நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரங்கம்: கடலை

ஜானகி: என்னங்க.. பசங்களுக்கு லீவு விட்டதும் உலகளந்த பெரிய பெருமாள் கோவிலுக்குப் போகலாம்ன்னு சொன்னீங்களே.. நாளை போகலாமா.

News image
Updated On :2 ஜூன் 2018, 7:08 am

என்.எஸ்.வி.குருமூர்த்தி

காட்சி - 1

இடம் : இல்லம்
மாந்தர்: ராகவன், அவர் மனைவி ஜானகி, 
குழந்தைகள் ராம், மைதிலி

ஜானகி: என்னங்க.. பசங்களுக்கு லீவு விட்டதும் உலகளந்த பெரிய பெருமாள் கோவிலுக்குப் போகலாம்ன்னு சொன்னீங்களே.. நாளை போகலாமா.
ராகவன்: போகலாம். இங்கிருந்து பஸ் பிடிச்சி காவிரிக் கரையில் இறங்கி அப்புறம் இரண்டு கிலோ மீட்டர் கிராமத் துக்குள் போகணும். குழந்தைகள் நடக்குமா..?
ராம் மைதிலி இருவரும்: அப்பா, நாங்க நல்லா நடந்தே வர்றோம்!
ராகவன்: சரி, காலையில் எட்டு மணிக்கெல்லாம் நீங்க குளிச்சு தயாரா இருக்கணும். எட்டு முப்பதுக்கு பஸ். அதை விட்டால் அப்புறம் பத்து மணிக்குத் தான்...
ஜானகி: பசங்களா, செல் ஃபோனை நோண்டாம போய் படுங்க.... காலையில் சீக்கிரம் எழுந்து குளிச்சி கிளம்பணும்! என்னங்க..., உங்க ஃபோன்லஅஞ்சு மணிக்கு அலாரம் வைங்க! நான் குளிச்சு புடவைகட்ட ஒரு மணி நேரமாவும். நீங்க குழந்தைகள் குளிக்கறதுக்குள்ள ஹோட்டலில் இட்லி, பொங்கல் வடை வாங்கி வந்திடுங்க. மதியம் கூட ஹோட்டலில் சாப்பிட்டுக்கலாம். நாளை சமையல் இல்லாத நாள்!....
ராகவன்: சரி, சரி, எல்லாம் தூங்குங்க.....

காட்சி - 2

இடம் : பேருந்து நிலையம்
மாந்தர் - ராகவன், ஜானகி, ராம், 
மைதிலி மற்றும் பயணிகள்

ராகவன்: சீக்கிரம் வாங்க...., பஸ் ரெடியா இருக்கு!... மணி எட்டு முப்பது.... நான் போய் உட்கார சீட் பிடிக்கறேன்.
(உள்ளே கிடைக்கும் இருக்கைகளில் அமருகிறார்கள்.)
ராம்: மைதிலி, எனக்கு ஜன்னல் ஓரம் இடம் தா!... நீ இங்கே உட்கார்!....
மைதிலி: ம்ஹூம்.... மாட்டேன்!... நான் வேடிக்கை பார்க்கணும்!....
இரண்டு சீட் தள்ளி இருக்கும் ஜானகி: ராம், அவ கிட்டே சண்டை போடாதே!... வரும் போது ஜன்னல் ஓரம் நீ உட்காரு!
பஸ்ஸýக்குள் ஒரு வியாபாரி: சோன் பப்டி,... சோன்பப்டி!... பாக்கெட் அஞ்சு ரூபா சார்!....சோன் பப்டி!....
ராம்: அம்மா, எனக்கு?...... 
ராகவன்: ராம், அமைதியா இரு!.....வெளியில் விற்கும் பண்டங்கள் வாங்கி திங்கக் கூடாது..... அப்புறம் நல்ல ஸ்வீட் ஸ்டாலில் வாங்கித் தர்றேன்!
ராம் மைதிலியிடம்: ம்..., இந்த அப்பா எப்பவும் இப்படித்தான்!.... அதைத் திங்காதே,... இதை திங்காதேன்னு சொல்லிக்கிட்டே இருப்பார்....
மைதிலி: இந்த சோன் பப்டி நல்லா இருக்குமா?...
ராம்: எப்படி இருக்கும்ன்னு தின்னாதானே தெரியும்....
(பஸ் கிளம்புகிறது)
ராகவன் அருகில் இருக்கும் பயணி: நான் வெளியூர். காவிரிக்கரை உலகளந்த பெரிய பெருமாள் கோவில் வந்ததும் சொல்றீங்களா?......
ராகவன்: கண்டிப்பா சொல்றேன்!.... நானும் அங்கே தான் இறங்கணும்!
பயணி: இறங்கி இரண்டு கிலோமீட்டர் நடக்கணுமாமே?
ராகவன்: ஆமாம்.... சில சமயம் ஷேர் ஆட்டோ கிடைக்கலாம். இன்னிக்கு சனிக்கிழமை நிச்சயம் ஓடும். அதில் போகலாம். தலைக்குப் பத்து ரூபா கேட்பாங்க.
பயணி: பரவாயில்லை. ஆட்டோ கிடைச்சால் தேவலாம்.
(அரை மணி நேரப் பயணத்துக்குப் பின் காவிரிக்கரை நிறுத்தம் வரும் முன்)
நடத்துநர்: காவேரிக்கரை பெருமாள் கோவில் வருது. எல்லாம் இறங்குங்க.
(நிறுத்தத்தில் எல்லோரும் இறங்குகிறார்கள். விசில் ஒலிக்க பஸ் போகிறது....--கோவிலுக்குச் செல்லும் பாதையில் பக்தர்கள் கூட்டம்....வழியெங்கும் கடைகள் சிறு வியாபாரிகள் தள்ளு வண்டியில் தரையில் கடை வைத்திருக்கிறார்கள்.--)
ராகவன்: ஆட்டோ இல்லியே.. நடந்து தான் போகணும்.
ஜானகி: பசங்களா நடப்பீங்களா..?
ராம்: அம்மா நிறைய கடைகள் இருக்கு வேடிக்கை பார்த்துக்கிட்டே நடக்கலாம். என்ன மைதிலி..?
மைதிலி: ஓ நடப்போமே !
(கொஞ்சம் நடந்ததும்)
ராம்: அப்பா குளிர் பானம் வாங்கித் தாங்க.
ஜானகி: என்னங்க,.... எனக்கும் வேணும்!
ராகவன்: நம்ம ஊரில் பெரிய கடைகளில் விற்கும் பானங்கள் இங்கே கிடைக்காது. சர்பத் ன்னு ஏதாவது தண்ணியில் ஜீனி பாகு விட்டு கலக்கித்தருவாங்க உடலுக்குக் கெடுதல்!...
ராம்: அப்பா, அதோ குச்சி ஐஸ்!....
ராகவன்: அடடா..... அதெல்லாம் திங்கக் கூடாது!.... உடனே தொண்டை கட்டிக்கிட்டு ஜுரம் வந்திடும்!.... பசங்களா. வாங்க..., அதோ இளநீர் விக்குது!.....தரிசனம் முடிஞ்சதும் வாங்கித் தர்றேன்....
(கோவில் வாசல் வந்து விட்டது)

