுமார் 1000 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய தொல்லியல் களமும் இதுதான்.  இங்கு 1876 இல் தான் முதல் தொல்லியல் ஆய்வு நடந்தது.  பிறகு பலமுறை ஆய்வுகள் தொடர்ந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த மக்கள், விவசாயம் செய்தல், உலோகம்,  வேட்டைக்கான கருவிகள், கலைப்பொருட்கள், அணிகலன்கள், மண்பாண்டங்கள், ஆகிய தொழில்களிலும் சிறந்து விளங்கியிருக்கின்றனர். இங்கு கிடைத்த ஆயிரக்கணக்கான பொருட்கள், சென்னை அரசு அருங்காட்சியகத்திலும், ஜெர்மனிலுள்ள பெர்லின் அருங்காட்சியகத்திலும், பாரீஸ் அருங்காட்சியகத்திலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.  

கொற்கை! - புதையுண்ட நகரம். 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் சிறு கிராமமாக உள்ளது கொற்கை.  இன்று இக்கிராமத்திற்கு 6 கி.மீ. தூரத்தில் கடற்கரை உள்ளது. கி.மு. 300 தொடங்கி கி.பி. 500 வரை சிறப்புடன் ஆட்சி புரிந்த சங்ககால பாண்டியர்களின் தலைநகரமும், துறைமுக நகரமாகவும் இருந்துள்ளது. இங்கு கிடைக்கும் ஏராளமான முத்துக்களை கிரேக்கர்களும், அரேபியர்களும் வாங்கிச் சென்றுள்ளனர். பாண்டிய மன்னர்களின் குதிரைப் படைக்காக 16,000 அரேபியக் குதிரைகள் வந்திறங்கின என்பது போன்ற சரித்திரக் குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன. 
அகநானூறு, ஐங்குறுநூறு, சிலப்பதிகாரம் போன்றவற்றில் கொற்கையைப் பற்றிய தகவல்கள் உள்ளன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் கொற்கையில்தான் இருந்தது என்றும் கருதப்படுகிறது. 
கால்டுவெல் தன் ஆராய்ச்சிக் குறிப்பில்,  தற்போதுள்ள நிலமட்டத்திலிருந்து எட்டடிக்குக் கீழே பழங்கால கொற்கைத் துறைமுகம் இருந்துள்ளது என்றும், அதில் பாதி கடலாலும், மீதி தாமிரபரணியாலும் புதையுண்டிருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார். 

சில வரலாற்றுத் தகவல்கள்!

சங்ககாலம் தொடங்கி தென்தமிழக பகுதிகளில் ஆட்சி செய்த முற்கால பாண்டியர்கள், இடைக்கால சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை நாயக்க மன்னர்கள், உள்ளிட்ட பலர் இந்நிலப் பகுதியை ஆட்சி செய்துள்ளனர். 

கி.பி. 1632 இல் போர்ச்சுகீசியர்கள் தங்கள் படைபலத்தைக் கொண்டு இம்மண்ணில் கால் பதிக்கத் தொடங்கினர். இவர்களிடமிருந்து 1658 இல் வந்த டச்சுக்காரர்கள் இப்பகுதியைக் கைப்பற்றினார்கள்.  டச்சுக்காரர்களிடமிருந்து கிழக்கிந்தியக் கம்பெனியார் இந்நிலப்பகுதியைக் கைப்பற்றி தங்கள் அதிகாரத்தை தூத்துக்குடியில் நிலை நாட்டினர். 

1755 இல் பாளையக்காரர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி படையிடம் இரண்டு துறைமுகங்களை ஒப்படைத்தனர்.  இக்காலகட்டத்தில்தான் "பூலித்தேவர்' கப்பம் கட்ட மறுத்து போராடினார்! பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ஆங்காங்கே தொடர்ந்து கலகம் செய்தனர்.  இவர்களுக்கு பிரெஞ்சுப் படையும், சந்தாசாகிப்பும் ஆதரவாக இருந்தனர். 

1761 இல் புதுச்சேரி ஆங்கிலேயர் வசம் ஆனதும் பிரெஞ்சுக்காரர்கள் பின்வாங்கிவிட்டனர். 1764 இல் பாளையங்கோட்டையைக் கைப்பற்றிய பிரிட்டிஷ் படை திருவாங்கூர் அரசருக்கும், நவாபுக்கும் சில பகுதிகளை விட்டுக் கொடுத்தது. 

1767 லிருந்து 1783 க்குள் பாஞ்சாலங்குறிச்சி படிப்படியாக பலம் இழந்து முழுமையாக சூறையாடப்பட்டது. பின் பாளையக்காரர்களும், நவாபும் ஒடுக்கப்பட்டனர்.  பிரிட்டிஷார் 1801 இல் திருநெல்வேலியை முழுமையாக எடுத்துக்கொண்டனர். தூத்துக்குடி அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதி. 

அமைவிடச் சிறப்பு!

மன்னார் வளைகுடாவும், தீவுகளும்!

இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் 100 முதல் 200 கி.மீ. அகலத்தில் அமைந்துள்ள கடல் பகுதிதான் மன்னார் வளைகுடா. இது தூத்துக்குடியிலிருந்து தனுஷ்கோடி வரையிலான சுமார் 100 கி.மீ. நீளத்திற்கு பரந்துள்ளது. இதில் ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 10,500 ச.கி.மீ. பரப்பளவை "மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிர்கோள காப்பகம்' என இந்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு யுனெஸ்கோ அமைப்பும் அங்கீகாரம் அளித்தது. 

