ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கருவூலம்: பாண்டிச்சேரி -யூனியன் பிரதேசம்

சுற்றுலா வருபவர்களை கவர்ந்து இழுக்கும் பாண்டிச்சேரி பகுதிகளுள் வெள்ளை நகரம் என்றழைக்கப்படும் "வில் பிளான்ஷ்' (VILLE BLANCHE) குடியிருப்பு பகுதி முதன்மையானது. 

News image
Updated On :8 டிசம்பர் 2018, 1:14 pm

சென்ற இதழ் தொடர்ச்சி....

மனதைக் கவரும் வெள்ளை நகரம்!

சுற்றுலா வருபவர்களை கவர்ந்து இழுக்கும் பாண்டிச்சேரி பகுதிகளுள் வெள்ளை நகரம் என்றழைக்கப்படும் "வில் பிளான்ஷ்' (VILLE BLANCHE) குடியிருப்பு பகுதி முதன்மையானது. 

1674 இல் பிரான்ஸ் தன்னுடைய முதல் குடியிருப்பைப் புதுச்சேரியில் அமைத்தது. புதுச்சேரியில் ஓடிய கால்வாயின் இருபுறமும் குடியிருப்புப் பகுதி இருக்குமாறு அவர்கள் வடிவமைத்தனர்.

கால்வாயின் ஒருபுறம் பிரெஞ்சுக்காரர்களின் குடியிருப்பான "வில் பிளான்ஷ்' ம், மறுபுறம் புதுச்சேரிக்காரர்ளின் குடியிருப்பான "வில் நாயர்' (யஐககஉ சஞஐதஉ) ரும் உருவாக்கினார்கள்.

இவற்றில் வெள்ளை நகரத்தில் உள்ள பிரெஞ்சுப் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் பிரெஞ்சு பாணி வீடுகள், அழகான சாலைகள், என பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. 

வில் பிளான்ஷியில் பல தலைமுறைகளாக வாழ்ந்த பிரான்ஸ் நாட்டவர்கள் பலரும் 1954 இல் புதுச்சேரி சுதந்திரம் பெற்ற பின்னும் பிரான்ஸ் குடியுரிமையுடன் அங்கேயே வாழ்கின்றனர். புதுச்சேரியில் "பிரெஞ்சு மொழி' 
இன்னும் ஆட்சி மொழியாக இருக்கிறது. 

தி மேன்ஷன் ஆஃப் ஆனந்தரங்கம் பிள்ளைபுதுச்சேரிக்காரர்கள் வசிக்கும் "தமிழ் குவார்ட்டர்' என்றழைக்கப்படும் "வில் நாயர் பகுதியில்' 1738 இல் கட்டப்பட்ட "தி மேன்ஷன் ஆஃப் ஆனந்தரங்கம் பிள்ளை' இன்றும் உள்ளது. இக்கட்டிடம் தமிழ் மற்றும் பிரெஞ்சு கட்டிடக் கலைகளை இணைத்துக் கட்டப்பட்டது. ஆனந்தரங்கம் பிள்ளை மொழிபெயர்ப்பாளராக (துபாஷி) பணியாற்றினார். இவருடைய நாட்குறிப்பு புகழ்பெற்ற ஆவணமாகத் திகழ்கிறது. 

பழமையான தேவாலயங்களும் மசூதியும்!

18ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டின் மதப் பிரசாரர்களால் கட்டப்பட்ட தேவாலயமும், 1692 இல் கட்டப்பட்டு 1791 இல் புதுப்பிக்கப்பட்ட "தி சர்ச் ஆஃப் அவர் லேடி ஆஃப் ஏஞ்சல்ஸ்' தேவாலயமும் ஆற்காடு நவாப் அவர்களால் கட்டப்பட்ட 350 ஆண்டுகள் பழமையான பாண்டிச்சேரி நகரின் முதல் மசூதி போன்ற பழமையான வழிபாட்டுத் தலங்கள் இங்குள்ளன.  

பிரோமனேடு கடற்கரை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களும் கடற்கரை பகுதியிலேயே அமைந்து இருப்பதால், மொத்தம் 45 கி.மீ. நீளமுள்ள (4 மாவட்டங்களும் சேர்த்து) கடற்கரை இருக்கிறது. 27 மீனவ கிராமங்களும் உள்ளன. நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட சுற்றுலா தலங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 

அவ்வகையில் புதுச்சேரியில் போர் நினைவு சின்னம் முதல் ட்யூப்ளக்ஸ் பூங்கா வரை 1.2 கி.மீ. நீளத்திற்கு குடும்பத்துடன் குதூகலமாக பொழுதைப் போக்கும் வகையில் நடைபாதையுடன் கூடிய அழகான கடற்கரை உள்ளது. 