காட்சி - 3

இடம் - கோவில் வாசல். அர்ச்சனை தட்டு 
விற்கும் கடை.
மாந்தர் - கடைக்கார பெண் கமலா (பார்வை அற்றவர்), ராகவன், ஜானகி. கடலை விற்கும் வாலிபன்.

கடைக்காரப் பெண்: வாங்க வாங்க...., அர்ச்சனை தட்டு வாங்கிப் போங்க...., முப்பது ரூபா.... பூ, பழம் வாங்கிப் போங்க.
ஜானகி: இந்தக் கடையிலேயே தட்டு வாங்குங்க, இந்த அம்மா கண் தெரியாதவங்க போலிருக்கு. 
ராகவன்: அம்மா, ஒரு தட்டு தாங்க...., ஜானகி, தேங்காய் நல்லதா பார்த்து எடு!... சாமிககு உடைக்கும் போது அழுகலா இருந்தா மனசு சங்கடப் படும்! இரு, நான் நல்லதா பெரிய காயா எடுக்கறேன்.....
கடைக்காரப் பெண் கமலா: அய்யா, அந்தக் காயை கொடுங்க!..... (தட்டிப் பார்த்து ) இது வேண்டாம்.... இதை எடுத்துப் போங்க....செருப்பை இங்கே விட்டுப் போங்க. 
கடையின் அருகில் ஒரு சிறுவன்: வேகவைத்தக் கடலை இருக்கு வாங்கிப் போங்க
ராம்: அப்பா வேகவச்ச கடலை வாங்கித் தாங்கப்பா
ராகவன்: என்ன தண்ணீர் வச்சு வேக வைக்கிறாங்களே?... உனக்கு ஒத்துக்காது!
ராம்: சரிப்பா!....
ராகவன்: வரும் போது இளநீர் சாப்பிடலாம்....., வாங்க வரிசை பெரிசா இருக்கு! சிறப்பு வழி ரூபா ஐம்பதுன்னு போட்டிருக்கு.....,இருங்க,.... நாலு டிக்கெட் வாங்கி வர்றேன்....
(சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வருகிறார்கள்.)


காட்சி - 4

இடம்: கடை வாசல்
மாந்தர் - ராகவன், ஜானகி, ராம், மைதிலி, கடைக்காரப் பெண் கமலா அவள் மகன் சுப்பு (கடலை விற்கிறான்)

ராம்: அப்பா, சுவாமி எவ்வளவு உயரமா இருக்கார்! 
ஜானகி: என்ன கம்பீரம்!...
ஒரு இளநீர்க் கடையில் எல்லோரும் இளநீர் சாப்பிடுகிறார்கள்.---அர்ச்சனை தட்டை கடைக்காரப் பெண் கமலாவிடம் தந்து விட்டு)
ஜானகி: எல்லாரும் செருப்பை மாட்டுங்க.

