நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரங்கம்: பாதை

படகில் மன்னர், மகாராணி, அமைச்சர், குழந்தை இளவரசன் வீற்றிருக்க மாலை வேளை. படகோட்டி முத்து விஜயன் படகை ஆற்றில் நீரோட்டத்துக்கு எதிராக துடுப்பு போட்டுச் செலுத்துகிறான்.

News image
Updated On :25 ஜனவரி 2018, 4:46 pm

என்.எஸ்.வி.குருமூர்த்தி

காட்சி - 1

இடம் - காட்டாற்றங்கரை.. 
வெள்ளம் இரு கரை தொட்டு 
புரண்டு சுழித்து ஓடுகிறது)....
மாந்தர்: மன்னர் வீரசிம்மர், 
அமைச்சர் நல்ல தம்பி, மகாராணி, 
இளவரசன், படகோட்டி முத்து விஜயன்


(படகில் மன்னர், மகாராணி, அமைச்சர், குழந்தை இளவரசன் வீற்றிருக்க மாலை வேளை. படகோட்டி முத்து விஜயன் படகை ஆற்றில் நீரோட்டத்துக்கு எதிராக துடுப்பு போட்டுச் செலுத்துகிறான்.)
மன்னர் வீரசிம்மர் அமைச்சரே ! நான் சிறுவனாக இருந்தபோது என் தகப்பனார் தாயாருடன் படகில் இந்தக் காட்டாற்றில் பயணம் செய்த நினைவு மேலிடுகிறது. அப்போது படகைச் செலுத்தியவர் இந்தப் படகோட்டி முத்து விஜயனின் தகப்பனார் செங்கோடன்
அமைச்சர்: செங்கோடன் அரண்மனைக் கிணற்றில் விழுந்து விட்ட மகாராணியாரின் வைர மோதிரத்தை முழுகி எடுத்து வந்தவர் அல்லவா..
வீரசிம்மர்: என்ன செய்வது?.....ஒருமுறை ஆற்றில் முதலையிடம் சிக்கி அல்லவா அவர் மரணம் நிகழ்ந்தது. அதுவும் பயணிகளைக் காப்பாற்றி விட்டு தன் இன்னுயிரை ஈந்தார்!
மகாராணி: "செல்வா.. தண்ணீரில் கை நனைக்காதே!
(குழந்தை எக்கி கையை நீட்டி விளையாடும் போது கால் தடுமாறி தலைகுப்புற காட்டாற்றில் விழுந்து விடுகிறான்)

மகாராணி: ஆ!..., குழந்தை... குழந்தை... தண்ணீரில் விழுந்து விட்டான்!.....

(எல்லோரும் பதைபதைக்க தூரத்தில் பின்னால் வரும் படகில் இருந்த வீரர்கள் பலரும் வெள்ளத்தில் குதிக்கின்றனர். இமைப் பொழுதில் படகோட்டி முத்து விஜயன் வெள்ளத்தில் குதித்து குழந்தையைத் தூக்கி நீர்மட்டத்திற்கு மேல் நீட்டியபடி நீந்துகிறான்.)

(அப்போது ஒரு முதலை முத்து விஜயனை நோக்கி பாய்ந்து வருகிறது! குழந்தையை எட்டி வாங்கிய அமைச்சர் அழும் இளவரசனை மகாராணியிடம் நீட்ட அவள் தேற்றுகிறாள்)

வீரசிம்மர்: "முத்து!.... முதலை!... உன் பின்னால்!...'

(முத்து தன் இடுப்பில் இருந்து குத்து வாளால் முதலையைத் தாக்க, முதலை பின் வாங்கி தண்ணீருக்குள் பாய்கிறது. நீரில் இருந்து படகுக்குள் தாவி ஏறிய முத்து விஜயனை மன்னர் பாராட்டுகிறார்.)

மன்னர்: "முத்து...., நீ மட்டும் இளவரசனைக் காப்பாற்றி இருக்காவிட்டால் முதலைக்கு இரையாகி இருப்பான் இளவல்!'

(படகு கரைக்குத் திரும்ப அனைவரும் முத்துவைப் பாராட்ட மன்னர் இரதத்தில் ஏறி அரண்மனைக்கு விரைகிறார். போகுமுன் முத்துவைப் பார்த்து....)

வீரசிம்மர்: நாளை அரண்மனைக்கு வந்து என்னைப் பார்!...
முத்துவிஜயன்: (பணிவுடன் வணங்கி) "வருகிறேன் அரசே!'


காட்சி 2

இடம் - அரண்மனை தர்பார் மண்டபம்
மாந்தர் - மன்னர் வீரசிம்மர், ஒரு பிரதானி, அமைச்சர் நல்லதம்பி, 
ஒரு கிராமத் தலைவர், முத்து விஜயன், 
மகாராணி மற்றும் சபையோர். 

மன்னர் வீரசிம்மர்: அவையோர்களே.. என் மைந்தன் இளவல் உயிரைக் காப்பாற்றிய படகோட்டி முத்து விஜயனைக் கவுரவிக்க எண்ணி அவரை வரவழைத்துள்ளேன்.. என்ன பரிசு தரலாம் என்று எனக்குப் புரியவில்லை...
ஒரு பிரதானி: மன்னா.. முத்துவுக்கு நீண்ட நாட்கள் வருமானம் வரும் அளவு முப்பது காணி நன் செய் நிலம் தரலாம்.