ஆயி மண்டபம் (பாரதி பூங்கா)

பாண்டிச்சேரி பீச் அவென்யூவில் பாரதி பூங்காவின் நடுவில் வெள்ளை வெளேரென்று மிகப் பெரிய நுழைவு வாயில் இருக்கிறது. அதற்குப் பெயர் ஆயி மண்டபம்! பாண்டிச்சேரியின் அரசாங்கச் சின்னமாக ஏற்கப்பட்டிருக்கும் ஆயி மண்டபத்திற்கு ஒரு கதை உள்ளது. 

பிரெஞ்சு ஆதிக்கக் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பிரான்ஸின் மன்னர் நெப்போலியன் - 3, பிரான்ஸிலிருந்து லெமாரிசி என்பவரை புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தார். அவர் இங்கிருந்த ஆயிக்குளத்தில் நல்ல நீர் கிடைப்பதை அறிந்து அங்கிருந்து கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்தார். பின் மன்னருக்கு "ஆயி' என்ற பெயருக்கான காரணத்தையும் கடிதத்தில் குறிப்பிடிட்டிருந்தார். 

கிருஷ்ணதேவராயர் ஒரு சமயம் இப்பகுதிக்கு வந்தபோது விளக்குகளும் பூக்களும் கொண்டு அழகுபடுத்தப்பட்ட கோயில் போன்று இருந்த ஆயி என்ற பெண்ணின் வீட்டை உண்மையில் கோயில் என நினைத்து வணங்கி உள்ளே போக நினைத்தார்.  பின்புதான் அது கோயில் இல்லை, ஆயி என்ற பெண்ணின் வீடு என்பதை அறிந்து கோபம் கொண்டு, ""உன் வீட்டை இடித்து விட்டு ஒரு கிணறும், குளமும் வெட்டு'' என உத்தரவிட்டாராம். ஆயியும் அதன்படியே செய்தாளாம்! 

ஆயியின் கதையை அறிந்த நெப்போலியன் லெமாரியிடம் ஆயி பெயரில் நினைவுச் சின்னம் எழுப்பும்படி கூறினார்.  அதனால் கட்டப்பட்டதுதான் இந்த "ஆயி' மண்டபம்!

பாண்டிச்சேரி அருங்காட்சியகம்!

அரிக்கன்மேடு பகுதியில் நடந்த தொல்லியல் ஆய்வில் கிடைத்த மிகவும் பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருட்கள் இங்கு உள்ளன. மேலும் மிகவும் அரிதான வெண்கலம் மற்றும் கல்லால் ஆன சிற்பங்களும், பல்லவ மற்றும் சோழர் காலத்திய சிலைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 
ஜவஹர் பொம்மை அருங்காட்சியகம்!

பழைய கலங்கரை விளக்கு அருகில் உள்ள "கோபெர்ட் அவின்யூ' பகுதியில் அமைந்துள்ளது. இங்கு இந்திய மாநிலங்களின் உள்ள பல வைகயான ஆடை அமைப்புகளில் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளைக் கண்டு மகிழலாம். 

தாவரவியல் பூங்கா!

1826இல் உருவாக்கப்பட்டது இந்த தாவரவியல் பூங்கா. பிரெஞ்சுக் கட்டடக்கலைகளை பிரதிபலிக்கும் அழகிய வாயில் அழகாக வெட்டி விடப்பட்ட மரங்கள், மலர் படுக்கைகள், பாதைகள், செயற்கை இசை நீர் ஊற்றுகள், மேலும் உலகின் பல வகையான மரங்கள் என மனிதர்களின் கைவண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளதை கண்டு மகிழலாம்.

ஒட்டேரி சதுப்பு நிலம்!

390 ஹெக்டேர் பரப்பளவில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பகுதிக்குள் உள்ளது ஒட்டேரி சதுப்பு நிலம். இங்கு சிறு புதர் முதல் பவவகையான மரங்கள்வரை எண்ணற்ற தாவர வகைகள் செழித்து வளர்ந்துள்ளது. இப்பகுதியில் நீர் வாழ் பறவைகளும் அதிகம் உள்ளன. எனவே பறவைகள் சரணாலயமாக இப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

நினைவு அருங்காட்சியகங்கள்!

பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த வீடும், பாரதிதாசன் பிறந்து வளர்ந்த வீடும் நினைவிடமாக பராமரிக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர 8 கிரானைட் தூண்கள் கொண்ட சிறு மண்டபத்திற்குள் வைக்கப்பட்டுள்ள 4 மீட்டர் உயர காந்தி சிலை, 2.88 மீ. உயரம் கொண்ட  ட்யூப்ளெக்ஸ் சிலை, "ஜோன் ஆஃப் ஆர்க்' கின் சலவைக் கல்லாலான சிலை, போர் நினைவுச் சின்னம், பழமையான வரதராஜ பெருமாள் கோயில், வேதபுரீஸ்வரர் கோயில், கன்னிகா பரமேஸ்வரி கோயில் என பல இடங்கள் புதுச்சேரி நகரத்தில் உள்ளன. 

காரைக்கால் மாவட்டம்!

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த பகுதி தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையில் உள்ளது. காவிரியின் கிளை ஆறுகள் பிரியும் குடமுருட்டி, அரசலாறு, வீரசோழனாறு, விக்கிரமனாறு, திருமலைராயன் ஆறு, முதலிய காவிரியின் கிளை ஆறுகள் காரைக்கால் பகுதியை வளப்படுத்தி வங்கக் கடலில் கலக்கிறது. 

இம்மாவட்டத்தில் கடற்கரையும், புகழ்பெற்ற திருநள்ளார் கோயிலும், பத்ரகாளியம்ம்ன் கோயிலும், சிறந்த சிவ பக்தையும், 63 மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் கோயிலும் உள்ளது. 1891 இல் கட்டப்பட்ட "லேடி ஆஃப் ஏஞ்சல்ஸ்' கிறிஸ்தவ தேவாலயமும் இங்குள்ளது. 

ஏனாம் மாவட்டம்!

30 ச.கி.மீ. பரப்பளவுள்ள ஏனாம் மாவட்டம் காக்கிநாடாவுக்கு அருகில் கோதாவரி ஆற்றின் கிளை ஆறாகிய கெளதமி கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.  

1846 இல் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த பிரெஞ்சுக் காரர்களால் கட்டப்பட்ட , "புனித அன்னா கத்தோலிக்க தேவாலயம்'  ஏனாமில் உள்ளது. இது பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கட்டுமானப் பொருட்களைக் கொண்டு ஐரோப்பியக் கட்டிடபாணியில் கட்டப்பட்ட தேவாலயமாகும்.

இதன் அருகில் உள்ள மலை மீது பிரெஞச்சுக்காரர்கள் ஒரு கோயிலைக் கட்டினர். தேவாலயத்தின் பின்புறம் உள்ள மலை மீது ஆங்கிலேயர்கள் ஒரு தேவாலயம் கட்டியுள்ளனர். கடற்கரையை ஒட்டிய இந்திய சுதந்திர தேவியின் சிலை, இரு யானைகள் சிவலிங்கத்தைப் போற்றும் சிலை,  மேலும் ஏனாமின் நுழைவு வாயில், ராஜீவ் காந்தி கடற்கரை, சிறுவர் பூங்கா முதலியவை குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்கள்!

மாஹே மாவட்டம்!

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களில் "மாஹே' மாவட்டமும் ஒன்று. 9 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது மாஹே நகரம்! இந்நகரம் "மய்யழிப்புழா' எனப்படும் மாஹே ஆற்றின் கழிமுகத்தில் அமைந்துள்ளது. மலபார் பகுதியில் அமைந்துள்ளதால் இங்குள்ள மக்கள் மலையாளம் 
பேசுகின்றனர். 

இங்கு 1736 இல் கட்டப்பட்ட ஒரு கத்தோலிக்க தேவாலயமும், ஒரு பூங்காவும் உள்ளன. இப்பூங்காவில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட இரண்டு கல்தூண்கள் இருக்கின்றன. 

மேலும் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ஒரு நீண்ட நடைப் பயிற்சிக்கான பாதை உள்ளது. ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்துக் கொண்டே நடைபோட ஏற்ற இடம்! 

முற்றும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.