ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கருவூலம்: விருதுநகர் மாவட்டம்

தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஆண்டாள் தேரும் ஒன்று! பல நூற்றாண்டுப் பெருமை வாய்ந்தது. கலைநயம் மிக்க மரச்சிற்பங்கள் கொண்டது.

News image
Updated On :23 ஜூன் 2018, 12:31 pm

ஸ்ரீவில்லிபுத்தார் ஆண்டாள் கோயில்....

இக்கோயிலை பல்வேறு காலங்களில் பாண்டிய மன்னர்கள் பலரும், திருமலை நாயக்க மன்னரும், ராணி மங்கம்மாளும் மற்றும் பிற நாயக்க மன்னர்களும் விரிவு படுத்தியும் பு,துப்பித்தும் பல கட்டிடப் பணிகளை செய்துள்ளனர். ஆண்டாள் சன்னதி கருவறை மீதுள்ள விமானத்தில் திருப்பாவை காட்சிகள் சிற்பங்களாகவும், முன் மண்டபத்தில் அழகிய ஓவியங்களாகவும் எழிலுடன் திகழ்கிறது. 
மேலும் 108 திவ்ய தேசங்களில் உள்ள விஷ்ணுவின் தோற்றமும் ஓவியங்களாக காட்சியளிக்கின்றன. இங்குள்ள மாதவிப்பந்தல், கண்ணாடிக்கிணறு, திருப்பூர் மண்டபம் உள்ளிட்டவை அவசியம் பார்க்க வேண்டியவை. 

ஆண்டாள் கோயில் திருத்தேர்!

தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஆண்டாள் தேரும் ஒன்று! பல நூற்றாண்டுப் பெருமை வாய்ந்தது. கலைநயம் மிக்க மரச்சிற்பங்கள் கொண்டது. அக்காலத்தில் ஆடிப் பூரம் நாளன்று ஒன்பது மரச்சக்கரங்கள், 9 மேலடுக்கு சாரம், அலங்காரப் பதாகை, உச்சிக்கலசம், 9 பெரிய வடங்கள் என தேர் பிரமாண்டமாய் வீதி உலா வரும்! அப்போதெல்லாம் தேர் நிலைக்கு வர சில மாதங்கள் கூட ஆகிவிடும்! 

இப்பொழுது தேரின் மேலடுக்குகள் குறைக்கப்பட்டு, இரும்பு அடிச்சட்டம், விசைத்தடையுடன் கூடிய இரும்புச் சக்கரங்கள் அமைத்து தேரை நவீனப்படுத்தி உள்ளனர். 3 மணி நேரத்தில் தேர் நிலைக்கு வந்துவிடுகிறது. 

சதுரகிரி மகாலிங்கம் சுவாமி கோயில்!

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதிதான் சதுரகிரி. மலையின் மீது சிவனுக்குரிய மலைக்கோயில் உள்ளது. 64000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இம்மலை திசைக்கு 4 மலை வீதம் மலைகள் சமமாக சதுரமாக அமைந்துள்ள காரணத்தால் சதுரகிரி எனப் பெயர் பெற்றது. 

இம்மலைப் பகுதி வனத்துறையினர் கட்டுப்பாட்டிலுள்ளது. எனவே எல்லா நாட்களிலும் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை. 

இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர், தேனி மாவட்டம் வருச நாடு, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதிகளில் இருந்தும் மலைப்பாதைகள் உள்ளன. இவற்றில் வத்திராயிருப்பு பாதையே சிறந்தது!

தாணிப்பாறையில் இருந்து 10 கி.மீ. தூரம் மலையேறிச் செல்ல வேண்டும்.ஏறுவதற்கு கடினமான வழுக்குப் பாறைகள் மிகுந்த செங்குத்தான ஒற்றையடிப் பாதை போன்றது என்பதால் மலையேற்றம் கடினமானது. ஆனாலும் மிகவும் விசேஷமான நாளாகக் கருதப்படும் ஆடி அமாவாசை நாளில் மட்டும் 3 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர். 

மலைப்பகுதி முழுவதும் தீர்த்தங்களும் மூலிகைகளும் நிறைந்து காணப்படுகிறது. கோயிலுக்கு வடக்கே மூலிகைகள் நிறைந்த சஞ்சீவிமலை என்ற குன்று உள்ளது. இங்கு வளரும் ஜோதிப்புல் என்ற தாவரத்தை பகலில் நீரில் நனைத்து விட்டு இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் பிரகாசமாக இருக்கும். முன்காலத்தில் சித்தர்கள் இதனை வெளிச்சத்திற்காக பயன்படுத்தியுள்ளனர்.

இம்மலையில் 5 சிவன் கோயில்களும், சித்தர் கோயிலும் உள்ளன. மலைப்பகுதி முழுவதும் குன்றுகளும், பள்ளத்தாக்குகளும், குளங்களும், நீர் ஓடும் பாதைகளும் பல வகையான தாவர வகைகளும் சோலைகளும், தோப்புகளும் உள்ளன. 

சிவகாசி காசி விஸ்வநாதர் ஆலயம்!

மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த அரிகேசரி பாராங்குச பாண்டியன் தான் கட்டிய தென்காசி கோயிலுக்காக காசியில் இருந்து ஒரு லிங்கத்தைக் கொண்டு வந்தான். வரும் வழியில் வனமாக இருந்த இப்பகுதியில் தங்கியபோது, லிங்கத்தை தென்காசிக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

அதனால் வனத்தில் கோயில் கட்டி அங்கேயே வைத்தான். அதனால் வனத்திலேயே கோயில் கட்டி அங்கேயே லிங்கத்தை வைத்துவிட்டான். அவனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மன்னர்கள் கோயிலுக்கு மண்டபங்கள், சுற்று மதில், ரதவீதிகள் அமைத்தனர். அவ்வூரும் சிவகாசி என்றழைக்கப்பட்டது. காசிக்குச் சென்ற பலனைத் தரும் ஆலயம் என்ற சிறப்புடன் பிரசித்தி பெற்றுள்ளது. 

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்!

தென் மாவட்டங்களில் இருக்கும் பிரபலமான ஆலயங்களில் ஒன்று! 500 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் சாத்தூர் அருகே வைப்பாறு மற்றும் அர்ச்சுனன் ஆறு, ஆகிய இரு ஆறுகளுக்கு இடையே உள்ள மணல் திட்டில் உள்ளது.

திருச்சுழி திருமேனிநாதர் ஆலயம்!

பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம் சேதுபதி மன்னர்களால் விரிவு படுத்தப்பட்டது. மருது பாண்டியர்கள் கட்டிய மண்டபங்களும் இங்குள்ளன. பகவான் ஸ்ரீரமணர் பிறந்தது இந்த ஊரில்தான். இங்கு ரமணரின் ஆசிரமும் உள்ளது. 

திருத்தங்கல் - நின்ற நாராயண பெருமாள் கோயில்!

கிறிஸ்து பிறப்பதற்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வூர் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாண்டிய மன்னர்கள் காலத்தில் இங்குள்ள குன்றின் மீது விஷ்ணு ஆலயம் கட்டினர். பின் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டு விரிவு படுத்தப்பட்டுள்ளது. 

பிற சுற்றுலாத் தலங்கள்!

ராஜபாளையம் மற்றும் சிவகாசி பகுதியில்மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரைச் சார்ந்து இயற்கை எழில் மிக்க சில சுற்றுலாத் தலங்கள் உள்ளன. 

அய்யனார் அருவி!

ராஜபாளையத்திற்கு 10 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய அருவி. அருவிக்கு வனப்பகுதி வழியாக மலையேறிச் செல்வது சுகமான அனுபவம். செல்லும் வழியில் ஒர சுனை, ஒரு அணை, நீர்த்தேக்கம், கோயில் முதலியவை உள்ளன. பருவமழை காலத்தில் அதிகமாக நீர் கொட்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அழகான இடம். 

முதலியார் ஊற்று!

மலைப்பகுதியில் உள்ள இந்த இடத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் பொழுது போக்கிற்காகவும், வேட்டையாடவும் வந்து சென்றனர். இங்கிருந்து தேனி, சின்னமனூர்(தேனி மாவட்டம்) பகுதிகளின் எழில் தோற்றத்தைப் பார்த்து ரசிக்கலாம். 

குருவிப்பாறை!

மலைமீதுள்ள இவ்வூரில் பளிஞர் இன மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். இங்கு ஆண்டு முழுவதும் நீர்விழும் சிறிய அருவி உள்ளது. 

பிளவக்கல் அணை!

இது கோயிலார் அணை, பெரியார் அணை என இரண்டு பகுதிகளைக் கொண்டது. மழைக்காலத்தில் நீர் நிரம்பி கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சி அளிக்கும். இங்கு சிறுவர் பூங்கா ஒன்றும் இருக்கிறது. 

சஞ்சீவி மலை!

மூலிகைகள் நிறைந்த பசுமையான இம்மலைப் பகுதி அமைதியும் அழகும் ஒருங்கே அமைந்தது. இங்கு சில குன்றுகள் உள்ளன. சிறு முருகர் கோயிலும் உள்ளது.

தேவதானம்!

ஆறு மற்றும் அணைக்கட்டும் உள்ள மனதுக்கு இதமான இடம். ஒரு சாஸ்தா கோயிலும் உள்ளது. 

காமராஜர் நினைவு இல்லம்!

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக முதல்வருமான கர்மவீரர் காமராஜர் அவர்கள் விருதுநகரில்தான் பிறந்தார். அவருடைய வீடு நினைவு இல்லமாக பராமரிக்கப்படுகிறது. 

மேலும் சில தகவல்கள்!

1875 இல் தொடங்கப்பட்ட பழமையான நூலகம். அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த பென்னிங்டனால் துவக்கி வைக்கப்பட்டது. 

திருப்பாவை!

30 பாடல்களைக் கொண்ட திருப்பாவையும், 140 பாடல்களைக் கொண்ட நாச்சியார் திருமொழியும் ஆண்டாளால் மிக எளிய தமிழில் பாடப்பட்டவை. 

புகழ்பெற்ற "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்' எனத் தொடங்கும் வாழ்த்துப் பாடல் பெரியாழ்வாரால் பாடப்பெற்றதே! 

ஸ்ரீவில்லிபுத்தாரில் தயாரிக்கப்படும் பால்கோவாவும், சாத்தூரில் தயாராகும் காரச்சேவும் புகழ்பெற்றவை. ருசியானவை. 

முற்றும்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.