(அப்போது ராகவன் கீழே எதையோ தேட)

ஜானகி: என்னங்க என்ன தேடறீங்க?...
ராகவன்: பர்ஸ் எங்கோ விழுந்திட்டுது.... இளநீருக்கு இவருக்கு எண்பது ரூபா தரணும்.. அதுக்கு பர்ûஸ தேடினா காணோம்!..... கையிலே நூறு ரூபாயாவது இருந்தால்தான் ஊர் போய்ச் சேர முடியும்!....பர்ஸிலேதான் ஏ.டி.எம் கார்டும் இருக்கு!....
கமலா: (மெல்ல தடவியபடி) என்ன பர்ûஸ தவற விட்டுட்டீங்களா.
ராகவன்: ஆமாம் அம்மா.
கமலா: (கடலை விற்கும் தன் பையனிடம்) டேய் சுப்பு,.... உள்ளே போய் இரு நூறு எடுத்து வா, அய்யா கிட்டே கொடு. சார், என் மகன் தர்றதை வச்சுக்குங்க...., ஊருக்குப் போங்க அடுத்த முறை கோவிலுக்கு வரும் போது திருப்பித் தாங்க. சுப்பு இளநிக்காரத் தம்பிக்கு நீ பணம் கொடு.
(கமலா மகன் சுப்பு பணம் தருகிறான்)
ராகவன்: ரொம்ப நன்றிங்க!....
கமலா: சுப்பு......சாருக்கு ஒரு பையில் கடலை ஒரு படி கொடு.
ராகவன்: வேணாங்க!..... 
கமலா: சார், என் பையன் எம் எஸ் ஸி புவியியலில் நிலத்தடி நீர் பற்றி ஆய்வு படிச்சவன்..... சுத்தமான தண்ணீரில் வேகவச்சதுதான் இந்தக் கடலை!.... தைரியமா வாங்கி குழந்தைகளைச் சாப்பிடச் சொல்லுங்க. இரும்புச் சத்து இருக்கு இதில்!
(அப்போது கோவில் அர்ச்சகர் வேகமாக ஓடி வருகிறார்.)
அர்ச்சகர்: சார், இது உங்க பர்ஸா பாருங்க....
ராகவன்: ஆமாம் சுவாமி!....
அர்ச்சகர்: நெய் தீபம் காட்டி பிரசாதம் தரும்போது நீங்க என் தட்டில் இருபது ரூபா பர்ஸில் இருந்து எடுத்து வச்சீங்க.... அப்போ பாக்கெட்டில் இருந்து நழுவி விழுந்திருக்கணும் போலிருக்கு!..... பிரசாதம் வாங்கும் அவசரத்தில் நீங்க கவனிக்கலே.... நல்ல வேளை என் கண்ணில் பட்டுது!.... பர்ஸýக்கு உள்ளே உங்க குடும்ப புகைப்படம் இருந்தது!....அதை வச்சு தேடி வந்தேன்... அப்புறம் நீங்க கொண்டு வந்த அர்ச்சனைத் தட்டு கமலா கடை தட்டுன்னு ஞாபகம் வந்துச்சி. அதுதான் வேகமா இங்கே நேரே ஓடிவந்தேன்!.....
(பர்ûஸ தந்து விட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் சன்னதி நோக்கி ஓடுகிறார் அர்ச்சகர்.)

கமலா: பெருமாள் பர்ûஸக் காப்பாத்திடார்!.....
ராகவன்: எனக்கு நீங்க உதவ வந்ததுக்கு நன்றி அம்மா!....,,இந்தாங்க உங்க பணம்!....
கமலா: இதில் என்னங்க இருக்கு. மனுஷாளுக்கு மனுஷாள் உதவி. (வீட்டுக்குள் மெல்ல போகிறாள் கமலா)
ராகவன்: தம்பி சுப்பு. நூறு ரூபாய்க்கு கடலை தா!....அக்கம் பக்கம் இருக்கிறவங்களுக்குக் கொடுக்கணும்!.....
(அப்போது ஷேர் ஆட்டோ வர.....அதில் எல்லோரும் ஏறிச் செல்கின்றனர்)

கமலா: நல்ல வேளை!.... பர்ஸ் கிடைக்காவிட்டால் சாமி கும்பிட வந்து இப்படி ஆயிடுச்சேன்னு அந்தக் குடும்பம் வருந்துவாங்க!...... பெருமாள் கைவிடலே!....
சுப்பு: அம்மா நான் போறேன்......கடலை பறிக்க
கமலா: அப்போ கடலை வியாபாரம்..?
சுப்பு: எல்லாம் தான் வித்திடுச்சே!...... அந்த சார் எல்லாத்தையும் மொத்தமா வாங்கிக்கிட்டார்!.... புதுசா பறிச்சி வேக வச்சாதான் நாளை வியாபாரம்!
கமலா: சரிப்பா! (கூவுகிறாள்) சார் அர்ச்சனை தட்டு வாங்கிப் போங்க முப்பது ரூபா!....

திரை
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.