அமைச்சர் நல்லதம்பி: அவனோ படகோட்டிப் பிழைப்பவன்.. இந்த கரையில் இருந்து அந்த கரைக்கு மக்களை மூட்டை முடிச்சுகளுடன் சேர்த்தால் ஒரு காசு கூலி தருவார்கள். அவன் படகை பொழுதுக்கும் ஓட்டுவானா.. விவசாயத்தைக் கவனிப்பானா...?'
மன்னர்: உண்மை. வேளாண்மை செய்ய நேரம் இருக்காது. பொன் பொருளாகத் தரலாமா..
அப்போது ஒரு கிராமத்தலைவர்: மன்னா... முத்துவுக்கு என்ன வேண்டும் என அவனையே கேட்டு அதை அளிக்கலாமே.
மன்னர்: அதுவும் நல்ல யோசனை தான்.. சொல்லப்பா முத்து.. உனக்கு என்ன பரிசு தந்தாலும் தகும்..என்ன வேண்டும் கேள்...
முத்து விஜயன்: அரசே.. படகில் பயணம் செய்யும் பயணிகள் உயிருக்கும் உடமைகளுக்கும் நான் பொறுப்பானவன். என் கடமையைத் தான் செய்தேன்.. எனக்குப் பரிசு வேண்டாம்.. ஆனால்...
மன்னர்: "சொல்லப்பா.. என்ன வேண்டுமானாலும் கேள்..தருகிறேன்.'
முத்து விஜயன் : எங்கள் வீடு காட்டுக்குள் உள்ளது. அங்கு உள்ள ஐயனார் கோவில் மிகவும் பாழடைந்து உள்ளது. அந்தக் கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதற்கு முதல் நாள் தாங்கள் குடும்பத்துடன் வந்து என் வீட்டில் ஒரு நாள் தங்கி உணவருந்திச் செல்ல வேண்டும்.. இதுவே என் கோரிக்கை
மன்னர் : கண்டிப்பாக உன் கோரிக்கை நிறைவேறும்..என்ன ராணி..
மகாராணி பார்வையால் சம்மதம் தெரிவிக்கிறாள்.

காட்சி 3

இடம் -முத்து விஜயன் வசிக்கும் 
பூக்காடு கிராமம்
மாந்தர்- மன்னர், மகாராணி, இளவரசர், அமைச்சர், முத்து விஜயன், 
தலைமைக் கொத்தனார், மற்றும் பலர். 

அமைச்சர்: "நல்ல கிராமம்.. ஊருக்கு ஒதுக்குப் புறமாக. தவறியும் யாரும் நுழையமுடியாத ஊர். நல்ல சாலை வசதி இல்லை. ஊருக்குள் போக ஒற்றையடிப் பாதை. சுற்றிலும் புதர்.. கோவில் இப்படிப் பாழடைந்து இருக்கும் எனக் கனவிலும் நினைக்கவில்லை... சரி... வேலை ஆரம்பமாகட்டும்!...'
தலைமைக் கொத்தனார்: "அமைச்சர் பெருமானே.. முதலில் சாலையை அகலப் படுத்த வேண்டும். அப்போது தான் தளவாட சாமான்கள் ஏற்றி பாறை வண்டிகள் வர இயலும்!
அமைச்சர்: சரி, சாலையை முதலில் சரி செய்யுங்கள்!

(பல நூறு ஆட்கள் பாதையைச் சரிசெய்யும் வேலையைத் தொடங்குகிறார்கள். மூன்று மாத காலத்தில் பூக்காடு கிராம சாலை பயணத்துக்கேற்ற வண்ணம் சரியாகி விடுகிறது. வண்டிகள் செல்ல தகுதியாகிறது. கோவிலும் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்கப் படுகிறது. முதல் நாள் முத்து விஜயன் வீட்டில் தங்க அல்லவா மன்னர் வாக்கு தந்திருந்தார்! )

அமைச்சர்: முத்து...! மன்னர் தன் குடும்பத்துடன் வந்து தங்கப் போகிறார். அதற்கான வசதிகள் ஏற்படுத்தி விட்டோம்.....ம்ம்.....மன்னர் தங்கும் சாக்கில் உன் வீட்டை சரி பண்ணி விட்டாய்! கெட்டிக் காரன் நீ!

(கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடக்கிறது. மன்னர், மகாராணி, இளவரசன் எல்லோரும் வாக்களித்தபடி முதல் நாளே முத்துவீட்டில் தங்கி கிராம மக்களைச் சந்திக்கின்றனர். )

பூக்காடு கிராமத் தலைவர்: மன்னா, எங்கள் பூக்காடு கிராமத்து ஆண் பிள்ளைகளுக்கு வெளியூரில் இருந்து பெண்களை யாரும் திருமணம் செய்து கொடுக்கவே அஞ்சுவர். போக்கு வரத்து பாதை இல்லை.. குடி தண்ணீர் வசதி இல்லை.. கோவில் பாழடைந்த ஒன்று என பல குறைகள் எங்கள் ஊரில். இப்போது எங்கள் கிராமத்தில் இருந்து அரண்மனைக்கு இரண்டு நாழிகையில் போய்விடலாம்... எல்லா வசதிகளும் செய்து தந்து விட்டீர்கள்..நாங்கள் காலத்துக்கும் உங்களைப் போற்றுவோம்...
மன்னர்: (சிரித்தபடி ரதத்தில் ஏறிக்கொண்டே) உங்கள் முத்து விஜயன் போல கிராமத்துக்கு பொது நல நோக்கம் உடைய ஒரு ஆள் இருந்து விட்டால் போதும்!.... எல்லா கிராமங்களுமே எல்ல்லா வசதிகளையும் பெற்று விடும்! முத்து போய் வருகிறாம்!

(இளவரசன் முத்துவைப் பார்த்துக் கை அசைத்து ஆட்டுகிறான்...... புதிய பாதையில் ரதம் அசைந்தோடும் அழகை அனைவரும் கண்டு மகிழ்கின்றனர்!)

திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.