உழைத்து வாழ வேண்டும்!
பாறையின் மீது குத்துக்காலிட்டுக் குந்தியிருந்தது குரங்கு கோணங்கி. எதிரே இருந்த ஆனை அழகு ராஜாவின் கடையில் எண்ணைச் சட்டியில் கொதிக்கும் எண்ணையில் மிதந்து கொண்டிருந்த மசால்வடையின் வாசம்


பாறையின் மீது குத்துக்காலிட்டுக் குந்தியிருந்தது குரங்கு கோணங்கி.
எதிரே இருந்த ஆனை அழகு ராஜாவின் கடையில் எண்ணைச் சட்டியில் கொதிக்கும் எண்ணையில் மிதந்து கொண்டிருந்த மசால்வடையின் வாசம் மூக்கைத் துளைத்தது.
வேலைக்குப் போய்க்கொண்டிருந்த விலங்குகள் ஆளுக்கொரு வடை வாங்கித் தின்று கொண்டே போய்க் கொண்டிருந்தன.
கரடி கருப்பனைப் பார்த்த கோணங்கி, ""கருப்பா!...எனக்கு ஒரு வடை வாங்கிக்கொடேன்...'' என்றது.
""வேலை செய்யற நாங்க கிடைக்கிற கூலியிலே காசைக் கொடுத்து வாங்கித் தின்கிறோம்!....உன் உடம்புக்கு என்ன?...நல்லாத்தானே இருக்கே...நீயும் போய் வேலை செய்தால் ஆசைப்பட்டதை வாங்கித் தின்னலாமே...அப்படி இல்லாம உட்கார்ந்து உடம்பை வளர்த்துக்கிட்டு இப்படி வழியிலே போறவங்ககிட்டே கையேந்தி கேட்கிறது உனக்கு வெட்கமா இல்லையா?...'' என்று இகழ்ந்து கூறிவிட்டு, வாங்கிய வடையை தின்றுகொண்டே போய்விட்டது கருப்பன்.
குரங்கன் கோணங்கிக்கு மனசு வலித்தது. இப்படி எத்தனையோ பேர்கள், எத்தனையோ நாட்கள் இழித்துப் பேசியிருக்கிறார்கள். ஆனால் இன்று கருப்பன் கூறியது கோணங்கியை
ரொம்பவே பாதித்துவிட்டது!
கடைக்கு வந்த முயல் முத்து, ""ஆனை அண்ணே!...ஒரு மசால் வடை கொடு!...'' என்றது.
குழாயில் தண்ணீர் பிடித்து வர கையில் குடத்துடன் நின்று கொண்டிருந்த யானை, ""சற்று இரேன்....தண்ணி தூக்கிக்கிட்டு வந்துடறேன்...'' என்றது.
""நான் அவசரமா போகணும். எனக்குக் கொடுத்துட்டு அப்புறம் போ...'' என்றது முத்து.
""ஊம்....குழாயிலே தண்ணி பிடிச்சுத் தூக்கிக்கிட்டு வரணும்....அடுத்தபடியா பக்கோடா போட மளிகைக் கடைக்கு போய் சாமான் வாங்கிக்கிட்டு வரணும்...'' என்று அலுத்துக்கொண்டே குடத்தை வைத்துவிட்டு வந்தது யானை.
""ஒததை ஆளா ஏன் இப்படி சிரமப்படறே?...வேலைக்கு ஒரு ஆளை போட்டுக்கிட்டா என்ன?'' என்றது முத்து.
""நானும் தேடிக்கிட்டுத்தான் இருக்கேன்....வேலைக்கு ஆள் கிடைக்கலையே...'' என்று சொல்லிவிட்டு வடையை எடுத்துக் கொடுத்தது ஆனை.
""சரி, நீ வடையைச் சாப்பிட்டுக்கிட்டு இரு. நான் போய் தண்ணி தூக்கிக்கிட்டு வ்ர்றேன்...'' என்று சொல்லிவிட்டு, குடத்தை எடுக்கப் போனது ஆனை.
வைத்த இடத்தில் குடம் இல்லை!!!
""இங்கேதானே வெச்சேன்....குடம் எங்கே போச்சு?...'' என்றது ஆனை.
""அதோ பார்!....'' என்றது முத்து.
அங்கே....
குடத்தில் தண்ணீர் தூக்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தது கோணங்கி!
அதைப் பார்த்த ஆனைக்கு ஆச்சரியம்! ""அடே, கோணங்கி!....நீயா குடத்தை எடுத்துக்கிட்டுப் போய் தண்ணி தூக்கிக்கிட்டு வர்றே?...''
என்றது.
""ஆமா அண்ணே!....இன்னிலேர்ந்து நான் உழைத்து வாழ முடிவு செஞ்சுட்டேன்!...'' என்றது கோணங்கி.
""அப்படியா?...மகிழ்ச்சி!....இந்தா இந்த மசால்வடையைத் தின்னுட்டு, மளிகைக் கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வா...'' என்றது ஆனை.
""அண்ணே!....எனக்கு வேலை...???...'' என்றது கோணங்கி.
""நீ வேலை தேடி வேறு எங்கேயும் போக வேண்டாம்....இன்னிலேருந்து நீ இங்கேயே வேலை செய்!....சம்பளம் கொடுக்கறேன்...'' என்றது ஆனை.
மகிழ்ச்சயுடன் வடையைத் தின்று முடித்த கோணங்கி, ஆனை அழகுராஜாவின் கடைக்குச் சாமான் வாங்கிவரப் புறப்பட்டது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...