இங்கு 4223 கடல்வாழ் தாவரங்கள்,14 வகையான கடற்புற்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில்பவளப்பாறைகள், கடற்பசு, 500 க்கும் மேற்பட்ட மீன்வகைகள்,   மற்றும் விலங்கினங்களும் இருப்பதாக 
கண்டறியப்பட்டுள்ளன! 

மன்னார் வளைகுடா தீவுகள்!

இக்கடல் காப்பக பகுதியில் 560 ச.கி.மீ. பரப்பில்தான் பவளப்பாறைகள் அதிகம் காணப்படுகின்றன. அதனால் தமிழக அரசு இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட "மன்னார் வளைகுடா கடல் வாழ் தேசிய பூங்கா' வாக அறிவித்துள்ளது. இதற்குள் 21 தீவுகள் உள்ளன. 

சிறியதும், பெரியதுமாய் உள்ள இத்தீவுகள் இயற்கைச் சீற்றங்களிலிருந்து கடற்கரையைக் காக்கின்றன. வான் தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்கு தீவு ஆகிய 4 தீவுகளும் தூத்துக்குடியைச் சேர்ந்த தீவுகள். 

அலையாத்திக் காடுகள்!

தாமிரபரணி நதி மன்னார் வளைகுடாவில் சங்கமிக்கும் பழைய காயல் பகுதியில் 14 ஹெக்டேர் பரப்புக்கு வளமான இயற்கை அழகுடன் அலையாத்திக் காடுகள் உள்ளன. 

தேரி காடுகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் திருசெந்தூர் ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் இத்தேரிக்காடுகள் உள்ளன. உடன்குடி அருகில் சுமார் 12 மைல் சுற்றளவிற்கு ஏறத்தாழ 390 ச.கி.மீ. பரப்பளவிற்கு சிவப்பு நிற மணற்குன்றுகளும் கொண்ட பாலைநிலம் போன்ற தோற்றத்துடன் காணப்படுவதுதான் தேரிக்காடுகள் எனப்படுகிறது. இந்நிலப்பகுதி தூத்துக்குடி, மற்றும் நெல்லை மாவட்டங்கள் வரை பரந்து காணப்படுகிறது.  இத்தகைய நில அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத சிறப்பான ஒன்று. இம்மணற்குன்றுகள் பல நூறு ஆண்டுகளாக நடந்த காற்றரிப்பினால் வந்தவை எனக் கருதப்படுகின்றன. இம்மணற்குன்றுகளில்,  குவார்ட்ஸ், ஜிங்கான், மோனோûஸட், கார்னெட், டைட்டானியம் போன்ற தாதுப்பொருட்கள் கலந்துள்ளன. கோடைக்காலத்தில் இம்மணற்குன்றுகள் இடம் மாறுவது வியப்பளிக்கும்!

நீர்வளம்!

பெரிய நீர்த்தேக்கங்கள் எதுவும் இல்லாத மாவட்டம். நெல்லை மாவட்டத்தின் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளே தூத்துக்குடியின் நீர் ஆதாரம். தாமிரபரணி நதியே முக்கிய நதி. 

தாமிரபரணி

பொதிகை மலையில் உருவாகி, நெல்லை மாவட்டத்தைக் கடந்து, தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஏரல் ஆகிய ஊர்களின் வழியாக பயணித்து புன்னைக்காயலில் கடலில் கலக்கிறது.  புன்னைக்காயல் பகுதி ஆழம் குறைந்த சதுப்பு நிலமாக அலையாத்திக் காடுகளாகக் காட்சியளிக்கிறது.  மேலும் புன்னைக்காயல் பாதுகாக்கப்பட்ட காப்பக பகுதியில் உள்ளது.   மருதூர், மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகள் மட்டும் இந்த மாவட்டத்திற்குள் உள்ளன. இவற்றிலிருந்து பிரியும் கால்வாய்கள் மூலம் 53 குளங்கள் நீர் பெறுகிறது. 46,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

வைப்பாறு

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றி தேனி, விருதுநகர் மாவட்டங்களின் வழியாக தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் வழியாக சென்று கடலில் கலக்கிறது. 

இவற்றைத் தவிர மழைக்காலத்தில் மட்டும் நீரோட்டம் இருக்கும் உப்பாறு ஓடை, மலட்டாறு ஓடை போன்ற ஓடைகள் உள்ளன. 

கோரம்பள்ளம் குளம்!

1888 இல் ஆங்கிலேயர்களால் வெட்டப்பட்ட 1300 ஏக்கர் பரப்பளவும் 7 கி.மீ. சுற்றளவு கொண்ட பரந்து விரிந்த தளத்தின் மூலம் 25000 ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது. தாமிரபரணியே இதன் முக்கிய ஆதாரம். கழுகுமலை, மணியாச்சி பகுதி மழைநீரும் இங்கு வந்து சேர்கிறது. 

மலைவளமும், வனவளமும்.

கொழுந்து மலை, குறுமலை, கழுகு மலை, சிங்கம்பட்டி மலை,  போன்ற சில குன்றுகள் உள்ளன. திருசெந்தூர் பகுதியில் "விடத் தேரை' என்னும் இனமான கரையான் அரிக்கமுடியாத மரங்கள் உள்ளன. 

கடலோரப் பகுதிகளில் பனை மரங்கள் அதிகம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.